முதலீடுகளை மறுத்து சுயமுதலீட்டில் பில்லியன் டாலர் நிறுவனத்தை கட்டமைத்த ஸ்ரீதர் வேம்பு!

0

பொதுவாக தொழில் தொடங்கும் எவரும் குறிப்பிட்ட நிலைக்கு பின் வென்ச்சர் கேப்பிடல் முதலீடு பெற்று, நிறுவனத்தை விரிவுபடுத்த நினைப்பது சகஜம். ஆனால் இவர் எல்லாரையும் விட சற்று வித்தியாசமான தொழில்முனைவர். தான் தொடங்கிய நிறுவனத்தை சுய முதலீட்டுடனே தொடர துணிவாக முடிவெடுத்தவர். அதில் வெற்றியும் கண்டவர் என்றே சொல்லவேண்டும்.

இவர் தான் ஸ்ரீதர் வேம்பு. தமிழ்நாட்டில் இருந்து தொழில்முனைவில் அதாவது ஸ்டார்ட்-அப் என்று சொல்லக்கூடிய முறையில் நிறுவனம் தொடங்கி, 100 சதவீதம் சுயமுதலீட்டுடன் செயல்பட்டு இன்று பில்லியன் டாலர் நிறுவனமாக அதை வளர்த்து நிற்கிறார். AdventNet என்ற நிறுவனத்தை தொடங்கியவர் ஸ்ரீதர் வேம்பு. மாதம் ஒரு மில்லியன் டாலர் லாபத்தை வங்கிக் கணக்கில் இவர்கள் போடுவதாக கென்ஃபோலியோஸ் தளம் குறிப்பிட்டுள்ளது. AdventNet வெளியிட்டுள்ள ZOHO என்ற மென்பொருள் சேவை தயாரிப்பு ஒரு பெரிய மாற்றத்தையே நிகழ்த்தியுள்ளது. 

1989-ல் ப்ரிஸ்டன் பல்கலைகழகத்தில் பி.எச்.டி முடித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி, தன் சகோதரர் குமாருடன் தொடங்கிய நிறுவனமே AdventNet. ஒரு சில மாதங்களிலேயே சுமார் 150 வாடிக்கையாளர்களை இவர்கள் பெற்றனர். இருப்பினும் 2000-ம் ஆண்டில் பல சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்த இவர்கள், வேறு புதிய நிறுவனம் தொடங்க முடிவெடுத்தனர். 

அப்போது பிறந்தது தான் Zoho. Zoho Office என்ற அந்த தயாரிப்பு, 500 மில்லியன் டாலர் வருவாயுடன் பிரபல கூகிள் போன்ற நிறுவனங்களுடன் போட்டி போடுகிறது. தற்போது Zoho ஒரு லட்சம் பிசினஸ் வாடிக்கையாளர்களுடனும், 1.8 கோடி தனிப்பட்ட வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. 

ஸ்ரீதர் வேம்புவின் இந்த அசாத்திய வளர்ச்சியை கண்ட பல நிறுவனங்கள் அவரின் தயாரிப்பான Zoho-வை விலைக்கு வாங்க பல முயற்சிகள் எடுத்துள்ளனர். Salesforce நிறுவனர் மார்க் பெனிஆஃப் என்ற அமெரிக்க தொழில்முனைவர் Zoho-வை கையகப்படுத்த சில வருடங்களுக்கு முன் முயற்சித்தார். அப்போது ஸ்ரீதர் வேம்பு,

“கூகிள் போன்ற ஜாம்பவான் நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் எங்கள் நிறுவனத்தால் அத்தகைய சேவையை அளிக்கமுடியாது என்றார் மார்க். அதற்கு நான், நீங்கள் தான் கூகிளை பார்த்து அஞ்சவேண்டும், நான் சந்தையில் நிலைக்க, என் தயாரிப்பை உங்களைவிட சிறப்பாக தந்தால் மட்டும் போதும் என்றேன்,” என்றார்.

ஸ்ரீதர் வேம்புவை பொறுத்தவரை எல்லா பி2பி தொடக்க நிறுவனங்களும் தங்கள் சுயமுதலீட்டில் இயங்கவேண்டும் என்ற எண்ணம் உடையவர். தங்கள் சேவையை சிறப்பாக அளித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கவேண்டும், அதன் மூலம் வருவாய் ஈட்டவேண்டும் என்பார். மைக் மார்டிஸ் போன்ற மேலும் பல பிரபல தொழிலதிபர்கள் இவரின் நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம் காட்டியபோதும் ஸ்ரீதர் தீர்கமாக மறுத்துள்ளார். 

“நான் அந்த முதலீடுகளை பெற்றிருந்தால், வேறு மாதிரியாக இருந்திருக்கலாம். ஒருவேளை மோசமாகவும் ஆகி இருக்கலாம். ஆனால் தற்போது நாங்கள் சிறப்பாக இருப்பதாகவே நினைக்கிறேன்,” என்றார்.

ஸ்ரீதர் வேம்பு தன் நிறுவனத்தில் பிரபல கல்வி நிலையங்களில் இருந்து பொறியாளர்களை பணிக்கு சேர்ப்பதைவிட சாதரண, பிறரால் மறுக்கப்பட்ட ஆனால் தன்னம்பிக்கை மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களை சேர்த்துக் கொள்கிறார். இவர் நிறுவனத்தில் உள்ள சுமார் 150 மேலாளர்கள் இதுவரை எந்த முன் அனுபவமும் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்று kenfolios குறிப்பிடுகிறது. 

“நாங்கள் பணியமர்த்தலில் கல்லூரி, பின்னணி என்று பார்ப்பதில்லை. இந்தியாவில் பிரபல கல்லூரிகளில் படிக்க எல்லாரும் அத்தகைய பின்னணியை கொண்டவர்கள் அல்ல, வெளியில் பலரும் புத்திசாலிகளாக இருக்கின்றனர்.” 

ஸ்ரீதர் வேம்பு-வை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்நாட்டில் பல இளைஞர்கள் தங்கள் தொழில்முனைவு பயணத்தை தொடங்கியவர்கள். அவரின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வருவாய் பின் ஓடாமல் தன் கனவை நோக்கி தீவிரமாக உழைத்தவர் என்ற அடிப்படையில் அவரை ரசிக்காத தொழில்முனைவரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஊக்கத்தை தருபவர். 

கட்டுரை தகவல்கள் உதவி: kenfolios