திருமண ஏற்பாட்டில் கைகொடுக்கும் இணையதளங்கள்!

1

புதுமண தம்பதிகளிடம் திருமணத்திற்கான ஏற்பாடுகள் பற்றிக் கேட்டுப்பாருங்கள்- பொருத்தமான திருமண ஆடையை தேர்வு செய்வது, நகைகள் வாங்குவது, தனித்தன்மை வாய்ந்த அழைப்புதழ்களை தயாரிப்பது, புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்டவர்களை நியமிப்பது, மண்டபம் பார்ப்பது என, இது எத்தனை சிக்கலானது என பெருமூச்சு விடுவார்கள். ஆனால், இப்போது திருமண ஏற்பாட்டு இணையதளங்கள் இந்த சுமையை பெருமளவு குறைத்துள்ளன தெரியுமா?

பல நகரங்களில் பாரம்பரிய திருமண ஏற்பாட்டாளர்களின் இடத்தை இவை பூர்த்தி செய்யத்துவங்கி இருக்கின்றன. திருமணம் சார்ந்த எல்லாவற்றையும் வீட்டில் இருந்தபடியே மவுஸ் நகர்த்தலில் மேற்கொண்டுவிடலாம். ஒவ்வொரு இடமாக தேடி அலைந்து பொருந்தமான நபர்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லை.

திருமண ஏற்பாட்டில் உதவும் இணையதளங்களில் முக்கியமான தளங்களின் பட்டியலை உங்களுக்காக வழங்குகிறோம்:

செவன் பிராமிசஸ்

தனித்தன்மை வாய்ந்த அழைப்புதழ் மாதிரிக்காக கடை கடையாக ஏறி இறங்க வேண்டியிருக்கிறதா? கூட்டத்திற்கு நடுவே மார்க்கெட்டில் இதற்காக அலைவதை விட, செவன் பிராமிசஸ் இணையதளத்தில் எளிதாக தேர்வு செய்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள மார்கெட்களில் இருந்து சமீபத்திய திருமண பொருட்களை அணுக இந்த தளம் வழி செய்கிறது.

பாண்ட்பாஜா

எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற இந்த வர்த்தகத்தில் மீடியா நிறுவனமான என்.டி.டி.வியும் நுழைந்துள்ளது. நீட்டு லுல்லா, அஞ்சு மோடி, கிஸ்னல் பிரமா, கைலீ மற்றும் நேஹா மேத்தா உள்ளிட்ட வடிவமைப்பாளர்கள் பட்டியல் மற்றும் 1500 க்கும் மேற்பட்ட வெண்டர்கள், வாழ்வியல் தொழில்முறை வல்லுனர்கள் மற்றும் திருமண பொருட்களுடன் இந்நிறுவனம் பாண்ட்பாஜா தளத்தை துவக்கியுள்ளது.

திருமணம் தொடர்பான அனைத்து பணிகளுக்கான பட்டியலை தயார் செய்ய உதவுவதுடன், இந்த தளம் பட்ஜெட்டிற்கு ஏற்ற சரியான வெண்டர்களை தேர்வு செய்யவும் உதவுகிறது. மண்டபங்கள், புகைப்பட கலைஞர்கள், அலங்கார வல்லுனர்கள், மேக்கப் கலைஞர்கள், அழைப்பிதழ்கள் என எல்லா தேவையையும் நிறைவேற்றிக்கொள்ளலாம்.

ஃபார் மை ஷாதி

சுதா மகேஸ்வரியால் துவங்கப்பட்டுள்ள ஃபார் மை ஷாதி இணையதளம், திருமணமாக உள்ள ஜோடிகளுக்கான பரிசுப்பொருள் பதிவு தளமாக இருக்கிறது. இதில் திருமணம் செய்து கொள்ள உள்ள ஜோடிகள் தங்களுக்கான விருப்ப பட்டியலை உருவாக்கிக் கொண்டு அவற்றை உறவுனர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். உறவினர்கள் இந்த பட்டியலை பார்த்து, பரிசுப்பொருளை முடிவு செய்து கொண்டு வாழ்த்து தெரிவிக்கலாம்.

பிரத்யேக மற்றும் தனித்தன்மை வாய்ந்த பிராண்டுகளுக்கான ஆன்லைன் சந்தையை உருவாக்க இந்த தளம் விரும்புகிறது. புதுமண தம்பதிகள் இல்வாழ்க்கையை துவக்க விருப்பமான பரிசிகளை பட்டியலிடவும் உதவுகிறது.

வெட்டிங்ஸ்

2015 ல் துவக்கப்பட்ட மும்பையைச் சேர்ந்த வெட்டிங்ஸ் திருமண மண்டபங்கள் மற்றும் வெண்டர்களுக்கான ஆன்லைன் சந்தையாக இருக்கிறது. இப்போது தில்லி, பெங்களூரு, கோவா உள்ளிட்ட 10 நகரங்களில் செயல்படுகிறது. கொல்கத்தா, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட 20 நகரங்களில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஆம்பிட் காபிட்டல் தலைமையிலான தேவதை முதலீட்டாளர்களிடம் இருந்து 1 மில்லியன் டாலர் ஆரம்ப நிதி திரட்டியது. இந்த ஆண்டு துவக்கத்தில் சிக்ஸ்த் சென்ஸ் வென்ச்சர்சிடம் இருந்து நிதி திரட்டியது.

இத்துறை வல்லுனர்கள் கருத்துபடி, இந்தியாவில் திருமண சந்தை 40 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10 மில்லியன் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த சந்தை 25 சதவீத அளவில் வளர்கிறது.

வெட்மீகுட் (Wedmegood), ஷாதிசாகா (Shaadisaga )மற்றும் பாலிவுட்ஷாதிஸ் (BollywoodShaadis ) ஆகிய தளங்களும் இதே பிரிவில் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் குர்காவ்னைச்சேர்ந்த ஷாதிசாகா, அவுட்பாக்ஸ் வென்ச்சர்சிடம் இருந்தும் ரூ. 2.7 கோடி நிதி திரட்டியது. மற்ற நகரங்களில் விரிவாக்கம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

திருமண ஏற்பாடுகள் சந்தை மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை கொண்டுள்ளது. மற்ற துறைகள் போலவே இந்த துறையும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த துறையில் புதுமையான கருத்தாக்கங்கள் மற்றும் சேவைகள் அறிமுகமாகி வருகின்றன.

ஆக்கம்: டாசிப் ஆலம் | தமிழில்: சைபர்சிம்மன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

'வானமே எல்லை': நடிகை தாப்ஸி, சினிமா முதல் தொழில்முனைவு வரை!