'என்னிடம் எஞ்சியவை 50 ரூபாயும் பசியுமே'- ஒரு நம்பிக்கை பயணம்

28

என் கண்களை மூடிக்கொண்டு கடந்த காலத்தை அசைபோடும் வேளைகளில், நான் வீழ்ந்து கிடந்த ஒரு பழைய நினைவுதான் முன்னே வரும். ஜிராக்பூரில் உள்ள ஒரு ஃபிளாட்டில் உட்கார்ந்திருக்கிறேன். இரவு உணவு சாப்பிடவும் கையில் காசு இல்லை. என் பாக்கெட்டை மீண்டும் ஒருமுறை பார்க்கிறேன். அதில் இருந்த 50 ரூபாய் நோட்டு என்னைப் பார்த்து சிரிக்கிறது. செலுத்தப்படாத பில்கள், நொண்டிச் சாக்குகள் சொல்லி ஒரு வாரமாக தள்ளிப்போட்ட ஃப்ளாட் வாடகை, சட்டென கட் ஆன செல்போன் அவுட்கோயிங் கால், என்னை முட்டாளாக நினைத்து ஏற்கெனவே கைகழுவிய என் குழு.

அவர்களின் எண்ணம் எல்லாம் ஒரு வகையில் சரியே. நான் உண்மையில் பைத்தியக்காரன்தான் போலும். ஒரு நல்ல வேலையும், நல்ல சம்பளமும் கண் முன்னே இருக்கும் சூழலில், தொழில்முனைவில் தொங்கிக் கொண்டிருப்பது ஏன்? சொகுசான வாழ்க்கை எளிதாகக் கிடைக்கும் நிலையில், இப்போது சாப்பாடு வாங்கக் கூட காசு இல்லாமல் பசியில் வாடுவது ஏன்? அந்தப் பசிமிகு இரவில் போதிய உணவு வாங்கிட 50 ரூபாய் போதுமானதுதான். ஆனால், அதை வைத்துதான் அடுத்த நாள் காலையில் நான் ராஜ்புரா சென்று, ஒரு பள்ளி ஒருங்கிணைப்பாளரைச் சந்திக்க வேண்டும். சமீபத்தில் அந்தப் பள்ளியில் ஒரு பயிலரங்கு நடத்தினேன். ஒரு வாரத்துக்குப் பிறகுதான் கட்டணம் திரட்டப்பட்டு கைக்கு பணம் வருவது வழக்கம். ஆனால், அந்தச் சிறு தொகையை முன்கூட்டியே தருமாறு அந்த ஒருங்கிணைப்பாளரிடம் கேட்பதற்கு உரிய காரணங்களைச் சொல்வதற்காக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

அதிகாலை 6 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு உறங்க முயற்சி செய்தேன். எல்லாம் சரியாகிவிடும் என்ற நல்ல சிந்தனையுடன் அடுத்த நாள் காலை கண்விழித்தேன். எனக்கு வேண்டிய பலத்தையும் உறுதுணையையும் தரவேண்டும் என்று ஆஞ்சநேயரை வேண்டினேன். புறப்படத் தயாரானேன். இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கத் தயாரானேன். ஆம், அதன் மூலம் சொற்ப காசை மிச்சப்படுத்தினேன். என் உடலில் தெம்பு இல்லை. என் வயிறு காலியாக இருந்தாலும், இதயத்தில் மட்டும் நம்பிக்கை நிரம்பி இருந்தது. பள்ளி ஒருங்கிணைப்பாளர் உடனான சந்திப்பில் மட்டுமே என் முழு கவனம் இருந்தது.

பேருந்தில் ஏறினேன். டிக்கெட் வாங்கினேன். பேருந்துக் கட்டணம் ரூ.35. எஞ்சிய ரூ.15-ஐ பாக்கெட்டில் பத்திரப்படுத்தினேன். புறநகரில் உள்ள அந்தப் பள்ளியின் வாயிலில் பேருந்து நிற்கும் என எதிர்பார்த்துக்கொண்டே ஜன்னலோரம் வெறித்துப் பார்த்தபடி பயணத்தைத் தொடர்ந்தேன்.

சட்டென, அந்தப் பேருந்து வேறு பாதையில் சென்றதை கவனித்தேன். நடத்துநரிடம் விசாரித்தேன். நான் செல்லும் பள்ளிக்குப் போக வேண்டும் என்றால், அங்கேயே இறங்கிவிட்டு மாற்றுப் பாதையில் செல்லுமாறு வழிகாட்டினார். அங்கிருந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றால் 3 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அந்த நெடுஞ்சாலையில் என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருவென முழித்துக்கொண்டிருந்தேன். காலார நடக்கத் தொடங்கினேன். அப்போது, என் தோழி ஒருவர் என்னை செல்போனில் அழைத்தார். என் நிலைமை பற்றி ஏற்கெனவே தெரிந்துகொண்ட அவர், வருத்தத்துடன் எல்லாவற்றையும் விசாரித்தார். நானும் மனம் விட்டுச் சொல்லத் தொடங்கினேன்.

அந்த ஒருங்கிணைப்பாளர் மட்டும் என் கோரிக்கையை ஏற்று, முன்கூட்டியே தொகையைத் தராமல் போய்விட்டால் என் கதி அதோகதிதான்; அப்புறம் நான் சண்டிகருக்கு நடந்துதான் திரும்ப வேண்டும் என்று நான் சொன்னதைக் கேட்ட அந்தத் தோழி அழுதுவிட்டார். துயரத்தில் இருந்த நான் 'கவலைப்படாதே' என்று அவரைத் தேற்றுவதற்குப் பெரும் பாடுபட்டேன்.

ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்த பின்னர், ஸ்கூட்டரில் வந்த ஓர் அன்பர் எனக்கு லிஃப்ட் கொடுத்தார். பள்ளிக் கட்டிடம் முன்பே கொண்டு சேர்த்தார். அந்த சிவனை வேண்டியபடி உள்ளே நுழைந்தேன்.

பள்ளிக்குள் என் வியூகங்களை அசைபோடத் தொடங்கினேன். ஒருவேளை, 'ஒரு வாரம் கழித்து தொகையை செலுத்துகிறேன்' என்று அந்தப் பள்ளி ஒருங்கிணைப்பாளர் சொல்லிவிட்டால், 'என் மணிபர்ஸை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டேன். ஒரு 500 ரூபாய் மட்டும் கிடைக்குமா?' அல்லது 'பள்ளி அருகே ஒரு ஏடிஎம் கூட இல்லை. வீட்டுக்குப் போக உதவ முடியுமா?' இப்படிக் கேக்கலாமா? அப்படிக் கேக்கலாமா? என மனதுக்குள் பல கேள்விகள் அடுக்கியபடியே வராந்தாவில் அவருக்காக காத்திருந்தேன். அவரும் வந்தார். என்னைப் பார்த்தவுடன் அவர் சொன்னவை என்னை அப்படியே புரட்டிப் போட்டது.

"க்‌ஷிதிஜ், நீங்கள் வந்ததில் மிக்க மகிழ்ச்சி. இதுவரை நாங்கள் திரட்டிய ரூ.25,000-ஐ வாங்கிக்கொள்ளுங்கள்" என்றபடி நீட்டினார். நம்புங்கள், நான் அழுதுவிட்டேன்!

- க்‌ஷிதிஜ் மேஹ்ரா, சிறப்புக் கட்டுரையாளர்.

| கல்வித் துறையில் தொழில்முனைவராக இருப்பவர் க்‌ஷிதிஜ் மேஹ்ரா. யுவ்ஷாலா-வின் நிறுவனரான இவர், மாணவர்களுக்கு வேலை - தொழில் வாய்ப்புகள் ரீதியிலான ஆலோசனைகளை வழங்கி வருபவர். |

தமிழில்: கீட்சவன்