தடைகள் தாண்டி தனியார் நிறுவனத்தில் HR பிரிவில் ஊழியர் ஆகிய முதல் திருநங்கை அஞ்சனா தேவி!

0

திருநங்ககைகள் என்றாலே தப்பாகக் காட்சி செய்யும் இந்த உலகத்தின் பார்வையை மாற்றும் வகையில் பல திருநங்கைகள் முன்னேறவும் சாதிக்கவும் முயன்று வருகின்றனர்.

“நான் ஒரு கடைக்கு சென்றால் பிச்சை கேட்பதாக எண்ணி காசு கொடுக்கிறார்கள். சமூகம் எங்களை பிச்சை எடுப்பவர்களாகவும், பாலியல் தொழிலில் ஈடு படுபவர்களாக மட்டுமே பார்க்கிறது. இதை மாற்ற வேண்டும்,”

என நம்முடன் பேசத் தொடங்குகிறார், Valeo India Pvt Ltd-ல் மனிதவள மேம்பாடு (HR) ஊழியராக சேர்ந்துள்ள அஞ்சனா தேவி.

ஒரு சில வாரங்களுக்கு முன்பு, திருநங்கை ஒருவர் தங்கி, வேலைக்குச் செல்ல சென்னையில் விடுதி தேவை என பல அமைப்புகள் சமூக வலைத்தளம் முழுவதும் தேடி வந்தது. பல போராட்டங்களுக்கு பிறகு வேலையில் சேர்ந்த அஞ்சான தேவிக்கு விடுதி கிடைப்பதே சிரமமாக இருந்து. இறுதியாக பல தன்னார்வ தொண்டு அமைப்புகளின் உதவியோடு அவருக்கு விடுதி கிடைத்து வேலைக்கும் செல்லத்தொடங்கியுள்ளார்.

அஞ்சனா
அஞ்சனா

தனக்கு ஏற்பட்ட சிரமங்களை நம்முடன் பகிர்கிறார்:

தங்க இடம் தேடி பல விடுதிகளை அணுகியுள்ளார் அஞ்சனா. ஆனால் ஏதோ ஒரு காரணம் சொல்லி அவரை தங்க வைக்க மறுத்துள்ளனர். முன்னேற வேண்டும், மரியாதையாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தங்க இடம் கொடுக்கக் கூட பலருக்கு மனம் வருவதில்லை.

“எல்லா விடுதியிலும் நன்றாக வரவேற்பார்கள் ஆனால் அறையை பார்த்துவிட்டு சென்ற பிறகு போன் செய்து இல்லை என மறுத்துவிடுவார்கள். பல மாதங்கள் தேடி இந்த வேலையே வேண்டாம் என விரக்தி அடைந்துவிட்டேன்,” என்கிறார்.

மனம் தளர்ந்த அஞ்சனா எனக்கு இந்த வேலை வேண்டாம், நான் திருநங்கைகள் சமூகத்திற்கு உதவி செய்யும் ’சகி’ டிரஸ்டிலே வேலை பார்த்து கொள்கிறேன் என தனக்கு உதவி செய்த அமைப்புகளிடம் கூறியுள்ளார். பின் அவர்கள் தந்த ஒத்துழைப்பு மற்றும் உந்துதலால் இன்று விடுதி கிடைத்து நல்ல சம்பளத்தில் வேலைக்குச் செல்கிறார்.

திருநங்கையான பயணம்

திருநெல்வேலியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இரு சகோதரர்களுடன் பிறந்தவர் இவர். ஆணாக பிறந்த அஞ்சனா (மாற்றப்பட்ட பெயர்) ஆரம்பப் பள்ளி காலத்தில் இருந்தே தன் மாற்றங்களை உணர்ந்துள்ளார். என் அண்ணன் வீட்டிலே இருக்க மாட்டார் எப்பொழுதும் தன் நண்பர்களுடன் வெளியில் சென்றுவிடுவார். ஆனால் எனக்கு வீட்டில் அம்மாவுடன் இருப்பது தான் பிடிக்கும் என்கிறார் அஞ்சானா.

“சிறு வயதில் இருந்தே என் குரலையும், பாவனங்களையும் வைத்து பலர் கேலி செய்தனர். இதனாலே வெளி உலகத்தை அணுக எனக்கு எப்பொழுதும் தயக்கமும் பயமும் இருந்தது.”

கேலிக்கு பயந்து சத்தமின்றி, பள்ளி மற்றும் வீடு என மிக சாதுவாக வளர்ந்துள்ளார். மேல் நிலை பள்ளி படிக்கும்பொழுது ஹார்மோன்கள் மாற்றங்களை உணர்ந்தார். இருப்பினும் ஒரு வித பயத்தால் வெளியில் சொல்லாமல் பள்ளி முடித்து கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் பள்ளியை விட கல்லூரியில் அதிக கேலிக்கு ஆளாகியுள்ளார் அஞ்சனா. தன் சொந்த வகுப்பில் கூட யாருடனும் சேராமல் தனியாகவே இருந்துள்ளார்.

“கழிப்பறையை கூட என்னால் பயன்படுத்த முடியாது. யாரும் இல்லாத நேரம் பார்த்து அவசரமாக போய் விட்டு வருவேன்,” என தன் கஷ்டங்களை பகிர்ந்தார்.

பி.காம் படிப்பை முடித்து எம்.பி.ஏ சேர்ந்துள்ளார் அஞ்சனா. அப்பொழுதே திருநங்கைகள் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முயன்று பல திருநங்கைகளை தொடர்புக்கொண்டார்.

“பல திருநங்கைகள் என்னை பாலினம் மாற வேண்டாம், நாங்கள் ரொம்ப கஷ்டப்படுகிறோம் என அறிவுரை செய்தனர். ஆனால் என்னால் போலியாக வாழ முடியவில்லை,” என்றார்.

இருப்பினும் ஏதோ ஒரு குழப்பத்தில் ஆணாகவே இருந்துள்ளார் அஞ்சனா.

அழ வைத்த சக ஊழியர்கள்

சிறந்த மாணவரான அஞ்சனா, கல்லூரியில் கேம்பஸில் தேர்வு பெற்று சென்னையில் தன் அண்ணனுடன் தங்கி வேலைக்குச் சென்றார். ஆனால் பள்ளி, கல்லூரி போலவே அலுவலகத்திலும் ஒதுக்கப்பட்டார். வீட்டில் இருந்து பிரிந்து வந்த தனிமை ஒரு பக்கம் இருக்க, அலுவலக கேலியால் அந்த வேலையை விட்டு வேறு பெருநிருவனத்தில் சேர்ந்தார்.

செல்லும் எல்லா இடமுமே அஞ்சனாவிற்கு எதிராகவே இருந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகே திருநங்கையாக மாறவேண்டும், திருநங்கையாகவே வேலைக்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அண்ணனுக்கு கடிதம் எழுதி வைத்து திருநங்கையாக மாறச் சென்று விட்டார்.

“என் அண்ணன் போன் செய்து, நீ திருநங்கையா மாறிட்டா குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம். எனக்கும் உன் தம்பிக்கும் எதிர்காலமே இருக்காது என்று சொன்னார்...”

மீண்டும் தன் அண்ணன் விடுதிக்கு வந்து மூன்றாவதாக ஒரு வேலையில் அமர்ந்தார் அஞ்சனா. ஆனால் அங்கு அவர் சந்தித்த அவலம் அதிகம். அலுவலகத்தில் அவரை ஒரு வேடிக்கை பொருளாகவே பார்த்தனர்.

“நன்றாக வேலை செய்தாலும் இந்த கேலி கிண்டலால் எனக்குள் தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது. பலர் என்னை ’Entertainment’ ஆகவே பார்த்தனர். அங்கு இருந்த உழியர்கள் என்னை கேலி செய்ததில் எனக்கு பலமுறை அழுகை வந்துள்ளது.”

இதன் பின் பொறுக்க முடியாமல் சேலத்தில் இருக்கும் ஒரு திருநங்கை சமூகத்தில் ஆதரவு கேட்டுச் சென்றுள்ளார். அங்கு கழிப்பறை வசதி கூட இல்லாமல் மோசமான நிலையில் இருந்தனர். அப்படி வாழ பிடிக்காமல் தன் ஊருக்கே சென்று விட்டார் அஞ்சனா.

திருநங்கையாக தொடங்கிய அலுவலக பயணம்

வீட்டில் பணத் தேவை இருந்ததால் திருநங்கையாகவே வேலைக்கு செல்ல முடிவு செய்தார். மீண்டும் சென்னை வந்த அஞ்சனா, வீட்டிற்கு தெரியாமல் திருநங்கையாக மாறி திருநங்கை சமூகத்திற்கு உதவும் ’சகி ட்ரஸ்டில்’ வேலைக்கு சேர்ந்தார். சமூக வலைத்தளம் மூலமே இந்த வாய்ப்பு அஞ்சனாவிற்கு கிடைத்தது.

தன் வீட்டுக்கு தெரியாததால் அண்ணனின் விடுதியை விட்டு திருநங்கைகளுடன் தங்கி வேலைக்குச் சென்றார்.

பல திருநங்கைகளை தொடர்புக்கொண்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதே அவரது வேலை. ஆனால் பலர் வேலையில் சேர மறுத்துவிட்டனர். பாலியல் தொழில் மூலம் ஒரு நாளிலே இந்த சம்பளத்தை சம்பாதித்து விடலாம் என்ற எண்ணம் பலருக்கு இருந்தது என குறிப்பிட்டார்.

“எங்கள் சமூகத்திற்கு நான் உதவ நினைத்த பொழுது எவரும் ஏற்கும் நிலையில் இல்லை. இதனால் வேறு வேலை தேடினேன்.”

மீண்டும் சமூக வலைதளங்கள் பல அமைப்புகள் உதவியோடு மற்றொரு வேலை தேடி இன்று நாவலூரில் இருக்கும் Valeo India Pvt Ltdல் HR பிரிவில் இணைந்துள்ளார். இந்த அலுவலகத்தின் முதல் திருநங்கை அஞ்சனா. மேலும் இந்த அலுவலகத்தில் உடல் ஊனமுற்றவர்களையும் வேலையில் சேர்த்துள்ளனர்.

“நான் சேர்வதற்கு முன்பே எனக்கு என்ன வசதி வேண்டும். கழிப்பறை எது வேண்டும் என எனக்குத் தேவையானதை விசாரித்தனர். ஒரு திருநங்கையாக என்னை ஏற்று சக உழியர்களும் நன்றாக நடத்துகின்றனர்.”

முக்கியமாக ’She’ என்று என்னை அழைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார்.

திருநங்கையாக மாறும் எவரும் எந்த சூழ்நிலையிலும் படிப்பை விட வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறார் அஞ்சனா. நான் இப்பொழுது கெளரவமாக இருப்பதற்கு என் படிப்பு மட்டுமே காரணம் என்கிறார். தன் அண்ணனின் திருமணத்திற்கு பிறகு தான் திருநங்கையாக மாறியதை தன் குடும்பத்திற்கு சொல்ல இருக்கிறார் அஞ்சனா.

இவரை போன்ற மாற்று பாலின மக்கள் முன்னேற நாம் ஒத்துழைப்போம். அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தையும், மரியாதையை கொடுப்போம்.

Related Stories

Stories by Mahmoodha Nowshin