பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 50 காப்பகக் குழந்தைகளை மீட்டெடுத்த ஆட்சியர்!

0

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை, குழந்தை கடத்தல், வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. செய்தித்தாளை திறந்தால் இது போன்று குறைந்தது ஒரு சம்பவமாவது நிகழ்ந்திருக்கும். இது குறித்து ஆங்காங்கே பல எதிர்ப்புக் குரல்கள் வந்தாலும், பெண்களின் பாதுகாப்பிற்கு நிச்சயமில்லா சூழல் தான் இங்கு உள்ளது.

பாதுகாப்பான வீட்டுச் சூழலில் வளரும் பெண்களுக்கே இங்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் காப்பகத்தில் வசிக்கும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு என்ன உத்திரவாதம்?

இது போன்ற பாலியல் துன்புறுத்தல் திருவண்ணாமலை மெர்சி அடைக்கலபுரம் காப்பகத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கடந்த ஞாயிறு அன்று அம்மாவட்ட ஆட்சியர் கே எஸ் கந்தசாமி விரைந்து செயல்பட்டு அக்காப்பகத்தில் வசிக்கும் 50 குழந்தைகளை மீட்டெடுத்து உரிமையாளரை கைது செய்து காப்பகத்தை மூடியுள்ளார். பாலியல் துன்புறுத்தல் குறித்து செய்தி அறிந்த மாவட்ட ஆட்சியர் தாமதிக்காமல் உடனடியாக செயல்பட்டுள்ளார்.

பட உதவி: பெட்டெர் இந்தியா 
பட உதவி: பெட்டெர் இந்தியா 

காப்பகத்தின் அவல நிலை – மீட்டெடுப்பு பயணம்

கடந்த நவம்பர் 17 அன்று மெர்சி அடைக்கலபுரம் காப்பகம் அரசு விதிமுறைகள் படி நடக்கவில்லை என சந்தேகம் எழுந்தவுடன் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உடனடியாக அத்தனியார் காப்பகத்தை பார்வையிட சென்றுள்ளார். தான் நினைத்தது போலவே காப்பகத்தின் நிலை சரியானதாக அமையவில்லை, குழந்தைகளுக்குத் தேவையான கட்டடமைப்பும் இல்லை. அதுமட்டுமின்றி அக்காப்பகத்தின் இயக்குனர் லுபன் குமாரும் (64) தனது குடும்பத்துடன் அங்கேயே வசித்து வந்துள்ளார்.

உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகியுள்ளனர் என்பதை அறிந்த ஆட்சியர் உடனடியாக 50 குழந்தைகளையும் இடம் மாற்றம் செய்துள்ளார்.

“5-22 வயது வரை உள்ள பெண்கள் வசிக்கும் காப்பகத்தின் கழிவறைகளில் கதவுகள் இல்லை. அதுமட்டுமின்றி பெண்கள் ஒரு பொதுவான அறையில் எல்லாருடனும் சேர்ந்து துணிகளை மாற்றும் நிலைமை. இதையும் தாண்டி எல்லா நேரமும் ஆண் காவலர்கள் கண்காணிப்பிலே இருந்தனர்,”

 என தெரிவித்தார் ஆட்சியர் தி நியுஸ் மினிட்-ற்கு அளித்த பேட்டியில் இந்த சூழலைக் கண்டு அதிர்ந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக பிள்ளைகளை பாதுகாப்பான அரசு காப்பகத்திற்கு இடம் மாற்றியுள்ளார். 

ஆனால் அத்துடன் சிக்கல்கள் ஓயாமல் கடந்த சனிக்கிழமை அன்று அரசு காப்பகத்திற்கு சென்ற குழந்தைகளில் 3 பெண் பிள்ளைகள் ஆட்சியரை சந்தித்து திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். 14-15 வயதான அப்பெண் குழந்தைகள் அக்காப்பகத்தின் இயக்குனர் லுபன் குமாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு உடந்தையாக அவரது மனைவி (55) மற்றும் சகோதரர் ஜஸ்டின் (60) செயல்பட்டுள்ளனர் என தெரியவந்தது.

“லுபன் குமார் வேண்டுமென்றே அனைத்து குளியல் அறைகளின் கதவுகளை அகற்றியுள்ளார். தனது அறையின் ஜன்னல் வழியே பெண்கள் குளிப்பதை பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் உடை மாற்றும் அறையில் சிசிடிவி கேமரா வைத்து அதையும் கண்காணித்துள்ளார்...”

இதற்கும் மேலாக பெண்களை அவ்வப்போது தனது அறைக்கு வரவழைத்து மசாஜ் செய்யகோரி பாலியல் துன்புறுத்தலும் செய்துள்ளார். இது குறித்து அவரது மனைவிடம் புகார் கூறும் பெண்களை அவரது சகோதரர் அடித்து மிரட்டி உள்ளார்.

“போக இடமின்றி வெளியில் சொல்லும் நிலைமையும் இல்லாமல் வேதனையை அனுபவித்துள்ளனர் இக்குழந்தைகள். அதையும் தாண்டி ஒரு பெண் தனது பாட்டியிடம் இதைக் கூற கல்வி முடியும் வரை பொறுத்துகொள் என தெரிவித்துள்ளார்.”

மேலும் காப்பகத்தின் அனைத்து வேலைகளையும் சமையலில் இருந்து, கழிப்பறைகளை கழுவும் வரை அனைத்தையும் இவர்களே செய்துள்ளனர். இதனையொட்டி ஆட்சியரின் ஆணைப்படி காப்பகத்திற்கு சீல் வைத்து, லுபன், அவரது மனைவி மற்றும் அவரது சகோதரரை காவல்துறை கைது செய்துள்ளது.