அஞ்சேல் 12 |மாற்றத்தை  ஏற்றுக்கொள் - இயக்குநர் ஸ்ரீகணேஷ் [பகுதி 1]

'8 தோட்டாக்கள்' மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இளம் இயக்குநர் பகிரும் அனுபவக் குறிப்புகள்!

1

(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)

நம் இளைஞர்கள் பலரைப் போலவே ஈர்ப்பின் காரணமாகத்தான் சினிமா நோக்கிப் பயணிக்கத் தொடங்கினேன். ஆனால், 10 ஆண்டுகள் கடந்த பிறகே சரியான பாதையை அடைந்தேன்.
இயக்குநர் ஸ்ரீகணேஷ்
இயக்குநர் ஸ்ரீகணேஷ்

சொந்த ஊர் கும்பகோணம். சின்ன வயதில் இருந்தே பலருக்கும் இருப்பதுபோலவே சினிமா மீது ஈர்ப்பு. பள்ளிக் காலத்தில் விளையாட்டுகளில் பெரிதாக ஈடுபாடு இல்லாததால் புத்தகங்களை நாடினேன். எந்நேரமும் நூலகத்தில்தான் இருப்பேன். கதைகள் மீதான ஆர்வம் வலுவானது. எழுத்து, நாடகம் என கலைகள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இவற்றின் தாக்கத்தால் சினிமாதான் இலக்கு என்பதைத் தீர்மானித்தேன்.

நான் ப்ளஸ் டூ படிக்கும்போது, என் ஊரில் 'கிரேஸி' மோகன் குழுவினர் நாடகம் ஒன்றை நடத்தினர். அதைப் பார்த்து ரசித்ததுடன், ஏதோ ஓர் உந்துதலில் 'நானும் உங்கள் குழுவில் சேர்ந்துகொள்ளட்டுமா?' என்று கேட்டுவிட்டேன். அவர்களும் எதுவுமே யோசிக்காமல் என்னைச் சேர்த்துக்கொண்டனர். அதுதான் என் சினிமா வாழ்க்கையின் தொடக்கப் புள்ளி.

சென்னையில் பிகாம் படித்த மூன்று ஆண்டுகளுமே 'கிரேஸி' மோகன் நாடகக் குழுவில், மோகன் சாரின் உதவியாளர்களில் ஒருவராக உடன் இருந்தேன். கல்லூரிக் காலத்தில் வாரத்தின் ஐந்து நாட்களுமே வீதி நாடகங்கள், கவிதைப் போட்டிகள் என சுற்றிக் கொண்டிருப்பேன். சனி, ஞாயிறுகளில் 'கிரேஸி' மோகன் நாடகக் குழுவில் இருப்பேன். இந்த மூன்று வருடங்களில் கதைகள், கதை சொல்லும் உத்திகள் குறித்து நிறையவே புரிதல் கிடைத்தது. ஒரு பக்கம் நவீன நாடகங்களைப் பார்த்துக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருப்பேன்; மறுபக்கம் சபா நாடகங்களுக்கு அருகிலேயே பயணித்தேன். இதனால், இரண்டு விதமான பார்வையாளர்களின் உளவியலை அறிய முடிந்தது. சினிமாவில் கூட மெயின் ஸ்ட்ரீம் என்றும், மாற்று சினிமா என்றும் வகைப்படுத்துவோமே அதுபோன்ற புரிதல் அது.

ஒரு நாடகம் எப்படி எழுதப்படுகிறது, நடிகர்கள் எப்படி தயார்படுத்தப்படுகிறார்கள், மேடையில் எப்படி அரங்கேற்றப்படுகிறது முதலானவற்றை நேரடியாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. அது, சினிமாவுக்கும் இப்போது உதவுகிறது. திரைக்கதை எழுதுவதில் மட்டுமின்றி, காட்சிகளை விவரிப்பது, நடிகர்களிடம் இருந்து கதைக்குத் தேவையான நடிப்பைப் பெறுவது உள்ளிட்டவற்றுக்கும் அதுவே எனக்கு உறுதுணையாக இருக்கிறது.

8 தோட்டாக்கள் பட போஸ்டர்
8 தோட்டாக்கள் பட போஸ்டர்
கல்லூரி முடிக்கும்போதுதான் 2010-களில் கணினி, உலக சினிமா அறிமுகம் கிடைத்தது. அந்தக் காலக்கட்டத்தில்தான் 'தமிழ் ஸ்டூடியோ' அருணின் 'படிமை'யில் மாணவராகச் சேர்ந்தேன். அங்குதான் சினிமா மீதான பார்வையே மொத்தமாக மாறியது. அந்த மாற்றத்தை அப்படியே ஏற்றுக்கொண்டேன். எல்லாருமே பார்க்கக் கூடிய வர்த்தக நோக்கம் மிகுந்த படங்கள், பெரும்பாலானோரும் பொழுதுபோக்குக்காக வாசிக்கக் கூடிய எழுத்துகள் மட்டும்தாம் என்னையும் ஆக்கிரமித்திருந்தன. 
'படிமை' பயிற்சியில் சேர்ந்த பிறகுதான் திரைமொழிகள், தீவிர சினிமா, நவீன இலக்கியம் குறித்த அறிமுகமும், அவற்றை அணுகுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. 'தமிழ் ஸ்டூடியோ' அருணிடம் இருந்த அந்த ஒன்றரை ஆண்டுகளில் எனக்குத் தேவையான சினிமா, இலக்கியம் சார்ந்து இயங்க முடிந்தது.

அதன்பிறகு, 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சிக்கு குறும்படம் எடுத்து அனுப்பினேன். அது தேர்வான பின்னர்தான் அருணிடம் தகவல் சொன்னேன். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் அருணுக்கு உடன்பாடு இல்லை என்பது தெரிந்தது. அதற்கான கொள்கை - அரசியல் ரீதியிலான காரணங்களை அருண் எடுத்துச் சொன்னார். அதை என்னால் முற்றிலும் புரிந்துகொள்ள முடிந்தது. என் குறும்படம் தேர்வாகிவிட்டதால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டிய நிலை. இறுதிப் போட்டி வரை வந்தேன். அந்த சீசனில் சிறந்த வசனம், சிறந்த நடிப்பு ஆகிய பரிசுகளை நான் இயக்கிய 'ஒரு கோப்பை தேநீர்' குறும்படம் வென்றது. அது, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதை. அதில் நடித்த வினோநிதினி வைத்தியநாதனுக்கு சிறந்த நடிப்புக்கான விருது கிடைத்தது.

இயக்குநர் மிஷ்கினிடம் ஒன்றைரை ஆண்டுகள் உதவியாளராகப் பணிபுரிந்தேன். 'முகமூடி' வெற்றி பெறாததால் அடுத்து வெவ்வேறு காரணங்களால் சரியான படம் அமையாத காலக்கட்டம் அது. நான்கு திரைக்கதைகள் உருவாக்கத்தில் உடன் பணிபுரிந்தேன். ஆனால், எதுவுமே படமாக்க முடியாத சூழல். அந்தச் சூழலில்தான் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' உருவானது. ஒருவித இக்கட்டான நிலையில், பெரிதாக வசதிகள் ஏதுமின்றி படமாக்கப்பட்டபோது, அவருடன் இருந்த மூன்று உதவி இயக்குநர்களில் நானும் ஒருவன். அந்தப் படம் முழுவதும் அவருடன் பணியாற்றியதை முக்கியமான அனுபவமாகக் கருதுகிறேன். அதன்பின், 'நீ போய் தனியாக எழுது' என்றார். என் படமுயற்சிக்கான வேலைகளிலும், திரைக்கதைகளை எழுதுவதிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

சினிமாவில் நேரடியாக தடம் பதிப்பதற்கு சுமார் 10 ஆண்டுகள் தேவைப்பட்டது. அம்மா சிறு நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவர் அவ்வப்போது செலவுக்குப் பணம் அனுப்புவார். இந்தக் காலக்கட்டத்தில் நூறோ இருநூறோ மட்டும்தான் பையில் இருக்கும். ஒருபக்கம் சினிமாவைப் படித்துக்கொண்டே மறுபக்கம் சர்வைவலையும் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேப்பர்களை அடுக்கும் வேலை, பழைய ஆவணங்களை டிஜிட்டலாக்குவது, டிடிபி போன்ற வேலைகள் செய்வேன். எந்த நேரத்திலும் கிடைக்கக் கூடிய கேட்டரிங் பணியும் எனக்கு கைகொடுக்கும். 'படிமை'யில் படித்துக் கொண்டிருந்தபோது, ஓராண்டு காலம் பிபிஓ-வில் இரவு நேரப் பணி செய்தேன்.

இயக்குநர் மிஷ்கினிடம் இருந்து வெளியே வந்த பின் ஓர் ஆண்டுகள் திரைக்கதைகள் எழுதினேன். திரைப்படத் தயாரிப்பாளர்களை வாய்ப்புக்காக அணுக ஆரம்பித்தேன். அப்போதுதான் புரிந்தது, 'வெளியே இருந்து பார்க்கும் சினிமா உலகம் வேறு; உள்ளே போய் செயல்படுகின்ற சினிமா உலகம் வேறு' என்று. ஏறத்தாழ 50 தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லியிருப்பேன். நமக்கு தாக்கத்தை ஏற்படுத்திய சினிமாவை நாம் படைப்பதற்கான முயற்சியில் உருவாக்கி வைத்த கதைகளைச் சொல்வேன். அவர்களோ 'இதில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கான மெட்டீரியல் எதுவுமே இல்லை. ட்விஸ்ட் அண்ட் டர்ன் சொல்லும்படி இல்லை' என்றெல்லாம் காரணங்களை அடுக்குவார்கள். இதற்கிடையே, இரண்டு மூன்று தயாரிப்பாளர்கள் முன்வந்து அலுவலகம்கூட போட்டு வேலையைத் தொடங்க ஆயத்தமானதுண்டு. ஆனால், எல்லாமே சில நாட்களில் இழுத்து மூடப்பட்டுவிடும்.

மீண்டும் வாய்ப்புத் தேடும் படலம் தொடங்கும். இதுதான் அறிமுக இயக்குநர்களுக்கு கடுமையான போராட்டக் காலம் என்பேன். சில தயாரிப்பாளர்களிடமோ அல்லது நடிகர்களிடமோ கதைகள் சொல்லும்போது, அவர்கள் ஐந்து நிமிடம் கூட காதுகொடுத்து கேட்கமாட்டார்கள். நாம் சொல்ல வந்ததைத் துளியும் கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் அரைமணி நேரம் நம்மிடம் பேசுவார்கள். அதன் முடிவில் 'நம்மிடம் சினிமா எடுப்பதற்கான எந்தத் திறமையும் இல்லை' என்று அழுத்தமாக நிறுவிவிடுவார்கள். அப்போது ஏற்படும் மன அழுத்தம் விவரிக்க இயலாததது.

சினிமாவை நாம் மிகப் பெரிய இடத்தில் வைத்திருக்கிறோம். இது தவறான போக்கு என்று சிலநேரங்களில் எண்ணத் தோன்றும். 'எப்படியாவது ஒரு படம் எடுத்துவிட்டால் போதும்' என மனோபாவத்துடன் பலரும் இயங்குவதை அபத்தமாகக் கூட நினைப்பது உண்டு. நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமான உறவுகள், காதல், நட்பு, குடும்பப் பொறுப்புகள் முதலானவற்றை அவற்றுக்குரிய காலக்கட்டத்தில் அப்படியே விட்டுவிட்டு, ஒரு சினிமா எடுப்பதற்காக இத்தனை பாடுபடுவது தேவையா என்ற கேள்வியும் எழுவதுண்டு.

சரி, ஒரு படத்தை உருவாக்கும் அளவுக்கு கற்றுக்கொண்டாகிவிட்டது. முதல் படம் எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம் என்றால், நாம் சொல்லும் கதைகளை சினிமாவாக்க எவருமே முன்வராத நிலை இருக்கிறதே... 'இதற்குத்தானா ஆசைப்பட்டோம்? இந்தப் பத்து வருடங்களாக வீட்டையும் பார்த்துக்கொள்ளவில்லையே' என்ற குற்ற உணர்ச்சி மேலோங்கும்.

இதுபோன்ற் சோர்வுகளுக்கு ஒரே மருந்து... ஆம், சினிமாவும் வாசிப்பும்தான். எப்போதெல்லாம் மன இறக்கத்தை எதிர்கொள்ள நேரிடுகிறதோ அப்போதெல்லாம் நல்ல சினிமாவையும், நல்ல புத்தகங்களையும் தேடித் தேடிப் பார்ப்பதும் படிப்பதும் உண்டு. அதுவே புது உத்வேகத்தைக் கொடுக்கும். மீண்டும் முயற்சிகளில் இறங்குவேன். தொடர் முயற்சியின் பலனாகக் கிடைத்த வாய்ப்புதான் '8 தோட்டாக்கள்'.

எனது தனிப்பட்ட பின்னடைவைக் கடந்து வந்த விதம், '8 தோட்டாக்கள்' வாய்ப்பு கிடைத்ததன் பின்னணி, அந்தப் படம் வெளியானதற்குப் பிந்தைய நிலை... அடுத்த அத்தியாயத்தில் பகிர்கிறேன்.

ஸ்ரீகணேஷ் (29): தமிழ் சினிமாவுக்கு 2017 அளித்த நம்பிக்கையூட்டும் இளம் திரைப் படைப்பாளிகளுள் ஒருவர். '8 தோட்டாக்கள்' மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தவர். நட்சத்திர பின்புலம் இல்லாத நிலையிலும், கச்சிதமான திரைக்கதையாலும், வசனத் தெறிப்புகளாலும் அனைத்து தரப்புப் பார்வையாளர்களுக்கும் நிறைவை ஏற்படுத்தியவர். மக்களுக்கு அதிகம் காணக் கிடைக்கின்ற பொழுதுபோக்கு சினிமாவில் உருப்படியான திரைப்படங்களை படைப்பதற்கு முனையும் இளம் இயக்குநர்களில் ஒருவர். நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் எனும் அசாத்திய நடிப்புக் கலைஞனின் ஆற்றலை வெளிப்படுத்தற்கு திரைக்கதையில் இடமளித்த படங்களில் இவரது '8 தோட்டாக்கள்' மிக முக்கியமானது.

'அஞ்சேல்' தொடரும்...

முந்தைய அத்தியாயம்: அஞ்சேல் 11|மனநிறைவை நாடுக - நடிகர் விதார்த் [பகுதி 2]

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Related Stories

Stories by கீட்சவன்