தவறான அணுகுமுறை மட்டும்தான் உண்மையான ஊனம்: குண்டு வெடிப்பில் பிழைத்த மாளவிகா

2

2002-ம் வருடம். மே மாதம். வெயில் நேரம். மாளவிகா ஐயருக்கு 13 வயது. ஒன்பதாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து விடுமுறையை கொண்டாடிக்கொண்டிருந்தார். அவர் தனக்கு நேர்ந்த விபரீதம் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது என்று நினைவுகூறுகிறார். 

“என் வீட்டில் விருந்தினர் வந்திருந்தனர். என் அப்பா அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். என் சகோதரி சமையலறையில் இருந்தார். அம்மா கூலரில் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருந்தார்...

“நான் என்னுடைய ஜீன்ஸ் பேண்டில் இருந்த பாக்கெட் கிழிந்திருந்ததை கவனித்தேன். அதை ஃபெவிகால் வைத்து ஒட்டினேன். அதன் மேல் ஏதேனும் கனமான பொருளை வைத்து அழுத்தினால் நன்றாக ஒட்டிக்கொள்ளும் என்று நினைத்தேன். வண்டிகள் நிறுத்திவைத்திருக்கும் இடத்திற்கு விரைந்தேன்.”

அங்கே ஏதேனும் பொருள் தட்டுப்படுகிறதா என்று பார்த்தார். அவர் கண்களில் ஒரு விநோதமான பொரும் தென்பட்டது. எடுத்துக்கொண்டு விரைந்தார். அவருக்கு தெரியாது அது ஒரு பயங்கரமான வெடிகுண்டு என்று. ஏற்கெனவே அவர் தங்கியிருந்த பிகானெர் பகுதியில் உள்ள காலனிக்கு வெகுஅருகில் வெடிபொருட்கள் வைத்திருந்த கிடங்கு ஒன்றில் தீப்பிடித்து எரிந்திருந்தது. ஆனால் அவருக்கு அதுபற்றி தெரியாது.

“மதியம் 1.15 மணி. அந்த பயங்கரமான வெடி விபத்து நிகழ்ந்த நேரம் அது. என் அறையில் இருந்த கடிகாரம் அத்துடன் நின்றுபோனது. என் கையில் இருந்த அந்தப் பொருளை எடுத்து முதல் முறை ஜீன்ஸ் பேண்டின் பாக்கெட்டை ஒட்டி இருந்த இடத்தில் ஓங்கி அடித்தேன். இரண்டாவது முறை அடித்தேன், அவ்வளவுதான். பயங்கர சத்தத்துடன் வெடித்தது.”

குண்டுவெடிப்பு

அவரது அறையிலிருந்து அந்த சத்தத்தை கேட்டு அவரது பெற்றோர் முதலில் டிவியிலிருந்துதான் அந்த சத்தம் வந்தது என்று நினைத்தனர். “நிச்சயம் தன்னுடைய மகளின் அறையிலிருந்த இதுபோன்று ஒரு வெடி வெடித்திருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.” என்கிறார் மாளவிகா. அவர் தன் சுயநினைவை இழக்கவில்லை. வலியில்லை. அவரது மொத்த நரம்புமண்டலமும் ஸ்தம்பித்துவிட்டது. என்ன நடக்கிறது என்று அறிய முற்பட்டார் மாளவிகா.

“என் அம்மா தன் மகளின் கைகள் துண்டிக்கப்பட்டுவிட்டதாக கதறினார். என் அப்பாவும் அவரது நண்பரும் என்னை அப்படியே தூக்கிப் போட்டுக்கொண்டு காரில் மருத்துவமனைக்கு விரைந்தனர். ரத்தவெள்ளத்தில் மிதந்தேன். என்னுடைய கைகள் துண்டிக்கப்பட்டதை பார்த்த அதிர்ச்சியில் யாரும் என்னுடைய கால்களை கவனிக்கவில்லை.” 

ஒரு பொட்டலமாக காரில் கிடந்த மாளவிகாதான் தன்னுடைய உடம்பிலிருந்து விழும்தருவாயில் கால்கள் தொங்கிக்கொண்டிருந்ததை கவனித்தார். அவரது அப்பாவின் நண்பரிடம் தெரிவித்தார். அவர் தனது கைக்குட்டையால் நடுங்கும் கைகளால் மாளவிகாவின் கால்களை கட்டினார்.

மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டார். நான்கு நாட்கள் கழித்துதான் அவரால் வலியை உணரமுடிந்தது. “கடும் வலி. வேதனை. வெடிப்பொருளின் ஆயிரக்கணக்கான துகள்கள் கால்களில் புதைந்திருப்பதாகவும் குறைந்தது மூன்று மாதங்களாவது காயமான இடங்களை திறந்தே வைத்திருந்து சுத்தம் செய்து கொண்டிருக்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.”

மாளவிகா விபத்துக்குமுன் தன்னுடைய குழந்தைப்பருவத்தை மிகவும் ஆனந்தமாகவும் ரம்மியமாகவும் கழித்தார். “என்னுடைய காலனியில் வசிக்கும் குழந்தைகளுக்கெல்லாம் நான்தான் லீடர். எல்லா குறும்புகளும் செய்வோம். என்னுடைய ஆர்வம் இசை, நடனம், விளையாட்டு. ஏழு வருடங்கள் கதக் நடனம் பயின்றேன். இருப்பினும் எல்லாவிதமான நடன பயிற்சியிலும் ஆர்வம் இருந்தது.”

பதினெட்டு மாதங்கள்

அடுத்த 18 மாதங்கள் அறுவை சிகிச்சையிலும் மற்ற நிவாரண முறைகளிலும் கழிந்தது. தாங்க முடியாத வலியை பொறுத்துக்கொண்டார். மருத்துவமனை வாசம் முடிந்து வீட்டிற்குள் நுழைந்தார். அவருக்குள் ஒரு வெறுமையை உணர்ந்தார். “என் நண்பர்கள் அனைவரும் பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். மேற்படிப்பு குறித்து திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று மாளவிகா நினைவு கூர்ந்தார். அவர் இருக்கும் நிலையில் அவரால் பள்ளிக்குச் செல்ல முடியாது. ஆனால் எப்படியாவது மற்றவர்கள் போல தானும் இயல்பு நிலைக்கு திரும்பவேண்டும் என்று தீர்மானித்தார். பரீட்சைக்கு தயராவது என்று முடிவெடுத்தார்.

ஒன்பது மற்றும் 10-ஆம் வகுப்புக்கு செல்ல முடியவில்லை. பரீட்சைக்கு மூன்று மாதங்களே இருக்கும் நிலை. படுத்த படுக்கையாக கிடந்தார். மாளவிகா விளையாட்டுத்தனமாக இருந்ததனால் சுமாரான மதிப்பெண்கள் பெறும் மாணவிதான். 

“எனக்கு படிப்பில் இருந்த ஆர்வத்தை விட, உலகிற்கு என்னை நிரூபித்துக் காட்டவேண்டும் என்பதற்காகவே பரீட்சைக்கு தயாரானேன்.” என்கிறார். ஒரு உள்ளூர் தனியார் பயிற்சி மையத்தின் உதவியுடன் தேர்வு எழுத விண்ணப்பித்தார்.

அந்த மூன்று மாதங்களும் கடுமையாக பயிற்சி செய்தார். “என் அம்மா என்னை தூக்கிக்கொண்டு பயிற்சி மையத்தில் விட்டார். கணிதம், வரைபடங்கள், அறிவியல் அனைத்திற்கும் நான் விளக்கம் சொல்ல, ஒருவர் எனக்காக எழுதுவார். “ பரீட்சை முடிந்தது. “பரீட்சை முடிவு அறிவிக்கப்பட்டதும் ஒரே நாளில் என் வாழ்க்கையே மாறியது”. என சந்தோஷமாக நினைவு கூறுகிறார்.

தேர்வில் அவருடைய மதிப்பெண் 483/500. கணிதத்திலும் அறிவியலிலும் 100 மதிப்பெண்கள். ஹிந்தியில் 97 மதிப்பெண் எடுத்து முதல் இடத்தில் இருந்தார். வெடி விபத்துக்குள்ளாகி உடல் ஊனமுற்று சில தினங்களிலேயே எவ்வாறு ஒரு பெண்ணால் இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்து சாதிக்கமுடிந்தது என்று ஊடகங்கள் அவர் முன் சூழ்ந்தனர். ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமை சந்திக்க அவருக்கு அழைப்பு வந்தது. 

வாழ்க்கையே தொலைந்துவிட்டது. இனி எதுவும் மாறப்போவதில்லை. இவ்வாறு நினைத்த மாளவிகாவிற்கு அந்த கனம் மிகவும் சந்தோஷமாக இருந்தது. 

“எனக்கு என்னை அலங்கரித்துக்கொள்ள மிகவும் பிடிக்கும். இப்போதும் நான் என்னை அலங்கரித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொரு நேர்காணலின் போதும் விதவிதமாக உடையணிந்து செல்வேன்.” என்றார்.

பலம்

மாளவிகா மிகவும் உடைந்துபோய் இருந்தார். ஆனால் அவரது தேர்வு முடிவுகள் அனைத்தையும் மாற்றிவிட்டது. அவரது ஊனம் ஒரு தடையில்லை என உலகிற்கு நிரூபித்தார். “என்னுடைய பலம் என்ன என்று நானே தெரிந்துகொண்டேன்.” பள்ளியில் முழுநேரமாக பன்னிரன்டாம் வகுப்பு சேர முடிவெடுத்தார். “மிக சிறந்த கல்லூரியில் இளநிலை பட்டம் பெற தீர்மானித்தேன்”. செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.

வெளி உலகத்துடனான தொடர்பு எவ்வளவு அதிகமானதோ, அவரது தன்னம்பிக்கையும் அவ்வளவு அதிகமானது. சுய பச்சாதாபமும் இருக்கத்தான் செய்தது. 

“மற்ற நண்பர்கள் போல என்னால் இயல்பான வாழ்க்கை வாழமுடியவில்லையே என்று நினைக்கும்போது என்மேல் எனக்கே பரிதாபமாக இருந்தது” என்றார். 

புதுடெல்லியில் சோஷியல் வொர்க்ஸ் படிப்பில்முதுகலை படிப்பை மேற்கொண்டபோது அவர் சமூகத்தின் மீது கொண்ட பார்வை முற்றிலும் மாறியது. மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சியளிப்பது அவரது முதுகலை பாடத்தொகுப்பில் ஒரு அங்கமாக இருந்தது. அவர் பயிற்சியளித்த குழந்தைகளின் பலத்தையும் தைரியத்தையும் நேருக்குநேர் பார்த்தார்.

“பயிற்சியளிக்க சென்றேன். மாறாக அந்த குழந்தைகளிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்று கண்ணீர்மல்க கூறினார்.

தன் மேல் கொண்டிருந்த கெட்ட அபிப்ராயங்களை தூக்கி எறிந்தார். “விபத்துக்குபின் என்னைச் சுற்றி இருந்தவர்கள் என் வாழ்க்கையே பறிபோய்விட்டது என்றனர். யாரும் என்னை திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள் என்றனர். என்னால் எது முடியும் எது முடியாது என்று ஆளாளுக்கு பட்டியலிட்டனர். நானும் அதை நம்பினேன்.” மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் தன் நேரத்தை செலவழித்தபின் மாளவிகாவின் எண்ணங்களில் பல மாற்றங்கள் தோன்றின.

“நான் என்னை நம்ப ஆரம்பித்ததும்தான் அந்த மாயாஜாலம் நடந்தது”.


மாயஜாலம்

இன்று மாளவிகா PhD முடித்துவிட்டார். சர்வதேச அளவில் மற்றவர்களை ஊக்கப்படுத்தும் பேச்சாளராக உயர்ந்திருக்கிறார். நார்வே சென்று திரும்பினார். அடுத்த மேடைக்கு தயாராகிறார். அவருடைய TED பேச்சு பல ரசிகர்களை அவர் பக்கம் ஈர்த்தது. அழகாக ஆடை அணிவதிலும் தன்னை அழகுப்படுத்திக்கொள்வதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். இதன் காரணமாக உடல் ஊனமுற்றோருக்கான பிரத்யேக ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு மாடலாக இருக்கிறார். “ரேம்ப் வாக் செய்வேன். என் மீது மொத்த வெளிச்சமும் விழும். விசித்திரமான கதைகளில் வரும் கதாபாத்திரமாக என்னை நினைத்துக்கொள்வேன்.”

“ஒரு முறை சென்னையில் ஒரு கடைவீதிக்கு சென்றிருந்தேன். நல்ல வெயில். உடல் முழுக்க வேர்த்துக்கொண்டே இருந்தது. என்னுடைய செயற்கைக்கை கீழே விழுந்துவிட்டது.” சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அவரை விசித்திரமாக பார்த்தார்கள். “எனக்காக என்ன செய்யவேண்டும் என்றே அவர்களுக்கு புரியவில்லை”. 

அவரது கால்களிலுள்ள எலும்புகள் கரடுமுரடாக இருந்தது. பார்ப்பதற்கு விகாரமாக இருந்தது. ஒருமுறை அவர் அறுவைசிகிச்சை குறித்து மருத்துவரிடம் ஆலோசித்ததை நினைவுகூறினார். அவருடைய கால்களில் அதிகமாக காயம் ஏற்பட்டிருப்பதால், அவர் மறுபடி நடப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றார் மருத்துவர். மாளவிகா “நான் உங்கள் மருத்துவமனைக்கு நடந்துதான் வந்தேன்” என்றார் அமைதியாக.

மருத்துவர் வியந்தார். இருப்பினும் கால்களில் உள்ள நரம்புகளில் எழுபது முதல் எண்பது சதவீதம் பாதிக்கப்பட்டிருப்பதால் அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பிலை என்றார்.

அவருடைய குறைபாடு குறித்து சுற்றியிருப்பவர்கள் ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தனர். “ஊனம் என்பது தவறான அணுகுமுறை மட்டும்தான்” எனும் ஸ்காட் ஹாமில்டனின் வரிகள்தான் நம்பிக்கையுடம் முன்னேறவைத்தது என்கிறார். “எனக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. இந்தியாவின் ஜனாதிபதியாக நான் உருவெடுத்தாலும் மக்கள் என்னைப் பார்த்து பரிதாபப்படத்தான் செய்வார்கள். அது அவர்கள் இயல்பு. என்னைப்பற்றிய மற்றவர்களின் அபிப்ராயத்தை ஒதுக்கி என்னுடைய திறமையில் நம்பிக்கை வைத்தேன். என் உலகமே மாறியது ”.

ஒரு அன்பான வாழ்க்கைத்துணையுடன் இணைய இருக்கிறார். இந்த ஆண்டு தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் பல முன்னேற்றங்களையும் எதிர்நோக்கியிருக்கிறார். “இப்படி ஒரு வெடிவிபத்து நடந்ததற்காக நான் ஒருவிதத்தில் சந்தோஷப்படுகிறேன். இல்லையென்றால் என்னை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளை நான் இழந்து ஒரு நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்திருப்பேன்.”

ஆக்கம் : ராக்கி சக்ரவர்தி | தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இதுபோன்ற சவால்களை சந்தித்து சாதித்த உத்வேகம் அளிக்கக் கூடிய பெண்களைப் பற்றிய கட்டுரைகள்

'துயரங்களை துரத்திவிடு'- ஆனந்தா சங்கர் ஜெயந்த்

'நான் நன்றாக இருக்கிறேன், நலமுடன் திரும்புவேன்'- புற்றுநோயை வென்ற லதா ஸ்ரீனிவாசன்!