சென்னையில் அடுத்து எப்பொழுது மழை பொழியும்? கேளுங்கள் இந்த வலைஞர்களிடம்...

1

இந்து நாளிதழில் செயற்கைகோள் புகைப்படங்களை ஆர்வத்துடன் பார்த்து, அகில இந்திய வானொலியில் சரோஜ் நாராயணசாமியின் புயல் பற்றிய அறிவிப்புகளை கேட்டு வளர்ந்தது தான் வானிலை மீதான ஆர்வத்திற்கு காரணம் என்கிறார் ஸ்ரீகாந்த். இந்த ஆர்வம் தான் அவரை வானிலை ஈடுபாடு கொண்ட நண்பர்கள் சைலேஷ் டேவே மற்றும் செல்வகுமாருடன் இணைந்து "சென்னையில் ஒரு மழைக்காலம்" வலைப்பதிவை துவங்க வைத்தது. வானிலை தொடர்பான நிகழ்வுகள் குறித்து விவாதிப்பதற்கான இடமாகவும் இருக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் இந்த வலைப்பதிவு செயல்பட்டு வருகிறது. இந்த வலைப்பதிவு சார்பில் ஆண்ட்ராய்டு செயலியும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

துவக்கம்

'சென்னையில் ஒரு மழைக்காலம்' வலைப்பதிவு கடந்த ஓராண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் வடகிழக்கு பருவமழை தீவிர பாதிப்பை ஏற்படுத்திய போது, ஸ்ரீகாந்தும், அவரது குழுவில் உள்ள சக பதிவர்களும் வானிலை விவரங்களை விரிவாக பகிர்ந்து கொண்டனர். அதோடு ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலமும் மழை பாதிப்பு விவரங்களையும், காட்சிகளையும் உடனுக்குடன் பகிர்ந்து கொண்டனர். இவர்களின் 'சென்னை ரெயின்ஸ்' (@Chennairains) டிவிட்டர் பக்கம் மூலம் ஃபாலோயர்களும் தங்கள் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டதால் இந்த பக்கம் தகவல் சுரங்கமாக விளங்கி வழிகாட்டியது.

அலுவல் நிமித்தமான பெங்களூரு பயணத்துக்கு நடுவே வானிலை விவரங்களை ஆர்வத்துடன் சேகரித்துக்கொண்டிருந்த ஸ்ரீகாந்த், தங்கள் வலைப்பதிவு பற்றி இ-மெயில் மூலம் அளித்த பேட்டியில் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

கிராமத்து சிறுவன்

மார்கெட்டிங் துறையில் பணியாற்றும் ஸ்ரீகாந்த் விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். கிராமத்து சிறுவனாக மழையை ரசித்த அனுபவம் தான் வானிலை ஈடுப்பாட்டிற்கு மற்றொரு முக்கிய காரணம் என்கிறார். சக பதிவரான விருதுநகரில் பிறந்து வளர்ந்த செல்வகுமார் ஐடி துறையை சேர்ந்தவர். (தற்போது டோக்கியோவில் இருந்தாலும் அங்கும் சென்னை வானிலையை தான் கவனித்துக்கொண்டிருக்கிறார்). சென்னைவாசியான சைலேஷும் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுகிறார்.

சிறு வயதில் உண்டான வானிலை ஆர்வத்தை மேலும் வளர்த்துக்கொள்ள இணையம் மற்றும் கூகுளின் உதவியோடு மழை எப்படி பெய்கிறது? புயல் எப்படி உருவாகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் தேட வைத்தது என்கிறார் ஸ்ரீகாந்த். இந்த தகவல்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதன் பயன் தான், 'சென்னையில் ஒரு மழைக்காலம்' வலைப்பதிவு. ஆங்கிலத்தில் துவக்கப்பட்ட இந்த வலைப்பதிவு, கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தமிழ் பதிப்பையும் கொண்டிருக்கிறது. வானிலை தொடர்பான விரிவான பதிவுகள் கவனத்தை ஈர்க்கின்றன. நல்ல தமிழில் எளிதாக படிக்கும் வகையில் இவை அமைந்துள்ளன.

நல்ல வரவேற்பு

ஓராண்டிலேயே இந்த வலைப்பதிவு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று உற்சாகமாக சொல்கிறார் ஸ்ரீகாந்த். மேலும் ஃபேஸ்புக் பக்கத்தில் 6,000 நண்பர்களும் டிவிட்டரில் 7,000 ஃபாலோயர்களும் உள்ளனர். அதிலும் நவம்பர் முதல் வாரத்திற்கு சென்னையை உலுக்கிய மழை வெள்ளத்தின் போது இந்த வலைப்பதிவு பயனுள்ள தகவல்களை அளித்ததற்காக கவனத்தை ஈர்த்தது. பணிச்சுமைக்கு நடுவே விடாமல் வானிலை விவரங்களை வெளியிட்டு வந்தோம் என்று கூறும் ஸ்ரீகாந்த், மழை உச்சத்தில் இருந்த நாட்களில் 24 மணி நேரமும் அப்டேட் அளித்ததை பெருமையுடன் குறிப்பிடுகிறார். குறிப்பாக முதல் முறை ஒரே நாளில் 23 செ.மீ மழை கொட்டிய நவம்பர் 8 ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் கண் விழித்து இரவு 11.30 மணி வரை தொடர்ந்து வானிலை விவரங்களை அளித்துக்கொண்டிருந்ததையும் உற்சாகமாக நினைவு கூறுபவர், இந்த பணி திருப்தியையும், மன நிறைவையும் தருவதாகவும் கூறுகிறார்.

வானிலை ஆய்வு மையங்களின் இணையதளங்களில் இருந்து வானிலை தொடர்பான தகவல்களை பெறுவதாக கூறும் ஸ்ரீகாந்த் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டிருப்பது தங்களுக்கு பெருமளவில் கைகொடுப்பதாகவும் தெரிவிக்கிறார். ஆனால் வானிலை விவரங்கள் பற்றி விவாதிக்கும் அதே நேரத்தில், பொது மக்களுக்கும் எளிதாக புரியக்கூடிய வகையில் வானிலை தகவல்களை பகிர்ந்து கொள்வது சவாலானது என்றும் கூறுகிறார்.

எதிர்பார்ப்புகள்

வானிலை வலைப்பதிவு சுவாரஸ்யமானது என்பதும் ஸ்ரீகாந்தின் கருத்தாக இருக்கிறது. கடந்த ஆண்டு வாசகர் ஒருவர் தங்களின் வானிலை அப்டேட்களை அடிப்படையாக கொண்டு தான் தீபாவளி ஷாப்பிங்கை செய்ததாக நன்றி தெரிவித்த சம்பவத்தை அவர் குறிப்பிடுகிறார். அதே போல கடந்த ஆண்டு நண்பர் ஒருவர் தனது திருமணத்தின் போது மழை வருமா என்று இவரிடம் கேட்ட போது வானிலை வரைபடத்தை ஆய்வு செய்து விட்டு மழை வராது என கூறியிருக்கிறார். உறுதியுடன் இந்த தகவலை தெரிவித்திருந்தாலும், அதன் பிறகு குறிப்பிட்ட அந்த நாளில் மழை பெய்யாமல் இருக்கிறதா? என்று படபடப்புடன் பார்த்துக்கொண்டிருந்த அனுபவத்தையும் மறக்க முடியாது என்கிறார். ஆனால் சில நேரங்களில் கணிப்புகள் தவறி, வாசகர்கள் சொன்னபடி மழை வந்ததில்லையே என்று கேட்டதும் உண்டு என்கிறார்.

வலைப்பதிவின் அடுத்த கட்டமாக சமீபத்தில் இதன் ஆண்ட்ராய்டு செயலியும் அறிமுகமாகி உள்ளது. ஸ்மார்ட்போன் பெருக்கத்தினால் மொபைல் பரப்பிலும் செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்தே செயலி வடிவம் உருவாக்கப்பட்டதாக ஸ்ரீகாந்த் கூறுகிறார். மழை தொடர்பான நிகவுகள் குறித்து மக்களுக்கு உடனுக்குடன் எச்சரிக்கை தகவள் அளிப்பது தான் இதன் முக்கிய நோக்கம் என்கிறார். மேலும் எல்லா நேரங்களிலும் வலைப்பதிவையோ, சமூக ஊடங்கங்களையே கவனித்துக்கொண்டிருப்பது சாத்தியம் இல்லை என்பதால், செயலி வடிவம் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்.

வானிலை தலைநகரம்

சென்னை சுறுசுறுப்பான பல வானிலை பதிவர்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை தான் இந்தியாவின் வானிலை வலைப்பதிவின் தலைநகரம் என்கிறார் ஸ்ரீகாந்த். இது வானிலை வலைப்பதிவு எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது. ஆனால் வரவேற்பு அதிகரித்திருப்பது போல பொறுப்புகளும் அதிகரித்திருக்கிறது. எனவே வானிலை பதிவர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியிருக்கிறது என்கிறார் அவர். வானிலை விவரங்களை கொண்டு செல்ல சமூக ஊடகங்களை பயன்படுத்தும் அதே நேரத்தில் வானிலை ஆய்வு மைய அதிகாரிகளின் பணிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட வேண்டியிருப்பது சவாலானது என்றும் கூறுகிறார்.

தமிழில் வானிலை வலைப்பதிவு செய்வது குறித்து பெருமை கொள்ளும் ( இவர்கள் குழுவில் உள்ள கணியன் தமிழ் பதிவை கவனிக்கிறார்) ஸ்ரீகாந்த் தமிழில் வலைப்பதிவை பிரபலமாக்குவதில் மேலும் கவனம் செலுத்த திட்டமிட்டிருப்பதாக கூறுகிறார். எதிர்காலத்தில் இருப்பிடம் சார்ந்த ஜியோடேகிங் தன்மையிலான எச்சரிக்கை வசதிகளை அளிக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

வலைப்பதிவு முகவரி: Chennai Rains

ஃபேஸ்புக் முகவரி: Chennaiyil oru Mazhaikaalam