87,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் தள்ளாடும் பொதுத்துறை வங்கிகள்...

0

இந்திய வங்கித்துறைக்கு இது சோதனையான காலம் தான். கடன் மோசடி, வாரா கடன் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளை வங்கித்துறை எதிர்கொண்டு வரும் நிலையில், பொதுத்துறை வங்கிகளின் மொத்த நஷ்டம் பற்றிய செய்தி வெளியாகி இருக்கிறது.

2017- 18 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த நஷ்டம் ரூ.87,300 கோடியாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடன் மோசடி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி, 2017 நிதியாண்டில் ரூ.12,283 கோடி நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.

பட உதவி : சோஷியல் போஸ்ட்
பட உதவி : சோஷியல் போஸ்ட்
நாட்டில் மொத்தம் 21 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இவற்றில் 2 வங்கிகள் மட்டுமே 2017 நிதியாண்டில் லாபம் ஈட்டியுள்ளன. இந்தியன் வங்கி ரூ.1,258.99 கோடி மற்றும் விஜயா வங்கி ரூ.473.72 கோடி லாபம் ஈட்டியுள்ளன.

மற்ற 19 பொதுத்துறை வங்கிகளும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளன. கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் மொத்தமாக ரூ. 473.72 கோடி நிகர லாபம் ஈட்டியிந்தன. எனினும் கடந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் நஷ்டம் ரூ.87,357 கோடியாக உள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிக பட்சமாக ரூ12,282.82 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. வைர வியாபாரி நீரவ் மோடியின் 14,000 கோடி கடன் மோசடியால் இந்த வங்கி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இரண்டாவதாக ஐ.டி.பி.ஐ வங்கி ரூ.8,237.9 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. முந்தைய ஆண்டு இது ரூ.5,158.14 கோடியாக இருந்தது.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 2017 நிதியாண்டில் ரூ.6,547.45 கோடி நஷ்டத்தை தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டு வங்கி ரூ.10,481.1 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ள மொத்த நஷ்டத்தை பார்க்கும் போது இவை சிறிய நாடுகளின் ஜி.டி.பிக்கு இணையாக இருப்பதை புரிந்து கொள்ளலாம். இந்திய வங்கிகள் எதிர்கொள்ளும் பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தும் அம்சமாகவும் இது அமைகிறது.

பொதுத்துறை வங்கிகள் இவ்வாறு நஷ்டத்தில் தள்ளாட வாரா கடன் பிரச்சனையே முக்கியமாக கருதப்படுகிறது. 2017 டிசம்பர் வரை பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாரா கடன் ரூ.8.31 லட்சம் கோடியாக அமைந்துள்ளது. அதிகரிக்கும் வாரா கடன் காரணமாகவே வங்கிகள் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளன.

எனினும், வாரா கடன் பிரச்சனை திடிரென வங்கிகளை பாதித்துவிடவில்லை. பல ஆண்டுகளாகவே வங்கிகள் வாரா கடன் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வாரா கடனுக்கான ஒதுக்கீடு செய்வதில் ரிசர்வ வங்கி கடுமையான அணுகுமுறையை கடைபிடிக்கத்துவங்கியதன் காரணமாக, வங்கிகள் மோசமான கடன்களுக்கு போதிய ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன, இது அவற்றின் லாபத்தை பதம் பார்த்துள்ளது.

வாரா கடன் பிரச்சனை நீண்ட காலமாகவே இருப்பது போலவே அவற்றை வசூலிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் பல்வேறு காரணங்களினால் இவை போதுமான பலனை அளிக்கவில்லை.

இதனிடையே பொருளாதார வளர்ச்சி மந்தமானதும் நிலைமையை சிக்கலாக்கியது. பொதுவாக, வங்கிகள் வாரா கடன் பிரச்சனையை எதிர்கொண்டு வந்தாலும், பொருளாதார வளர்ச்சி நிலவும் சூழலில் புதிய கடன்களை அளிக்கும். அப்போது வாரா கடன் விகிதம் மொத்த கடனில் குறைவாக இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது. வர்த்தக நிறுவனங்கள் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாததற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஏற்கனவே வாரா கடன் சுமை அழுத்தும் நிலையில், பல பொதுத்துறை வங்கிகள் வர்த்தக நிறுவனங்களுக்கு ரிஸ்க் மிகுந்த கடன் வழங்க தயங்குகின்றன.

கடன் பிரிவில் வளர்ச்சி இல்லாத சூழலில், ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு காரணமாக, வங்கிகள் மோசமான கடன்களை வகைப்படுத்துவதிலும், அவற்றுக்கான ஒதுக்கீடு வழங்குவதிலும் தீவிரம் காட்ட வேண்டிய சூழல் உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி போன்ற பிரச்சனைகளை இந்த சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மோசமான சூழல் தெரிந்தே மத்திய அரசு அவற்றுக்கு மறுமுதலீடு நிதியை வழங்க முன்வந்தது. ஆனால், இந்த நிதியின் பெரும் பகுதி, வங்கிகள் கணக்கு புத்தகத்தில் இருந்த ஓட்டையை அடைக்க பயன்பட்டிருக்கிறதே தவிர வளர்ச்சி நிதியாக அமையவில்லை என்றும் கருதப்படுகிறது.

இதனிடையே புதிய திவால் சட்டம், வாரா கடன் வசூலில் வங்கிகளுக்கு புதிய ஆயுதமாக அமையும் என்று சொல்லப்பட்டாலும், அது நடைமுறையில் எதிர்பார்த்த வேகத்தில் பலன் அளிக்கவில்லை. இந்த சட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில் பார்க்கும் போது பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டு லாபமும் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தனியார் வங்கிகளின் லாபமும் குறைந்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள் விரிவாக்கத்தில் ஈடுபட தயங்கும் நிலை உள்ளது. ஏற்கனவே விரிவாக்கம் செய்த நிறுவனங்கள் வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் தடுமாறுகின்றன. குறிப்பாக மின் உற்பத்தி துறையில் ஈடுபட்ட நிறுவனங்கள் மத்தியில் இந்த நிலை காணப்படுகிறது. வங்கிகளின் வாரா கடன் அதிகரிக்க இந்த நிறுவனங்கள் முக்கியக் காரணமாக கூறப்படுகின்றன.

இந்த பின்னணியில் பொதுத்துறை வங்கிகளின் நிலை கவலை அளிப்பதாகவே இருக்கிறது. எனினும், இந்திய வங்கிகளை பொருத்தவரை மோசமான காலம் முடிந்துவிட்டதாகவும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் வங்கிகள் நிலை மேம்படும் என்ற நம்பிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

ஆனால், அது நிகழ வாரா கடன் வசூலிப்பில் அரசியல் தலையீடற்ற உறுதியான நடவடிக்கை அவசியம். மேலும் இந்திய பொருளாதாரமும் எதிர்பார்த்த வேகத்தில் வளரத்துவங்கினால், வங்கிகள் மீண்டு வரும்.