இந்தியா சார்பில் சர்பிங் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் ஒரே பெண் சர்ஃபர் தன்வி ஜகதீஷ்! 

மங்களூருவைச் சேர்ந்த 17 வயதான தன்வி ஜகதீஷ் ஸ்டாண்ட் அப் பெடலிங்கில் இந்தியாவின் அடையாளமாக விளங்குகிறார்

0

தண்ணீரில் விளையாடும் விளையாட்டுகளுக்கு அறிமுகமாகையில் தன்விக்கு எட்டு வயதிருக்கும். அந்த விளையாட்டுகள் அவரை பெரிதும் கவர்ந்தன. பொழுதுபோக்காக இருந்த இந்த விளையாட்டுகள் ஒரு கட்டத்தில் அவருக்கு வாழ்க்கையின் லட்சியமாகவே மாறியது. அவரது லட்சியத்தை நோக்கிச் செல்லும் பாதையில் பல தடங்கல்களை சந்திக்க நேரிடும் என்பதை இளமையின் வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்த அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

17 வயதான தன்வி வளர்ந்த சூழலில் பெண்கள் ஷார்ட்ஸ் அணிவதும் தண்ணீரில் இறங்கி விளாயாடுவதும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட விஷயமாகவே இருந்து வந்தது. அவரது அப்பா ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது அம்மா இல்லத்தரசி. தன்வி தற்போது மங்களூருவிலுள்ள ப்ரீ-பல்கலைக்கழக கல்லூரியில் படித்து வருகிறார்.

தன்வியின் பெற்றோருக்கு அவரது பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுந்தது. அவர் அணியும் உடை குறித்தும் சமூகத்தில் பல்வேறு ஆட்சேபனைகள் எழுந்தது.

தன்வி யுவர்ஸ்டோரியிடம் கூறுகையில்,

என்னை இழிவுபடுத்தும் விதத்தில் சமூகத்தினர் என்னுடைய பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கினர். இருந்தும் என்னுடைய பெற்றோர் என்னை நம்பினார்கள். விளையாட்டில் எனக்கிருந்த ஆர்வத்தை புரிந்துகொண்டனர். ஆரம்பத்தில் என்னுடைய பெற்றோரின் ஆதரவு இல்லாமலேயே கடுமையாக உழைத்தேன். காரணம் அலை சறுக்கு (சர்பிங்) செலக்ஷனில் என்னுடைய வலிமையை அவர்கள் சோதித்தனர். நானும் அதில் சிறப்பாக செயல்பட்டேன்.

மாற்றத்தை ஏற்படுத்திய வழிகாட்டியை சந்தித்தல்

அமெரிக்க SUP சர்க்யூட்டில் சிறப்பாக அங்கீகரிக்கப்பட்ட வட கலிஃபோர்னியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரான ஏப்ரில் ஜில்க், தன்விக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

ஏப்ரில், அவரது கணவருடன் இந்தியாவில் ஆறு மாதங்கள் தங்கியிருந்தார். அப்போது இந்தியாவின் கலாச்சரம் குறித்து அறிந்தார். பெண்கள் தங்களது கனவுகளை நோக்கி பயணிப்பது எவ்வளவு கடினம் என்பதை கண்கூடாகப் பார்த்தார். பெற்றோர் தங்களது பெண் குழந்தைகளை குப்பையில் எறியவேண்டாம் என்கிற வாசகங்களைக்கூட பார்த்திருக்கிறார்.

தண்ணீரை பிரிய மனமில்லாமல் மங்களூருவிற்கு அருகிலுள்ள முல்கி என்கிற நகரத்திற்கு மாற தீர்மானித்தார். ஆனால் நாட்டில் SUP-ஐ அறிமுகப்படுத்துவோம் என்றோ அல்லது ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றோ அவர் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை.

இந்தியாவில் தண்ணீர் விளையாட்டுகளில் ஈடுபட இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் நிறுவனங்களில் ஒன்றான மங்களூருவைச் சேர்ந்த மந்திரா சர்பிங் க்ளப் குறித்து கேள்விப்பட்டார் ஏப்ரல். சர்பிங் மற்றும் பெடலிங் விளையாடுதில் பல பெண்களுக்கு ஆர்வம் உள்ளபோதும் குடும்பத்திலுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக முன்வரத் தயங்குகின்றனர்.

இந்த நேரத்தில்தான் ஏப்ரல் தன்வியை சந்தித்தார். அப்போது தன்விக்கு 14 வயது. அலை சறுக்கு விளையாட்டில் அதீத ஆர்வத்துடன் காணப்பட்டார் தன்வி. கட்டுப்பாடுகள் குறித்து சற்றும் கவலைப்படாமல் தண்ணீரில் மூழ்கி எளிதாக அலை சறுக்கில் ஈடுபட்டார். தன்வி தண்ணீரில் விளையாடவேண்டியவர் என்பதை அவரது கண்களில் மிளிர்ந்த ஆர்வமானது ஏப்ரலுக்கு தெளிவுபடுத்தியது. 

ஏப்ரல் அமெரிக்காவிற்கு திரும்பினார். தன்வி மற்றம் மந்திரா சர்பிங் க்ளப்பை அவரால் மறக்க முடியவில்லை. சமூக வலைதளம் வாயிலாக தன்வியுடன் தொடர்பில் இருந்தார் ஏப்ரல். பல்வேறு நுணுக்கங்களுடன் தன்வியைத் தொடர்ந்து வழிகாட்டி வந்தார். இந்த முயற்சிகளுக்கான பலன் விரைவிலேயே கிடைத்தது. 2014-ல் சர்பிங் மற்றும் SUP-யில் இந்தியா சார்பில் பல பட்டங்களை வென்றார். கோவளத்தில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் வெற்றி பெற்றார்.

2015-ம் ஆண்டின் கோவளம் பாயிண்ட் கிளாசிக் சர்ப் மற்றும் இசை விழாவில் தேசிய அளவிலான மகளிர் SUP சாம்பியன்ஷிப்பில் முன்னணி வகித்தார். அனைத்து தேசிய அளவிலான SUP சாம்பியன்ஷிகளிலும் பல பட்டங்களை வென்றார். 2017-ம் ஆண்டில் SUP சர்ப் ப்ரோ நிகழ்வுகளில் இருமுறை இந்தியா சார்பில் பங்கேற்று 17 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் மூன்றாம் இடம் வகித்தார்.

இந்தியாவில் இது ஒரு முக்கிய விளையாட்டு என்றபோதும் இந்திய மகளிர் ஓப்பன் பிரிவில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பங்கேற்றனர். இது குறித்து சர்பிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவின் ப்ரெசிடெண்ட் கிஷோர் குமார் யுவர் ஸ்டோரியிடம் கூறுகையில்,

சர்பிங் விளையாட்டு உங்களை மெருகேற்றிக்கொள்ள உதவுவதுடன் அறிவுத்திறனை கூர்மையாக்கிக்கொள்ளவும் உதவுகிறது. மேலும் அதிகமான பெண்கள் சர்பிங்கில் இணைவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

பெண்கள் ஒரே மாதிரியான கருத்துக்களை தகர்த்தெறிந்து தங்களுக்கு ஆர்வமுள்ள விஷயத்தில் தொடரவேண்டும் என்பது குறித்து தன்வி யுவர்ஸ்டோரியிடம் பகிர்ந்துகொள்கையில்,

”இது குறித்து எனது தாத்தாவிடம் கேட்டபோது, ‘தன்வி, நீ செய்வதை மனதார செய்யும்பட்சத்தில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிரு. சிறப்பாக செயல்படு. கடுமையாக உழைக்கவேண்டும். உன்னிடம் உறுதி இருக்கும் பட்சத்தில் எதையும் காதில் கேட்டுக்கொள்ளாதே. உன்னை யாராலும் தடுக்க இயலாது. ஆர்வம், உறுதி, தோல்வியைக் கண்டு அஞ்சாத மனப்பான்மை ஆகியவை உன்னுடைய லட்சியத்தை அடைய உதவும்’ என்றார்.”

அவரது கனவை நோக்கிச் செல்லும் பயணமானது இயற்கையுடன் ஒன்றிணையும் வாய்ப்பை அளித்தது. பெண்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் தன்வி கூறுகையில்,

பெண்களால் சாதிக்க முடியும் என்று நிரூபிக்க விரும்பினேன். என்னுடைய ஆர்வத்தில் ஈடுபட்டு வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து தூய்மையான உள்ளத்துடன் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துவேன்.

தன்வி, அதிக சக்தியுடன் செயல்பட வாழ்த்துக்கள்!

ஆங்கில் கட்டுரையாளர் : சம்பத் புட்ரேவு