தொழில்முனைவு இளைஞர்களுக்கே என்ற மாயையை அகற்றிய 50 வயதை தாண்டிய வெற்றி தொழில்முனைவோர்கள்!

0

தொழில்முனைவு ஆர்வம் என்பது இளைஞர்கள் மத்தியிலேயே அதிகம் இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. மார்க் சூக்கர்பெர்க், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோர் உலகத்தையே மாற்றியமைக்ககூடிய வல்லமை படைத்த நிறுவனங்களை தங்களது இருபதுகளிலேயே துவங்கினர். அப்போதிருந்து ஒவ்வொரு ஆண்டும் இளம் தொழில்முனைவோர் அதிகரித்து வருகின்றனர். சமீபத்தில் இந்தியாவில் 13 வயது அல்லது 15 வயதுடையோர் ஸ்டார்ட் அப் துவங்குவதைப் பார்க்கமுடிகிறது.

இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 30 வயதிற்கும் குறைவானோர் 65 சதவீதம் பேர் இருப்பதால் மக்கள் எளிதாக ஸ்டார்ட் அப்பை இளைஞர்களுடன் பொருத்திப் பார்க்கின்றனர்.

ஆனால் தொழில்முனைவு முயற்சியில் இளைஞர்களே வெற்றியடைவதாக மக்களிடையே நிலவி வந்த மாயையினை சமீபத்திய ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ ஆய்வுகள் கலைத்துள்ளது. இந்த ஆய்வின்படி வெற்றிகரமான ஸ்டார்ட் அப் நிறுவனரின் சராசரி வயது 45 ஆகும். அத்துடன் வயது அதிகரிக்கையில் வெற்றி விகிதமும் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் இந்த ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதிக வளர்ச்சியடைந்த நிறுவனங்களைத் துவங்கிய நிறுவனர்களில் நடுத்தர வயதுடையவர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துவது நடுத்தர வயதினர் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் போக்கினை உணர்த்துகிறது. ஐம்பதுகளின் இறுதியை எட்டுவதற்கு முன்பு வரை, வயதுடன் சேர்ந்து தொழில்முனைவு தொடர்பான செயல்திறனும் அதிகரித்து வருவதை ஆய்வுகள் குறிப்பிடுகின்றன,” என HBR கட்டுரை தெரிவிக்கிறது.

அனுபவமிக்க தொழில்முனைவோரை ஹார்வர்ட் ஆய்வுகள் மட்டுமின்றி பிறரும் ஆதரிக்கின்றனர்.

பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் இருபதுகளிலேயே இருப்பதாக நிலவிய மாயையினை எம்ஐடி-யின் சமீபத்திய ஆய்வு கலைத்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனர்களின் சராசரி வயது 42 என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டங்களின் தரமும் செயல்படுத்தும் திறனும் வயது மற்றும் அனுபவம் சார்ந்து அதிகரிக்கும் என்பதில் வலுவான நம்பிக்கைக் கொண்ட வென்ச்சர் கேப்பிடலிஸ்ட் இந்த ஆய்வு முடிகளை ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆரின் கேப்பிடல் நிறுவனர் மோஹன் கூறுகையில், 

“சிறப்பான திட்டத்திற்கு வயது ஒரு பொருட்டல்ல. எங்கிருந்து வேண்டுமானாலும் உதிக்கும். ஆனால் திட்டம் எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதே முக்கியம்,” என்றார்.

நடுத்தர வயதினரின் ஸ்டார்ட் அப்

சமீபத்தில் இந்தியாவில் நடுத்தர வயதினர் ஸ்டார்ட் அப் துவங்கி வெற்றிகரமாக செயல்படுவதை அதிகம் பார்க்கமுடிகிறது. இந்த முயற்சிகள் பலர் நினைப்பது போன்று மென்பொருள் சார்ந்தது மட்டுமல்ல.

ஆனந்த்குமார் சாந்தனு தத்தா மற்றும் வி.பாலசுப்ரமணியன் ஆகியோருடன் இணைந்து 2014-ம் ஆண்டு பெங்களூருவில் பக்வொர்க்ஸ் ரிசர்ச் லேப்ஸ் (Bugworks Research Labs) நிறுவினார். பக்வொர்க்ஸ் அறிவியல், மென்பொருள் ஆகியவற்றை ஒன்றிணைத்து செயல்படுகிறது. அத்துடன் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கானோரின் உயிரைப் பறிக்கும் சூப்பர்பக்ஸ் எனப்படும் மருத்துவமனைகளில் ஏற்படும் நோய்தொற்று பிரச்சனைக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சூப்பர்பக்ஸ்கான மருந்து இறுதியாக எழுபதுகளில் கண்டறியப்பட்டது. அப்போதிருந்து இந்த பக் ஆண்டிபயாடிக்கை எதிர்த்துப் போராடும் வகையில் தன்னை மாற்றியமத்துக்கொண்டுள்ளது.

இணை நிறுவனர்கள் மூவரின் பொறுப்புகளும் தெளிவாக உள்ளது. சாந்தனு மற்றும் பாலசுப்ரமணியன் அறிவியல் மற்றும் ப்ராடக்டில் கவனம் செலுத்துகின்றனர். நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பான திட்டமிடலுக்கு ஆனந்த் பொறுப்பேற்றுள்ளார். ஐம்பதிற்கும் மேற்பட்ட வயதினரான இம்மூவரும் பொதுவான ஒரே நோக்கத்தைக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே.

”நான் வயதைப் பொருட்படுத்துவதில்லை. எந்த ஒரு தருணத்திலும் திட்டங்களை செயல்படுத்துவதில் தெளிவாகவும் கவனத்துடனும் இருக்கவேண்டும்,” என்றார் ஆனந்த். 

நீங்கள் எப்போதும் முப்பது விநாடிகளில் வென்சர் கேப்பிடலிஸ்டின் கவனத்தை ஈர்க்கவேண்டும். பக்வொர்க்ஸ் அதைச் செய்தது. இந்நிறுவனம் சமீபத்தில் ஒன்பது மில்லியன் டாலர் சீரிஸ் ஏ நிதிச்சுற்றை உயர்த்தியுள்ளது. 2017-ம் ஆண்டு CARB-X என்கிற பொது-தனியார் கூட்டு முயற்சியிடமிருந்து 2.6 மில்லியன் டாலர் நிதியுதவி பெற்றது.

நாற்பதுகளில் ஸ்டார்ட் அப் துவங்குவது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொருந்தும். டாக்டர் கீதா மஞ்சுநாத் 25 ஆண்டுகள் கார்ப்பரேட் மற்றும் அரசு உதவி பெற்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட பிறகு மார்பக புற்றுநோயை ஸ்க்ரீன் செய்யும் ’நிறமை’ (Niramai) என்கிற நிறுவனத்தைத் துவங்கினார். பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இவரது சுயவிவரப் பட்டியலில் டேட்டா அனாலிடிக்ஸ், பிக்டேட்டா, க்ளௌட் கம்ப்யூட்டிங், செமாண்டிக் வெப் போன்ற தொழில்நுட்பத் திறன்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவரது மனஉறுதியும் நிபுணத்துவமே இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது. 

”உலகளவிலான பிரச்சனைக்கு நாங்கள் தீர்வு காண்கிறோம். வெப்பநிலையைக் கண்காணிக்க இமேஜ் மற்றும் காட்சி அடிப்படையிலான நெறிமுறைகளுடன் மார்பக புற்றுநோயை எங்களது மென்பொருள் ஸ்கிரீன் செய்கிறது. இது ஆண்களும் பெண்களும் புற்றுநோயை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிய உதவுகிறது,” என்றார்.

இன்று முதலீட்டாளர்களுடனும் நோயாளிகளுடனும் பேசுதல் வணிக நடவடிக்கைகள் என பரபரப்பாக உள்ளார். இரண்டாடுகளுக்கு முன்பு கார்ப்பரேட்களின் உத்திகளை உலகளாவிய மறுசீரமைப்பு நடவடிக்கையால் இவரால் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கமுடியாமல் போனது. இதனால் தனது ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்கக் கோரி முதலீட்டார்களைத் தொடர்புகொண்டார். 

நிறமை வணிக முயற்சியை உலகளவில் எடுத்துச்செல்ல இவரைக் காட்டிலும் இளையவரான இணை நிறுவனர் நிதி மதூருடன் இணைந்து Pi Ventures, Binny Bansal ஆகியோரிடமிருந்து அறிவிக்கப்படாத நிதித்தொகையை உயர்த்தியுள்ளார்.

சக்தி வாய்ந்த திட்டங்கள்

55 வயதிற்கு மேலான எஸ் ராவ் கணப்பா, எஸ்கே சின்ஹா இருவரும் பெங்களூருவின் ஐஐஎஸ்சி-யில் Labtomarket என்கிற நிறுவனத்தை சுயநிதியுடன் துவங்கினர். எஸ்கே சின்ஹா மென்பொருள் உருவாக்கும் பணியில் இருந்தார். கணப்பா இருபதாண்டுகள் ரயில்வேயில் அதிகாரியாக இருந்தார். ரயில்வேயில் உள்ள மென்பொருள் டிஜிட்டலாக மாற்றப்படவேண்டிய தேவை இருப்பதை இவர்களது அனுபவம் உணர்த்தியது.

ரயில்வே பிரிவில் 40 சதவீத டிஜிட்டல் பயன்பாட்டுடன் இன்னமும் அனலாக் தொழில்நுட்பமே பயன்பாட்டில் உள்ளது. 

”கம்ப்யூட்டர்களையும் ரயில்களின் இயக்கம் குறித்த சில வரைபடங்களையும் மட்டுமே வைத்துக்கொண்டு டிஜிட்டல்மயமாகிவிட்டதாக சொல்வதில் அர்த்தம் இல்லை,” என்றார் கணப்பா.

இவர்களது ஸ்டார்ட் அப் எத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது? ரயில்வே ஊழியர்கள் ரயில் தண்டவாளம் வழியே சென்று சோதனை செய்து ஸ்டீலின் வலிமையைக் கண்டறியவேண்டிய அவசியத்தை Labtomarket போக்குகிறது. அவர்கள் ஒலியைக் கேட்டதும் உடனடியாக அதிகாரிகளிடம் தண்டவாளத்தை மாற்றச் சொல்கின்றனர்.

”ஒவ்வொரு மாதமும், ரயில் தாமதமாக வருவதாலும் விபத்துகளாலும் பல மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. பராமரிப்பிற்காக ரயில் லைன்களில் ஐஓடி சென்சார்களை பயன்படுத்தவும் ரயில் நிலையங்களில் ரயில் நிறுத்தப்படுவதையும் வெளியேறுவதையும் நிர்வகிக்க ஸ்மார்ட் செயலிகளைப் பயன்படுத்தவும் கமர்ஷியல் ரயில்வே லைன்களை ஆயத்தப்படுத்தி வருகிறோம்,” என்றார் சின்ஹா.

2016-ம் ஆண்டு இந்நிறுவனம் நிறுவப்பட்டது. ஐஐஎஸ்சி-ஆல் இன்குபேட் செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்தே இந்த இரு நிறுவனர்களும் செயல்படுகின்றனர். இவர்கள் ஸ்டார்ட் அப்பிற்காக தங்களது சொந்த பணத்திலிருந்து 2,00,000 டாலர் முதலீடு செய்துள்ளனர்.

திட்டங்களும் ஏராளமாக உள்ளது. வயதும் ஒரு தடை இல்லை.

சிறப்பான முன்னுதாரணங்கள்

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் முன்னாள் நிர்வாக இயக்குனரான விஜய் ரேக்கி, க்ளோபஸ் லிமிடெட் நிறுவனர்களான அஜய் குமார் ஸ்வரூப் மற்றும் சேகர் ஸ்வரூப்புடன் இணைந்து தனது எழுபது வயதில் ஸ்டார்ட் அப் துவங்கினார். யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் நாற்பதாண்டுகள் பணியாற்றி அதை பல மில்லியன் டாலர் வணிகமாக உருவாக்கிய விஜய் 2016-ம் ஆண்டு ஐந்து மில்லியன் டாலர் முதலீட்டுடன் UniBev நிறுவனத்தின் இணை நிறுவனரானார்.

”குறைந்த விலையில் ப்ரீமியம் ப்ராண்டை அறிமுகப்படுத்தவேண்டும் என்று திட்டமிட்டோம். ஸ்காட்ச் மற்றும் இந்திய வகை கலந்த உயர்தர விஸ்கி தயாரிப்பதற்காக ஆர் & டியில் முதலீடு செய்தோம்,” என்றார் விஜய் ரேக்கி.

ஆர் & டி-யிலும் ப்ளெண்ட் மாஸ்டர்களுடனும் ஓராண்டு செலவிட்டு பிறகு 18 வருட கலவையான Oaktan மற்றும் 12 வருட கலவையான Governor’s ஆகியவற்றை உருவாக்கினர். அத்துடன் Laffaire என்கிற பிராந்தி வகையையும் அறிமுகப்படுத்தினர். UniBev நாடு முழுவதும் 300 விநியோக பகுதிகளுடன் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு 35 பில்லியன் டாலர் KPMG கொண்ட இந்திய மதுபானங்கள் துறையை இலக்காகக் கொண்டுள்ளது. 

UniBev விநியோகத்தில் கவனம் செலுத்தி வருகையில் பிரேம்குமாரின் SnapBizz கிரானா ஸ்டோர்களில் கவனம் செலுத்துகிறது. 

”பெட்டிக்கடைகள் இந்தியாவிற்கு அத்தியாவசியமானவை. அவர்களது லாபம் அதிகரிக்க அவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள நாம் உதவவேண்டும்,” என்றார் பிரேம். 

இவர் இந்தியாவிலும் ரஷ்யாவிலும் FMCG பிரிவில் முப்பதாண்டுகள் பணியாற்றினார். கிழக்கு ஐரோப்பாவில் மொபைல் போன் வணிகத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு 2012-ம் ஆண்டு SnapBizz துவங்க இந்தியா வந்தார்.

”உரிமையாளர் குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்துவதையும் அன்றாட வாழ்க்கையை நடத்துவதையும் நினைத்து கவலைகொள்வதை நான் உணர்ந்தேன். சராசரி இந்தியன் தனது குடும்பத்தைக் குறித்தே முதலில் சிந்திப்பார். அன்றாட தேவைகளை எவ்வாறு பூர்த்து செய்துகொள்வது என்பதைச் சுற்றியே அவரது வணிகமும் அமைந்திருக்கும்,” என்றார் பிரேம். 

அவர்களால் சிறு கடைகள் கலாச்சாரத்தையும் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ளமுடியாததால் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதில் தோல்வியுற்றதாக தெரிவித்தார். 2012-ம் ஆண்டு அருகாமையில் இருந்த 50 கிரானாக்கள் வர்த்தக க்ளையண்டுகளாக அவருடன் இணைந்தனர். இதன் வாயிலாக கிடைத்த படிப்பினைகளே SnapBizz பல மில்லியன் டாலர் வர்த்தகமாக உருவாக உதவியது. தற்போது 1,400 கிரானா ஸ்டோர்களுடன் பணிபுரிந்து வருகிறது.

இவர்களது வணிக மாதிரி நுகர்வோர் பொருட்களின் ஒட்டுமொத்த வணிக சங்கிலியில் இருந்தும் பணத்தை ஈட்ட உதவுகிறது. நான்கு முக்கிய கூறுகள் இதில் அடங்கும். இவற்றில் மூன்று மாட்யூல்கள் கட்டணத்துடன்கூடியதாகும். 

SnapBizz சிறு சில்லறை வர்த்தகர்களுக்கு உதவும் நிலையில் சில தொழில்முனைவோர்கள் நிறுவனங்கள் பணத்தை சேமிக்க உதவுகின்றனர். IBFINtech அத்தகைய ஸ்டார்ட் அப்பாகும். டிஎம் மஞ்சுநாத், சந்திரமோஹன் க்ரோவர் ஆகிய இரு வங்கியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு 2011-ம் ஆண்டு இந்த ஸ்டார்ட் அப்பை நிறுவினர்.

உலகளாவிய கருவூல நடவடிக்கைகள் 135 ட்ரில்லியன் டாலராக இருப்பதாக McKinsey & Co மதிப்பிடுகிறது. சந்தை பெரியளவில் இருக்கும் நிலையில் 10 பில்லியன் டாலருக்கு அதிகமாக அந்நிய செலாவணி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள் அந்நிய செலாவணிகளை எக்ஸெல் டூல்களைக் கொண்டே இன்னமும் நிர்வகித்து வருகிறது.

”IBFINtech நிறுவனம் I-ToC (Innovative Treasury on Cloud) ப்ராடக்ட் கொண்டு இதற்கு தீர்வுகாண விரும்புகிறது. கருவூலம் மற்றும் வர்த்தக நிதி நடவடிக்கைகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வெப் மற்றும் மொபைல் வெர்ஷன் தீர்வுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்,” என்றார் மஞ்சுநாத்.

மஞ்சுநாத் மற்றும் அவரது இணை நிறுவனர் இருவருமே 55 வயதிற்கும் அதிகமானவர்கள். குறைவான கட்டணத்தில் சிறந்த பலனளிக்கக்கூடிய தீர்வுகளை உருவாக்கும் முயற்சியில் இவர்கள் உள்ளனர்.

பொன்னான காலம்

”இந்தியாவில் 74 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வருவாய் ஈட்டும் 6,200-க்கும் அதிகமான நிறுவனங்கள் கருவூலம் சார்ந்த இக்கட்டான தீர்மானங்களை நிர்வகிக்க ஸ்ப்ரெட்ஷீட்களையும் ஈஆர்பி சிஸ்டம்களையும் சார்ந்துள்ளது. இதனால் சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக நஷ்டம் ஏற்படுகிறது.

IBFINtech நிறுவனம் SAP, ஆரக்கிள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது. தற்சமயம் Murex, Misys ஆகிய நிறுவனங்களே கருவூல மேலாண்மையில் முன்னணியில் உள்ளது. Edgeverve நிறுவனத்துடன் இன்ஃபோசிஸ் நிறுவனமும் முன்னணி பத்து நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளது.

வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே என்பது தெளிவாகிறது. முறையான திட்டமும் விடாமுயற்சியுமே முக்கியமாக கருதப்படுகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : விஷால் கிருஷ்ணா | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL