சமூகப் புரட்சிக்கு வித்திட்ட ரியல் ‘PadMan’- சமூக வலைதளங்களில் வைரலான ‘பேட்மேன் சாலஞ்ச்'

0

குறைந்த விலையில் தரமான சானிட்டரி நாப்கின்கள் அனைத்து பெண்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுபவர் கோவை முருகானந்தம். இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு பாலிவுட்டில் அக்‌ஷய்குமார் நடிப்பில் ‘பேட்மேன்’ என்ற படம் ரிலீசாகியுள்ளது. இப்படத்தின் விளம்பரத்திற்காக மட்டுமின்றி, மக்களிடையே மாதவிடாய் குறித்த விழிப்புணர்விற்காக பரப்பப்பட்ட ‘பேட்மேன் சாலஞ்ச்’ ’#PadManChallenge' சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஆர்.பால்கி இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நாயகனாக நடித்துள்ள படம் ‘பேட்மேன்’. தமிழகத்தைச் சேர்ந்த ‘சானிட்டரி நாப்கின்’ புகழ் முருகானந்தத்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது தான் இப்படம். முருகானந்தம் தனது நிஜ வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், அதனை அவர் எவ்வாறு சாதனையாக மாற்றினார் என்பதும் தான் இப்படத்தின் கரு.

இப்படத்தில் முருகானந்தம் கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார். சோனம்கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ரிலீசான இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.10.26 கோடி ஆகும். இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வரும் நாட்களில் இன்னும் அதிக வசூலைக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் ரிலீசாவதற்கு முன்னதாகவே சமூகவலைதளங்களில் இப்படம் குறித்த விவாதங்கள், ‘பேட்மேன் சேலஞ்ச்’ என்ற பெயரில் பரபரப்பாக அரங்கேறியது. இதனை உண்மையான ‘பேட்மேன்’ முருகானந்தம் தான் துவக்கி வைத்தார். இந்த ‘பேட்மேன் சாலஞ்ச்’ல் பாலிவுட்டின் பெரும்பாலான பிரபலங்கள் பங்கெடுத்தனர்.

சரி, இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தி, அவரது வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்கும் அளவிற்கு முருகானந்தம் என்ன செய்தார் என்பதைத் தெரிந்து கொள்வோமா...

யார் இந்த முருகானந்தம்?

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் அருணாச்சலம் முருகானந்தம். பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் குறைவான விலையில் சுகாதாரமான நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை இவர் உருவாக்கினார். இதற்கான முயற்சியில் அவர் தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூகத்திலும் பல சவால்களையும், புறக்கணிப்புகளையும் எதிர்கொண்டார்.

முருகானந்தத்திற்கு பைத்தியக்கார பட்டம் கட்டினர் ஊரார். அதோடு அவர் பெண் பித்தர் என்பது போன்றும் பேசிக் கொண்டனர். இதனால் அவரது மனைவி அவரைப் பிரிந்தார். பின்னர் அவரது தாயும் பிரிந்தார். இதனால் பெரும் மனவருத்தத்திற்கு ஆளான போதும் தனது முயற்சியை முருகானந்தம் கைவிடவில்லை.

கிராமப்புற பெண்களுக்கும் மாதவிடாயின் போது சுகாதாரமான நாப்கின்கள் கிடைக்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. அதற்கு சந்தையில் கிடைக்கும் நாப்கின்களைவிட விலை குறைந்த நாப்கின்களை உருவாக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது.

இதற்காக தனக்குத் தானே நாப்கின்களையும் அவர் பயன்படுத்தி சோதித்துள்ளார். அந்தளவிற்கு தனது இலக்கில் கண்ணும் கருத்துமாக இருந்த முருகானந்தம், பல்வேறு தடைகளைத் தாண்டி வெற்றி கண்டார்.

2016ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அளித்து இந்திய அரசு முருகானந்தத்தைக் கவுரவித்தது. அதனைத் தொடர்ந்து முருகானந்தத்தின் தன்னலமற்ற கண்டுபிடிப்பு வெளிச்சத்திற்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக அவர் பிரபலம் ஆனார்.

“வாய்ப்புகளுக்காக காத்திருக்காதீர்கள். உங்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகளை உற்றுநோக்குங்கள். அவற்றிற்கு தீர்வு சொல்பவராக மாறுங்கள். உங்கள் கல்வியை பணம் சம்பாரிப்பதற்கான கருவியாக மட்டும் பயன்படுத்தாதீர்கள். அதன் மூலம் உங்களால் முயன்ற அளவிற்கு இந்த உலகத்தை நல்வழியில் மாற்ற முயலுங்கள்,” என்கிறார் முருகானந்தம்.

முருகானந்தத்தைப் பற்றி மேலும் விரிவாகத் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்  

‘பேட்மேன்’ உருவான கதை:

முருகானந்தத்தைப் பற்றி தெரிந்து கொண்ட நடிகையும், நடிகர் அக்‌ஷய்குமாரின் மனைவியுமான டிவிங்கில் கன்னா, அவரது வாழ்க்கையை படமாக தயாரிக்க முடிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து பாலிவுட்டின் பிரபல இயக்குநர் பால்கி இயக்கத்தில் அக்‌ஷய்குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடிப்பில் உருவானது பேட்மேன் திரைப்படம். இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் முருகானந்தமாக நடித்திருக்கும் அக்‌ஷய் குமார் பேட்டியொன்றில், 

“நான் சானிட்டரி நேப்கினைக் கையில் வைத்திருக்கும் படத்தைப் பார்த்துவிட்டு, சிலர் என்னிடம், ‘என்ன செய்கிறீர்கள் அக்‌ஷய், அது சானிட்டரி நாப்கின். அதை வைத்திருப்பது பாவம்’ என்று சொன்னார்கள். நம் மக்களில் சிலருக்கு நாப்கினைப் பற்றிய புரிதல் இல்லை. அதை இந்தப் படம் மாற்றும்,” என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

பேட்மேன் படத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பே, அக்‌ஷய்குமாரின் வார்த்தைகள் நிஜமாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ரிலீசான இப்படத்தின் முதல் நாள் வசூலே ரூ.10.26 கோடி ஆகும்.

பேட்மேன் சாலஞ்ச்:

பெரும்பாலும் மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் அணிகிற சானிட்டரி நாப்கின்களை வெளிப்படையாக கொண்டு செல்வது சமூக அளவில் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாத வழக்கமாகவே நம்நாட்டில் காணப்படுகிறது. ஆனால், இந்த நிலை மாற வேண்டும் என்பதே குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் முருகானந்தத்தின் லட்சியம் ஆகும்.

“பெண்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், ஆரோக்கியமான நாட்டை உருவாக்க முடியாது. ஆரோக்கியமான பெண்கள் கைகளிலேயே ஆரோக்கியமான நாடு உள்ளது,” என்கிறார் முருகானந்தம்.

இதனாலேயே மாதவிடாய் காலத்தில் துணிகளைப் பயன்படுத்தாமல் கிராமப்புற பெண்களும் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்த வேண்டும் என அவர் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களை தயாரித்து, அது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், தன் வாழ்க்கையே படமாகி இருப்பது குறித்து ஆச்சர்யம் தெரிவித்துள்ள முருகானந்தம், 

“நிச்சயம் என் வாழ்க்கை ஒரு நாளில் திரைப்படமாக உருவாகும் என நான் எண்ணிப் பார்த்ததே இல்லை. இப்படம் நிச்சயம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும். இதனை படமாக்கிய டிவிங்கிள் கன்னா, அக்‌ஷய்குமார் மற்றும் பால்கிக்கு எனது நன்றிகள்,” எனத் தெரிவித்துள்ளார்.

அதோடு இப்பட ரிலீசுக்கு சில நாட்கள் முன்னதாக, மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின் குறித்து சமூகத்துக்கு இருக்கும் அசௌகரிய உணர்ச்சியை போக்கும் நோக்கத்துடன், வித்தியாசமான சவால் ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார் முருகானந்தம்.

அதாவது, சானிட்டரி நாப்கினுடன் உங்களால் ஒரு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர முடியுமா என அவர் சவால் விட்டார். அதனை ஏற்ற பாலிவுட் நட்சத்திரங்கள் ஒருவர் பின் ஒருவராக கைகளில் சானிட்டரி நாப்கினுடன் புகைப்படம் எடுத்து தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டனர்.

தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா, ஆலியா பட் போன்ற நடிகைகள் மட்டுமின்றி, அமீர்கான் உள்ளிட்ட பிரபல நடிகர்களும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டனர். இதனால், இந்த ‘பேட்மேன் சாலஞ்ச்’ சமூக ஊடகங்களில் வைரலானது. மற்ற நெட்டிசன்களும் கைகளில் சானிட்டரி நாப்கினும் புகைப்படங்கள் வெளியிட்டனர்.

மாதவிடாயைப் பற்றிச் சமூகத்தின் பார்வையை மாற்றுவதற்காக, முருகானந்தம் தொடங்கிய இந்த ‘பேட்மேன் சேலஞ்’ வெற்றி பெற்றது என்றே கூறலாம். பொதுவெளியில் ஆண்கள் தயக்கமின்றி மாதவிடாய், நாப்கின்கள் குறித்துப் பேசியது அவர்களது பக்குவத்தை வெளிக்காட்டுவதாக அமைந்தது.

பேட்மேனின் தாக்கம்:

பேட்மேன் பட ரிலீசைத் தொடர்ந்து சத்யம் திரையரங்குகளில் வெண்டிங் இயந்திரங்களை அமைத்து பெண்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்கும் சேவை துவக்கப்பட்டுள்ளது. பெங்களூர், சென்னை, கோவை, மும்பை, நெல்லூர், புதுச்சேரி, திருவனந்தபுரம், வாரங்கல் ஆகிய இடங்களில் உள்ள சத்யம் தியேட்டர்களிலும், எஸ்கேப், பலாசோ, லி ரெவே சினிமாஸ், எஸ் 2 ஆகியவற்றிலும் படம் பார்க்க வரும் பெண்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்கப்படும் என சத்யம் திரையரங்கம் தனது சமூகவலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளது.

“உள்நாட்டிலேயே 100 சதவீதம் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்க வேண்டும். அதன்மூலம் அனைத்துப் பெண்களுக்கும் குறைந்த விலையில் தரமான நாப்கின்கள் சென்றடைய வேண்டும். எந்த ஒரு மாணவியும் மாதவிடாய் காரணமாக விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு செல்ல வேண்டும். பெண்களின் நிலை மேம்படும்போது, குடும்பம் மேம்படும். எப்போது குடும்பங்கள் மேம்பாடு அடைகின்றதோ அப்போது மொத்த தேசமுமே மேம்படும். ஆரோக்கியமான பெண்களாலேயே ஆரோக்கியமான நாட்டை கட்டுமானம் செய்ய முடியும். இதுவே என் கனவு,” என்கிறார் முருகானந்தம்.

Related Stories

Stories by jayachitra