பெண் குழந்தை பெற்றெடுத்த மருமகளுக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசாக கொடுத்து அசத்திய மாமியார்!

0

ப்ரேமா தேவி, உத்தர பிரதேசத்தில் சுகாதாரத்துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் வாழும் ஹமிர்பூர் ஊர் முழுதும் அவரைப்பற்றிய பேச்சுதான். எதற்கு என்கிறீர்களா? பெண் குழந்தைகள் பிறந்தாலே அபசகுணமாக கருதும் உபி மாநிலத்தில், தனக்கு பேத்தி பிறந்துள்ளதை பெரும் மகிழ்ச்சியோடு கொண்டாடிவருவதே இதற்கு காரணம். ஆம் தன்னுடைய மருமகள் பெண் குழந்தை பெற்றெடுத்ததற்கு அவருக்கு ஹோண்டா சிட்டி கார் ஒன்றை பரிசாக வழங்கி தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார் ப்ரேமா.

ஆண் மகன்களை விட பெண் குழந்தைகளே சிறந்தவர்கள் என்று கருதுபவர் ப்ரேமா. அதனால் தனது மருமகள் குஷ்புவுடன் சேர்ந்து தனது பேத்தியின் வருகையை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார். அந்த பார்ட்டியின் போது, தனது அன்பு பரிசாக ஹோண்டா சிட்டி காரை தனது மருமகளுக்கு அளிப்பதாக அறிவித்தும் உள்ளார். 

இந்தியா சம்வாத் என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்த ப்ரேமா,

“இந்தியாவில் எப்பொழுது மாமியார்கள் தங்கள் மருமகள்களை மகள்களாக பார்க்கத் தொடங்குகிறார்களோ அப்போதே பெண் சிசுக் கொலைகள் குறையும். மருமகள் மற்றவரது மகளும் கூட. சொந்த மகளை போல் மருமகளை நடத்தினால் அவர்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொண்டு வருவார்கள்,” என்றார். 

குஷ்பூ தனக்கு ப்ரேமா போன்ற ஒரு மாமியார் கிடைத்ததற்கு பேரானந்தம் அடைந்துள்ளார். இந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை ஒழிக்க, சக பெண்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பை பறிமாறிக்கொள்வது மிக அவசியம் என்று கூறுகிறார். முக்கியமாக மாமியார், மருமகள்கள் தங்களை போல் இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். மருமகள்களும் தங்கள் மாமியாரை அம்மாவாக பார்ப்பது மிக அவசியம் என்று தெரிவித்துள்ளார் குஷ்பூ. 

கட்டுரை: Think Change India