புதிய ஓட்டுநர் செயலியை அறிமுகப்படுத்தியுள்ள ஊபர்!

0

”நாங்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும் என்கிற விஷயத்தை 2017-ம் ஆண்டு எங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது,” என்று சான் ஃப்ரான்சிஸ்கோவில் உள்ள ஊபரின் தலைமையகத்தில் இருந்து அழைப்பு வாயிலாக தெரிவித்தார் ஓட்டுநர் அனுபவம் பிரிவின் UX ஆய்வாளர் பிஜார்ன் ஹூபர்ட் வாலண்டர். இந்நிறுவனத்தின் ஓட்டுநர் செயலிக்கான வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பக் குழுவில் இவரும் ஒருவராவார்.

ஊபர் அதன் ஓட்டுநர் செயலியை அறிமுகப்படுத்தப்போவதாக சமீபத்தில் அறிவித்துள்ளது. புதுமைகள் படைப்பதிலும் ப்ராடக்ட் சார்ந்த வெவ்வேறு அம்சங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்துவதிலும் பிரபலமான இந்நிறுவனம் இந்த முறை சற்று மாறுபட்ட முயற்சியை மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இதன் குழுவினர் இந்தச் செயலியின் வடிவமைப்பு மற்றும் செயலி உருவாக்கும் பணியை நிறைவுசெய்துள்ளனர். ஆனால் அதை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு முதலில் சோதனை செய்ய தீர்மானித்துள்ளனர்.

இந்த புதிய ஓட்டுநர் செயலி ஊபர் நிறுவனத்தால் ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்பது குறித்து சான்ஃப்ரான்சிஸ்கோவில் ஓட்டுநர் பார்ட்னர்களிடம் நேரடியாக விளக்கினார் ஊபர் நிறுவனத்தின் சிஇஓ தாரா கொஸ்ரோஷாஹி. சியாட்டில் பகுதியைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் ஓட்டுநர் மற்றும் இரானிய அகதி ஓட்டுநர் ஒருவர் என முன்று ஓட்டுநர் பார்ட்னர்களை உதாரணம் காட்டி ஊபர் நிறுவனத்திற்கு ஓட்டுநர் பார்ட்னர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை வலியுறுத்தினார்.

”ஊபர் நிறுவனத்திற்கு ஓட்டுநர்களே முக்கியமானவர்கள். கடந்த ஆண்டுகளில் நாங்கள் இவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆனால் இப்போது நாங்கள் மாறி வருகிறோம். புதிய ஓட்டுநர் செயலி எங்களது பொறியாளர்களால் மட்டும் அறிமுகப்படுத்தப்படவில்லை இந்தச் செயலியை அன்றாடம் பயன்படுத்த உள்ள எங்களது ஓட்டுநர் பார்ட்னர்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

இந்தப் புதிய செயலி எவ்வாறு செயல்படும்?

இதிலுள்ள வருவாயை கண்காணிக்கும் வசதியே இந்தச் செயலியின் முக்கிய அம்சமாகும். இதன் மூலம் ஓட்டுநர் தனது முந்தைய பயணத்தில் எவ்வளவு ஈட்டியுள்ளார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அத்துடன் தனது இலக்குடன் ஒப்பிட்டு வருவாயை கண்காணிக்கவும் உதவும். மேலும் சந்தை நிலவரம் மற்றும் கூடுதல் பயணத்திற்கான வாய்ப்பு குறித்த நிகழ்நேர தகவல்களையும் இந்தச் செயலி வழங்கும். ஓட்டுநர் தனக்கு அருகாமையில் இருக்கும் பயண வாய்ப்பை தெரிந்துகொள்ள முயற்சிக்கும்போது இந்தச் செயலி அந்த குறிப்பிட்ட பகுதியை சென்றடைவதற்கு உள்ள வழிகளை பரிந்துரைக்கும். அத்துடன் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகள், கருத்துக்கள், ஓட்டுநரின் கணக்கு தகவல்கள் ஆகியவற்றையும் ஓட்டுநர் தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் தற்போது கொச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஓட்டுநர் பார்ட்னர்கள் மற்றும் சென்னையைச் சேர்ந்த சில கூரியர் பார்ட்னர்களிடம் மட்டுமே இந்தச் செயலி உள்ளது. இது அடுத்தடுத்த மாதங்களில் ஓட்டுநர்களுக்கும் டெலிவரி பார்ட்னர்களுக்கும் படிப்படியாக அறிமுகமாக உள்ளது.

செயலியின் சோதனை முயற்சி அறிமுகம்

இந்நிறுவனம் வழக்கமான அதன் முயற்சிகளை நேரடியாக சந்தையில் அறிமுகப்படுத்தும். ஆனால் தற்போது அவ்வாறின்றி ஊபர் நிறுவனம் இந்தச் செயலியை ஓட்டுநர்களிடையே சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய நிகழ்ச்சி ஒன்றில் ஊபர் அதன் ஓட்டுநர் செயலியை ஏழு நாடுகளைச் சேர்ந்த 470 ஓட்டுநர் பார்ட்னர்களுடன் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஓட்டுநர் அனுபவம் பிரிவின் ப்ராடக்ட் மேலாளர் யூகி யமாஷிதா கூறுகையில்,

சான்ஃப்ரான்சிஸ்கோவில் உள்ள எங்களது குழு இந்தப் புதிய செயலியைப் பயன்படுத்தி சோதனை செய்துள்ளது. ஆனால் எங்களது ஓட்டுநர்களே இதை அன்றாடம் பயன்படுத்தப்போகிறார்கள் என்பதால் இந்தச் செயலி எவ்வாறு செயல்படுகிறது என்பதை முதலில் எங்கள் ஓட்டுநர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறோம்.

இந்தியாவில் பெங்களூருவைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான ஓட்டுநர்கள் மற்றும் கூரியர் பார்ட்னர்கள் உலகளவிலான சோதனையில் பங்கெடுத்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். இது ப்ராடக்டை மேம்படுத்த உதவியது. ஓட்டுநர் அனுபவம் பிரிவின் பொறியியல் துறை இயக்குநர் ஹைதர் சபரி குறிப்பிடுகையில்,

”முதல் ஐந்தாண்டுகளுக்கு ஊபர் செயலி ஆன்லைனில் செயல்படுவதில் கவனம் செலுத்தியது. வருவாய் மற்றும் இதர தகவல்கள் ஓட்டுநருக்கு மெசேஜ் வாயிலாக அனுப்பப்படும். இந்தச் செயலியானது 2015-ம் ஆண்டு முதல் மதிப்பீடுகள், கண்காணித்தல், கருத்து, சர்ஜ் உள்ளிட்ட பல்வேறு பிற அம்சங்களை இணைத்துக்கொண்டது. ’ஊபர்ஈட்ஸ்’ வணிகத்தை அறிமுகப்படுத்தியபோது வேறுபட்ட சிக்கல் இருந்ததால் அதையும் இணைத்துக்கொண்டது. தற்போது மறு வடிவமைப்புடன் செயலி எளிதாக இருக்கவும் அதே சமயம் ஓட்டுநருக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்வதிலும் கவனம் செலுத்துகிறது.

மோசமான இணைய இணைப்பு காரணமாக ஓட்டுநர் தான் மேற்கொள்ளும் ஒரு பயணத்தை நிறைவு செய்ய முடியாமல் போகும் சூழல் ஏற்படும். இந்தப் புதிய செயலி அதையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஓட்டுநர் ஜிபிஎஸ் பகுதியை சேமிப்பதன் மூலம் பயணத்தை நிறைவு செய்யலாம். இணைய இணைப்பு இருக்கும் பகுதியில் வாகனம் இருக்கும்போது சேமிக்கப்பட்ட ஜிபிஎஸ் பகுதி பயணத்தை நிறைவு செய்ய பயன்படுத்தப்படும். இந்த புதிய ஓட்டுநர் செயலியை பயன்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டியும் வரும் மாதங்களில் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும்.

ஓட்டுநர்கள் மீது சிறப்பு கவனம்

ஊபர் இந்தியா மற்றும் தெற்காசியா செண்ட்ரல் ஆபரேஷன்ஸ் தலைவர் பிரதீப் பரமேஸ்வரன் கூறுகையில்,

“புதிய பார்ட்னர் செயலியின் அறிமுகம் ஊபர் நிறுவனத்தின் முக்கிய மைல்கல்லாகும். எங்களது வளர்ச்சியில் இணைந்திருந்தவர்களுக்கு நாங்கள் காட்டும் அர்ப்பணிப்பை இது உணர்த்துகிறது. பெங்களூருவைச் சேர்ந்த சுமார் 100 பார்ட்னர்கள் உலகளவிலான சோதனை முயற்சியில் பங்கேற்றனர். எனவே அவர்களது தேவையைக் கேட்டறிந்து அவர்களுடன் இணைந்தே இந்த செயலியை உருவாக்கியுள்ளோம்." 

நேரடியாக களத்தில் நேரம் செலவிட்டும் குழு அமர்வுகள் வாயிலாக பார்ட்னர்களுடன் தொடர்ப்பு கொண்டும் அவர்களுடன் பயணித்தும் எங்களது குழு முக்கிய தகவல்களை சேகரித்தது. அவர்களது ஒவ்வொரு கருத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஒவ்வொரு பயணத்திலும் அவர்களது தேவை பூர்த்திசெய்யப்படும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

தாரா சமீபத்தில் இந்தியாவிற்கு பயணித்தபோது ஓட்டுநர்களுடன் ஒரு வட்டமேஜை அமர்வு நடத்தினார். இதில் அவர்களது தேவை குறித்து விவாதிக்கப்பட்டு அதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. 

”ஓட்டுநர் பார்ட்னர்களாக செயல்பட்டு நீங்கள்தான் ஊபர் நிறுவனத்தின் பிரதிநிதியாக வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கிறீர்கள். எங்களுக்கு நீங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்,” என்றார்.

சிக்கல் நிறைந்த ஒரு நிறுவனத்திற்கு சிஇஓ-வாக பொறுப்பேற்கும் தாரா ஊபர் நிறுவனத்திற்கு முக்கியமானவர்களான அதன் ஓட்டுநர்களை புரிந்துகொள்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார். கடந்த ஆண்டு பாலியல் புகார்கள், சட்டரீதியான போராட்டங்கள், என பல்வேறு சர்சைக்குரிய சம்பவங்கள் இந்தியாவில் குறிப்பாக டெல்லி மற்றும் பெங்களூருவில் சந்தித்தது. அத்துடன் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அப்போதிருந்து ஊபர் நிறுவனம் அதை சிறப்பாக நிலைநிறுத்திக்கொள்ள உலகளவில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் ஓட்டுநர் பார்ட்னர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் அதன் வணிகத்தை இந்தோனேஷிய போட்டியாளரான க்ராப் (Grab) நிறுவனத்திற்கு விற்பனை செய்து இந்தப் பகுதியில் அதன் செயல்பாடுகள் தோல்வியடைந்ததாக ஒப்புக்கொண்டபோதும் தற்போது செயல்படும் உள்ளூர் சந்தையில் சிறப்பாக செயல்படுவதில் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கிறது.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்ரீவித்யா