ஜப்பானிய நுட்பத்தால் மீண்டும் உணவருந்தத் துவங்கிய உணவுக் குழாய் இன்றி பிறந்த சிறுவன்!

0

மனித உடலை எண்ணற்ற நோய்கள் பல விதங்களில் தாக்குகின்றன. இதில் மிகவும் தீவிரமாக இருக்கும் நோய்களை சமாளிக்க பல்வேறு கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன.

Esophageal Atresia (EA) பிறவியிலேயே ஏற்படும் பரம்பரை பாதிப்பாகும். 10,000 பேரில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படும். Esophagus வாய் மற்றும் வயிற்றுப்பகுதியை இணைக்கும் உணவுக்குழாயாகும். அவ்வாறு இல்லாத நிலையே அட்ரீஷியா (Atresia) எனப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால் இந்தக் குறைப்பாடு ஒரு நபர் சாப்பிடுவதைத் தடுத்துவிடும். இதன் காரணமாக உமிழ்நீர் நுரையீரலுக்குள் சென்றுவிடுவதால் நிமோனியா ஏற்படும். 

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தை இத்தகைய குறைபாட்டுடன் பிறந்தது. லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசியரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ் என் குனீல் ஆறு வருடங்களாக இந்தக் குழந்தைக்கு சிகிச்சையளித்து வந்தார்.

சமீபத்தில்தான் இந்த சிறுவனால் முதல் முறையாக உணவை சுவைத்துப் பார்க்கமுடிந்தது என ’தி இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கிறது. மருத்துவர் கூறுகையில்,

குழாய் வாயிலாக உணவளிக்க அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் குழாயை செலுத்துவதே இந்த குறைபாட்டை சரிசெய்வதற்காக பரவலாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் முதன்மையானதாகும். உடலில் இருந்து உமிழ்நீர் வெளியேற உணவுக் குழாயின் மேல்புற முனை சருமத்தின் வெளிப்புறம் இருக்கும். குழந்தைக்கு சுமார் இரண்டு வயதாகும்போது உணவுக்குழாய் முழுமையாகும் வகையில் ஒரு செயற்கைப் பிரிவு இணைக்கப்படும். எனினும் அது இயற்கையானது அல்ல என்பதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

செயற்கையானவற்றைப் பயன்படுத்தாமல் இயற்கையான செயல்முறை வாயிலாக சிறுவனின் உயிரைக் காப்பாற்றுவதே ஒரே வழியாக இருந்தது. 

டாக்டர். குனீல் உணவுக்குழாயை திசு பொறியியல் வாயிலாக நீளமாக்க, 1994-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜப்பானிய நுட்பமான கிமுரா நுட்பத்தைப் (Kimura Technique) பயன்படுத்தினார்.

இதுவரை 20 நிகழ்வுகள் மட்டுமே இம்முறையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர். குனீல் தெரிவித்தார்.

முதல் அறுவைசிகிச்சை குறித்து அவர் விவரிக்கையில்,

2012-ம் ஆண்டு குழாய் வாயிலாக உணவளிக்க ஏற்பாடு செய்ய வயிற்றில் முதல் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு மேல்புற முனை நீட்டிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு திசு பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மற்றொரு அறுவைசிகிச்சை வாயிலாக உணவுக்குழாய் மேலும் நீளமாக்கப்பட்டது. 2015-ம் ஆண்டிலும் 2017-ம் ஆண்டிலும் வேறு இரு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.

அவர் மேலும் கூறுகையில்,

இறுதிகட்ட சிகிச்சை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஒரு முழு நீள இயற்கையான உணவுக்குழாய் வாயையும் வயிற்றுப் பகுதியையும் இணைக்கிறது. நோயாளி நோயில் இருந்து மீண்டு கூழ்நிலையில் இருக்கும் உணவுகளையும் திட உணவுகளையும் எடுத்துக்கொள்ளத் துவங்கியுள்ளார். அச்சிறுவனுடன் சேர்ந்து உணவுக்குழாய் வளரும். அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

ஆறு ஆண்டுகளாகப் போராடி இந்தச் சிறுவன் தற்போது சிக்கல்களின்றி உணவு உண்டு சராசரி வாழ்க்கையை வாழலாம்

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL