ராஜேஷ்: தமிழகத்தில் காந்தியம் விதைக்கும் இளைஞர்!

0

தன் அயராத முயற்சியால் திரட்டிய மகாத்மா காந்தியின் நினைவுப் பொருட்களையே மூலதனமாகக் கொண்டு, தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என இளம் நெஞ்சங்களில் காந்தியக் கொள்கைகளை விதைத்து வருகிறார் எம்.எல்.ராஜேஷ். ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரியும் 36 வயது இளைஞரான இவர், சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் உள்ள காந்தி உலக அறக்கட்டளை (Gandhi World Foundation) அமைப்பின் நிறுவனர்.

எம்.எல்.ராஜேஷ்
எம்.எல்.ராஜேஷ்

காந்தியடிகளை கவுரவிக்கும் வகையில் உலக நாடுகள் வெளியிட்டுள்ள தபால் தலைகள், ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், சிலைகளின் புகைப்படங்கள், காந்தியின் முக்கியக் குறிப்புகள், அரிய புகைப்படங்கள் என 5,000-க்கும் மேற்பட்ட சேகரிப்புகள் இவரிடம் உள்ளது. சுமார் 15 ஆண்டு கால விடாமுயற்சியில் இது சாத்தியமானது.

தீவிரமாக திரட்டிய காந்தியின் பொக்கிஷங்கள்!

மகாத்மா காந்தி மீது ஈடுபாடு ஏற்பட்டது, உலக அளவில் தாம் திரட்டிய அடையாளச் சின்னங்களை திரட்டியது குறித்து ராஜேஷ் கூறும்போது, "எனது பள்ளிப் பருவத்தில் தபால்தலைகளை சேகரிப்பதை பொழுதுபோக்காகக் கொண்டிருந்தேன். எந்த ஒரு குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல், கிடைக்கின்ற தபால்தலைகளை சேகரித்து வந்தேன்".

"அப்படி ஒருநாள், வெளிநாட்டு அரசு ஒன்றால் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி உருவம் பதித்த தபால்தலை என் கைக்குக் கிடைத்தது. ஒரு நாட்டின் தபால்தலையில் இடம்பெறுகிறார் என்றாலே அவர் மிகப் பெரிய தலைவராக இருந்திருக்க வேண்டும். ஒரு வெளிநாட்டுத் தலைவரின் நினைவாக இன்னொரு நாடு தபால்தலை வெளியிடுகிறது என்றால், அவர் எவ்வளவு பெரிய தலைவராக இருக்க வேண்டும். அப்படி ஒரு பிரம்மிப்பு ஏற்பட்டது. நம் இந்தியாவில் வாழ்ந்து மறைந்த மகாத்மா காந்திக்கு அயல்நாட்டில் கவுரம் கிடைத்திருக்கிறதே என்று எண்ணி, அன்று முதல் காந்தி பற்றி நிறைய படிக்க ஆரம்பித்தேன். ஏனோதானோவென்று தபால்தலைகளை சேகரித்து வந்த எனக்கு, காந்தி மட்டுமே ஒற்றைக் கருப்பொருள் ஆனார்".

அதைத் தொடர்ந்து எந்தெந்த நாடுகளில் காந்திஜியின் தபால்தலை, நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொண்டேன். அவற்றை வாங்கிச் சேர்க்கவும் ஆரம்பித்தேன். அப்படியாக, 120 நாடுகள் வெளியிட்டுள்ள காந்தி தபால்தலைகளையும், 15 நாடுகளிலிருந்து நாணயங்களையும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு சேகரித்தேன். ஒவ்வொரு நாட்டில் வெளியிடப்பட்ட காந்தியின் தபால்தலையும் ஒவ்வொரு கதை சொல்லும். உதாரணமாக, கம்யூனிச நாடுகளான கியூபா, சீனாவிலும், நம்மை ஆண்ட இங்கிலாந்திலும் மகாத்மா காந்திக்கு தபால்தலைகளும் சிலைகளும் இருப்பது எந்தத் தலைவருக்கும் கிடைக்காத சிறப்புகள்.

காந்தி நினைவு கண்காட்சிகள்
காந்தி நினைவு கண்காட்சிகள்

என் ஆர்வத்தைப் பார்த்து வியந்தார், காந்தியிடம் 1945-48 வரை உதவியாளராய் இருந்த கல்யாணம். எனது செயலைப் பாராட்டும் வகையில், காந்திக்கு வந்த கடிதங்களின் உறைகள், தந்திகள், கைப்பட எழுதிய தாள்கள் என பலவற்றை அவர் எனக்குத் தந்தார்.

காந்தி நடத்திய நவஜீவன், யங் இந்தியா போன்ற பத்திரிகைகளின் ஒரு சில பிரதிகள் அமெரிக்காவில் இருப்பதைத் தெரிந்துக் கொண்டு, ஏலத்தின் மூலமாக அந்தப் பிரதிகளை வரவழைத்தேன். என்னுடைய சம்பளப் பணத்தில் பெரும் பகுதியை மகாத்மா காந்தியைப் பற்றிய சேகரிப்புக்கும், கண்காட்சிக்கும் செலவழிக்கிறேன். இப்படித்தான் பொழுதுபோக்காக ஆரம்பித்த விஷயம், பொழுதாக்கமாக மாறி, இப்போது காந்தியின் பொக்கிஷங்களை பத்திரப்படுத்தும் மகத்தான பணிக்கு வழிவகுத்தது" என்கிறார் உற்சாகத்துடன்.

காந்தியை கவுரவிக்கும் வகையில் இந்தியா முதன்முதலில் வெளியிட்ட தபால்தலையை அலைந்து திரிந்து ரூ.12,000-க்கு வாங்கியதையும், பிகாசோ வரைந்த செயின்ட் தாமஸ் பிரின்ஸ் ஐலேண்ட் வெளியிட்ட காந்தி தபால்தலையை தேடிப் பிடித்து ரூ.10,000-க்கு வாங்கியதையும் மறக்க முடியாத அனுபவம் என்கிறார்.

காந்தி உலக அறக்கட்டளையும் சாதனைகளும்!

தன் முயற்சியால் திரட்டப்பட்ட காந்தியின் பொக்கிஷங்களையே மூலதனமாகக் கொண்டு காந்தியக் கொள்கைகளை இளைஞர்களிடம் பரப்ப விரும்பிய ராஜேஷ், இந்த நோக்கத்தை நெறிப்படுத்தும் வகையில் காந்தி உலக அறக்கட்டளையைத் தொடங்கினார்.

சென்னை மெரினாவில் சாதனை நிகழ்வு
சென்னை மெரினாவில் சாதனை நிகழ்வு

"காந்தியின் நினைவுப் பொருட்கள் குறித்த கண்காட்சிகள், புத்தகங்கள், பிரச்சாரங்கள் மூலமாக காந்தியக் கொள்கைகளை தமிழகத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே காந்தியத்தைப் பரப்பி வருகிறது இந்த அறக்கட்டளை. அத்துடன், உள்ளூர் பகுதியில் ஏழைக் குழந்தைகளுக்கும் கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு உறுதுணைபுரிந்து வருகிறது.

"காந்தியத்தின் மூலம் இளம் தலைமுறையினரிடம் நல்ல பழக்கவழக்கங்கள், மரியாதை, அமைதி, நல்லிணக்கம், கலாச்சாரம், மதிப்பு, நல்லமரபு போன்றவற்றை விதைக்க முடியும். அதன் மூலம் எதிர்கால சந்ததியினரை சிறந்த குடிமகன்களாக மாற்ற முடியும். மதுபானம் அருந்துவது, புகைப்பிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவது உள்ளிட்ட தீங்கான செயல்களை நாடாமல் தடுக்க முடியும்" என்று உறுதியாக நம்புகிறார் ராஜேஷ்.

கடந்த 2012 ஜனவரி மாதம் 30-ம் தேதி, காந்தி நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் 1015 பள்ளி மாணவர்கள் மொட்டை அடித்து காந்தி வேடம் அணிவித்து பேரணி நடத்தி உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. அதற்கு முந்தைய நாளில், கும்மிடிப்பூண்டியில் 136 முடிதிருத்துவோரைக் கொண்டு 1027 மாணவர்களுக்கு 40 நிமிடத்தில் மொட்டை அடித்து கவனம் ஈர்க்கும் சாதனையும் நிகழ்த்தப்பட்டது. இவை ஆசியா உள்ளிட்ட 6 புக் ஆஃப் ரெக்கார்டுகளில் இடம்பெற்றன.

காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷின் சாதனைகளையும் சேவைகளையும் பாராட்டி, அசிஸ்ட் வோல்ர்ட் ரெகார்ட் நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்ட கவுரவ விருதை எம்.எல்.ராஜேஷுக்கு கடந்த 2013-ம் ஆண்டில் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி வழங்கி பாராட்டினார்.

ராஜேஷுக்கு சாதனையாளர் விருது வழங்குகிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
ராஜேஷுக்கு சாதனையாளர் விருது வழங்குகிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

இரு பெருமித நிகழ்வுகள்!

காந்தியத்தைப் பரப்பும் முயற்சிகளில் இரு நிகழ்வுகளை தனக்கு கிடைத்த பெருமிதங்களாகக் கருதுகிறார் ராஜேஷ். "தனி ஒருவனாக காந்தி கண்காட்சிகளை நடத்தி வந்த நான், நண்பர்கள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து அறக்கட்டளையை உருவாக்கினேன். அதன்பின், சற்றே பெரிய அளவில் ஜூன் 6, 2012-ல் சென்னை - அண்ணா பல்கலைக்கழகத்தில் கண்காட்சியை நடத்தினேன். அதைத் துவக்கி வைப்பதற்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அணுகினேன். என் நோக்கத்தைப் புரிந்துகொண்டவர் சற்றும் யோசிக்காமல் வந்ததுடன், அந்த நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்கள் மத்தியில் ஒரு மணி நேரம் உரையாற்றிவிட்டு, எங்கள் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டினார். அது நெகிழ்ச்சிக்குரிய நிகழ்வு.

அதேபோல், கடந்த ஜனவரியில் ஓர் ஆச்சரியமான அனுபவம் நேர்ந்தது. அன்றைய தினம் குஜராத் அரசு நிர்வாகி ஒருவர் என்னைத் தொடர்புகொண்டார். பிரதமர் நரேந்திர மோடியால் மகாத்மா மந்திர் அருங்காட்சியகம் திறக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு, அதன் திட்ட அதிகாரிதான் என்னிடம் பேசினார். 'உங்களது வலைதளத்தை இப்போதுதான் பார்த்தேன். உங்களிடம் உள்ள அரிய பொக்கிஷங்கள் எங்களுக்கு வேண்டும். அவற்றை அருங்காட்சியகத்துக்கு பயன்படுத்த விரும்புகிறோம். அதற்காக, உரிய தொகையைத் தரவும் தயார்' என்றார்.

அந்தப் பேச்சினூடே 'நாங்கள் சிரமத்துடன் செய்து வரும் வேலைகளை, ஒற்றை ஆளாக சேகரித்து வைத்திருப்பது மலைப்பாக இருக்கிறது' என்று அந்த காந்தி பிறந்த மண்ணைச் சேர்ந்த அரசு அதிகாரி குறிப்பிட்டார். அந்த ஒற்றைச் சொல் போதும்; எனக்கு தொகை எதுவும் வேண்டாம் என்று 120 நாடுகளில் வெளியிடப்பட்ட காந்தி தபால்தலைகள், 80 நாடுகளில் வைக்கப்பட்டுள்ள காந்தி சிலைகளின் புகைப்படங்கள் என அனைத்திலும் தலா ஒரு பிரதியை அனுப்பிவைத்தேன். அதற்காக, குஜராத் அரசிடம் இருந்த வந்த அதிகாரபூர்வ கடிதத்தையே பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்" என்று வியப்பு மேலிட பகிர்கிறார் ராஜேஷ்

காந்தி உலக அறக்கட்டளை அமைப்பினருடன் காலம்
காந்தி உலக அறக்கட்டளை அமைப்பினருடன் காலம்

கலாமை வசீகரித்த காந்தி காமிக்ஸ்

காந்தி பற்றி பள்ளிக் குழந்தைகள் ஆர்வத்துடன் தெரிந்துகொள்வதற்காக, சமீபத்தில் இவர் 'மாணவர்களுக்காக மகாத்மா!' என்ற புத்தகத்தை காமிக்ஸ் வடிவத்தில் படைத்து வெளியிட்டார். குழந்தைப் பருவம் தொடங்கி காந்தி மறைவு வரையிலான அவரது வாழ்க்கையை அழகாகச் சொல்லியதுடன், அதுக்கு தகுந்தாற்போல ஓவியங்கள் ஒவ்வொன்றும் கவர்ந்திழுக்கக் கூடியவை.

இந்தப் புத்தகத்தைப் பார்த்த மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ராஜேஷை அழைத்து வியந்து பாராட்டியிருக்கிறார். "கலாம் தன் கைப்பட எழுதிக் கொடுத்த பாராட்டுக் கடிதம் என்னை கலங்கடித்துவிட்டது. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அயராது உழைத்திடும் ஊக்கத்தை அளித்தது" என்று சிலாகிக்கிறார் ராஜேஷ்.

ஒற்றை இலக்கை நோக்கி...

"காந்தியின் நினைவுப் பொக்கிஷங்களுடன், அவரது கொள்கையை தமிழகத்தில் உள்ள இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதுதான் என்னுடைய ஒற்றை இலக்கு. காந்தியின் தேவை இப்போது அதிகமாகவே இருக்கிறது. வன்முறையால் தூண்டப்படும் இளைஞர்களை அகிம்சை பாதைக்கு வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

மகாத்மா காந்தியின் மற்றொரு மிக முக்கிய கொள்கையான மது ஒழிப்பு என்பது தமிழக இளைஞர்கள் ஒவ்வொருவரிடத்திலும் சேர்த்திட வேண்டிய கடமை இருக்கிறது. இந்த இலக்குகளை நோக்கிய பயணத்தை களப்பின்றி தொடர்வேன். எங்கள் அமைப்பின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு கண்காட்சிகளால் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர முயற்சி செய்கிறேன்" என்று கூறிவிட்டு, இந்த ஆண்டு காந்தி ஜெயந்தியையொட்டி, சென்னை - அடையாறு டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக்டோபர் 2 தொடங்கி 4-ம் தேதி வரை நடைபெறும் காந்தியின் நினைவு சேகரிப்புகள் கண்காட்சியிக்கு தன்னைத் தயாரானார் ராஜேஷ்.

தங்கள் அமைப்பைப் பற்றி மட்டுமின்றி, காந்தியின் புகழை ஓங்கச் செய்யும் வகையில், புகைப்படங்கள் உட்பட 84,000 கோப்புகள் உள்ள தமிழ் - ஆங்கிலம் இரு மொழிகளிலும் வடிவமைக்கப்பட்ட காந்தி உலக அறக்கட்டளை வலைதளம்.

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்