’தொழில்முனைவோர் மதிப்பீட்டை மறந்து நிறுவனத்தின் மதிப்பை உருவாக்க முயற்சிக்கவேண்டும்’- MakeMyTrip தலைவர் தீப் கல்ரா! 

0

மேக்மைட்ரிப் மற்றும் கோஐபிபோ – இரண்டு பெரும் ஆன்லைன் ட்ராவல் நிறுவனங்களும் கடந்த மாதம் ஒன்றிணைவதாக எடுத்த முடிவு இந்திய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்தது ஸ்டார்ட்-அப் உலகை இதுவரை இல்லாத அளவு பெரிதும் கவர்ந்துள்ளது.

’மேக்மைட்ரிப்’ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீப் கல்ரா இது குறித்து கூறுகையில், 

"2012-13 வரை எக்ஸ்பெடியா போன்ற உலகளவிலான நிறுவனங்களின் போட்டியை சமாளிப்பதில் ஈடுபட்டுவந்தோம். பிறகு 2013-14- ல் கோஐபிபோ சிறப்பான தளமாக உருவாகியது. அவர்களின் தொழில்நுட்ப வல்லமையும் நிதி வளமும் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கோஐபிபோவின் தொழில்நுட்பம் எங்களைவிட அதிவேகமாக இருந்தது."

இதுதான் அவர்களுடன் ஒன்றிணைவதற்கு அதிகளவில் தூண்டுதலாக அமைந்தது என்கிறார் கல்ரா. இந்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டாலும் மேக்மைட்ரிப் இன்னும் இரண்டு ஒப்புதல்களை பெறவேண்டியுள்ளது (பங்குதாரர்களின் ஒப்புதல் மற்றும் தேவையான ஒப்புதலை காம்படிஷன் கமிஷன் ஆஃப் இந்தியாவிலிருந்து பெறவேண்டும்).

மொபைல்ஸ்பார்க்ஸ் 2016இல் கலந்துரையாடிய போது மேக்மைட்ரிப் சந்தித்த சவால்கள் குறித்து கல்ரா குறிப்பிடுகையில்,

”எங்களுக்கு பணத்தின் வாசமும் தெரியும் அதன் எதிர்மறையான நிலையும் தெரியும். அதிக பணம் ஈட்டிய ஒருவர் நஷ்டத்தில் இருப்பது மிகுந்த வலியை ஏற்படுத்தும்.”

இதுவரை இந்தியாவில் ஆன்லைன் ட்ராவல் ஏஜென்சி வர்த்தகத்தில் பல தள்ளுபடிகளை அளித்து வருகின்றனர். இது போன்ற தள்ளுபடி விலைகள் வர்த்தகத்தில் ஆக்கிரமித்திருப்பது குறித்த கேள்வி ஒன்றிற்கு கல்ரா பதிலளிக்கையில்,

”நாங்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக தள்ளுபடிகள் அறிவிப்பதை நிறுத்திவிட்டோம். இதனால் பலர் எங்களை வெறுக்கின்றனர். தற்போது கோஐபிபோவுடன் இணைந்து பல தள்ளுபடிகளை அளிக்கவும் வரும் காலங்களில் அதிக பணம் ஈட்டவும் திட்டமிட்டுள்ளோம்.”

மேலும் “நாங்கள் இரண்டு வருடம் (2012- க்குப் பிறகு) நல்ல வருவாய் ஈட்டி வந்தோம். எனினும் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் வீழ்ச்சி ஆல்லைன் ட்ராவல் ஏஜென்சி வர்த்தகத்தை பாதித்தது. கிங்ஃபிஷர் தோல்வியும் கோஐபிபோவின் கடுமையான போட்டியும் எங்களை வீழ்த்தியது” என்றார்.

ஆன்லைன் ட்ராவல் ஏஜென்சியைப் பொருத்தவரை மிகக்குறுகிய லாபம் போதுமானதாக இருக்காது. “வாடிக்கையாளர்களைப் பெற ஏர் டிக்கெட் சிறந்த வழியாகும். அதன்பின் பிற சேவைகளை இணைத்துக்கொள்ளலாம்.” என்றார். 

இதைத்தான் மேக்மைட்ரிப் செய்தது. ஆன்லைன் ட்ராவல் ஏஜென்சி வர்த்தகத்தின் நிலையை புரிந்துகொண்டு இந்நிறுவனம் ஹோட்டல்களையும் பிற துணை சேவைகளையும் அறிமுகப்படுத்தியது.

தொழில்முனைவோர் தொடர்ந்து புதிய சவால்களை சந்திப்பார்கள். அதைக் கடந்து செல்வதில்தான் ஒருவரின் தனித்திறன் உள்ளது. நிலைமையை எப்படி எதிர்கொண்டார் என்ற கேள்விக்கு கல்ரா விளக்கமளிக்கையில், 

”ABN Amro, GE கேப்பிடல் போன்ற நிறுவனங்களில் பல குறிப்பிடத்தக்கவர்களுடன் பணிபுரிந்துள்ளேன். ஒரு பிரச்சனை ஏற்படும்போது அமைதியாக இருக்கவேண்டும் என்பதை அவர்களிடம் நான் கற்றுக்கொண்டேன். அமைதியும் அவசரநிலையை எதிர்கொள்ளும் மனநிலையும் இல்லையெனில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது.”

அமைதியற்று இருப்பது குறித்து கல்ரா குறிப்பிடுகையில் சில நேரங்களில் தான் வருத்தப்படுவதுண்டு என்று ஒப்புக்கொள்கிறார். ”சில மாதங்களுக்கு ஒரு முறை நான் அமைதியிழந்து காணப்படுவதுண்டு. புதிய தவறுகளை இழைக்கலாம். ஆனால் ஒரே தவறை தொடர்ந்து செய்யக்கூடாது. அவ்வாறு செய்யும் நபர்களைப் பார்க்கும்போது நான் வருத்தமடைவதுண்டு.” என்றார்.

கடந்த இரண்டு வருடங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக மதிப்பீடு பெற்ற பல நிறுவனங்களை சந்தித்திருக்கிறோம். எனினும் இவ்வாறு விவரிப்பதே அருவருப்பாக இருப்பதாக கூறுகிறார் கல்ரா. 

”இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்கே பிடிப்பதில்லை. ஏனெனில் பல நேரங்களில் இந்த தகுதியைப் பெற நாம் எதுவும் பெரிதாக செய்திருக்கமாட்டோம். தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்தே ஒரு நிறுவனத்தின் ப்ரைசிங் மதிப்பிடப்படும். மதிப்பீட்டை மறந்து மதிப்பை உருவாக்கவேண்டும். மதிப்பீடு உண்மையானதல்ல. அது வெறும் காகிதத்தில் உள்ளது. உண்மைக்குப் புறம்பானவற்றை மேற்கொள்ளக்கூடாது.” என்கிறார் கல்ரா.

இறுதியாக, ஒருவர் உங்களிடம் 2 பில்லியன் டாலர்களை விரிவாக்கத்திற்காக கொடுப்பதாக கூறினால் உடனே அதை பாதுகாப்பதற்கான தற்காப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள். இல்லையேல் அடுத்தவர் அதை அபகரிக்கக்கூடும். போட்டியாளர்களை எதிர்த்து செயல்படும் திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுரைதார் கல்ரா.

ஆங்கில கட்டுரையாளர்: ஜெய் வர்தன்