’கல்பவிருக்‌ஷா’ மூலம் தென்னை விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் கொண்டு உதவும் மரிகோ நிறுவனம்!

0

தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயனளிக்கும் விதத்தில் அமைந்துள்ளதால் கல்பவிருக்‌ஷா என்றும் வாழ்வளிக்கும் மரம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

கேரளாவில் வளர்ந்த எனக்கு தென்னை மரங்கள் புதிதல்ல. ஒவ்வொரு வீட்டிலும் சில தென்னை மரங்களாவது இருக்கும். தென்னை வளர்ப்பின் நுணுக்கங்களை ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் தென்னை விவசாயிகள் சந்திக்கும் சவால்களை ஆழமாக புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு முதல் முறையாக கிடைத்தது.

மரிகோ லிமிடெட் (Marico Ltd) நிறுவனத்தின் அழைப்பை ஏற்று பத்திரிக்கையாளர்கள் குழுவுடன் சேர்ந்து கோயமுத்தூரில் இருந்து இரண்டரை மணி நேர தூரத்தில் உள்ள பொள்ளாச்சிக்கு பண்ணை சுற்றுலா சென்றேன். புறநகர் பகுதிக்கு நுழைகையில் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான தென்னை மரங்களுடன் பசுமையாக காட்சியளித்ததைக் கண்டேன்.

மரிகோ லிமிடெட் நிறுவனத்தின் கல்பவிருக்‌ஷா திட்டம் தற்போது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் செயல்படுகிறது. நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு தென்னை விவசாயிகளின் விளைச்சல் சிறப்பிக்கவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். ஊடாடும் அமர்வு ஒன்றில் அருகாமை கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது சவால்கள் குறித்தும் தொழில்நுட்பம் எவ்வாறு உதவியுள்ளது என்பது குறித்தும் பகிர்ந்துகொள்ள ஒன்றிணைக்கப்பட்டனர்.

”கல்பவிருக்‌ஷா திட்டம் ஓராண்டிற்கு முன் துவங்கப்பட்டது. எங்களது பங்குதாரர்கள் அனைவரது வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்கிற மரிகோவின் நோக்கத்தில் இந்த திட்டம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. எங்களது வணிகத்தில் தென்னை விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்,” 

என்றார் அந்நிறுவனத்தின் எக்சிக்யூடிவ் விபி மற்றும் கொள்முதல் பிரிவின் தலைவர் உதய்ராஜ் பிரபு.

அவர் மேலும் கூறுகையில்,

”மும்பையின் சேவ்ரி பகுதியில் இருந்த எங்களது தொழிற்சாலையை தென்னை விளையும் மூன்று தெற்கு மாநிலங்களில் மாற்றியமைத்தோம். பின்னர் இந்த மாநிலங்களில் உள்ள தென்னை விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்து சிந்திப்பது அவசியமானது,” என்றார்.

சிறப்பான புரிதலுக்காக மரிகோ மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். “பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அவர்களது பரிந்துரைகளைப் புரிந்துகொண்டோம். பல்வேறு நிலங்களில் எங்களது முயற்சியை சோதனை செய்து பார்த்தோம்,” என்றார்.

ஆறு உழவியல் வல்லுநர்களை பணியிலமர்த்தி இந்தத் திட்டம் துவங்கப்பட்டது. இவர்கள் நீர்பாசனம், நாற்று நடுதல், நீர்பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களில் 125 விவசாயிகளுடன் பணியாற்றினர். ஓராண்டில் உற்பத்தி 20 சதவீதம் அதிகரித்ததை உழவியல் வல்லுநர்கள் கண்டனர். இதுவே ஒரு சில நிலங்களையும் ஒரு சில விவசாயிகளையும் தாண்டி திட்டத்தை விரிவுபடுத்த கல்பவிருக்‌ஷாவிற்கு நம்பிக்கை அளித்தது.

நீண்ட கால செயல்பாடுகளுக்கான சிறு முயற்சி 

கல்பவிருக்‌ஷா திட்டம் தகவல் சார்ந்தது. பயன்படுத்தவேண்டிய சரியான உரங்கள் மற்றும் சத்துக்கள், தண்ணீரை எப்படி சிறப்பாக பயன்படுத்துவது போன்ற முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறது.

”தமிழகத்தில் நீர் இருப்பு தொடர்பான பல்வேறு சவால்கள் உள்ளது. சொட்டுநீர் பாசனம் பரிந்துரைக்கப்படும் நிலையில் நீரை பாதுகாக்க உரப்பாசனம் (ferti-irrigation) பெரிதும் உதவும். மேலும் பெரும்பாலான விவசாயிகள் கலவை வகை விலையுயர்ந்தது என்பதால் இன்னமும் பாரம்பரிய தென்னை வகைகளையே சார்ந்துள்ளனர். ஆனால் சிறப்பான விளைச்சல் அளிக்கக்கூடியது,” என்று உதய்ராஜ் விவரித்தார்.

தற்போது கல்பவிருக்‌ஷா திட்டத்தில் 100 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3,500 விவசாயிகள் இணைந்துள்ளனர். டிஜிட்டல் சானல் வாயிலாக 1.3 லட்சம் விவசாயிகளைச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கிறது. ஆரம்பகட்ட செயல்பாடுகளில் உற்பத்தி 18 சதவீதம் அதிகரித்தது. இந்த முயற்சி வாயிலாக 14,000 முதல் 15,000 பேரை இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

விவசாயிகளின் இன்னல்கள் தீர தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்

தகவல்கள் எவ்வாறு தடங்கலின்றி விவசாயியைச் சென்றடையும்? அவர் எவ்வாறு மரிகோ பிரதிநிதியுடனும் தங்களது உழவியல் வல்லுநர்களுடனும் இணைய முடியும்? 

“எங்களது பிரத்யேக கல்பவிருக்‌ஷா ஐவிஆர் (Interactive Voice Response Line) கட்டணமில்லா அழைப்பு வாயிலாக நிபுணர்கள் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள். அடுத்ததாக விவசாயிகள் தகவல் பெற எங்களது கல்பவிருக்‌ஷா செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவு செய்வது மிகவும் எளிது. பெயர், நிலத்தின் முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்கள் மட்டுமே தேவைப்படும்,” என உதய்ராஜ் தெரிவித்தார்.

திட்டத்தில் விவசாயிகளை இணைத்துக்கொள்ள சந்திப்புகள் பெரும் பங்கு வகிக்கிறது. காட்சிகள் மூலம் பூச்சிக்கொல்லி முறைகள் குறித்தும் ஊட்டச்சத்து மேலாண்மை நுட்பங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்படும்.

”தற்சமயம் தகவல்கள் வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். இது ஒவ்வொரு விவசாயிக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. எந்த விவசாய முறையும் சுயசார்புடனும் வணிகரீதியாக லாபகரமாகவும் இருக்க சரியான அறிவு வழங்குவது அவசியம் என நாங்கள் கருதுகிறோம்,” என்றார் உதய்ராஜ்.

இந்த அறிவுதான் மெக்கானிக்கல் பொறியாளராக இருந்து விவசாயியாக மாறிய சந்தானத்திற்கு உதவியது. இவருக்கு கோயமுத்தூரில் ஐந்து ஏக்கர் தென்னை பண்ணை உள்ளது. “நான் விவசாய குடும்பத்தில் வளர்ந்தேன். என்னுடைய அப்பாவை அடுத்து நான் விவசாயத்தில் ஈடுபட்டேன். ஆரம்பத்தில் அதிக சவால்களை சந்தித்தேன். ஒரு கண்காட்சியில் மரிகோ பிரதிநிதியை சந்தித்தேன். தென்னை சாகுபடி குறித்த பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். அவர்களது பரிந்துரையை பின்பற்றியதால் என்னுடைய விளைச்சல் அதிகரித்தது,” என்றார்.

கல்பவிருக்ஷா விரைவில் ஃபவுண்டேஷன் பணியில் ஈடுபட உள்ளது. இதில் மற்ற சேவைகளும் வழங்கப்படும். தென்னை விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கவும் இந்தப் பிரிவில் ஆய்வுகள் மேற்கொள்ளவும் ஒரு பல்கலைக்கழகத்தை திறக்கவும் திட்டமிட்டு வருகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில் : ஸ்ரீவித்யா