சைக்கிள் ரிப்பேர் தொழிலை செய்த வருண் தன் ஐஏஎஸ் கனவை நினைவாக்கிய கதை!

1

மஹாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பிறந்தவர் வருண் பரன்வால். அவரின் தந்தை ஒரு சைக்கிள் பழுது பார்க்கும் கடையை வைத்திருந்தார். நான்கு குழந்தைகள் கொண்ட அந்த குடும்பத்தில் வறுமையில் வளர்ந்தார் வருண். ஆனால் அவருக்கு டாக்டர் ஆகும் கனவு சிறுவயது முதல் இருந்தது. ஆனால் வருண் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அவரின் அப்பா திடீரென மாரடைப்பால் இறந்தபோது அவரின் கனவும் உடைந்து போனது. 

குடும்பத்தின் மீது விழ்ந்த கடன்சுமையால், வருமானத்துக்காக அப்பாவின் சைக்கிள் கடையை நடத்தலானார் வருண். படிப்பையும் தொடர்ந்த அவர், பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை பிடித்தார். பெட்டர் இந்தியா பேட்டியில் பேசிய வருண்,

”என் அம்மா கடையை நடத்த முடிவெடுத்தார். அப்போதுதான் என்னால் படிக்கமுடியும் என்று அவர் நினைத்தார். அருகில் இருந்த கல்லூரியில் விண்ணப்பித்தேன், ஆனால் அதற்கு பீஸ் 10 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. எங்களிடம் அது இல்லாததால் அந்த எண்ணத்தை கைவிட்டேன்,” என்றார்.

மீண்டும் சைக்கிள் கடையில் பணியை தொடர்ந்தார் வருண். அப்போது ஒரு நாள் வருணின் தந்தைக்கு வைத்தியம் பார்த்த டாக்டர் கடைக்கு வந்தார். வருணிற்கு படிப்பின் மீது இருந்த ஆர்வத்தை புரிந்து கொண்ட அவர், அவருக்குத்தேவையான பீசை கட்ட ஒப்புக்கொண்டார். உடனடியாக படிப்பை தொடர்ந்தார் வருண்.

கட்டணத்தை கட்டியிருந்தாலும், இதர செலவுகளுக்கு பணமில்லாமல் அவதிப்பட்டனர் வருண் குடும்பத்தார். ஆனால் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்த அவர், அதில் தீவிர கவனத்துடன் இருந்தார். 

காலையில் கல்லூரிக்கு சென்று படித்துவிட்டு, மாலையில் சைக்கிள் கடையில் தாயாருக்கு துணையாக இருப்பார். பின்னர், வருண் பூனா எம்ஐடி-ல் சேர்ந்து பொறியியல் துறையில் தங்க பதக்கத்துடன் படிப்பை முடித்தார். வேலை செய்து கொண்டே அதில் வரும் வருமானத்தில் கல்லூரி கட்டணத்தை சமாளித்தார்.

கல்லூரி இறுதி ஆண்டில் ஒரு சர்வதேச நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் தன்னை சுற்றியுள்ள சமூகத்தின் பிரச்சனைகள் மற்றும் ஊழல் பற்றிய புரிதல் வருணின் மனதில் வலுவானது. அன்னா ஹசாரேவின் அமைப்பால் ஈர்க்கப்பட்டு அவருடன் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் இணைந்தார் வருண்.

யூபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி, தேர்வு எழுதி அதில் அகில இந்திய அளவில் 32-வது ரேன்க் எடுத்தார் வருண். தன் மாநிலத்திலேயே பணியையும் தேர்ந்தெடுக்கொண்டார். அதைப்பற்றி பேசிய வருண்,

”என் அம்மா எங்கள் குடும்பத்தை காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட்டார். என்னுடைய இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்,” என்றார்.

தான் வாழும் சமூகத்துக்கு நற்சேவைகள் செய்வதை குறிக்கோளாகக் கொண்டு தற்போது கடுமையாக பணியாற்றி வருகிறார் வருண்.

கட்டுரை: Think Change India