வேலைக்கு பொருத்தமானவர்களை கண்டறிய உதவும் 'பைகியூப்'

0

பல தொழில்முனைவோர்களுக்கு நிதி திரட்டுவதை விட சரியானவர்களை வேலைக்கு அமர்த்துவதே பெரும் சவாலாக இருக்கிறது. ஃபிளிப்கார்ட், மிந்த்ரா மற்றும் இதர பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இளம் பொறியாளர்களுக்கு அதிக தொகையை ஊதியமாக தர தயாராக இருப்பதால் நடுத்தர நிறுவனங்களுக்கு தரமான நபர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்வது இன்னும் சிக்கலாகிறது.

தொழில்நுட்பத்துறையில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் டெவலெப்பர்கள், விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் வல்லுனர்களை மிகவும் அவசரமாக நியமித்து வருவது போல தோன்றுகிறது. பெங்களூருவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களிடம் பேசிப்பார்க்கும் போது அவர்கள் ஒவ்வொருவரும் கையில் பல வாய்ப்புகளை வைத்திருப்பது தெரிகிறது. இதனால் தங்கள் பட்ஜெட்டுக்குள் பொருத்தமான நபர்களை தேர்வு செய்வதும் நிறுவனங்களுக்கு கடினமாகிறது.

ஐந்தாண்டுகளாக 28 பணி நியமன ஆலோசகர்களோடு தி ட்ரோன் நெட்வொர்க் பணி நியமன நிறுவனத்தை நடத்தி வரும் ஜெயதேவ் மகாலிங்கம் இந்த பிரச்சனைகள் அனைத்தையும் தினமும் எதிர்கொண்டிருக்கிறார்.சமீப ஆண்டுகளில் புதிதாக உருவாகி இருக்கும் பணி வகைகளை பார்க்கும் போது, நிறுவனங்கள் குறிப்பிடும் பணி நியமன விவரங்களுக்கு பொருத்தமான நபர்களை தேர்வு செய்து பரிந்துரைப்பது எளிதானத்தல்ல. இது மேலும் சிக்கலாகி வருகிறது. பெரும்பாலான மனிதவள ஆலோசகர்கள் தங்கள் முயற்சிகளுக்கு பலன் கிடைக்குமா என்று தெரியாத குழப்பத்தில் உள்ளனர். ஜெயதேவ் மற்றும் அவரது குழுவினருக்கு தாங்கள் செயல்பட்ட விதத்தில் திருப்தி இருக்கவில்லை என்பதால் அவர்கள் மாற்றிக்கொள்ள தீர்மானித்தனர். இதன் பயனாக வேலைக்கு தகுதியானவர்களை இணையம் மூலம் சரியாக பொருத்திப்பார்க்கும் "பைகியூப் "(PiQube) சேவையை துவக்கினர்.

வேலை மாறத்தயாராக இருக்கும் ஊழியர்கள் பலர் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை என்கிறார் அவர். இத்தகைய ஊழியர்கள் புதிய வேலை தேடுவதில்லை என்றாலும், நல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டால் மாறத்தயாராக இருக்கின்றனர். பணி நியமன ஆலோசகர்கள் பலரும் இத்தகைய ஊழியர்கள் பற்றி அறிந்திருப்பதில்லை. பைகியூப் குழுவினர் சமூக ஊடகம் மற்றும் தொழில்முறை பக்கங்களுக்கு அடிக்கடி விஜயம் செய்து ஊழியர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கின்றனர். பணி நியமன ஆலோசகர்களுக்கு மேலும் உதவும் வகையில் இந்த விவரங்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து தருகின்றனர்.

இன்றும் கூட ஒருவரது திறன் மற்றும் ஆளுமையை அலசிப்பார்ப்பதற்கு மனிதர்களின் தலையீடு தேவைப்படவே செய்கிறது. சந்தையில் இன்னும் தகுதியான ஊழியர்களுக்கான ஆளுமை மற்றும் திறன் உருவாக்க சாதியங்கள் எதுவும் இல்லை. திறன் மற்றும் ஆளுமை அலசலில் பணி நியமன ஆலோசகர்களுக்கு உதவும் வகையிலான சேவையை உருவாக்குவதில் இந்த குழு ஈடுபட்டுள்ளது. பணி நியமன ஆலோசகர்கள், ஊழியர் பின்னே உள்ள நபரை சரியாக அறிந்து கொள்ளச்செய்ய பைகியூப் விரும்புகிறது.

இந்த தளத்தின் மூலம் தெரிவிக்கப்படும் ஒவ்வொரு வேலை கோரிக்கைக்கும் பொருதமான நபரை பரிந்துரைக்கப்படும் 15 விவரங்களுக்குள் கண்டு பிடித்துவிடுவது சாத்தியம் என்று இக்குழு நம்புகிறது.

இதன் மார்க்கெட் உணர் சாதனமான பைஸ்டாட் (piSTAT )பணி நியமன ஆலோசகர்களுக்கு தேர்வு பரிசீலனையில் உதவி செய்யும். கடந்த ஆறு மாதங்களாக உருவாக்கப்பட்டு வந்த இந்த சாதனம் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பொருத்தம் காண உதவும் சேவையான ரோஸ்டாட் (rhoSTAT ) அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இன்று எல்லா பணி நியமன ஆலோசகர்களும் லிங்க்டுஇன் சேவையை தேடல் மற்றும் தொடர்புக்கு பயன்படுத்துகின்றனர். இந்த சேவை தான் எங்களின் மிகப்பெரிய போட்டியாளர் என்கிறார் ஜெயதேவ். பைகியூப்பின் அணுகுமுறை வேறுபட்டதாக இருந்தாலும் வழக்கமான வேலை வாய்ப்பு தேடல் சேவையாந நோகரி, மான்ஸ்டர் போன்ற தளங்களும் போட்டியாளர்கள் தான்.

தற்போது தொழில்நுட்பத்துறையை சேர்ந்த நிறுவனங்கள் இந்த சேவையை அதிகம் பயன்படுத்தி வருகின்றன. இந்தியா தவிர முதல் கட்ட விரிவாக்கத்தில் சிங்கப்பூரில் இருந்தும் பயனாளிகளை பெற இக்குழு திட்டமிட்டுள்ளது. 250 டாலர் மாத சந்தா மாதிரியையும் அறிமுகம் செய்துள்ளது. இது வழக்கமாக இரண்டு பதவிகளுக்கான நியமனத்திற்கு அளிக்கப்படும் தொகை.

ஊழியர்களின் பழக்க வழக்கங்களை புரிந்து கொள்ளும் வகையிலான சேவையை அடுத்த கட்டமாக உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. ஊழியர்களின் பழக்க வழக்கங்கள் புரிதலின் அடிப்படையில் வேலைக்கு பொருத்தமானவர்களை பரிந்துரைப்பதை இது எளிதாக்கும். நிறுவன கலாச்சாரத்திற்கு ஏற்ற ஊழியர்களை அமர்த்திக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு இது உதவியாக இருக்கும். ஆக, அடுத்த முறை காபியை விரும்பும் பைத்தான் மொழி டெவலெப்பர் தேவை என்றால் பைகியூப்பின் இந்த சேவை எளிதாக பரிந்துரைக்கும்.

பணி நியமன ஆலோசகர்களுக்கு உதவும் சேவையை பல ஸ்டார்ட் அப்கள் வழங்கி வருகின்றன. பல மதிப்பு மிக்க அமசங்களை மீறி இந்த சேவைகளின் வெற்றி என்பது இவை மூலம் கண்டறிய முடியும் ஊழியர்களின் தரத்தில் தான் இருக்கிறது.

இணையதள முகவரி: PiQube