வீட்டுவேலை செய்யும் பெண்ணை மாடலாக மாற்றிய முன்னணி வடிவமைப்பாளர்!

0

’ஷேட்ஸ் ஆஃப் இண்டியா’வின் வடிவமைப்பாளர் மன்தீப் நாகி அவரது அருகாமையில் இருப்பவரின் வீட்டில் வீட்டுவேலை செய்துகொண்டிருந்த கமலாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்தபோது கமலாவின் வாழ்க்கையே திசை மாறிப்போனது. மன்தீப் அவரது சமீபத்திய தொகுப்பில் மாடலாக காட்சிப்படுத்த கமலாவைத் தேர்வு செய்தார்.

திரைச்சீலை, ஃபர்னிச்சர் கவர் போன்ற அலங்கார துணிகள் மற்றும் ஃபேஷனில் முன்னணியில் இருக்கும் ப்ராண்டுகளில் ஒன்றான ’ஷேட்ஸ் ஆஃப் இண்டியா’, இந்தியாவில் உள்ள பல்வேறு துணி ரகங்களைப் படம்பிடித்து காட்சிப்படுத்துகிறது.

”Cinnamon’ என்கிற எங்களது புதிய தொகுப்பில் இழையமைப்பிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதால் எனக்கு அசாதாரணமான ஒருவர் தேவைப்பட்டார்,” என ’தி ஹிந்து’விடம் மன்தீப் தெரிவித்தார்.

தொழில்முறை மாடல்களைக் காட்டிலும் சாதாரண பெண்களுடன் பணிபுரியவே விரும்புகிறேன். ஏனெனில், 

“மாடல்களாகப்போகிறோம் என சற்றும் எதிர்பார்க்காத பெண்கள் தங்களுக்குப் பிடித்த ஆடைகளில் திடீரென்று கேமரா முன்பு நின்று சக்தியளிக்கப்பட்டதாக உணர்வார்கள்,” என்றார். 

கமலாவை அணுகி தனது திட்டத்தை விவரித்தபோது இரு குழந்தைகளுக்குத் தாயான அவர் தயக்கம் காட்டியுள்ளார். ஆனால் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியபிறகு புதிய தொகுப்பிற்கு மாடலாக இருக்க சம்மதித்துள்ளார் என தி பெட்டர் இண்டியா தெரிவிக்கிறது.

”நான் முயற்சித்துப் பார்க்க விரும்பினேன். கமலாவிடம் இது குறித்து பேசினேன். யோசித்து பதிலளிப்பதாக ஒரு நாள் அவகாசம் கேட்டார். திரும்ப வந்து சம்மதம் தெரிவித்தார். ஆடை வகை குறித்தும் புகைப்படத்தின் பயன்பாடு குறித்தும் கவலை தெரிவித்தார். முழுமையான செயல்முறையை அவருக்கு விவரித்தோம். அவர் எங்களுடன் இணைந்துகொண்டார். இந்த படப்பிடிப்பு அவரது வாழ்க்கையை மாற்றிவிடுமா என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் இந்த அனுபவத்தை நினைத்து அவர் நிச்சயம் மகிழ்வார்,” என்றார் மன்தீப்.

மன்தீப் வழக்கத்திற்கு மாறான இத்தகைய மாடல்களை தனது திட்டங்களுக்குத் தேர்வு செய்வது இது முதல் முறையல்ல. அவரது வலைதளத்தைப் பார்வையிடுகையில் வெவ்வேறு நிலையில் உள்ள பெண்களின் தொகுப்பைக் காணலாம்.

கட்டுரை : THINK CHANGE INDIA