12 வயதில் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட இளம்பெண்ணின் பகிரங்க அனுபவப் பதிவு!

2

சிலர் காப்பாற்றப்படுகின்றனர்... சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்... சிலர் தப்பிச் சென்று உலகின் எதோ மூலையில் வாழ்கின்றனர். சிலர் இன்னமும் கண்டுபிடிக்கமுடியாத நிலையில் மாட்டிக்கொண்டுள்ளனர். கொடுமை படுத்தப்பட்டு, வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி சிலமுறை கொலை செய்யப்படுகின்றனர். 

இதுதான் இன்றைய இந்தியாவில் பல பெண்கள் கடத்தப்பட்டு அனுபவிக்கும் கொடுமைகள். கேட்பதற்கே மனம் பதபதைக்கிறது என்றால் அவர்கள் அனுபவிப்பதை நம்மால் நினைத்துக் கூட பார்க்கமுடியாது. காவல்துறையினரால் கூட கண்டிபிடிக்க இயலாத வகையில் பல பேர் உள்ளனர். பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் இந்த பெண்கள் மனஅழுத்தம், உடல் பாதிப்புகள், மேலும் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளனர். 

“உங்களைப் பற்றிய வருத்தப்படும்படியான விஷயம் என்ன? ஏன்? என்று யாரோ ஒருவர் கோராவில் கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு பெண் மனமுடைந்து பகிர்ந்து கொண்ட திடுக்கிடும் விஷயங்கள் படித்த அனைவரின் நெஞ்சங்களை நொறுங்கச் செய்தது. இந்தியாவில் நிலவும் இந்த கொடுமைகளை தெரிந்து கொள்ள அந்த பதிவு வாய்ப்பாக அமைந்தது. 

இதோ அவர் பதிவு செய்தது:  

”நான் 12 வயதாக இருந்தபோது கடத்தப்பட்டேன்... 17 வயது வரை பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தேன். 

என் 12-ம் வயது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, என் வீட்டு அருகில் உள்ள பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தேன்... அதுவே நான் கொண்டாடிய கடைசி பிறந்தநாள்.”

“கண் விழித்து பார்த்தபோது, ஒரு ட்ரக்கிற்குள் இருந்தேன். என் கண்கள், கைகள், கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி அடைக்கப்பட்டிருந்தது. தப்பிக்க நான் அப்போது அந்த வண்டியில் என் கால்களால் எட்டி உதைத்தது இன்னமும் எனக்கு நினைவு இருக்கிறது. ஆனால் மயக்கடிக்கப்பட்டேன்.”

”மீண்டும் நான் சுய நினைவு அடைந்து கண் விழித்தபோது, ஒரு சிறிய அறையில் இருந்தேன். சில பெண்கள் என்னை சுத்தப்படுத்தி, உணவு அளித்தனர். நான் ஒவ்வொரு முறை உதவி என்று கத்தியபோது, தலையணைக் கொண்டு என் முகத்தை மூடினார்கள். நான் கடத்தல் கும்பல்காரர்களிடம் அடி வாங்காமல் இருக்கவே அவர்கள் அப்படி செய்தனர் என்று பின்னர் தெரியவந்தது.” 

“நான் மிகவும் இளமையானவள், அதனால் என்னை ஒரு டிலக்ஸ் ரூமில் விட்டனர்.”

”ஒரு பெரிய பங்களாவில் இருந்த ஷேக் ஒருவரிடம் நான் முதன்முதலில் என் கற்பை இழந்தேன். என்னை அவன் பல நாட்கள், பல வாரங்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தான். அவனுடைய கூட்டாளிகளும் என்னை பலாத்காரம் செய்தனர்.” 

அந்த டீலக்ஸ் அறையில் ஒரு பொருளை போல கிடந்தேன். தேவைப்படும் ஆண்கள் அந்த அறைக்குள் வந்து அவர்களுக்கு என்னிடம் வேண்டுமோ அதை செய்துவிட்டு போவார்கள். பல நாட்கள் என்னால் தூங்கமுடியவில்லை. சிலசமயம் கோவம் காரணமாக, சிலமுறை உடல் வலி காரணமாக. சில சமயம் ஒரு ஆண் என்னுள் இருப்பதை உணர்ந்து தூக்கம் கலைந்து எழுந்துள்ளேன்.”

அவ்வபோது டாக்டர் ஒருவர் வந்து என் பெண் உறுப்புகளை சரிசெய்துவிட்டு போவார். அப்படி தான் வேறு ஒரு ஷேக் பங்களாவிற்கு புதிய பெண் போல என்னை அனுப்புவார்கள்.

தினமும் வந்து என்னை குளிப்பாட்டி, உணவு அளிக்கும் பெண்கள் பலரும் என்னை கண்டு வருத்தப்படுவார்கள். எனக்காக அவர்களும் அழுவார்கள். எனக்கு நடப்பது கொடுமை என்பதை அவர்களும் அறிவார்கள். ஒரு பெண்ணாக நான் ஒரு மிருகம் இல்லை என்றும், நான் அனுபவிக்கு வலி உண்மை என்றும் அவர்கள் உணர்ந்தார்கள்.

ஒரு நாள் திடீரென வேறு ஒரு அறையில் கண் விழித்தேன். நான் தொடர்ந்து பலமணி நேரம் அழுதேன். பல நாட்கள்... பல வாரங்கள் அழுதேன்... என் அறையில் நான் பழகிக்கொள்ள கற்றுக்கொண்டேன். அதனால் இந்த புதிய அறை எனக்கு பிடிக்கவில்லை.

புதிய அறை புதிய மாஸ்டர். ட்ரெஸ் செய்து கொள்ள, மேக்-அப் போட்டுக்கொள்ள, ஆட கற்றுக் கொடுக்கப்பட்டேன். செக்ஸ் சம்மந்தமான பல சேவைகளை புரிய கற்றுக் கொடுத்தார்கள். அதை என் மாஸ்டரிடம் செய்து காட்டவேண்டும். இந்த இடத்தில் ஷேக்குகள் வரவில்லை, நல்ல ஃபார்மல் பாண்ட், சட்டை அணிந்த மனிதர்கள் வரத்தொடங்கினர். 

நான் ரோபோவை போல உணர்ந்தேன். எனக்கு எதுவும் தோன்றவில்லை. அந்த செயலை தடுக்க துணிவோ, விருப்பமோ இல்லை. வரும் ஆர்டர்களை அப்படியே ஏற்றேன்...”

ஒரு நாள், காக்கி புடவை அணிந்த பெண் ஒருவர் என்னை சுய நினைவுக்கு இழுந்து வந்தார். என்னை அவர் வேகமாக உலுக்கி, என் பெயர் என்ன என்று கேட்டார். எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. எனக்கு என் பெயர் என்ன என்று கூட நினைவில்லை. நான் அழ ஆரம்பித்தேன். கடத்தப்பட்ட பின்னர் நான் மீண்டும் அழுதது அன்றுதான். அந்த பெண் என்னை அணைத்துக் கொண்டு எனக்கு ஆறுதல் கூறினார். என்னை காப்பாற்ற வந்துள்ளதாக அவர் கூறினார். 

நான் ஒரு வேனில் மற்ற பெண்களுடன் ஏற்றப்பட்டு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டேன். நான் மும்பையில் இருப்பது அப்போது தான் எனக்கு தெரிந்தது. நான் ஹைதராபாத்தில் இருந்து கடத்தப்பட்டு 5 வருடங்கள் ஆனது அப்போதுதான் எனக்கு தெரிந்தது. 

ஒரு மீட்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தேன். மனநல ஆலோசகரிடம் பேசினேன். அதற்கான வகுப்புக்களை எடுத்துக்கொண்டு தேர்வு எழுதினேன். அதில் நான் நிம்மதியாக தூங்க கற்பிக்கப்பட்டேன். வாழ்க்கையில் நடந்த அந்த கொடூரங்களை மறக்க வழிக்காட்டப் பட்டேன். 

உண்மையில், பலநாட்கள் ஒரு ஆணின் ஊடுருவல் இல்லாமல் அசாதரணமாக உணர்ந்தேன். 

இந்த புதிய வாழ்க்கையை மரியாதையுடன், சாதரணமாக வாழ கற்றுக் கொண்டேன். பலமுறை எனக்கு அபார்ஷன் ஆனதாக சொன்னார்கள், அதனால் இனி என்னால் குழந்தை சுமக்க இயலாது என்று தெரிந்து கொண்டேன். ஒருமுறை என் மணிக்கட்டை வளைத்து உடைத்துவிட்டார் ஒரு க்ளையண்ட். அதை சரியாக கவனிக்காததால் இனி அது முழுமையாக சரியாகாது என்றனர். 

மருத்துவர்களின் உதவியால், நான் என் வீட்டு முகவரியை நினைவுக்கூர முடிந்தது. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் என் வீட்டை தொடர்பு கொண்டபோது, என் அம்மா இறந்து விட்டதாக தெரியவந்தது. நான் காணாமல் போனதால் சரியாக சாப்பிடாமல், நீர் அருந்தாததால் பல் உறுப்பு பாதிப்பால் இறந்துள்ளார் என்றும் தந்தை தற்கொலை செய்து கொண்டார் என்று அறிந்தேன். 

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் எனக்கு ஸ்பான்சர் அளிக்க முன்வர, நான் கணினி மற்றும் வெளிநாட்டு மொழி படிக்கும் கோர்சை எடுத்து படிக்க தொடங்கினேன். அப்போதிலிருந்து வாழ கற்றுக்கொண்டேன். 

இப்போது ஒரு கம்ப்யூட்டர் செண்டரில் ஆசிரியராக இருக்கிறேன். இரண்டு பெண்களுடன் ஒரு ப்ளாட்டில் வாடைக்கு எடுத்து தங்கியுள்ளேன். 

எனக்கு ஒரு பாய்பிரண்ட் இருக்கிறார். என்னை மரியாதையுடன் நடத்தி என் மீது அன்பு செலுத்துகிறார். அவருக்கு என் பழைய கதை தெரியும், ஆனால் அதைப் பற்றி கேட்க சங்கடமாக உணருவார். இன்னும் என்னால் சரியாக தூங்கமுடிவதில்லை. அங்கிருப்பது போல பயந்து எழுவேன். அப்போது அவருக்கு போன் போட்டு பேசினால் என்னை சமாதானப்படுத்தி தூங்கச் சொல்வார். என்னை பாதுகாப்பாக உணரவைப்பார். அவர் ஒரு பஞ்சாபி, என்னை சிரிக்கவைத்து, ஆடவைத்து, அன்பு செலுத்துவார். நீண்ட பயணத்துக்கு அழைத்துச் சென்று ருசியாக சமைத்து தருவார். என் உடல் தளர்ந்துள்ளதால் ஜிம் போக என்னை ஊக்கப்படுத்துவார். அவர் என்னை ஏற்றுக்கொண்டாலும், அவரின் குடும்பம் நடுத்தரம் ஆனதால் என்னை பற்றிய உண்மையை அவர்களிடம் மறைத்துவிட்டோம். எனக்கு அது பிடிக்கவில்லை ஆனால் வேறு என்ன செய்ய. 

அண்மையில் அவர் எனக்கு ப்ரபோஸ் பண்ணார். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. அவர் பார்க்க நல்லா இருப்பார், படித்து ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்தவர். அதனால் என்னைப் போன்ற அசிங்கமான, பாழாய்போன, மதிப்பில்லாத ஒரு பெண் அவரின் மனைவியாக ஆவது சரியல்ல. இருப்பினும் அவர் என்னை நிதானமாக யோசித்து முடிவெடுக்க கால அவகாசம் தந்துள்ளார். ஒரு குழந்தையை  தத்து எடுத்துக்கொள்ளலாம் என்றுள்ளார். அவருக்கு என் கடந்தகாலம் தேவையில்லை. இருப்பினும் நான் அவருக்கு ஒரு நல்ல பெண் என்னைவிட பொருத்தமான பெண் கிடைக்க காத்திருக்கிறேன். என் சுமை அவரின் வாழ்க்கையை, கனவை பாழாக்க நான் விரும்பவில்லை.

இதுவே என் துன்பமான, துயரமான வாழ்க்கை ரகசியம். என் கதையை படித்த உங்களுக்கு என் நன்றிகள்... 

அந்த நரகத்தில் இருந்து திரும்பிய அவருக்கு துணை நிற்க குடும்பம் கூட இல்லாது போனார். தனக்கு ஆதரவு அளிக்க ஆளில்லாமல் ஆனார். வாழவேண்டும் என்பதற்காக வாழ்கிறார். வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட காயங்களின் ஆழம் அவரிடன் எந்த ஒரு பாசிடிவ் உணர்வையும் இல்லாமல் ஆக்கியுள்ளது. 

மனதை உடைக்கும் இந்த பெண்ணின் கதை, நம் இந்திய பெண்களின் பாதுகாப்பின்மையை வெட்டவெளிச்சமாக பிரதிபலிக்கின்றது. இந்த நிலையை மாற்ற நாம் ஒவ்வொருவரும் கரம் கோர்த்தால் மட்டுமே நிலைமையை சீர் செய்யமுடியும்.