வால்டாக்ஸ் சாலை டூ ரஷ்யா: கால்பந்து விளையாடி வெற்றி கண்ட தெருவில் வசிக்கும் சங்கீதா!

5
''கால்பந்து வெறும் விளையாட்டு அல்ல; மைதானத்தில் பலரும் நம்மை சூழ்ந்து மறைக்கும்போது, என்னிடம் உள்ள பந்தை எட்டி உதைத்து, கோல் அடித்து, வெற்றி பெறுவது போல பல சமூகஅவலங்களை எதிர்த்துப் போராடி வாழ்வில் வெற்றி என்ற இலக்கை அடையவேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்த ஒரு விளையாட்டு. அது தான் என்னுடைய வாழ்க்கையிலும் எனக்கான விதிகளை நான் உருவாக்கிக் கொண்டு, வெற்றி பெற வேண்டும் என்ற தெளிவைத் தந்தது.” 

இப்படி சொல்லுபவர் சங்கீதா என்ற இளம் மாணவி. இவர் சர்வதேச தெருவோரக் குழந்தைகளுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வெற்றி வாகை சூடிய சென்னை அணியின் தலைவி ஆவார்.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் வசித்து வரும் குடும்பங்களில் ஒன்று தான் சங்கீதாவின் குடும்பமும். மூன்று தலைமுறைகளாக அங்கு தான் அவர்கள் வசித்து வருகின்றனர். தனது தாய் மற்றும் சகோதரியுடன் சங்கீதா அங்கு வசித்து வருகிறார்.

பட உதவி: தி நியூஸ் மினிட்
பட உதவி: தி நியூஸ் மினிட்

குடிப்பழக்கம் காரணமாக சங்கீதா பிறந்த சில வருடங்களிலேயே அவரது தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து போய் விட்டார். இதனால், 9ம் வகுப்போடு பள்ளிக் கல்விக்கு விடை கொடுத்த சங்கீதா, கடை ஒன்றில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். அப்போது தான் அவரை கருணாலயா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் சந்தித்துள்ளனர்.

குழந்தைத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் கருணாலயா, மீண்டும் பள்ளிச் செல்ல விருப்பமா என சங்கீதாவிடம் கேட்டுள்ளனர். வேலைக்குச் செல்லும் தன் தாய்க்கு பொருளாதாரத் துணையாகத் தான் சங்கீதாவும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார் என்பதால், அவரது வருமானம் அக்குடும்பத்தின் முக்கிய தேவையாக இருந்தது. இதனால் குடும்பச் சூழல் கருதி மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தயங்கினார் சங்கீதா. ஆனால், கருணாலயாவின் தொடர் அறிவுரையால் மீண்டும் பள்ளிச் செல்லத் தொடங்கினார்.

‘குடும்பச் சூழல், வறுமை போன்ற காரணங்களால் மீண்டும் என்னால் ஈடுபாட்டுடன் படிக்க இயலவில்லை. ஆனபோதும் கடமைக்காக பள்ளிச் சென்று வந்தேன். அப்போது தான் கருணாலயாவில் சிறுவர்களுக்காக கால்பந்து பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. சிறுவர்களுக்கு மட்டுமே அதில் அனுமதி என்பதால் என்னால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனாலும், எனக்குள் இருந்த ஆர்வம் என்னையும் கால்பந்து விளையாடத் தூண்டியது.

”பயிற்சியாளர்கள் இல்லாமல், கண்களால் மற்றவர்கள் விளையாடுவதைப் பார்த்து, ஆரம்பத்தில் நானாக விளையாடப் பழகினேன். பின்னர் எனக்குள் இருந்த கால்பந்து ஆர்வத்தை அறிந்து கொண்ட கருணாலயா பயிற்சியாளர்கள் எனக்கும் பயிற்சி அளிக்க முன்வந்தனர்,’ என கால்பந்து விளையாட்டு தனக்கு அறிமுகமான கதையைச் சொல்கிறார் சங்கீதா.

படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே கால்பந்து பயிற்சி அளிக்கப்படும் என சங்கீதாவிடம் நிபந்தனை விதித்துள்ளனர் அவரது பயிற்சியாளர்கள். இதனால் விளையாட்டோடு, படிப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார் சங்கீதா. அதன்பலனாக பத்தாம் வகுப்பில் 351 மதிப்பெண்கள் எடுத்தார்.

சரிவர விளக்கு வசதி இல்லாமல், தெருவோர விளக்குகள் வெளிச்சத்தில், வாகன சத்தங்களுக்கு இடையே, கொசுக்கடிகளுக்கு நடுவே படித்து இந்த மதிப்பெண்ணை அவர் எடுத்தார். தான் நன்றாக படிக்க வேண்டும் என அவர் எண்ணியதற்கு காரணமே கால்பந்து தான். இதற்கிடையே, சங்கீதாவோடு கால்பந்துப் பயிற்சியில் மேலும் சில சிறுமிகளும் சேர்ந்து கொள்ள, கால்பந்தாட்ட குழு ஒன்று உருவானது.

2015ம் ஆண்டு சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் நடந்த ‘ஸ்லம் சார்கர்’ போட்டியில் கலந்து கொண்டது இந்தக் குழு. அதில், சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதைப் பெற்றார் சங்கீதா. இந்த வெற்றியின் ருசி, அவரது ஆர்வத்திற்கு மேலும் தூண்டுகோலாக அமைந்தது.

“ஆரம்பத்தில் கால்பந்து விளையாட என் குடும்பத்தாரே சம்மதிக்கவில்லை. அருகில் குடியிருப்போரும் என் ஆடையை விமர்சித்தனர். பையன் மாதிரி டவுசர் போட்டுட்டு போறா என என் காது படவே பேசினர். ஆனால், அவர்களது வார்த்தைகளை நான் காதில் ஏற்றிக் கொள்ளவேயில்லை. பந்தைக் கூட பார்க்க இயலாத அளவுக்கு வறுமையில் வளர்ந்தவள் நான். பழைய கிழிந்த துணிகளைப் பந்துபோல் சுற்றி, அதனை வைத்து தான் சிறுவயதில் விளையாடியிருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு ஃபுட்பாலை பார்ப்பதே ஆச்சர்யத்தை தந்தது. அதனாலேயே அந்த விளையாட்டின் மீது எனக்கு அதிக ஆசை உருவானது,” என்கிறார் சங்கீதா.

முதல் விருது தந்த வேகத்தில் மேலும் தீவிரமாக பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தார் சங்கீதா. அவரது குடியிருப்புப் பகுதியைக் காரணம் காட்டி, அவரை அருகில் இருந்த பூங்காவிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டதால், கருணாலயா முன்பிருந்த சிறிய இடமே அவரது பயிற்சிக்கான களம் ஆனது. தினமும் அங்கிருந்தே கால்பந்து பயிற்சியை அவர் தொடர்ந்தார்.

அதன்பலனாக, 2016ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடைபெற்ற ‘ஹோம்லெஸ் வேர்ல்டு கப்’ போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்தியா சார்பில் கலந்து கொண்ட அணியில், இவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர். ஸ்காட்லாந்து பயணத்திற்குப் பின், அவரைத் தவறாகப் பேசிய அக்கம்பக்கத்தாரின் கண்ணோட்டம் மாறியது. சங்கீதா மீது தனி மரியாதை அவர்களுக்கு உருவானது. 

இருக்க வீடு கூட இல்லாமல், தெருவில் வசித்தாலும் சங்கீதாவின் வெற்றியை அவர்கள் கொண்டாடினர். கால்பந்து வீராங்கனை என்பதே சங்கீதாவின் அடையாளத்தை மாற்றியது.

அதன் தொடர்ச்சியாக கடந்த மே மாதம் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற தெருவோரக் கால்பந்து சர்வதேசப் போட்டியில் இந்தியாவின் சார்பாக சங்கீதா அணி பங்கேற்றது. உலகம் முழுவதும் தெருக்களில் வாழும் சிறுவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால் பந்துப் போட்டி நடைபெற்று வருகிறது. ஃபிஃபா (FIFA) கமிட்டியின் விதிகளைப் பின்பற்றி இந்தப் போட்டிகள் நடந்து வருகின்றன. ஃபிஃபா நடைபெறும் நாட்டிலேயே இந்தப் போட்டிகளும் நடைபெறுகின்றன. அந்தவகையில், இந்த வருடம் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் இந்தப் போட்டிகள் நடந்தன.

29 நாடுகளிலிருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட 14 வயது முதல் 17 வயது வரையிலான சிறுவர்- சிறுமிகள் பங்கேற்றனர். இதில் தான் இந்தியா சார்பில் விளையாடுவதற்கு, சென்னையைச் சேர்ந்த ஒன்பது தெருவோரச் சிறுமிகள் ஒரு அணியாக சங்கீதாவின் தலைமையில் கலந்து கொண்டனர்.

இந்த அணியில் பங்கேற்றவர்கள் அனைவருமே தெருவோரக் குழந்தைகள் தான். எனவே, அவர்களுக்கு பாஸ்போர்ட் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. பெரும்பாலும் இவர்களில் பலர் மருத்துவமனையில் இல்லாமல், வீடுகளில் பிறந்தவர்கள். எனவே, உரிய பிறப்புச் சான்றிதழ், ஆதார் போன்ற இருப்பிடச் சான்றிதழ் இவர்களிடம் இல்லை. எனவே, பெரும் போராட்டத்திற்குப் பிறகே பாஸ்போர்ட் பெற்று ரஷ்யா சென்று வென்றிருக்கிறார்கள்.

அங்கு கால்பந்து விளையாட்டுப் போட்டிகளுக்கு மத்தியில் நடைபெற்ற கருத்தரங்கிலும் இவர்களது அணி கலந்து கொண்டது. அங்கு, தெருவோரக் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள், தடைகள் குறித்து சங்கீதா பேசியுள்ளார். அதில், வீடில்லாமல் தெருவில் வசிக்கும் குழந்தைகள், அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள், கழிப்பறை பிரச்சினை, குளியலறை பிரச்சினை உள்பட பலவற்றைப் பற்றி அவர் எடுத்துரைத்தார்.

தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்குச் செல்ல இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்கிறார் சங்கீதா. குடும்பச் சூழலோடு, பள்ளிகளில் கேட்கப்படும் பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போன்றவை இல்லாமையே பெரும்பாலான குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக முக்கியக் காரணம் என்பது இவரது குற்றச்சாட்டு.

பொதுவாக விளையாட்டு வீரர்கள் நன்றாக ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டும். ஆனால், இருக்கவே நல்ல வீடு இல்லாததவர்கள், நல்ல சாப்பாட்டிற்கு எங்கே போவார்கள். ஆனால், சாப்பாட்டுப் பிரச்சினையால் சாதனை படைக்கும் வீராங்கனைகள் உருவாவதில் தடை ஏற்பட்டுவிடக் கூடாது என அவர்களது பயிற்சியாளரே இவர்களுக்கு உணவு தயாரித்து தந்து உதவியுள்ளார். விளையாட்டு ஒருபுறம் இருக்க, படிப்பையும் தொடர்ந்த சங்கீதா, தற்போது கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்.

“தெருவோரத்தில் தங்கி இருப்பதால் இரவு நேரங்களில் போதுமான வெளிச்ச வசதி இருக்காது. வண்டிகள் சென்று வருவதுமாய் சத்தமாய் இருக்கும். அமர்ந்து படிக்கவும் முடியாது. மழை, வெயில் இரண்டும் எங்களுக்கு கஷ்டம்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் என்னை நானே உற்சாகப்படுத்திக் கொண்டேன். 

“எங்களது சூழ்நிலை மாறவேண்டும் என்றால் நான் படித்தே தீர வேண்டும் என்று படித்து வருகிறேன். இனி அடுத்த தலைமுறை தெருக்களில் வசிக்கக் கூடாது என்பதுதான் என் கனவு. இதற்காக கால்பந்தோடு, ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற இலக்கோடு தீவிரமாகப் படித்து வருகிறேன்,” என்கிறார் சங்கீதா.

இவரது தலைமையில் இந்தியா சார்பாக ரஷ்யா சென்ற இந்த அணி, அங்கு சிறப்பாக விளையாடி வெற்றிக் கோப்பையுடன் திரும்பியபோதும், இங்கு தங்களுக்கு உரிய வரவேற்போ, பாராட்டுகளோ இல்லை என்பதே சங்கீதாவின் மனக்குறை.

“ஏற்கனவே, சாதித்தவர்களுக்கே மீண்டும் மீண்டும் உதவித்தொகை அளித்து ஊக்குவிப்பதைவிட, எங்களைப் போன்ற எவ்வித வசதியோ, பயிற்சியோ இல்லாமல் போராடி ஜெயித்தவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டினால் என் போன்று மேலும் பல வீராங்கனைகள் உருவாக வாய்ப்புள்ளது. 

“மற்ற நாடுகளில் இருந்து இந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு அவர்களது நாட்டின் சார்பில் நல்ல மரியாதையும், உதவியும் செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவில் எங்களது திறமையை மதிக்கவில்லை. எங்களுக்கு உரிய பயிற்சி அளித்தால் நாங்கள் இந்தியாவின் பெருமையை உலகளவில் எடுத்துச் செல்வோம்,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் சங்கீதா.

தொடர்ந்து சமூகம் தனக்கு தரும் இடையூறுகளை கால்பந்து போல் நினைத்து, எட்டி உதைத்து வாழ்க்கையில் வெற்றி எனும் கோல் போடுவதற்காக தொடர்ந்து போராடி வரும் சங்கீதா, தொடர்ந்து தானும் பயிற்சி பெறுவதோடு, தனக்கு தெரிந்த சிறுமிகளுக்கும் கால்பந்தாட்டம் குறித்து இலவசமாக பயிற்சி கொடுத்து வருகிறார். கல்வி, விளையாட்டு போன்றவைகள் மூலம் கிடைக்கும் அங்கீகாரமே தெருவோரக் குழந்தைகள் என்ற தங்கள் மீதான அடையாளத்தை மாற்றும் என்பது இவரது நம்பிக்கை.

Related Stories

Stories by jayachitra