பணிக்கு தகுதியானவராக உங்களை உருவாக்க வரும் 'க்ரேகேம்பஸ்'

0

2013ன் இறுதியில் விஜய் பசுபலெதி ஒரு விஷயத்தைக் கவனித்தார். தினந்தோறும் ஏராளமான நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இது ஒருபுறமிருக்க மற்றொரு புறம் நேர்முகத் தேர்வுக்காக இளைஞர்கள் நிறுவன வாயில்களில் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். நிறைய வேலைகளும் இருக்கின்றன. படித்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் வேலைக்குப் பொருத்தமான தகுதி உடையவர்கள் இல்லை என்பதுதான் இந்தப் பிரச்சனையின் மையம் என்பதை அவர் உணர்ந்தார். எனவே படித்தவர்களுக்கு வேலைக்குப் பொருத்தமான பயிற்சி அளித்தால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என நினைத்தார் விஜய்.

படித்தவர்களுக்கும்-நிறுவனங்களுக்குத் தேவையான திறமைக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் விதத்தில் 2014 மே மாதத்தில் 'க்ரே கேம்பஸ்' எனும் நிறுவனத்தை ஆரம்பித்தார் விஜய். ஐதராபத்தில் அமைந்துள்ள இந்த ஆன்லைன் நிறுவனம் படித்த இளைஞர்கள் வேலைக்கேற்ற திறனைப் பெறுவதற்கானப் பயிற்சியை அளிக்கிறது. புராஜக்ட் மேனேஜ்மென்ட், குவாலிட்டி மேனேஜ்மென்ட், சர்வீஸ் மேனேஜ்மென்ட், பிக் டேட்டா, வொர்க் பிளேஸ் டூல்ஸ் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி அளித்து சான்றிதழ் அளிக்கிறது இந்த நிறுவனம். இன்னும் பல்வேறு துறைகளுக்குத் தனது பயிற்சியை விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் பயிற்றுனருடன் கூடிய ஆன்லைன் பயிற்சி, பயிற்றுனருடன் கூடிய வகுப்பறை பயிற்சி, பயிற்றுனர் இல்லாது, தானே கற்றுக் கொள்வதற்கான ஆன்லைன் பயிற்சி என மூன்று விதத்தில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

“பணியில் இருக்கும் தொழில்முறைப் படிப்பாளிகள் மாறி வரும் வேலைச் சூழலுக்கு ஏற்ப தங்களது திறமைகளை தொடர்ந்து வளர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. க்ரே கேம்பஸ் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பயிற்றுனருடன் கூடிய பயிற்சியைப் பெற அது வழி செய்திருக்கிறது” என்கிறார் க்ரே கேம்பசின் சிஇஓ, இணை நிறுவனர் விஜய். நிதி மற்றும் வங்கித் துறைகளில் 18 வருட அனுபவம் பெற்றவர் விஜய்.

உலகம் முழுவதும் உள்ள தொழில் கல்வி படித்தவர்களுக்கு உதவவும் அவர்களை ஊக்கப்படுத்தவும் திறந்த வெளி நூலகத்தை, கேம்பசை வைத்திருக்கிறோம். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் படிப்பாளிகளுக்கு உதவும் நூல்கள் அங்குள்ளன. அவற்றை இலவசமாகப் படித்துக் கொள்ளலாம் என்கிறார் விஜய்.

நிறுவன உருவாக்கம்

கையிலிருக்கும் மூலதனத்தை வைத்துக் கொண்டுதான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. பின்னர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் நிதி வழங்கி உதவினர். டிஜிட்டல் மார்கெட்டிங்குக்கு உதவும் வகையிலான தொழில் நுட்பத்தை வளர்த்தல், பயிற்சி, பாடத்திட்டத்தை உருவாக்கல், தேவையான பணியாளர்களை நியமித்தல் போன்ற செலவுகளுக்கு அந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும் சர்வதேச அளவில் நிறுவனத்தை விரிவு படுத்தவும் அடுத்த கட்ட நிதி திரட்டலுக்கான சிரீஸ் ஏ ஃபண்டிங் நடவடிக்கையில் இறங்கியுள்ளது க்ரே கேம்பஸ்.

பணியில் இருக்கும் தொழில்முறை படிப்பாளிகள்தான் க்ரே கேம்பசின் வாடிக்கையாளர்கள். நேரடியாக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளும் பி2சி முறையைத்தான் தனது வர்த்தக வடிவமாக வைத்திருக்கிறது க்ரே கேம்பஸ். இடைத்தரகர்கள் இல்லை. குறுகிய காலப் படிப்புகளுக்கு பயிற்சிக் கட்டணம் நிர்ணியிக்கப்பட்டுள்ளது. நேரடியாக ஆன்லைன் மூலம் அல்லது வகுப்பறை மூலம் பயிற்றுனர் அந்தப் பயிற்சியை அளிக்கிறார். இந்த பயிற்சி தற்போது அமெரிக்காவிலும் ஆசியாவிலும் வழங்கப்பட்டு வருகிறது.

சந்தையும் போட்டியும்

பயிற்சிச் சேவை என்பது 300 பில்லியன் டாலர் கொண்ட, சர்வதேச வர்த்தக வாய்ப்பு.

குளோபல் நாலேட்ஜ், லேர்னிங் ட்ரீ, சிம்ப்ளிலேர்ன் ஆகியவை பயிற்றுனருடன் கூடிய பயிற்சி அளிக்கும் ஒரு சில நிறுவனங்களாகும். லிண்டா, உதிமி போன்ற நிறுவனங்கள் தானே படித்துக் கொள்ளும் இணைய தள படிப்புகளை (self-paced e-learning courses) அளிக்கின்றன.

“ஐந்து ஆண்டுகளில் 100 கோர்சுகளை வழங்க வேண்டும். ஒரு லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து 3 கோடி டாலர் வருமானம் ஈட்ட வேண்டும் எனத் திட்டமிட்டிருக்கிறோம். 2015 நிதியாண்டில் எங்கள் வருமானம் 10 லட்சம் டாலருக்கும் குறைவுதான். ஆனால் ஆண்டுக்கு ஆண்டு 100 சதவீத வளர்ச்சியை பெறுவோம். டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை அடைவதுதான் இலக்கு. எங்களது 99 சதவீத வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் சேனல்கள் வழியாக வந்தவர்கள்தான். எங்கள் வருமானத்தில் 25 சதவீதத்தை டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் செலவு செய்கிறோம்” என்கிறார் விஜய்.

இந்தத் துறையில் உள்ள போட்டி பற்றிக் கூறுகையில், பயிற்சிச் சேவை தொழில் என்பது ஏராளமான பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு விதமான பயிற்சிகளை அளிக்கின்றன. நிறையப் பிரிவுகள் உள்ளதால், ஒரே சமயத்தில் அனேக நிறுவனங்களால் இந்தத் தொழிலில் நிலைக்க முடிகிறது என்கிறார் விஜய்.

பிற சவால்கள்

சவால் என்று பார்த்தால் சர்வதேச சந்தையில் இடம் பெறுவது, நிலையான பயிற்சித் தரம் ஆகியவைதான் என்று சொல்லும் விஜய், இந்த இரண்டையும் விரைவாகவும் சிறப்பாகவும் அதே சமயத்தில் குறைந்த செலவிலும் பெற வேண்டியிருக்கிறது என்கிறார். “உயர்தரமான உள்ளடக்கத்தை உருவாக்குவது, அதை கச்சிதமாக விநியோகிப்பது, டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் சிறப்பாகச் செயல்படுவதற்கு உகந்த தொழில் நுட்பத்தை பெறுவது இவைதான் எங்கள் நோக்கம்” என்கிறார் விஜய்

வளர்ச்சி விகிதம்

2015ல் ஆசியா மற்றும் இந்தியாவில் வளரும் தொழில் நட்ப நிறுவனங்களுக்கான டெலோய்ட்டி பாஸ்ட் 50 டெக்னாலஜி போட்டியில் க்ரே கேம்பஸ் வெற்றி பெற்றது. கடந்த இரண்டு வருடங்களில் க்ரே கேம்பஸ் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்திருப்பதோடு அதே உத்வேகத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

“பூகோள அமைப்பையும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரே நேர மண்டலத்தில் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மாணவர்களை ஒன்றிணைக்க வேண்டும். இப்போது நாங்கள் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறோம். இன்னும் உற்சாகமான பயணம் காத்திருக்கிறது” என்கிறார் விஜய் முடிவாக.

காத்திருக்கும் வளமான எதிர்காலம்

ஆன்லைன் கற்றல் மற்றும் பயிற்சித் துறையானது உலகம் முழுவதும் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. புளூரல்சைட், லிண்டா போன்ற சர்வதேச மெகா நிறுவனங்கள் இந்தத் துறையில் சாதனை படைத்துள்ளன. 2014ல் புளூரல்சைட் திரட்டிய நிதி 135 மில்லியன் டாலர். அமெரிக்காவைச் சேர்ந்த லிண்டா.காம் 2013ல் அக்செல் பார்ட்னெர்ஸ் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஈக்விட்டியில் இருந்து 103 டாலர் பெற்றுள்ளது.

வேதான்து (Vedantu), பிஒய்ஜேயு (BYJU), டாப்பர் (Toppr), மெரிட்நேஷன் (Meritnation), மற்றும் சிம்ப்ளிலேர்ன் (Simplilearn) போன்றவை இந்தியாவின் ஆன்லைன் பயிற்சித் துறையில் வளர்ந்துள்ள நிறுவனங்கள். சமச்சீரற்ற நிலையில் ஆற்றல் பிரிந்து கிடக்கும் ஒரு நாட்டில் எட்டெக் (Edtech) கல்வியின் முகத்தை மாற்றுகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் ஆன்லைன் கல்வித் தொழில் நுட்பம் வளர்வதற்கான பெரிய வாய்ப்பு உள்ளது. நிச்சயம் நமது நாட்டில் இது ஒரு மிகப்பெரிய துறையாக வளரப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.

ஆக்கம்: தூசிஃப் ஆலம் | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா