வாழ்க்கையை ரசித்து, அனுபவித்து வாழுங்கள்:அம்பரிஷ் குப்தா!

1

"ஸ்டார்ட்அப் ஸ்டோரீஸ் ஃபார் தி சோல்(Startup Stories for the Soul)” தொடரில் தொழில் முனைவோரின் ஆத்மார்த்தமான கதைகளை கொண்டு வருகிறோம். இதில் நமது தேடல் ஒன்றுதான்; “எது ஒருவரை தொழில் முனைவோர் ஆக்குகிறது?இவ்வாறு சம்பாதிப்பவர்களின் சிறந்த வாழ்க்கைக்குப் பின்னால், அவரது வளர்ச்சி மற்றும் வெற்றிக்குப் பின்னால், எது அந்த தொழில்முனைவோரை ஒவ்வொரு நாளும் உந்தித் தள்ளுகிறது?”

நோலாரிட்டியை (Knowlarity) சேர்ந்த அம்பரிஷ் குப்தா பற்றி சொல்லப்போகிறோம். அவருடன் நடந்த உரையாடல் ஒரு உள்ளப்பூர்வமானது. உரையாடலின் போது, சில நேரங்களில் அவரே பேசிச் சிரித்துக் கொண்டார். ஒளிவுமறைவில்லாத அவரது பேச்சின் போது, சிலநேரம் நாங்கள் இருவருமே சிரித்துக் கொண்டோம், அவர் தனது கதையைச் சொன்ன போது என்னிடம் அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதே தாக்கத்தை உங்களிடமும் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இந்தக் கதையின் எளிமைதான் என் மனதை விட்டு அகலாமல் இருப்பதற்கு காரணம். அது மட்டுமல்ல வாழ்க்கையின் அர்த்தம் குறித்த அம்பரிஷின் ஆத்மார்த்தமான தேடலே அவரை ஒரு தொழிலதிபராக ஆக்கியது என்றே சொல்லலாம். அவரது கதை என் மனதை விட்டு அகலாமல் இருப்பதற்கு இந்தத் தாக்கம்தான் காரணம்.

"நான் இந்த அளவுக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்கு என் பெற்றோர்தான் காரணம். கான்பூர்தான் எனது சொந்த ஊர். எனது வாழ்க்கையில் தொடர்ந்து ஊக்கத்தை கொடுத்து வந்த முதல் முக்கியமான நபர் என் அம்மாதான். அவர் மிகவும் நேர்மையானவர். வெளிப்படையானவர். அப்பா ஒரு கவிஞர். அவருக்கு கவிதைதான் முதலில். அதற்குப் பிறகு அவர் ஒரு வர்த்தகர். கவிதையும் தத்துவமும் எனது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருந்தது. சின்ன வயதிலேயே நானும் எனது சகோதரரும் கவிதைகள் எழுதினோம். நாங்கள் பணக்காரர்கள் அல்ல. அதே சமயத்தில் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. நாங்கள் அமைதியும் அன்பும் நிறைந்திருந்த எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தோம். அன்பில் இருந்து கிடைத்த ஸ்திரத்தன்மையும், தத்துவத்தின் மீது இருந்த நாட்டமும்தான் எனது அனுபவங்களை வரையறுத்தது என்று நினைக்கிறேன்" எங்கிறார் அம்பரிஷ்.

மற்றொரு முக்கியமான தாக்கம்," நான் சிறுவனாக இருந்த போது, கான்பூரில் இருந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டுக் கொண்டிருந்தன. மனம் உடையும் நிகழ்வு அது. வலியின் எச்சங்களை நான் பார்க்க முடிந்தது. மக்கள் பணிக்குச் செல்வதை நிறுத்தி விட்டனர். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஜவுளி ஆலை இருந்தது. நிர்வாகம் சரியில்லாததால் அரசாங்கம் அதன் மீது நடவடிக்கை எடுத்தது. அதைச் சரி செய்ய ஏராளமான பணம் தேவைப்பட்டது. தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி விட்டு, தொழிலாளர்களுக்கு சும்மா சம்பளம் கொடுத்தால் ஆகும் செலவைக் காட்டிலும் தொழிற்சாலையை நடத்துவதற்கு அதிகம் தேவைப்பட்டது. ஆலை நிர்வாகம், உற்பத்தியை நிறுத்தி தவிர்க்க முடியாத ஒரு மந்த நிலை உருவானது. வேலை செய்யாமல் தொழிலாளிகள் மாதக்கடைசியில் சம்பளத்தை மட்டும் பெற்றுக் கொண்டு சென்றனர். திடீரென்று என்னைச் சுற்றியிருந்த சூழல் மிக மெதுவாக நகர்வது போலிருந்தது. அதில் சோம்பலும் தைரியமின்மையும் விரக்தியும் நிறைந்திருந்தது. இது சரியல்ல என்று எனக்குப்பட்டது. ஏதாவது வித்தியாசமாகச் செய்தாக வேண்டும். தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள பருவினப் பொருளாதாரம் (macro economics) குறித்து விரிவாகப் படித்தேன். அந்தப் புத்தகங்கள் என் உற்ற துணையாயின. என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றைக் குறித்தும் கேள்வி எழுப்பத் தொடங்கினேன்" என்கிறார்.

"எனக்குத் தெரியும் எங்கள் ஊர்க்காரர்களைப் போல நான் சணல் பையை தூக்கிக் கொண்டு போய் விற்க விரும்பவில்லை(சிரிக்கிறார்). கான்பூர் ஐ.ஐ.டியில் சேர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். அந்தப் படிப்பை ரசித்தேன். என்னை நானே ஒரு புத்திசாலியான குழந்தை என்று சொல்லிக் கொள்ளலாம் (மீண்டும் சிரிக்கிறார்). ஹோமி ஜே.பாபா விருதை நான் வென்றதுதான் என்னை அளவுகடந்து ஊக்கப்படுத்திய ஒன்று. ஐ.ஐ.டி, நான் கற்றுக் கொள்ள மகத்தான வாய்ப்புக்களைக் கொடுத்தது. எனது ஆர்வம் என்ன? நான் என்ன செய்ய விரும்புகிறேன்? என்பதை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. நான் படித்ததை உடனடியாக அமல்படுத்த முடியாது என்பதை உணர்ந்தேன். ஐ.ஐ.டி படிப்புக்குப் பின், வெளிநாடுகளில் வேலை பார்த்தேன்".

"2003ல் எனக்குத் திருமணம் நடந்தது. என் மனைவி ஒரு சீனர். என் அம்மாவைப் போலவே அவரும் எனது வாழ்க்கையில் பெரும் பங்கு செலுத்திய ஒரு நபர். பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து விட்டு, சீன ராணுவத்தில் அவர் ஓராண்டு பணியாற்றினார். மிகுந்த கட்டுப்பாடும் புத்திக்கூர்மையும் உடையவர்களில் ஒருவராக இருந்தார். செஸ் விளையாட்டில் அவர் என்னைத் தோற்கடித்து விடுவார். எங்களுக்குள் தத்துவம் குறித்தும், இந்திய சீனப் போர் குறித்தும்தான் அடிக்கடி சண்டை வரும்(சிரிக்கிறார்). வரலாறு, அரசியல் மற்றும் இலக்கியம் குறித்துத்தான் நாங்கள் எப்போதும் விவாதிப்போம்" என்று தன் வாழ்க்கை நிகழ்வுகளை வரிசைப்படுத்துகிறார் அம்பரிஷ்.

சொந்த நாட்டில் தொழிலை தொடங்க வேண்டும் என்ற மிகப்பெரும் கனவோடு நான் பெங்களூர் வந்தது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. அப்போது நான் வெறும் ஐடியலிஸ்ட்டிக்காக மட்டும் இருந்தேன். வர்த்தகம் செய்வதில் எனக்கு இருந்த அனுபவம் குறைவு. முதன் முதலாக கல்லூரியில் சேர்ந்து படிக்கப் போவது போல இருந்தது. எல்லோருக்கும் நம்மைத் தெரியும். உதவி செய்வார்கள். ஒருவர் மீது ஒருவர் மறைமுகமாக நம்பிக்கை வைத்திருக்கின்றனர். நல்ல ஒரு பொருளை கொடுத்து விட்டால் போதும், அவ்வளவுதான் என்று நினைத்தேன். ஆனால் இது எதுவும் நடக்கவில்லை. உண்மையில் யாரும் எதுவும் கொடுக்கவில்லை, மனம் தளர்ந்தது. திரும்பவும் அமெரிக்கா போய்விட விரும்பினேன். எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. என் மனைவியிடம், (அந்த நேரத்தில் அவர் அங்கு இருந்தார்) “நான் அமெரிக்கா திரும்ப விரும்புகிறேன்” என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் அவர், “என்ன பேசுகிறீர்கள் வாயை மூடுங்கள். திரும்ப வர வேண்டாம்” என்று எனக்கு அறிவுறை கூறுவார்.

"விரைவிலேயே எனது சேமிப்பு மொத்தமும் கரைந்து விட்டது. நிலைகொள்ளாமல் தவித்தேன். எதுவும் நடக்கவில்லை. யாரும் எனக்குப் பணம் தரவில்லை. நான் அமெரிக்கா திரும்பினேன். அங்கு கார்னெகி மெலனில் எம்.பி.ஏ படித்தேன். எம்.பி.ஏவுக்குப் பிறகு, மெக்கின்ஸ்சி கன்சல்ட்டிங்கில் சேர்ந்தேன். அங்கு கடினமாக வேலை பார்த்தேன். வார விடுமுறை பற்றிக் கூட நினைக்கவில்லை. இப்படியே நான் வேலை செய்து கொண்டிருந்தால், 20 வருட வாழ்க்கையில் என்ன நடந்ததோ அதுதான் நடக்கும் என்று என்னால் உணர முடிந்தது. இது ஒரு ஸ்திரமான வேலைதான். ஆனால் அது என்னுடைய வேலை இல்லை என்று மட்டும் தெரிந்தது. வாழ்க்கையில் நான் சாதிக்க விரும்பியது இது அல்ல என தோன்றியது" என்கிறார்.

ஆரம்ப தயக்கம் என்னிடம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், அது கொஞ்ச காலம்தான். நான் மீண்டும் தொழிலில் இறங்கும் வரைதான். 2008ல் மறுபடியும் ஸ்டார்ட் அப் தொடங்குவது பற்றி தீவிரமாகச் சிந்திக்க தொடங்கினேன். இந்தியாவுக்கு வந்தேன். 2009ல் செயல்படுத்தினேன். நோலாரிட்டி (knowlarity) இப்படித்தான் தொடங்கியது. என் மனைவி அமெரிக்காவில்தான் இருந்தார். நான் இங்கும் அங்குமாய்ப் போய்வந்து கொண்டிருந்தேன்.

அப்படி ஒருமுறை நான் அமெரிக்கா சென்ற போது, நடந்த ஒரு நிகழ்வு எனது வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டு விட்டது. அப்போது அமெரிக்காவில் மெமோரியல் டே. எனக்கும் எனது மனைவிக்கும் விடுமுறை கொண்டாட்டம். காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது அதி வேகமாக வந்த ஒரு பைக் திடீரென்று எங்கள் எஸ்யுவி காரில் மோதியது. கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. பைக் ஓட்டி வந்தவன் போதை மருந்து சாப்பிட்டு விட்டு வந்திருக்கிறான் என்பது பின்னால் தெரிந்தது. அந்த விபத்தில் எனது மனைவி உயிரிழந்தார்.

அதில் இருந்து, நான் எதை ஆரம்பித்தாலும் அதை முழுமையாக முடித்து விடுகிறேன். என் மனைவியின் வார்த்தைகள் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. எனது மனைவி அவருடைய ஒளிவுமறைவற்ற தன்மை, கட்டுப்பாடு, தொடர்ந்து நல்லதைத் தேடும் நாட்டம் உடையவனாக என்னையும் உருவாக்கினார்.

"வாழ்க்கை எவ்வளவு எளிதில் முடியக் கூடியது என்ற புரிதலுக்கும் மதிப்பீடுக்கும் வந்திருக்கிறேன். கடந்து போன காலத்தைக் கணக்கிட்டால், உங்களுக்கு மிச்சமிருப்பது கொஞ்ச காலம்தான் என்பதை உணர்வீர்கள். ஒவ்வொன்றிலும் நீங்கள் அமைதியை தேடத் தொடங்குங்கள். எதையும் சீரியசாக எடுத்துக்கொள்வதை விட்டு விட்டு, ஒவ்வொன்றிலும் உள்ள சின்னச் சின்ன விஷயங்களையும் ரசிக்க தொடங்குங்கள். நான் இப்படித்தான் ஒவ்வொரு நாளையும் பேரார்வத்துடனும், தாகத்துடனும் ரசித்தபடி வாழ்கிறேன்" என்கிறார் அம்பரிஷ் குப்தா உணர்ச்சி பொங்க .