அனைவருக்கும் நஞ்சில்லா உணவு: ஆர்கானிக் பொருட்கள் விற்பனையில் இயற்கை விவசாயக் காதலி கவிதா!

1
“என் கம்பீரம். அதுதான் என் ஆளுமை. என்னிலிருந்து இயற்கைத்தொழிலை கழித்தால் ஏதுமற்றவள் நான். இயற்கையும் இயற்கை தொழில் சார்ந்த வாழ்வும் பூரணமிக்கவை. அப்படியொரு வாய்ப்பு எனக்கு வாய்த்திருக்கிறது. இயற்கைதொழில்தான்..."

இப்படியாக தன் தொழிலை அணு அணுவாக நேசித்து செய்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த கவிதா செந்தில்குமார்.

இன்றைய சூழலில் மக்களின் வாழ்க்கைமுறை பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. இதனால், மக்களின் உடல் உழைப்பு குறைந்து உடல்பருமன் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. அது மட்டுமின்றி சுற்றுச்சூழல் சீர்கேடால் பெயர் தெரியாத நோய்களும் மருத்துவர்களுக்கே சவாலாக உருவாகி வருகின்றன. உணவுப் பழக்கமும் மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனாலேயே ரசாயனம் கலக்காத பாரம்பரிய உணவுகள் குறித்த தேடல் மக்களிடையே அதிகரித்துள்ளது.

இத்தகைய சூழலில் தான் இயற்கையான முறையில் விவசாயம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகிறார் மதுரையைச் சேர்ந்த கவிதா செந்தில் குமார்.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் கவிதா, பி.எஸ்சி. கணினி அறிவியல் படித்தவர். மேற்கொண்டு அதே துறையில் வேலைக்குச் செல்ல விரும்பாத அவர், சிறுவயது முதலே தன் வாழ்வோடு பின்னிப் பிணைந்த இயற்கையோடு தனக்கான தொழிலை ஏற்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். அதன்படி, இயற்கை விவசாயப் பொருட்களை விற்பனை செய்து வருவதோடு, அதற்கான சந்தை வாய்ப்பை விவசாயிகளுக்காக ஏற்படுத்தித்தரும் வகையிலும் திறம்பட செயல்பட்டு வருகிறார்.

“எங்களுடையது விவசாயக் குடும்பம். அப்பாவிற்கு தெரியாத விசயங்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு செடி, கொடிகள், மூலிகைகள் பற்றி அனைத்தும் தெரிந்து வைத்திருந்தார். அவரிடம் இருந்து தான் எனக்கும் இந்த ஆர்வம் வந்தது," என தொடங்கினார். 

என்னோடு பிறந்தவர்கள் மூன்று பேர். சிறுவயதில் இருந்தே வயல் வேலைகளில் எனக்கு ஈடுபாடு அதிகம். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதே எனது விருப்பம். காலத்தின் கட்டாயத்தால் கணினி அறிவியல் படித்தாலும், திருமணத்திற்குப் பின் தொழில் முனைவோர் ஆவதே என் கனவாக இருந்தது. அதன்படி எனக்குப் பிடித்த இயற்கையோடு சேர்ந்த விவசாயப் பொருட்கள் விற்பனையையே என் தொழிலாகத் தேர்வு செய்து கொண்டேன்” என்கிறார் கவிதா.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்தத் தொழிலை கவிதா தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் ஆர்கானிக் முறையில் தங்களது நிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை அக்கம்பக்கத்தாருக்கு அவர் விற்பனை செய்துள்ளார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, கொஞ்சம் கொஞ்சமாக தனது தொழிலை அவர் விரிவு படுத்தியுள்ளார்.

தொழில் தொடங்கிய முதல் மூன்றாண்டுகள் கவிதா தனியாகத் தான் செயல்பட்டுள்ளார். பின்னர், மனைவிக்கு உறுதுணையாக செயல்படும் பொருட்டு, தனது சி இ ஓ வேலையை செந்தில்குமார் ராஜினாமா செய்து விட்டார். இன்று களப்பணிகளை கவிதாவும், மார்க்கெட்டிங் வேலைகளை அவரது கணவர் செந்தில்குமாரும் கவனித்து வருகின்றனர்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் சிறு அளவில் இயற்கை விவசாயப் பொருட்கள் விற்பனையை கவிதா ஆரம்பித்துள்ளார். பின்னர், ’ஆர்கானிக் கோல்ட் ஆதித்யா வோலி’ என்ற பெயரில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிறுவனம் ஆரம்பித்து தனது தொழிலை விரிவு படுத்தியுள்ளார். 

தென்னிந்தியாவின் முதல் ஆர்கானிக் விலை பொருட்களுக்கான பொதுத்துறை நிறுவனம் இது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும். அதிலும் குறிப்பாக பெண் நிறுவனர் தலைமையில் செயல்படும் ஒரே ஆர்கானிக் விலை பொருட்களுக்கான பொதுத்துறை நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது கம்பெனியில் 19 பிராண்டுகளில் சுமார் 300 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஐஎஸ்ஓ உட்பட பல்வேறு தரச்சான்றுகளை பெற்றுள்ளது இவரது தயாரிப்புகள். அரிசி, பருப்பு மற்றும் சிறுதானியங்களில் இருந்து ரவை, மாவு, களி மிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இவர் விற்பனை செய்து வருகிறார். இதுதவிர செக்கு எண்ணெய் வகைகள், தேன், ஹெர்பல் பொருட்களையும் இவர் தயாரித்து விற்பனை செய்கிறார்.

“ஆரம்பத்தில் காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை தான் விற்பனை செய்து வந்தோம். பின் அரிசி, பருப்பு, சிறுதானிய உணவுப் பொருட்கள் விற்பனையையும் ஆரம்பித்தோம். உணவுப் பொருள் விற்பனைக்காக சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டேன். ஊர் ஊராகச் சென்று அந்த ஊரின் சிறப்பு உணவுகள் மற்றும் அதன் தயாரிப்பு பற்றி தெரிந்து கொண்டேன். அதன்பிறகு தான் இந்த ரெடி டூ ஈட் உணவுகள் தயாரிப்பை ஆரம்பித்தேன்,”

எனக் கூறும் கவிதா, தனது தயாரிப்புகள் அனைத்திற்கும் அறுவடை, திருவிழா என தமிழ்ப் பெயர்களே சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என தனது தொழில் சூடு பிடிக்கத் தொடங்கியதும், அதனை மற்ற ஊர்களுக்கும் விரிவு படுத்த விரும்பியுள்ளார் கவிதா. அதன்படி, தன்னைப் போலவே திருமணத்திற்குப் பின் தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கு உதவ அவர் திட்டமிட்டார். அதனைத் தொடர்ந்து வீட்டில் வைத்து தனது பொருட்களை விற்பனை செய்யும் பெண்களுக்கு குறைந்த முதலீட்டில் (25 சதவீத மார்ஜினில்) அவர் பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கினார்.

இது தவிர கவிதாவின் தயாரிப்புகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதைத் தொடர்ந்து, சில கடை முதலாளிகளும் அவரது தயாரிப்புகளை வாங்கி விற்கத் தொடங்கினர். அதன்படி, தற்போது இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் இவரது பொருட்கள் விற்பனை ஆகின்றன.

ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளிடமிருந்து இவர், தரச் சான்றிதழ் பெறப்பட்ட இயற்கை விவசாயத்தில் விளையப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்கிறார். அதோடு இயற்கை விவசாயம் தொடர்பான கவுன்சிலிங்கும் கொடுத்து வருகிறார். சில இடங்களில் இவரே சொந்தமாக தேவையான பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் விளைவித்துக் கொள்கிறார்.

“எங்கள் இணையதளத்தைப் பார்த்து பல்வேறு இடங்களில் இருந்து தேவையான பொருட்களை ஆர்டர் செய்கின்றனர். ஆரம்பத்தில் ஆர்கானிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறி விட்டது. தாங்கள் தரும் பணத்திற்கு ஏற்ப தரமான பொருட்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தரம் சரியாக இருந்தால் போதும் மக்கள் விரும்பி வாடிக்கையாக வாங்க ஆரம்பித்து விடுவார்கள்,”

என தன் வெற்றியின் ரகசியம் சொல்கிறார் கவிதா. ஆர்கானிக் பொருட்கள் விற்பனை மட்டுமின்றி பாரம்பரிய விருந்தகம் என்ற பெயரில் வீடு தேடி உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தையும் கவிதா நிர்வகித்து வருகிறார். ரெடி டூ ஈட் ( Ready to Eat) என்ற கான்செப்டில் 60-க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்கின்றனர். தன் மாமியாரின் ஒத்துழைப்போடு, சில சமையல் ஆட்களை வைத்து இந்த நிறுவனத்தை கவிதா நடத்தி வருகிறார்.

காரைக்குடி கோனாபட்டைச் சேர்ந்த தனது அம்மாச்சி மீனாம்பாள் கைமணத்தில் தனக்கு பல பாரம்பரிய உணவுகள் சிறுவயதிலேயே பரிட்சயமானதாகக் கூறும் கவிதா, அதனை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் முயற்சியில் இந்த தொழிலை ஆரம்பித்ததாகக் கூறுகிறார். கடந்த ஓராண்டாக இதனை அவர் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

“எனக்குத் தெரிந்த, பிடித்த வேலையை செய்வதால் எனக்கு மனநிம்மதி கிடைக்கிறது. அதோடு ஆரோக்கியமான உணவுப் பொருட்களை மற்றவர்களுக்கு தருகிறேன் என்பதில் ஆத்மதிருப்தியும் கிடைக்கிறது.” 

அம்மா, பாட்டி செய்த வேலையைத் தான் இப்போது நானும் செய்கிறேன். அதனால் இதனைத் தனியாக வெளியில் சென்று கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவை ஏற்படவில்லை. தற்போது எனக்குக் கீழே ஐந்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர். ஆனால், அனைத்து வேலையையும் நானும் பார்ப்பேன். யாராவது ஒருவர் வேலைக்கு வராவிட்டால், அன்றைய தினம் வேலை தடைபட்டுவிடா வண்ணம் நானே களத்தில் இறங்கி அந்த வேலையைப் பார்ப்பேன். அதுதவிர ஆர்கானிக் முறையில் பழங்கள், காய்கறிகள், கீரைகள் விளையும் இடத்திற்கு நானே நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொள்வேன். இதனால், தரமான பொருட்களை நேரில் பார்த்து வாங்கும் திருப்தி கிடைக்கிறது,” எனக் கவிதா கூறுகிறார்.

நேரடி வணிகம் மட்டுமின்றி, ஆன்லைனிலும் வியாபாரம் செய்து வரும் கவிதா, ஃபேஸ்புக் வாயிலாக இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

“இந்தியா முழுவதும் 17 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் சிறு, குறு விவசாயிகளிடமிருந்து இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களைக் கொள்முதல் செய்கிறோம். செயற்கை உரங்கள், ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாத விவசாயிகளிடமிருந்து மட்டுமே பொருட்களை வாங்குகிறோம்.” 

”ஒரு பொருளை உற்பத்தி செய்பவர்களுக்குத்தான் உற்பத்திக்கான செலவுகள் தெரியும். எனவே உற்பத்திப் பொருட்களுக்கான விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்கின்றனர். அவர்கள் சொல்லும் விலைக்குப் பொருட்களை வாங்குகிறோம். இதனால் விவசாயிகளுக்குத் திருப்திகரமான வருமானம் கிடைக்கிறது. எங்களுக்கும் தகுந்த லாபம் கிடைக்கிறது,” என்கிறார் கவிதா.

நஞ்சில்லா உணவுப் பொருட்கள் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பது தான் கவிதாவின் நோக்கமாம். தொழிலை ஒரு புறம் வெற்றிகரமாக நடத்தி வரும் கவிதாவிற்கு பறவைகள் மீதும் ஆர்வம் அதிகம். அதனால், பறவைகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் பாடத்தையும் தனியாக படித்துள்ளார்.

நேரத்தை நிர்வகித்தல் கலையைக் கற்றுக் கொண்டாலே எதையும் சாதிக்க முடியும் எனும் கவிதா, வேலை, படிப்பு, குடும்பம் என அனைத்திலும் கவனத்தைச் செலுத்தி வெற்றியாளராக வலம் வருகிறார்.

கவிதாவின் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் அவரது இன்னபிற தயாரிப்புகள் குறித்து அவரது இந்த http://www.organicgold.in/ இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். 

Related Stories

Stories by jayachitra