தொழில்முனைவில் அதீத ஆர்வம்: ‘ChaiKing’ தேநீர் மையம் தொடங்கிய பொறியாளர்!

4

”லாபத்தை மட்டும் ஈட்டுவதனால் ஒரு தொழில்முனைவர் வெற்றி பெற்றவர் என்றால் அது தற்காலிகமான ஒன்று. எவர் ஒருவர் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, ஊழியர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் ஒரு தொழிலை கட்டமைக்கிறாரோ அவரே சிறந்த தொழில்முனைவர்” என்ற உண்மையை உணர்ந்து தொழில்முனைவரான இளைஞர் சுரேஷ் ராதாகிருஷ்ணன் ஒரு தொடர் தொழில்முனைவராக இன்று வலம் வருகிறார். 

சாப்ட்வேர் இஞ்சினியராக பணியை தொடங்கி, பின் இரண்டு ஐடி பயிற்சி மையங்களை நடத்தி தொழில்முனைவில் ஈடுபட்டுவந்த சுரேஷ், அதில் சில சவால்களை சந்தித்ததனால் பின்னடைவை சந்தித்து அத்தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் தொழில்முனைவில் தீவிர ஆர்வமுடைய சுரேஷ் மனதை தளரவிடாமல், புதிய தொழில் தொடங்க முடிவு செய்து, அண்மையில், ‘சாய் கிங்’ (Chai King) என்ற தேநீர் தயாரிக்கும் விடுதியை சென்னையில் தொடங்கியுள்ளார். அவர் தனது அனுபவம், சந்தித்த சவால்கள், தொழில்முனைவிற்கான ஊக்கம் என்று பலவற்றை நம்மிடையே பகிர்ந்து கொண்டார். 

தேநீர் மையத்துக்கு முன் சுரேஷ் ராதாகிரிஷ்ணன்
தேநீர் மையத்துக்கு முன் சுரேஷ் ராதாகிரிஷ்ணன்

தொழில்முனைவில் ஆர்வம் தொடங்கியது எப்படி

பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்த சுரேஷ் ராதாகிருஷ்ணன், பிசினஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளி காலத்தில் அமைதியான மாணவரான இவர் கல்லூரி காலத்தில் மெல்ல மெல்ல தன்னை  மாற்றிக்கொள்ள தொடங்கினார். தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொண்டு விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் என்று பல திறன்களுடன் சிறந்து விளங்கியுள்ளார். 

2006 இல் பொறியியல் பட்டத்தை பெற்றப்பின்னர், சிஃபி டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கி 2010 வரை தொடர்ந்தார்.  

“தொழில் குடும்பத்தில் வளர்ந்த எனக்கு என் தந்தையின் தொழில்முனைவுப் பயணம் ஊக்கத்தை தந்தது. அவர் தான் என் ஹீரோ, என் முதல் முன்மாதிரி. பல இக்கட்டான சமயங்களில் முக்கிய முடிவுகளை தைரியமாக அவர் எடுத்துள்ளதை நான் பார்த்திருக்கிறேன். பண நெருக்கடி சமயங்களில் அவர் அதை அழகாக கையாண்டதை கண்டு பிரமித்துள்ளேன்,” என்று தன் பின்னணியை விளக்கினார். 

கல்லூரி முடித்ததும் 10 ஆண்டுகள் வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு, நன்கு சேமித்துவிட்டு, சொந்த முதலீட்டில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குழந்தைகளுக்கு புதிய கல்விமுறையை வழங்கும் பள்ளி ஒன்றை தொடங்குவதே இவரது கனவாக இருந்துள்ளது. பணிபுரிந்த காலத்திலும் பல ஐடியாக்களை யோசித்து கொண்டே இருந்ததாகவும் சுரேஷ் கூறினார். ஒரு கட்டத்தில் தொழில்முனைவே தனது இலக்கு என்று பணியை விடுத்துள்ளார்.

“தொழில் என்பது லாபம் ஈட்டுவதற்கு மட்டுமே என்று நம்பி இருந்தேன். ஆனால் தொழில்முனைவு சம்மந்தமான புத்தகங்களை படித்தபின் என் பார்வை, இலக்கு மாறியது. பணம் என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் ஒரு அங்கம் மட்டுமே அதுவே வாழ்க்கை இல்லை என்பதை புரிந்துகொண்டேன். ரத்தன் டாட்டா, லஷ்மி மித்தல், நாராயண மூர்த்தி போன்ற இந்தியர்கள் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதை கண்டு நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்,” என்றார்.   

தொழில்முனைவில் முதல் அடியும் சந்தித்த சவால்களும்

சாப்ட்வேர் இஞ்சினியரான சுரேஷ் ஐடி துறை வேகமாக வளர்ந்துவருவதை கண்டு, ஐடி தொழிலுக்கான பயிற்சி மையத்தை தொடங்கினார். பெரிய நிறுவனங்களுக்கு தங்கள் சேவையை அளித்து நன்கு சென்ற இவரது நிறுவனத்தை ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லமுடியாமல் சிக்கலை சந்தித்ததாக தெரிவித்தார். இவரது வழிகாட்டியான நேடிவ்லீட் நிறுவனர் சிவராஜா ராமநாதனும், “சரியான பிசினஸ் மாடல் இல்லாவிடில் ஒரு தொழிலை குறிப்பிட்ட அளவிற்கு மேல் எடுத்து செல்லமுடியாது” என்ற அறிவுரையை வழங்கியுள்ளார். 

“தொழில் புரிய ஆர்வமும், உந்துதலும் இருந்தால் மட்டும் போதாது. செய்யும் தொழிலில் துறைக்கேற்ற பிசினஸ் மாடல், திட்டம் மிக அவசியம் என்பதை என் அனுபவம் மூலம் உணர்ந்தேன்.” என்றார் சுரேஷ். 

தோல்வியுற்ற தொழில்முனைவராக உணர்ந்த சுரேஷ், தனது முதல் முயற்சியை கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். புதிய முயற்சியில் ஈடுபட போதிய சேமிப்பு கையில் இல்லாமல் செய்வதறியாது தவித்துள்ளார். 

சவால்களை எதிர்கொண்டு புதிய தொழில்முனைவில் இறங்கியது எப்படி?

முதல் அனுபவம் தோல்வியில் முடிந்தாலும் மனம் மட்டும் தொழில்முனைவை நோக்கியே பயணித்துள்ளது சுரேஷுக்கு. இவரது மனைவி கொடுத்த ஊக்கம், ஆதரவு மீண்டும் ஒரு தொழிலை தொடங்குவது பற்றி சிந்திக்கத் தூண்டியது. உணவு மற்றும் பானங்கள் துறையில் வளர்ச்சி அதிகம் இருப்பதை கண்ட சுரேஷ், தேநீர் தயாரிப்பில் வாய்ப்புகள் இருப்பதை அறிந்தார்.  

“புதிதாக ஒரு தொழிலை தொடங்க புத்துணர்வுடன் களம் இறங்கினேன். இந்தியாவில் டீ சந்தையில் நல்ல வாய்ப்பும், அதை ஒரு ப்ராண்டாக உருவாக்கி, குறைந்த விலையில் சுவைமிக்க தேநீர் வழங்கும் ஒரு மையத்தை தொடங்க முடிவெடுத்தேன். நீலகிரியில் உள்ள சில டீ எஸ்டேட் வைத்திருப்போரின் தொடர்புகளும் எனக்கு இருந்தது. அதனால் அதை பயன்படுத்தி சுத்தமான, நம்பகமான டீ வழங்கும் சேவையை தொடங்கினேன்,” என்றார். 

கடன் மற்றும் சிட் பண்ட் மூலம் முதலீட்டை திரட்டி, ‘சாய் கிங்க்’ Chai king என்ற பெயரில் சென்னையில் தன் முதல் மையத்தை தொடங்கியுள்ளார் சுரேஷ். இந்திய டீ சந்தை 33,000 கோடி ரூபாயை கொண்டுள்ளது. இதை சிறிய வியாபாரிகளே ஆக்கிரமித்து வருகின்றனர். தெருவுக்கு தெரு டீ கடைகள் உள்ள இந்தியாவில் தேநீர் தயாரிப்பில் சுகாதாரம் மற்றும் சுவை பல இடங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது என்கிறார். இதை மாற்றி அமைத்து, டீ தயாரிப்பை ஒரு தொழிலாக, ப்ராண்டாக செய்தால் வளர்ச்சியுள்ள தொழிலாக அமைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததாக கூறினார். 

“அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தினசரி டீ அருந்தும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். மெஷின் டீயை விட, சுடச்சுட தயாரிக்கப்பட்ட மணமான, சுவையான தேநீரை பணிபுரியும் இடத்துக்கே கொண்டு கொடுத்தால் வரவேற்பு அதிகம் இருக்கும். மேலும் டீ’யை பல சுவைகளில் வழங்கினால் கூடுதல் வரவேற்பு இருக்கும் என்று பல நறுமணங்களில் தேநீரை ’சாய் கிங்க்’இல் தயாரிக்கிறோம்.”

இஞ்சி டீ, தம் டீ, மசாலா டீ, லெமன் டீ, ப்ளாக் டீ, க்ரீன் டீ என்று பலவித தேநீர்களை சுவையாக சுடச்சுட தயாரித்து நியாயமான விலையில் கார்ப்ரேட் அலுவலகங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டு இயங்கி வருகின்றனர். தற்போது விருகம்பாக்கத்தில் மையத்தை தொடங்கியுள்ள சாய் கிங்’ ஐந்து கிலோமீட்டர் தூரம் வரையுள்ள அலுவலகங்களுக்கு தேநீர் விநியோகம் செய்து வருகின்றனர். முதன்மை டீ அலுவராக சுரேஷ் இருக்க, டீ தயாரிப்போர் மற்றும் டெலிவரி செய்பவர் என்று 6 பேர் கொண்ட குழுவுடன் இயங்கிவருகிறது சாய் கிங். 

தொழில்முனைவில் சாதிக்க நினைத்து பல கனவுடன் களத்தில் இறங்கியுள்ள சுரேஷ், தொழில்முனைவு தொடர்பான கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். சுய முதலீட்டில் தேநீர் தொழிலில் ஈடுபட்டுள்ள இவர் அதில் வெற்றிகள் கண்டு, தொழிலை விரிவடையச்செய்து உயர்ந்து இடத்தை அடைய நமது வாழ்த்துக்கள். 

ஃபேஸ்புக் பக்கம்: ChaiKing