புறக்கணித்த கிராமத்திலிருந்து உருவான ஒரு தலித் தொழிலதிபர்...!

செங்கல், சிமென்ட் தொழிலாளி இன்று 20 நிறுவனங்களை நிர்வகிக்கும் தொழில் அதிபர்!

5

மதுசூதன் ராவ் தந்து கடின உழைப்பால் இதனை சாதித்து, தனது வெற்றிக் கதையை எழுதி இருக்கிறார்.

தந்தை கூலித் தொழிலாளி, தாய் புகையிலை கம்பெனியில் வேலை பார்த்தவர். பசியினால் வயிறு எறிந்த நாட்கள் இன்றும் அவருக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.

மனிதவளம், மூலப்பொருள், பணம் இவற்றை சரியான விகிதத்தில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்தான் மதுசூதன் ராவ். இன்று தனது நிறுவனங்கள் மூலமாக பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

கிராமங்களிலிருந்து பசியை துடைக்க வருவோர் இனிமேல் அவரைப் போல் கஷ்டப்படக் கூடாது என்பது அவரது எண்ணம்.

குழந்தை பருவத்தில் ஒரு சிறுவன் மிகவும் கவலையோடு இருந்தான். அவனது பெற்றோர் தினமும் 18 மணி நேரம் வேலை செய்து கொண்டிருந்தனர். இரவு பகலாக உழைத்தும் தங்களது குழந்தைகளுக்கு வயிறு நிறைய உணவு அளிக்க அந்த பெற்றோரால் முடியவில்லை. 8 குழந்தைகளையும் சேர்த்து 10 பேர் கொண்ட பெரிய குடும்பம் அது. ஒரு நாள் அவர்கள் வேலைக்கு போகவில்லை என்றால் குடும்பமே பட்டினிதான்.

ஒரு வேளை உணவு உண்டால் அன்று அவர்களுக்கு மகிழ்ச்சியான நாள். 8 பேரில் 5 வது குழந்தைதான் இந்த சிறுவன். கிழியாத உடை, காலுக்கு ஒரு செருப்பு என்பது அந்த குடும்பத்துக்கு ஒரு கனவாகவே இருந்தது. அந்த கிராமத்திலேயே சிறிய குடிசை வீடு இவர்களுடையதுதான்.

மற்றவர்கள் அனைவரும் அழகான பெரிய பெரிய வீடுகளில் குடி இருக்கும் போது நமக்கு மட்டும் என் அப்படி ஒரு வீடு இல்லை என்பது அந்த சிறுவனுக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது. அது மட்டுமல்லாது தனது பெற்றோர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்றே தெரியாது. காலையில் கண் விழிப்பதற்குள் வேலைக்கு சென்றுவிடும் அவர்கள் அவன் தூங்கிய பிறகு இரவில்தான் வருவார்கள். தாய், தந்தையை அவன் நேரில் பார்ப்பதே கடினமாக இருந்தது.

அவன் வளர வளரத்தான் நிலைமை அவனுக்குப் புரிந்தது. ஏழ்மை குடும்பம் என்பது மட்டுமல்ல, மிகவும் தாழ்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதைவும் அப்போதுதான் புரிந்து கொண்டான்.

தனது தந்தை ஒரு ஜமீன்தாரிடம் கடன் பெற்று அதனை செலுத்த வழி இல்லாமல் ஒரு கொத்தடிமையாக வேலை செய்து கொண்டிருந்தார். தாயும் அப்படித்தான் பீடி கம்பெனியில் கடனை மீட்க வேலை செய்தார். அதோடு தனது மூத்த சகோதரியையும் அந்த புகை இலை கம்பெனி வேலைக்கு அம்மா கூட்டிச் சென்றார்.

அவன் பள்ளிக்கு சென்ற போதுதான் அவனது பெற்றோர் படிக்காதவர்கள் என்பதை புரிந்து கொண்டான். அவனும், இன்னொரு சகோதரனும் மட்டுமே பள்ளிக்கு சென்றனர். இந்த இருவரை பள்ளிக்கு அனுப்புவதே அவர்களுக்கு பெரும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் அந்த இருவரையும் எப்படியும் படிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

ஏழ்மையை விட அந்த கிராமத்தினர் இவர்களை மிகவும் இழிவாக நடத்தியது அந்த சிறுவனை மிகவும் வருத்தமடையச் செய்தது. இவர்களுக்கு மட்டும் முழங்காலுக்கு கீழே வேட்டி கட்ட அந்த கிராமத்தினர் தடை விதித்திருந்தார்கள். ஆண்களோ மேல் சட்டை போட அனுமதி இல்லை. கிராமத்தில் நினைத்த இடத்துக்கு போக முடியாது. கட்டுபாடுகள் அதிகமாக இருந்தது. பல நேரங்களில் தண்டனைகளும் கிடைத்தது. இவர்களது நிழல் பட்டாலே அப சகுனமாக மற்றவர்கள் கருதி இவர்களை புறக்கணித்தனர்.

பள்ளிப்படிப்பு மூலம்தான் தங்கள் குடும்பம் எப்படி எல்லாம் புறக்கணிக்கப் படுகிறது என்பதை அந்த சிறுவன் உணந்தான். எப்படியும் இந்த அடிமைத் தனத்திலிருந்தும், ஏழ்மையில் இருந்தும் தனது குடும்பத்தை மீட்டு, அந்த கிராமத்தை விட்டே வேறு பெரிய ஊருக்கு அழத்துச் சென்று விட வேண்டும் என்று நன்றாகப் படிக்கத் தொடங்கினான். 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்து நுழைவு தேர்வு எழுதி பாலிடெக்னிக் டிப்ளமா படிப்பில் சேர்ந்தான்.

படித்து முடித்த போது அந்த குடும்பமே அந்த இளஞனை நம்பிக்கையுடன் பார்த்தது. ஆனால், டிப்ளமா படித்தாலும் வேலை கிடைக்கவில்லை. கூலி வேலைக்கு மதுசூதன் சென்றார். நகரத்தில் காவலாளியாக இரவு வேலைகள் செய்தார். அப்போதுதான் திடீரென அவருக்கு ஒரு எண்ணம் தொன்றியது. ஏதாவது தொழில் தொடங்கினால் என்ன என்று திட்டம் போட்டார். அந்த கனவை நனவாக்க போராட வேண்டி இருந்தது. முதலில் தொடர் தோல்விகள். ஆனாலும் மனம் தளாராமல் மீண்டும் மீண்டும் முயற்சித்தார்.

இறுதியாக அந்த வெற்றி கிடைத்தது. கிராமத்தில் இருந்து வந்த அந்த தலித் இளைஞர் இன்று 20 நிறுவனங்களுக்கு சொந்தக்காரராக வளர்ந்திருக்கிறார். மதுசூதன் ராவ் இன்று ஒரு தொழிலதிபர்.

சாதாரண தொழில் அதிபர் இல்லை. வெற்றிகரமான தொழிலதிபர். ஆயிரக்கணக்கானோருக்கு இன்று வேலை வழங்கி இருக்கிறார். பல தொழில் முனைவோருக்கு ரோல் மாடலாக உருவெடுத்திருக்கிறார், மதுசூதன் ராவ்.

எம்.எம்.ஆர். நிறுவங்களின் நிறுவனர் மற்றும் இயக்குனராக இன்று அவர் பிரபலமாக அறியப்படுகிறார். தொலை தொடர்பு, தகவல் தொடர்பு, மின்சாரம், உணவு பதப்படுத்தல், என்று பல துறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக வளர்ந்துள்ளது அவரது நிறுவனங்கள்.

கொண்டுகுறு என்கிற கிராமம், ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ளது. ​ ​அதுதான் மதுசூதன் பிறந்த ஊர்.

" சிறுவயதில் பெற்றோரின் பாசத்தை நான் அனுபவித்ததே இல்லை. ஜமீன்தாரிடம் கடன் வாங்கி, கடன் வாங்கி காலத்தை ஓட்டும் குடும்பம் என்பதால் அதனை மீட்க அவர்களிடம் 18 மணிநேரம் கொத்தடிமையாக வேலை செய்யதனர். அப்பா மட்டுமல்ல, தாத்தா காலத்தில் இருந்தே அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அம்மாவும், அக்காவும் 12 கிலோமீட்டர் நடந்து சென்று பீடி தொழில் சாலையில் வேலை செய்து வந்தார்கள்." 

"குடும்ப சூழல் குறித்து அறிந்த பள்ளி ஆசிரியர் லெக்ஷ்மி நரசையா எனது அண்ணனை இலவசமாக உணவுடன் தங்கும் விடுதியில் சேர்த்து விட்டார். பின்னர் என்னக்கும் அங்கேயே இடம் வாங்கிக் கொடுத்தார். அதன் மூலம்தான் நாங்கள் பசி இல்லாமல் படிக்க முடிந்தது. வகுப்பில் தொடந்து முதலிடம் பிடித்தேன். பின்னர் பாலிடெக்னிக் முடித்தாலும் வேலை கிடைக்கவில்லை. சிமென்ட் மூலம் கட்டிட பிளாக்ஸ் உருவாக்கும் வேலையில் சேர்ந்தேன். 50 ரூபாய் சம்பளம் தந்தார்கள். இரவிலும் வேலைசெய்தால் 150 ரூபாய் கிடைத்தது."

பின்னர், ஒரு பொறியாளர் மூலம் துணை ஒப்பந்தங்கள் எடுத்து செய்யும் பணி மதுசூதனுக்கு கிடைக்க அதற்கும் மூலதனம் தேவைப்பட்டது. சகோதரியிடம் 900 ரூபாய் வாங்கி அந்த பணியை தொடங்கி இருக்கிறார். அதன் மூலம் 20000 ரூபாய் ஒப்பந்தம் கிடக்க பின்னர் படிப்படியாக அந்த பணியில் முன்னேற்றம். ஆனாலும், அதிலும் நிலையான முன்னேற்றம் இல்லை. நண்பர்களாலும், பிறராலும் ஏமாற்றப்பட்ட நிகழ்வுகள் என்று பல சோதனைகளை அவர் சந்திக்க நேர்ந்தது. ஆனால், மனம் தளராத மதுசூதன் தனது மனைவியிடம் சொல்லாமல் மீண்டும் ஒப்பந்த பணிகளில் இறங்கினார். அதில் வெற்றி கிடைத்து.

அதன் பிறகு படிப்படியாக பல நிறுவனக்களை தொடங்கி இன்று ஆந்திரா சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவராக மதுசூதன் பொறுப்பு வகிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

"எனது பெற்றோர்கள்தான் எனக்கு முன்மாதிரியாக இருந்தார்கள். அவர்களின் 18 மணி நேர உழைப்பை பார்த்து வளர்ந்த நானும் 18 மணி நேரம் உழைக்கத் தொடங்கினேன். என்னைப் பார்த்து எனது தொழிலாளர்களும் எனக்கு துணையாக உழைத்தார்கள். எடுத்த பணிகள் முடியும் வரை கால நேரம் பார்க்காமல் உழைக்கும் தொழிலாளர்கள் எனக்கு கிடைத்துதான் எனது வெற்றிக்கான முதல் காரணம்" என்கிறார் மதுசூதன்.
"Man, Material and Money.. இந்த மூன்றும் சரியாக ஒருவருக்கு அமைந்து அதனை சரியாக பயன் படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம். அதுதான் எனது வெற்றி மந்திரம்.." என்பது மதுசூதன் ராவ் கூறும் தாரக மந்திரம்.!


ஆக்கம்: அர்விந்த் யாதவ் | தமிழில் ஜெனிட்டா

கட்டுரையாளர்: அர்விந்த் யாதவ். இவர் யுவர்ஸ்டோரி பிராந்திய மொழிகளின் நிர்வாக ஆசிரியர்.