பூசணிச்செடி பயன்படுத்தி இகோ டூத்பிரஷ் உருவாக்கிய 13 வயது சிறுவன்!

0

1938-ம் ஆண்டு நவீன டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து ஒவ்வொருவரின் வாய் சுகாதார பராமரிப்பிலும் இது முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இன்றைய நவீன உலகை பசுமையாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் ப்ளாஸ்டிக் டூத்பிரஷ்ஷிற்கான மாற்றை மக்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஒரு மாதத்திற்கு 150 மில்லியன் டூத்பிரஷ்கள் குப்பைகளில் வீசப்படுவது அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது.

ப்ளாஸ்டிக்கினால் ஏற்படும் அபாயங்களுக்கு தீர்வுகாணும் வகையில் உலகளவில் ஒரு சில நிறுவனங்கள் மக்களின் அன்றாட பயன்பாட்டிற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைத் தயாரித்து வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய முயற்சிகளில் இணைந்துள்ளார் ஆந்திரப்பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள தர்மாவரம் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது கே தேஜா.

சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய நிறுவனத்தில் நடைபெற்ற கிராமப்புற புதுமை ஸ்டார்ட் அப் மாநாட்டில், தேஜா பூசணி செடியில் தயாரிக்கப்பட்ட டூத்பிரஷ்ஷை காட்சிப்படுத்தினார். பார்வையாளர்கள் அவரது புதுமையான படைப்பை பெரிதும் பாராட்டினர்.

கிராமப்புறங்களில் சமையலறை தோட்டத்திலேயே வளர்வதால் பூசணி எளிதாக கிடைக்கும். அதன் தண்டுப்பகுதியும் எளிதாக கிடைக்கக்கூடியது. தேஜா பூசணி செடியின் உலர்ந்த தண்டுகளையும் பனைமரத்தின் நார்களையும் பயன்படுத்தி டூத்பிரஷ் தயாரித்துள்ளார். இந்த நார்கள் ஈறுகளுக்கு மிருதுவாக இருக்கும்,"

என அவர் குறிப்பிட்டதாக ’தி பெட்டர் இண்டியா’ தெரிவித்துள்ளர். பசை பயன்பாட்டைக் குறைப்பதற்காக தண்டிலேயே ஓட்டைகள் போட்டு அதில் நார்களைப் பொருத்தியுள்ளார் தேஜா. டூத்பிரஷ்ஷில் பொருத்தப்பட்டுள்ள இந்த நார்களை குறைந்தபட்சமாக 10 முறை பயன்படுத்தலாம். அதன் பிறகு டூத்பிரஷ்ஷை மாற்றிவிடவேண்டும்.

தற்சமயம் மொத்த பிரஷ்ஷையும் மாற்றுவதற்கு பதிலாக பயனாளிகள் நார்களை மட்டும் மாற்றிக்கொள்ளும் வகையில் தீர்வை உருவாக்கும் முயற்சியில் தேஜா ஈடுபட்டுள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு ப்ளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்பை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த சில ஆண்டுகளில், ’தி எடிபிள் ஸ்பூன் மேக்கர்’ போன்ற ஸ்டார்ட் அப்கள் சாப்பிடக்கூடிய ஸ்பூன் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இவற்றை வழக்கமான ஸ்பூன் போன்றே பயன்படுத்தலாம். அத்துடன் சாப்பாட்டுடன் சேர்த்து இந்த ஸ்பூனையும் சாப்பிடலாம்.

அதேபோல் வெள்ளை சோளத்தால் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றொரு கட்லெரி வகை Bakeys.

கட்டுரை : THINK CHANGE INDIA