விபத்தில்லா பயணத்தை உறுதி செய்யும் பயணத்தில் இந்திய ரயில்வே!

0

விபத்தில்லா ரயில் பயணத்தை உறுதி செய்ய இந்த முறை ரயில்வே பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அகல ரயில் பாதைகளில் உள்ள அனைத்து ஆளில்லா லெவல் கிராசிங்கையும் மூன்று நான்கு ஆண்டுகளுக்குள் நீக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆளில்லா லெவல் கிராசிங்கை ஒழிப்பது மட்டுமல்ல ரயில் மோதல் தடுப்பு முறை (Train Collision Avoidance System - TCAS) ஒன்றை உருவாக்கவும் செயல்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, “அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளுக்குள் அகல ரயில் பாதைகளில் உள்ள அனைத்து ஆளில்லா லெவல் கிராசிங்கையும் நீக்குவதற்கு உத்தேசித்துள்ளோம். இதற்கான நிதி திரட்டுவதற்கு புதிய வழிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். “ஒரே ஒரு விபத்து ஒரே ஒரு உயிரிழப்பு கூட எனக்கு மிகப்பெரிய துயரத்தையும் வேதனையையும் ஏற்படுத்தும். விபத்தே இல்லாத நிலையை அடைவதற்கு இன்னும் நாம் வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது” என்றார் அவர்.

பட உதவி: ஹஃப்பிங்க்டன் போஸ்ட்
பட உதவி: ஹஃப்பிங்க்டன் போஸ்ட்

ஆளில்லா லெவல் கிராசிங்குகள்தான் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் என்று கூறிய அமைச்சர், அவற்றை ஒழிப்பதற்கான திட்டத்தைச் தெரிவித்ததோடு, ரயில் மோதல்களைத் தடுப்பதற்கான திட்டத்தையும் கூறினார். 

”ரயில்களின் சராசரி வேகத்தை அதிகரிப்பதற்குரிய தொழில் நுட்பங்களை நாம் உள்நாட்டிலேயே உருவாக்கியிருக்கிறோம். அதே நேரம் ரயில் மோதல்களைத் தவிர்க்க அடுத்த மூன்று ஆண்டுகளில் ரயில் மோதல் தடுப்பு முறையுடன் கூடிய 100 சதவீத பாதுகாப்பான நெட் ஒர்க் எனச் சொல்லும் படியாக ரயில்வேயை மாற்ற உத்தேசித்துள்ளோம்” என்றார் பிரபு.

உலகின் முன்னணி ரயில்வே ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து, நமது ரயில்வேத் துறையை மேம்படுத்துவதற்கான ஆய்வில் இறங்கியுள்ளோம் என்று கூறிய அமைச்சர், ஜப்பானில் உள்ள ரயில்வே டெக்னிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிட்டியூட் மற்றும் கொரிய ரயில் ரிசர்ச் இன்ஸ்ட்டிட்யூட்டுகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்கிறோம் என்றார். “இந்திய ரயில்வே சிஸ்டத்தை முற்றிலும் விபத்தில்லா சிஸ்டமாக உருவாக்குவதற்கான ஆய்வில் அவர்கள் இறங்கியுள்ளனர்” என்றார் அவர்.

தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா