13 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் கோடி ரூபாய் ஐஸ்கிரீம் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சந்திரமோகன்!

14

சென்னையில் அமைந்துள்ள ஒரு அழகிய அலுவலகத்தில் அமைதியாக அமர்ந்திருக்கும் 67 வயது சந்திரமோகனை பார்த்தால் அவரது சாதனை எளிதில் நமக்கு புலப்படாது. ஹாட்சன் கட்டிடத்தில் கூலாக இருக்கும் அவர், 8000 கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தின் அதிபதி என்றால் நம்பமுடியுமா? பாக்கெட்டில் வெறும் 13 ஆயிரம் ரூபாயுடன் அருண் ஐஸ்கிரீம் என்று தொடங்கிய சிறிய ப்ராண்ட் இன்று இந்தியாவின் பெரிய பால் தயாரிப்பு பொருட்கள் சந்தையில் முன்னணி வகிக்கிறது. ஹாட்சன் ஆக்ரோ தயாரிப்புகள் பலரது வீட்டில் தினமும் பயன்பாட்டில் உள்ள மக்களின் ப்ராண்டாகி உள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தின் திருத்தங்கலை சேர்ந்த சந்திரமோகன், தனது 21-வது வயதில் தன் கனவை நோக்கிய பயணத்தை தொடங்கினார். பொருளாதார பிரச்சனையால் பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட சந்திரமோகனின் குடும்பம் தொழில் ஒன்றை தொடங்க சொத்துகள், வீடுகளை விற்றனர். 1970-ல் 250 சதுர அடி இடத்தில் ராயபுரத்தில் மூன்று ஊழியர்களுடன் தொழிலை தொடங்கினார். முதல் 10 ஆண்டுகள் தொடர் சவால்கள், பிரச்சனைகள் என்றிருந்தபோதும், வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதில் குறியாக இருந்தார்.  தி ஹிந்து பேட்டியில் பேசிய சந்திரமோகன்,

“நான் என்னுடன் தொடக்கத்தில் முதல் ஐஸ்கிரீம் பேட்சை தயாரிக்க உதவிய பாண்டியன், ராஜேந்திரன் மற்றும் பரமசிவம் என்றுமே மறக்கமாட்டேன். ஆரம்பத்தில் ஐஸ்கிரீம்களை தள்ளுவண்டியில் விற்றோம். முதல் 10 வருடங்கள் போராட்டமாக இருந்தது,” என்றார்.

முதல் ஆண்டில், நிறுவனம், 1,50,000 ரூபாய் விற்றுமுதல் ஈட்டது. 1986-ல் ‘ஹாட்சன் ஆக்ரோ ப்ராடக்ட்’ என்ற பெயரில் ப்ராண்ட் தொடங்கப்பட்டது. மெல்ல வளர்ச்சி அடைந்த தொழில், பலமடங்காக விற்பனையை பெருக்கியது. இடைத்தரகர்களை மெல்ல நீக்கிவிட்டு, நேரடி வர்த்தகத்துக்குள் இறங்கினர். ஃபாக்டரி அமைத்து, விற்பனை கடைகள் அமைத்து இரண்டையும் அவர்களே நிர்வகித்தனர். இன்று ஹாட்சன் நிறுவனம் 30 ஆயிரம் சதுர அடி அலுவலகத்தில் 8000 ஊழியர்களை கொண்டு இயங்குகிறது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கோவா, என்று பல மாநிலங்களில், ஆரோக்கியா மற்றும் கோமாதா என்ற பெய்ர்களில் பால் விற்பனை செய்கிறது. காஞ்சிபுரம், சேலம், மற்றும் மதுரையில் பால் பண்ணைகள் உள்ளது. அருண் ஐஸ்கிரீம் தென்னிந்தியாவில் பிரபலமான ப்ராண்ட் ஆகும், சுமார் 1000 ஐஸ்கிரீம் பார்லர்களில் 670 தமிழ்நாட்டிலும், 148 கர்நாடகாவிலும் மற்றவை கேரளா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ளது.  

பிசினஸ் லைன் செய்திகளின் படி, ஹாட்சன் நிறுவனம், ஐபாக்கோ (Ibaco) என்ற உயர்தர ஐஸ்கிரீம் ப்ராண்டை ஏழு ஆண்டுகளுக்கும் முன்பு அறிமுகப்படுத்தினர். பலவகைகளில் பலசுவைகளில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் இவை, 80 கடைகளை தற்போது கொண்டுள்ளது. 

இன்று சந்திரமோகன், இந்திய பில்லியனர்களில் ஒருவராக இருக்கிறார். 2002-ல் அவரின் மகன் சி.சத்யன் ஹாட்சன் ஆக்ரோ நிறுவனத்தின் தலைமை இயக்குனராக பொறிப்பேற்றார்.