'கல்வி கல்லாமையை இல்லாமல் ஆக்குவோம்'

'கல்வி கல்லாமை என்ற நிலைமையை இல்லாமல் ஆக்குவோம்' என்பதை சாத்தியமாக்கும் முயற்சியில் கிராமத்து இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி, விடியல் என்ற பெயரில் பொது நூலகம் ஒன்றை திறந்திருக்கிறார்கள். 

0

வாட்ஸ் ஆப் குழு மூலம் ஒருங்கிணைந்து நிதி திரட்டி, புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டி கிராமத்தில் அப்பகுதி இளைஞர்கள் இலவசமாக நூலகம் அமைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே காட்டுப்பட்டி என்ற கிராமம் உள்ளது. விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் நம்பியுள்ளது இந்த கிராமம். இந்தக் கிராமத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள். பொருளாதாரத்தில் ஓரளவு நிறைவுபெற்ற அந்த இளைஞர்கள் தங்களது கிராமத்தில் உள்ள எல்லோரும் பயன்படும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்று துடிப்புடன் இருந்து வந்தார்கள். 

என்ன செய்யலாம் என்று ஊரில் பொது காரியங்களைச் செய்து வரும் சக்திவேல் என்ற தங்களது நண்பரிடம் கேட்டிருக்கிறார்கள். அவர் ஊர் மக்களின் கருத்துப்படி பொது நூலகத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. மாணவர்கள் விளையாட்டு பொருட்கள் வேண்டுமென கூற, நூலகத்துடன், மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு பொருட்களும் வாங்க முடிவானது. இதனைத் தனது வெளிநாட்டு நண்பர்களுக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார் சக்திவேல்.

வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசிக்கும் காட்டுப்பட்டி இளைஞர்கள் 70 பேர் சேர்ந்து, 'விடியல் இளைஞர் அணி' என்ற பெயரில் ஒரு வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கியுள்ளனர். 

அதன்மூலம் பணம் திரட்டி புத்தகங்கள், விளையாட்டுப் பொருட்கள் வாங்கியுள்ளனர். முறையான கல்வி இல்லாததால் வெளிநாடுகளில் குறைவான ஊதியம் கிடைப்பதாக கூறும் அடைக்கலம், தான் படும் துயரை தன் கிராமத்துப் பிள்ளைகளை படக்கூடாது என உருக்கத்துடன் கூறுகிறார்.

3 அறைகளுடன் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கிராம சேவை மையம் 2 ஆண்டுகளாக முட்புதர் மண்டிக் கிடந்த நிலையில், அதனை அரசு அனுமதியுடன் சீரமைத்து, நூலகமாக மாற்றி இருக்கிறார்கள், போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், பள்ளி படிக்கும் மாணவர்களுக்கும் இந்த நூலகம் மிகப்பெரிய உதவியாக மாறி இருக்கிறது.

மாணவர்களின் முயற்சியால் உருவான இந்த நூலகம் படுவிமரிசையாகத் திறக்கப்பட்டது. ஊர் மக்கள்தான் விஐபிக்கள். சிறுவர், சிறுமிகள்தான் சிறப்பு விருந்தினர்கள்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் வரவேற்பு இனிப்பாகக் கடலை மிட்டாய் கொடுக்கப்பட்டது. ஊரில் உள்ள சிறுவர்களும் சிறுமிகளும் புத்தாடை அணிந்து கொண்டு ஆர்வத்துடன் வந்திருந்தார்கள். நூலக உறுப்பினராக இணைந்த அத்தனை பேர்களுக்கும் புகைப்படம் ஒட்டிய அழகிய அடையாள அட்டைக் கொடுக்கப்பட்டது.

"ஊரில் உள்ள சிறுவர்களும் பெண்களும் பொது விஷயங்களைப் படிப்பதில் ஊக்கம் பெற வேண்டும். சமகால அரசியல் நடப்புகளையும் பொதுபிரச்சனைகள் பற்றிய தெளிவையும் அவர்கள் பெறவேண்டும் என்ற பொது நோக்கத்துடன் இந்த நூலகத்தைத் திறந்துள்ளோம். சிறுவர்களின் மூளைத்திறன்களை மேம்படுத்தும் விதமான விளையாட்டுப் பொருட்களையும் இங்கு வாங்கிப் போட்டிருக்கிறோம். எல்லோருடைய நிதி ஆதரவு ஒத்துழைப்பால்தான் இந்த முயற்சி வெற்றி பெறக் காரணம். நூலகம் ஒன்று வந்தபிறகு தான் எங்கள் ஊருக்கே ஒரு அழகும் கம்பீரமும் வந்திருக்கிறது," என்கிறார், இந்த முயற்சியை ஒழுங்குபடுத்திய சக்திவேல்.

நூலகத்தோடு நின்றுவிடவில்லை இவ்வூர் இளைஞர்கள் அடுத்ததாக நூலகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தவும் ஸ்போக்கன் இங்கிலீஸ் போன்ற வகுப்புகளை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்கின்றனர். கல்லாமையை இல்லாமை ஆக்கும் நூலகத்தால், தங்கள் ஊருக்கே ஒரு கம்பீரம் வந்திருப்பதாக பெருமிதப்படுகின்றனர் காட்டுப்பட்டி மக்கள்.

Related Stories

Stories by Jessica