’கலைஞர் 94’ -பத்திரிகையாளர்கள் பார்வையில் மகத்தான ஆளுமை!

2

கலைஞர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் அவரது சட்டப்பேரவை பணிகளில் வைர விழா இவை இரண்டையும் முன்னிட்டு இன்று (ஜூன் 3) திமுக கட்சித்தொண்டர்கள் தமிழகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். தலைச்சிறந்த தலைவராக திகழும் கலைஞர் கருணாநிதியின் இச்சாதனையை, திமுக கட்சியினரையும் தாண்டி அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அவரை வாழ்த்தியும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள் பற்றியும் சமூக ஊடகங்களில் படங்களுடன் பகிர்ந்து வருகின்றனர். 

அவரின் வரலாற்றுச் சாதனைகளையும், வாழ்க்கையில் அவர் சந்தித்த பல சவால்களை பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். உலகத்தமிழர்கள் முதல் இந்திய அளவிலான கட்சித்தலைவர்கள் வரை அவருக்கு வாழ்த்து மடல்களையும், அன்புப்பரிசுகளையும் அனுப்பி வருகின்றனர். ஆனால் சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதை தவிர்த்துள்ள கலைஞருக்காக இன்று எடுக்கப்படும் வைரவிழாவில் அவர் கலந்து கொள்ளமுடியாமல் இருப்பது சற்றே வருத்தமான விஷயம். 

கலைஞர் கருணாநிதியன் பேச்சுக்கு அவர் மட்டுமே நிகர் என்கின்ற அளவில் கலைநயமும், கவிதைத்துவமும், ஆழ்ந்த அரசியலும், நகைச்சுவையும் ஒருசேர இருப்பது, அரசியலையும் தாண்டி எல்லாரையும் எளிதில் வசீகரித்துவிடும். அந்த வகையில் பத்திரிகையாளர்கள் சிலர் கலைஞருடனான தங்கள் அனுபவங்களை முகநூலில் பகிர்ந்துள்ளனர். அதன் தொகுப்பு:

மூத்த பத்திரிகையாளரும் ஃப்ரண்ட்லைன் செய்தியாளர் விஜயசங்கர் ராமசந்திரன்: 

எமர்ஜென்சி தீண்டாத தீவின் தலைவர்

ஜூன் 25, 1975 அன்று அவசரநிலை பிறப்பிக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பத்திரிக்கை அலுவலகங்களில் அதிகாரிகள் வந்து அமர்ந்து நேரடியாக தணிக்கை செய்கிறார்கள். அடுத்த சில மாதங்களுக்கு தமிழகம் எமர்ஜென்சி தீண்டாத தீவாக இருந்தது. பல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தஞ்சமளித்தது. அதற்கு முழு முதற் காரணம் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி.

ஜனவரி 30, 1976 அன்று தமிழக அரசு கலைக்கப்படுகிறது. திமுக, கம்யூனிஸ்டு தோழர்கள் கைது செய்யப் படுகின்றனர். செய்தி கேள்விப்பட்டு அன்று இரவு என் தந்தையும் மார்க்சிஸ்டு தலைவருமான பி ராமச்சந்திரன் வீட்டிற்கு வருகிறார். அகில இந்திய வானொலியில் அவசரநிலை செய்தி கேட்டு உறுதி செய்துகொள்கிறார். அன்று இரவே இரண்டு செட் துணிகளை எடுத்துக் கொண்டு இருளில் கரைந்து போகிறார். தலைமறைவு வாழ்க்கை தொடங்குகிறது.

பட உதவி: விஜயசங்கர் முகநூல்
பட உதவி: விஜயசங்கர் முகநூல்

அந்த ஏழு மாத சுதந்திரத்தின் அருமையும், அடுத்து வந்த காலத்தின் கொடுமையும் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் ஆட்சி பறிபோகும் என்று தெரிந்தும் எமர்ஜென்சியை எதிர்த்து நின்ற கலைஞருக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

மூத்த பத்திரிகையாளர் மாலன் நாராயணன்: 

உங்களுடைய அரசியல் பார்வையோடு நான் முரண்பட்டதுண்டு. அதை உங்களிடமே நேரிடையாக விமர்சித்ததுண்டு. என் விமர்சனங்கள் எழுத்தில் வந்த போது அவற்றை வாசித்து அதற்கு உங்கள் எழுத்தின் மூலமும், போனிலும் நீங்கள் எதிர்வினையாற்றியதும் உண்டு. நேரில் தெரிவித்த என் கருத்துக்களுக்கு, சரிக்கு சமமாய் தர்க்க ரீதியாக நீங்கள் வாதிட்டதுண்டு. என்றாலும் உங்கள் அரசியலை ஏற்குமாறு ஒருபோதும் நீங்கள் வற்புறுத்தியதில்லை.

சில நேரங்களில் என் யோசனைகளைக் கேட்டுப் பெற்றிருக்கிறீர்கள். சிலவற்றை நானே முன் வந்தும் சொல்லியிருக்கிறேன். ஏற்கப்பட்டவையும் உண்டு நிராகரிக்கப்பட்டவையும் உண்டு. ஆனால் அதைக் குறித்து நமக்குள் பிணக்குகள் ஏற்பட்டதில்லை.

உங்கள் தனிப்பட்ட சந்தோஷங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். கணினியில் தமிழ் எழுத இயலும் எனச் சொன்னபோது வியப்பில் உங்கள் புருவங்கள் உயர்ந்தன. அதைக் கற்றுக் கொண்டு, 'அகர முதல எழுத்தெல்லாம்' என தட்டச்சு செய்து காட்டி ஒரு குழந்தையைப் போல சிரித்த உங்களது அந்த முகத்தை மறக்கமுடியாது. பகிரங்கப்படுத்த மாட்டேன் என்ற நம்பிக்கையில் சில தனிப்பட்ட வருத்தங்களையும் கூடப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த நம்பிக்கை நலிந்து போக நான் காரணமாக இருக்க மாட்டேன்.

நீங்கள் ஆட்சியில் இருந்தபோது, செய்தித் துறை ஒரு இலக்கிய மலர் கொண்டு வந்தது. அதில் நான் சிறுகதை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கல்கி,புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜானகிராமன், சுஜாதா அசோகமித்ரன் எனப் பலரைப் பேசிய கட்டுரையில் திமுக எழுத்தாளர்களைக் குறிப்பிட்டிருக்கவில்லை. 'தலைவருடையதை ஏன் விட்டுவிட்டீர்கள்' எனக் கோபமாக கட்சிக்காரர் ஒருவர் என்னிடம் கொந்தளித்த போது 'அவருடைய இலக்கியப் பார்வை வேறு' என்று என் சார்பில் அவருக்கு பதிலளித்தீர்கள். என் அழைப்பை ஏற்று, அக்னி அறக்கட்டளையின் தமிழுக்கும் அமுதென்று பேர் நிகழ்ச்சியில், சங்கத் தமிழ் பற்றி எந்தக் குறிப்பும் வைத்துக் கொள்ளாமல் நீண்டதொரு உரையாற்றினீர்கள். பல ஆசிரியர்களுக்கே அது பாடமாக அமைந்திருந்தது. எனக்கோ என்னுள் ஒரு ஜன்னல் திறந்தது.

பொருளாதாரம், ஜாதி, சமூக அந்தஸ்து, பெரிய கல்வித் தகுதி என எந்தவிதப் பின்புலமும் இல்லாமல், அரசியலில் ஒருவர் உச்சத்தைத் தொட முடியும் என்பதைக் கண்ணெதிரே நிரூபித்து, நம் ஜனநாயகத்தின் மீது என்னை நம்பிக்கை கொள்ளச் செய்தவர் நீங்கள். மண்ணைக் கீறிக் கொண்டு எழுந்த விதையாக உங்களைச் சொல்வதுண்டு, எனக்கோ நீங்கள் பாறையைப் பிளந்து கொண்டு எழுந்த விருட்சம்.

மாலன் முகநூலில் பகிரப்பட்ட படம்
மாலன் முகநூலில் பகிரப்பட்ட படம்

எதிர்காலம் உங்களது அரசியலைப் பற்றி வரலாற்றில் எப்படிக் குறித்து வைக்குமோ தெரியவில்லை; ஆனால் தமிழர்களிடையே அவர்கள் மொழி குறித்த பெருமிதம் செழிக்க நீங்கள் தெளித்த விதைகளும் ஊற்றிய நீரும் தலைமுறைகள் தாண்டி வேராய்ப் படர்ந்து நிற்கும். பிறந்த நாள் வாழ்த்துகள்! சொல்லாண்டு வாழ்க!

எழுத்தாளர் ஆர்.கே.ருத்ரன்

தமிழை காதலிக்க ஒரு காரணியாக, பள்ளிப்பருவத்திலிருந்து என்னைக் கவர்ந்த அரசியல் நாயகனாக... பின் சிந்திக்கவும் சீர்தூக்கிப் பார்க்கவும் கற்றதும் என் கடும் விமர்சனத்துக்கும் இலக்கான மேதையாக.. நெஞ்சுரத்துக்கோர் எடுத்துக்காட்டாக..

விமர்சனம் கோபம் வெறுப்பு எவ்வளவோ இருந்தாலும், வியந்தோதி வணங்குகிறேன்.

ஊடகவியலாளர் விஷ்வா விஷ்வநாத்:

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அழைப்பின் பேரில் கிராமத்தில் சென்று பேச வேண்டும், பட்டா என்கிற இரும்புப் பட்டை பொருத்திய இரட்டை மாட்டு வண்டிகள் சென்று சென்று ஓடை மண் புழுதி கெண்டைக்கால் அளவு திரண்டு நின்ற சாலையில் சைக்கிள் நகர முடியாத தடத்தில் தோளில் தொங்கும் துண்டையும், வேட்டியையும் ஒரு கைகளில் உயர்த்தி பிடித்து மேடை அமைக்கப்பட்ட கிராமத்தை நோக்கி நடைப் பயணம்..

என் உயிரினும் மேலான என் அன்பு உடன் பிறப்புக்களே ! என்று தொடங்கி பேசிக்கொண்டு இருக்கும்போதே உடல் வெப்பத்தினால், வாய் வறட்சியால், பசியால், உதட்டோரம் வழியும் ரத்தத்தை தன் மேல் துண்டின் நுனியால் துடைத்துக்கொண்டே அமர்ந்து இருக்கும் மக்களுக்காக பேசி முடித்து அடுத்த கிராமத்திற்கு சென்று பேசிய மனிதர்.

ஆட்சியில் அமர்ந்தாலும், எதிர்கட்சியாக அமர்ந்தாலும் எந்த ஒரு தகவலையும் எவர் சொன்னாலும் அப்படியே நம்பாமல், தன் சொந்த தொடர்பில் மறு உறுதி செய்தே முடிவெடுத்தவர். இரவு பனிரெண்டு கடந்தாலும் காலை மூன்று மணிக்கு உற்சாகமாக தொடங்கும் வாழ்வியலை கொண்டவர்.

சுய ஒழுங்கு கொண்டவர்களே வெற்றியாளர்கள் என்று வாழ்வியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள். அந்த வகையில் மிகப்பெரிய வெற்றிக்கான சுய ஒழுங்கை கடை பிடித்து வெற்றி கண்டவர். தமிழ் மீது பற்றுக்கொண்டும், அதற்காக அனுதினமும் பாடுபட்டும், பலவற்றை சாதித்தவர்.

அரசியலில் திடீர் வெற்றி பெறுவது வியப்பல்ல......எம்.ஜி.ஆர்,, ஜெயலலிதா என்கிற ஆளுமைகளின் அரசியலையும் கடந்து இன்றும் தி.மு.க.என்கிற அரசியல் இயக்கத்தை உயிர்ப்போடு வைத்து இருக்கும் கலைஞர் கருணாநிதி மட்டுமே வியப்புக்கும், போற்றுதலுக்கும் உரியவர்.

தமிழுக்கு தொண்டாற்றியவர்... என்றென்றும்... வாழ்க வளமுடன்.

ஐயன் கார்த்திகேயன், பத்திரிகையாளர்

கலைஞர் வாழ்க பல்லாண்டு! திருவள்ளுவர் சிலை, திருவள்ளுவர் பெயரில் பல்கலைக்கழகம், வள்ளுவர் கோட்டம் என தமிழகத்தில் திருவள்ளுவர் பெயர் அழுத்தமாக பதியக் காரணம் இவர் தான்! வள்ளுவன் புகழ் என்றும் ஒலிக்கக் காரணம்!

நல்ல தமிழ், நக்கல் தமிழ், வசனத்தமிழ் என்று தமிழோடு விளையாடியவர். இனி ஒருவன் யார்? உழவர் சந்தை, ஹிந்தி எதிர்ப்பு, முன்னொரு காலத்தில் ஈழ ஆதரவு, அண்ணா நூலகம், என நல்லவை பல நூறு !

இருந்தும் ஈழத் துரோகம், விஞ்ஞான ஊழல், குடும்ப ஆட்சி, குளிர் காய்ந்த குள்ளநரித்தனம் அமிர்தமோ, பசும் பாலோ ஆயினும் கலந்த ஒரு துளி விஷம் , மொத்தத்தையும் விசமாக்கும் . குடித்து விசம் மட்டும் கழுத்தில் நிற்பாட்ட தமிழர் யாவரும் ஈசன் இல்லையே!

வாழ்க! எங்களையும் வாழவைத்திருந்தால் வாழ்ந்திருக்கும் நின் பெயர் நற்பெயராக உம் வயதை போல் தீர்க்க ஆயுசாக!

பத்திரிகையாளர் மற்றும் வலைப்பதிவாளர் சைபர் சிம்மன்: 

ஒரு பத்திரிகையாளனாக எனக்கு எப்போதுமே கலைஞர் வியக்க கூடியவராகவும், ஆதர்சமாகவும் இருக்கிறார். அவரது உழைப்பும் ,வாசிப்பும் முன்மாதிரியானவை. மனிதர் எப்படி தான் எல்லாவற்றையும் படிக்கிறாரோ என பல முறை வியந்ததுண்டு.

ஒரு வலைப்பதிவளானாகவும் கலைஞரை முன்னோடியா பார்க்கிறேன். உடன்பிறப்பே என்னபாசத்தோடு துவங்கும், கலைஞரின் கடிதங்களை விட சிறந்த வலைப்பதிவு வேறு என்ன இருந்துவிட முடியும். இணையத்தின் ஆற்றல் அதன் தொடர்பு கொள்ளும் தன்மையில் ( இண்ட்ரியாக்டிவிட்டி). அந்த தன்மையை தன் எழுத்திலும், பேச்சிலும் கொண்டிருந்தவர் கலைஞர்.

கலைஞர்டா!

(பொறுப்புதுறப்பு: கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பதிவுகளில் உள்ள கருத்துக்கள் அவர்களின் சொந்த கருத்துக்கள் மட்டுமே.)

Related Stories

Stories by YS TEAM TAMIL