தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

0

வசந்தகுமாரி, தனது 14-வது வயதில் இருந்தே வண்டி ஓட்டப் பழகியவர். லைசன்ஸ் வாங்க முடியாத வயதிலேயே வண்டி ஓட்டுதல் மீதான ஆர்வத்தால் அதை இளம் வயதில் கற்றார். ஆனால் அதுவே அவரின் குடும்பத்தை காப்பாற்றப்போகும் தொழிலாகிப் போகும் என்று அப்போது சிறிதளவும் அவர் நினைக்கவில்லை. 

வசந்தகுமார், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 1993-ல் பணியில் சேர்ந்த முதல் பெண் பஸ் டிரைவர் ஆவார். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா ஏன் ஆசியாவிலேயே இவர்தான் முதல் பெண் பஸ் டிரைவர் என்றும் சொல்லலாம். 

பொதுவாகவே பேருந்தில் பயணம் செய்வதையே தவிர்க்கும் பெண்கள் மத்தியில் அதன் ஓட்டுனராக வசந்தகுமாரி வலம் வருவது பலருக்கும் ஆச்சரியத்தையே தருகிறது. ஸ்கூட்டர், கார், ஆட்டோ என்று சாலை வாகனங்களை பெண்கள் ஓட்டினாலும், பஸ் ஓட்டுவதை இன்றளவும் பலர் தவிர்த்து விடுவார்கள். இருப்பினும் பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக சுமார் 24 வருடங்களாக அரசுப்பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார் வசந்தகுமாரி.

இவரின் தாயின் மறைவுக்கு பின், அவரின் அப்பா வேறு ஒரு பெண்ணை மணந்ததால், வசந்தகுமார், தன் உறவினர் வீட்டில் வளர்ந்தார். மேலும் தன் வாழ்க்கைப் பற்றி தி ஹிந்துவில் பகிர்ந்த அவர்,

“நான் 19 வயதாக இருந்தபோது, மனைவியை இழந்த ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு நான்கு பெண் குழந்தைகள் இருந்தனர். கணவர் கட்டுமானப் பணி தொழிலாளி என்பதால் வருமானம் குடும்பத்துக்கு போதுமானதாக இல்லை,” என்றார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர், மஹிலா மன்றத்தில் சேர்ந்தார் வசந்தகுமார். இது கன்னியாகுமரியில் உள்ளது. அங்கே ஓட்டுனர் பயிற்சி மேற்கொண்டு டிரைவர் பதவிக்கு விண்ணப்பித்தார். கனரக வாகன லைசன்ஸ் பெற்று பேருந்து ஓட்டுனரானார் வசந்தகுமாரி. 

பலமுறை அவர் பணிக்காக நிராகரிக்கப்பட்டலும், தொடர்ந்து மனு போட்டு, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்து தன் கோரிக்கையை வைத்தார்.

“அவரிடம் நான் பஸ் ஓட்டவேண்டும் என்று கூறினேன். அவர் அதைக்கேட்டு உற்சாகமாகி, உடனடியாக போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளிடம் எனக்கு நேர்காணல் வைக்க ஏற்பாடு செய்யச்சொன்னார். அதுவே இந்த பணிக்கிடைக்க வழி செய்தது,” என்றார். 

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒரே பெண் டிரைவராக அவர் இருந்தாலும் எந்தவித சலுகையும் எதிர்ப்பார்த்ததில்லை. இரண்டு மாதம் முன்பு ரிடையர் ஆனார் வசந்தகுமாரி. 

கடந்த ஆண்டு பெண்கள் சாதனையாளர் விருதை பெற்றார் வசந்தகுமாரி. இப்போதும் டிரைவிங் தொழிலை விட மனமில்லாமல், பெண்களுக்காக ஒரு ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்த திட்டமிட்டு வருகிறார். 

கட்டுரை: Think Change India