தென் தமிழக தொழில் முனைவோர்களுக்கு உதவ நேட்டிவ்லீட், தியாகராஜர் கல்லூரி   இன்குபேஷன் மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

1

ஜூன் மாதம் 17ஆம் நாள் மாலை நான்கு மணி அளவில், தொழில் முனைவோர்களும் மாணவர்களும் சூழ்ந்திருக்க நேட்டிவ்லீட் அமைப்பிற்கும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் பிசினஸ் இன்குபேஷன் சென்டருக்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

தொழில் முனைவு உலகம் பெருநகரங்களையும் தாண்டி பல சிறு நகரங்களிலும் தனது கிளைகளைப் பரப்பி பறந்து விரிந்து இருக்கிற இந்த தருணத்தில் மதுரை, ஈரோடு, கோவை, திருச்சி, சேலம், தூத்துக்குடி போன்ற தென் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகளை செய்து வரும் நேட்டிவ்லீட் அமைப்பானது தெற்கு பிராந்திய தொழில் முனைவோர்கள் மேலும் பயன் பெரும் வகையில் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது.

மாணவர்களிடத்தில் இருக்கும் தொழில் முனைவு கலாச்சாரத்தை மேலும் மெருகேற்றவும் அவர்களின் தொழில் முனைவு தேவைக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் நேட்டிவ்லீட் நெட்வர்க் மூலம் செய்து தருவதாகவும் உறுதியளித்து அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் அபய் குமார் அவர்களின் தொடக்க உரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்ற அவர்,

“திரு.தியாகராஜர் தொழில் முனைவோர்களின் சிறந்த ஒரு வழிகாட்டி என்றும், நேட்டிவ்லீட்டை சார்ந்த சிவராஜா மற்றும் நாகா ஆகியோர் சிறந்ததொரு முன்னெடுப்பை மேற்கொண்டு இருப்பதாகவும் கூறிய அவர் மதுரையை சிறந்த ஒரு தொழில் முனைவு நகராக மாற்ற இதுவே தருணம்,” என்றும் தெரிவித்தார்.

அவரைத்தொடர்ந்து நேட்டிவ்லீட் அமைப்பிற்கு இந்த நாள் ஒரு சிறந்த நாள் என்று கூறி தன் உரையை தொடங்கிய அதன் நிறுவனர் சிவராஜா ராமநாதன் அவர்கள், இதே இடத்தில் தான் 2012 செப்டம்பர் 14ஆம் நாள் நேட்டிவ்லீட் தொடங்கபெற்றது என்றும் தானும் தியாகராஜர் கல்லூரி முன்னால் மாணவர் என்று பெருமை கொள்வதாகவும் கூறினார்.

“உலகம் எண்ணற்ற சிக்கல்களைக் கொண்டது அதற்கான தீர்வுகளைக் கண்டறிதலே ஒரு ஆகச்சிறந்த தொழில் முனைவாளராக மாற வழி. தொழில் முனைவு பொருள் ஈட்டுவதற்காக மட்டும் அல்லாமல் பொருள் தருவதாகவும் இருத்தல் வேண்டும்,”

என்று கூறிய சிவராஜா நேட்டிவ்லீட்டின் பிரத்தியேக மாதிரியான Enabling, Nurturing, Incubating, Investing பற்றிய தெளிவான பகிர்தலை அளித்தார். நிகழ்வின் சிறப்பு விருந்தினரான சுகுமார் நடராஜன் பேசுகையில்,

“தொழில் முனைவோர்கள் கிடைக்கிற வாய்ப்புகளைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும்,”

என்கிற சிந்தனையுடன் தன் உரையை தொடங்கிய சுகுமார் தனது கடந்த கால பயணத்தை பகிர்ந்து கொண்டார். 32 வருடங்களுக்கு முன்னர் 10-ம் வகுப்பு கூட படிக்காத தம் தந்தை நாகராஜன் அவர்களால் தொடங்கபெற்றது இந்த அணில் நிறுவனம் என்றும் கடுமையான உழைப்பாளியான அவர் முதலில் ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்த பொழுது இந்த வாய்ப்பு கிடைத்தது என்றார். அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டதனாலேயே இன்று அணில் என்னும் ஒரு பிராண்ட் உருவாகி வளர்ச்சி கண்டுள்ளது என்றும் கூறினார்.

“வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தக் கற்றுகொள்வதே தொழில் முனைவின் முதல் படியாக இருக்க முடியும்,”

என்று கூறிய அவர் சுவர் விளம்பரங்களும், வானொலி விளம்பரங்களும் முதன் முதலில் செய்த ஒரு உணவு நிறுவனத்தார் தாங்கள் தான் என்றும் அதனை இன்றும் தொடர்ந்து கொண்டு இருத்தலே அவர்களின் வெற்றிக்கு ஒரு வழியாக இருப்பதாகவும் கூறினார்.

தற்போது 1700 ஊழியர்களைக் கொண்டு 20 பொருட்கள் வரை சந்தையில் விற்பனை செய்து கொண்டு இருப்பதாகவும் அதை அடுத்த 3 வருடங்களில் 10 ஆயிரம் ஊழியர்களாக உயர்த்தி 30 பொருட்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வருவாயை தற்போது உள்ள 220 கோடியில் இருந்து 500 கோடியாக உயர்த்த திட்டங்கள் இருப்பதாகவும் கூறினார். 

தற்போது அணில் குழுமத்தின் சந்தைப் பங்கு 50 - 60% என்றும் அதனை உயர்த்தவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். தங்களின் சந்தைபடுத்தும் உத்திகளை நமது தொழில் முனைவாளர்களுடன் பகிர்ந்துகொண்ட அவர் இறுதியாக,

“உங்களுக்கான பாதையை நீங்களே உருவாக்குங்கள்,” என்றார்.  

தமிழக சந்தைகளில் பெரும் வரவேற்பையும் இல்லத்தரசிகளின் மனதில் அழியாத இடத்தையும் பிடித்து இருக்கும் அணில் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் தங்களின் பயணத்தை மிகவும் எளிய நடையில் மதுரை நகரின் தொழில் முனைவோர்களுடன் பகிர்ந்து அவர்களின் சந்தேகங்களுக்கு விடை அளித்தது மிகவும் சிறப்பான அனுபவமாக அமைந்தது.