விவசாயி மகனாக பிறந்து 'YuppTv' நிறுவனராக உயர்ந்த உதய் ரெட்டி

0

43 வயதாகும் உதய் ரெட்டி, 'யப்டிவி' நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார். இந்நிறுவனம் இணையத்தின் மூலமாக தொலைக்காட்சி பார்க்கும் சேவையை வழங்கக்கூடிய நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் தலைமையகம் ஜியார்ஜியாவில் உள்ள அட்லாண்டாவில் இருக்கிறது. மாதத்திற்கு 5 மில்லியனுக்கும் அதிகமானோர் இவர்களது சேவையை பயன்படுத்துகிறார்கள். சமயங்களில் அது 20 மில்லியன் பார்வையாளர்களை கூட எட்டும். ஆனால் இந்த சாதனை எளிதில் நடந்துவிடவில்லை.

உதய் ரெட்டி தெலுங்கானாவில் உள்ள மிகச்சிறிய நகரமான ஹனம்கொண்டாவில் ஒரு விவசாயிக்கு மகனாக பிறந்தார். உண்மையில் இது போன்ற வேலைக்கு வருவோம் என்று அவர் கனவிலும் யோசித்ததில்லை. ஐஏஎஸ் ஆக தான் ஆசைப்பட்டார். அதன்மூலம் தன் கிராமத்தின் வளர்ச்சிக்கு பாடுபாட வேண்டும், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்திருக்கிறது.

ஹனம்கொண்டாவில் இருக்கும் அரசு இளநிலைகல்லூரியில் படிக்கும்பொழுது சிவில் சர்வீஸில் சேர தீர்மானித்திருந்தேன். என் குடும்பம் அதற்கு உதவியது. கிராமத்தில் இருக்கும் பிரச்சினைகளை புரிந்துகொண்டிருந்ததால் அதை சரிசெய்ய விரும்பினேன். டெல்லி கல்லூரியில் பொறியியலில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் படித்தபோது கூட இந்த எண்ணமே இருந்தது. கல்லூரி வளாக நேர்காணலில் சீமன்ஸ் நிறுவனத்தில் தேர்வானேன். ஒராண்டு பணியாற்றிவிட்டு பிறகு ஐஏஎஸ் தேர்வுகளை எழுதலாமென தீர்மானித்திருந்தேன். ஆனால் வேலை என்னை மாற்றிவிட்டது. என்னால் தொலைத்தொடர்புத் துறையை விட்டு வெளியேவர முடியவில்லை. தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வம் அதிகரித்திருந்தது.

1995ம் ஆண்டு நார்டெல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புரட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது தான் வயர்லெஸ் தொழில்நுட்பம் துவங்கியிருந்தது. உதய் உலகின் பல நாடுகளையும் சுற்றிவந்தார். குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பறந்தார். “நார்டெலில் விற்பனை இயக்குனராக இருந்தேன். அடுத்த 11 ஆண்டுகளில், செர்பியன் மற்றும் லத்தீன் அமெரிக்க சந்தை எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கற்றுக்கொண்டேன். நான் கற்றுக்கொண்ட பாடங்களில் பொன்னான ஒன்று அது” என்றார்.

சீக்கிரமே தனக்கான நிறுவனத்தை துவங்கினார். 2006ம் ஆண்டு 'யப்டிவி' YuppTv அமெரிக்காவில் துவங்கப்பட்டது. அமெரிக்காவுக்கு அது புதிது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றவர்களுக்கு இந்திய பொழுதுபோக்கு அம்சங்கள் இந்திய மொழிகளில் கிடைக்காத நிலை இருந்தது. யப்டிவி அதை பூர்த்தி செய்தது.

என் அலுவலகத்தை மிக சீக்கிரமே துவங்கிவிட்டேன். இன்று இருப்பது போலான பிராட்பேண்ட் தொழில்நுட்பம் அன்று இல்லை. ஸ்மார்ட் டிவியும் ஸ்மார்ட்ஃபோனும் பிரபலமாக இல்லாத காலக்கட்டம் அது. சந்தையிலிருந்து இதற்காக எந்தவிதமான பணத்தையும் திரட்டவில்லை. என்னுடைய சேமிப்பையே இதில் செலுத்தினேன். தொலைக்காட்சிகளை இணையத்தின் வழியாக நேரடியாக காட்ட விரும்பினேன். ஒருவேளை தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சியை பார்க்கத்தவறியிருந்தால் அதையே இணையத்தில் பார்க்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தேன். இதற்கெல்லாம் தீர்வாக அமைந்ததது தான் யப்டிவி.

உதயின் பாதை அவ்வளவு சுலபமானதாக இல்லை. இவரது நிறுவனம், சந்தையில் இருந்த மிகப்பெரிய நிறுவனத்திற்கு எதிரான ஒன்றாக இருந்தது. எனவே தனக்கான வாடிக்கையாளர்களை பெறுவதில் சிக்கலை சந்தித்தார். கையிருப்பெல்லாம் கரையத்துவங்கியது. இவரது ஐடியா புதிதென்பதால் சந்தை அதற்குத் தயாராக இல்லை. 2010ம் ஆண்டு தன்னிடம் இருந்த நிலத்தை விற்றும் தன் நண்பர்கள் மூலமாகவும் நிதி திரட்டினார். சீக்கிரமே யப்டிவியை மிகப்பிரம்மாண்டமாக துவங்கினார்.

இன்று ஐந்து கண்டங்களில் உள்ள 50 நாடுகளில் மில்லியன் கணக்கானோர் இவரது யப்டிவி மூலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கிறார்கள். இந்நிறுவனம் மாதந்தோறும் 5 மில்லியன் பார்வையாளர்களையும் உச்சபட்சமாக 20 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்று ஒரு பெரிய சாதனையை படைத்திருக்கிறது. இன்றுவரை 400 மில்லியன் குடும்பத்தினரை சென்றடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 7.5 மில்லியன் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். இந்தியா ஆண்ட்ராய்டு ப்ளேஸ்டோரில் பொழுதுபோக்கு என்ற தலைப்பின் கீழ் மிகவும் பிரசித்தி பெற்ற செயலியின் வரிசையில் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது. ஸ்மார்ட்டிவி செயலியில் பிரசித்தி பெற்ற செயலியில் இதுவும் ஒன்றாகும். இந்நிறுவனத்தை உலகின் தலைச்சிறந்த 100 நிறுவனங்களில் ஒன்றாக ரெட் ஹார்ரிங் தேர்ந்தெடுத்திருக்கிறது. கண்டுபிடிப்பு  மற்றும் தொழில்நுட்பம் என்ற அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் இரண்டு தொலைக்காட்சி சேனல்களை மட்டுமே வழங்கிய இவர்கள் தற்போது 200க்கும் மேற்பட்ட இந்திய தொலைக்காட்சி சேனல்களையும், 5000 திரைப்படங்களையும், 13 இந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் 25,000 மணிநேரத்திற்கான தகவல்கள் நூலகத்தில் இருக்கிறது. தினந்தோறும் 5000 மணிநேரத்திற்கான ஆன் டிமாண்ட் தகவல்கள் உள்ளீடு செய்யப்படுகின்றன. இதோடு முடியவில்லை, இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதாக தெரிவிக்கிறார் உதய்.

இவ்வளவு தூரம் வரமுடிந்தது திருப்தியளிக்கிறது. ஆனால் இதோடு முடிந்துவிடவில்லை என நம்புகிறேன். இந்த இடத்தை அடைய மிகப்பெரிய சிரமத்தை சந்தித்திருக்கிறேன். என் குடும்பத்தை விட்டு 50% சதவீத நேரத்தை செலவிட்டிருக்கிறேன். நாங்கள் புதுநிறுவனமாகவே இருக்க விரும்புகிறோம். இந்த வெற்றி எங்களுக்கு திமிரை கொடுத்துவிடக்கூடாது. இன்னும் விடாமுயற்சி ஒன்றே சாவியாக இருக்கிறது. ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை எட்டு முறை சந்தித்து பேசி புரிய வைத்த பிறகே எங்களிடம் இணைந்தனர். இன்னொரு தொலைக்காட்சி நிறுவனத்தை சம்மதிக்கவைக்க ஒரு வருடத்திற்கும் மேலானது. ஆனால் ஒருமுறை இணைத்துக்கொண்டால் போதும். அதுவே நிலையாக இருக்கும்.

யப்டிவியின் பேக்கேஜுகள் 5ரூபாயில் இருந்து துவங்குகிறது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான இணைய கட்டண தொலைக்காட்சியில் முதலிடத்தில் இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு மூன்று விஷயம் முக்கியமானதாக கருதுகிறார். புரிந்துகொள்ள முயற்சிப்பது, புதிய தொழில்நுட்பத்திற்கு மதிப்பளிப்பது மற்றும் மக்கள் மேலாண்மை. ஜெயிக்க விரும்பும் இளைஞர்களுக்கு உதய் ஒன்று தான் சொல்கிறார் - கவனம். என்ன செய்ய விரும்புகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என தெரிவிக்கிறார். 

“இன்று தொழில்நுட்பம் எல்லாவற்றையும் கிடைக்கச்செய்திருக்கிறது. நீங்கள் இதற்காக அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இருந்த இடத்திலிருந்தே உலகம் முழுவதும் சென்றடைய முடியும்” என்கிறார்.

உதயிடம் இன்னும் ஐஏஎஸ் ஆகி தன் ஊர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற கனவு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பினோம். இப்போது அந்த கனவு பெரிதாகியிருப்பதாக தெரிவித்தார். தற்போது இந்தியாவில் தன் நிறுவனத்தை விரிவு படுத்தும் முயற்சியில் இருப்பவர், தெலுங்கானாவில் உள்ள வீனவன்கா மக்களுக்காக பணியாற்றுகிறார். டெலிமெடிசின் தொழில்நுட்பம் மூலமாக இலவசமாக சுகாதாரச் சேவையை வழங்குகிறார். தொழில்நுட்பத்தின் மூலமாக கல்வியை எல்லோருக்கும் கிடைக்கும் வகையிலான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அது வெற்றியடைந்தால் உலகம் முழுவதும் அதையே கொண்டு செல்லும் திட்டமிருக்கிறது என்கிறார்.

ஆங்கிலத்தில் : SOURAV ROY | தமிழில் : Swara Vaithee