நடிகர்கள் ரித்தேஷ்-ஜெனிலியா தம்பதி முதலீடு செய்துள்ள ஹோமியோபதி நிறுவனம்!  

0

மும்பையைச் சேர்ந்த ஹோமியோபதி ஸ்டார்ட் அப் ’வெல்கம்க்யூர்’ இந்தியத் திரையுலக பிரபலங்களான ரித்தேஷ், ஜெனிலியா தேஷ்முக் தம்பதியிடமிருந்து அறிவிக்கப்படாத தொகையை நிதியாக உயர்த்தியுள்ளது. டிசிஎஸ் நிறுவன முன்னாள் விபி மற்றும் நிஹிலெண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தற்போதைய துணைத் தலைவர் மற்றும் சிஇஓ-வான எல்சி சிங் இந்தச் சுற்றில் பங்கேற்றுள்ளார்.

ரித்தேஷ் தனது முதலீடு குறித்து செய்தி அறிக்கையில் தெரிவிக்கையில்,

“வெல்கம்க்யூர் வளர்ச்சியில் பங்களிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கும் என் மனைவிக்கும் ஹோமியோபதி தீர்வுகளில் நம்பிக்கை உள்ளது. எங்கள் குடும்பத்தில் அதையே பின்பற்றுகிறோம். எனவே வணிக மற்றும் ப்ராண்ட் ரீதியாக வெல்கம்க்யூர் குடும்பத்தில் பங்களிப்பது குறித்து அதிகம் சிந்திக்காமல் நானும் என் மனைவியும் உடனடியாக தீர்மானித்தோம். இந்த ப்ராண்ட் உடனான எங்களது இணைப்பு அதன் வளர்ச்சிக்கு உதவும் என நம்புகிறோம்,” என்றார்.

இந்தச் சுற்று நிதியுடன் இந்த சுகாதார தொழில்நுட்ப தளம் ஒரு வலுவான வாடிக்கையாளர் ஈடுபாடு திட்டத்தை உருவாக்க விரும்புகிறது. கட்டமைப்பை வலுப்படுத்தவும், பயனருக்கு தடையற்ற அனுபவத்தை வழங்கவும், ப்ராண்டை சிறப்பாக நிலைநிறுத்தவும், ஹோமியோபதி ஹெல்த்கேர் தீர்வுகளுக்காக முழுமையான தளத்தை உருவாக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

வெல்கம்க்யூர் மொத்தம் ஐந்து மில்லியன் டாலர் நிதி உயர்த்த திட்டமிட்டது. உலகளவில் ஹோமியோபதி அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த வெல்கம்க்யூர் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ புனித் தேசாய் கூறுகையில், 

”இந்தத் துறையின் வளர்ச்சி காரணமாக வெல்கம்க்யூர் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. இதற்குக் காரணம் எங்களது நோயாளிகளுக்கு பராமரிப்பு வழங்க ஹோமியோபதி மருத்துவத்தில் உலகெங்கும் உள்ள மிகச்சிறந்த நிபுணர்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருகிறோம். மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடையே தடையற்ற தகவல் பரிமாற்றத்தை உறுதிசெய்வதில் முக்கிய கவனம் செலுத்துகிறோம். இதற்காக நாங்கள் உயர்த்திய நிதியைக் கொண்டு தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்,” என்றார்.

36 நாடுகளுக்கும் மேலாக செயல்படுவதாகவும் நாள் ஒன்றிற்கு 4,500-க்கும் அதிகமானோருக்கு ஆலோசனை வழங்கப்படுவதாகவும் இக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்தத் தளத்தினை பயன்படுத்தும் நோயாளிகள் எல்லையற்ற வாய்ஸ், வீடியோ மற்றும் டெக்ஸ்ட் ஆலோசனைகளைப் பெற இந்தத் தளம் உதவுகிறது. மேலும் இலவச ஹோமியோபதி மருந்து விநியோகம், உணவு ஆலோசனைகள், நோயாளியின் தரவுகளை க்ளௌட் சர்வர்களில் நிர்வகித்தல் உள்ளிட்ட சேவைகளையும் இந்தத் தளம் வழங்குகிறது.

அவர் மேலும் கூறுகையில், ”இந்த நிதிச்சுற்றில் பங்களிப்பதன் மூலம் பாலிவுட் நட்சத்திர தம்பதியான ரித்தேஷ் மற்றும் ஜெனிலியா சுகாதார தொழில்நுட்பத் தளமான வெல்கம்க்யூர் ப்ராண்டின் விளம்பர தூதராக மாறி சேவைகளை ஆதரிப்பார்கள். இந்த வகை மருத்துவத்தில் இந்தத் தம்பதிக்கு உள்ள நம்பிக்கையும் எங்களது ப்ராண்ட் மற்றும் பிரிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் எங்களது சேவை அதிக நோயாளிகளைச் சென்றடைய உதவும்,” என்றார்.

மாற்று மருத்துவத் துறை 34 பில்லியன் டாலர் மதிப்புடைய சந்தை என ஸ்மித்சோனியன் தெரிவிக்கிறது. ரைட் ஹெல்த் க்ரூப் லிமிடெட், சாண்டோஸ் இண்டர்நேஷனல, பயோகான் லிமிடெட், டாக்டர் ரெட்டிஸ் லெபோராட்டரீஸ் லிமிடெட், ஆர்ய வைத்ய ஃபார்மசி, சிப்லா, Weleda (யூகே) லிமிடெட் போன்றவை மாற்று மருத்துவம் மற்றும் சிகிச்சைகள் பிரிவில் செயல்படும் உலகளவிலான நிறுவனங்களாகும்.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL