'கோட் கேர்ள்'- உலகெங்கும் கோடிங் செய்யும் பெண்களைப் பற்றிய ஆவணப் படம்!

0

ஒரு வசதியற்ற உண்மை’ (An Inconvenient Truth) ஆவணப் படத்தின் மூலம் பிரபலமானவரும், விருது பெற்ற திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான லெஸ்லி சில்காட்-ன் சமீபத்திய படைப்பான ‘கோட் கேர்ள்' (CodeGirl), யூ-ட்யூபில் ஹிட் அடித்து வருகிறது.

ஏறத்தாழ 1 % பெண்கள் கணினி அறிவியல் கற்கிறார்கள் மேலும், மென்பொருள் வடிவமைப்பவர்களில் 20% தான் பெண்கள். மாற்றத்திற்கான நேரம்! பெண்களை ஊக்கப்படுத்துங்கள் @codegirlmovie !
-- கோட்கேர்ள் (@codegirlmovie) நவம்பர் 3, 2015

யூ-ட்யூபின் சி.இ.ஓ, சூசன் வொஜிஸ்கி இது குறித்து பேசுகையில், அறுபது நாடுகளிலிருந்து 5000 பெண்கள் டெக்னோவேஷன் நடத்தும் சர்வதேச தொழில் முனைவு மற்றும் கோடிங் போட்டியில் பங்கேற்பதை பின்தொடரும் கதை தான் ‘கோட்கர்ள்’. தத்தம் உள்ளூர் சமூகத்தில் இருக்கும் சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும் விதமாக, ஒரு செயலியை வடிவமைக்க, பெண்களுக்கு மூன்று மாத காலம் இருக்கிறது. அவர்கள் போட்டியைப் புரிந்துக் கொள்வதும், ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளுடன் கலந்துரையாடுவதும், கோடிங் செய்யக் கற்றுக் கொள்வதும், பத்தாயிரம் டாலர் வெற்றி பெறும் நோக்கோடு தங்கள் யோசனைகளை முன் வைப்பதும் படமாக பிடிக்கப்பட்டுள்ளது.”

பெண்கள் தொழில்நுட்பத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணம், இத்துறையில் முன்மாதிரிகளுக்கான பற்றாக்குறை தான் எனக் கருதுகிறார், சூசன் வொஜிஸ்கி. “பிரபலமான கலாச்சாரத்தில், திடமான முன்மாதிரிகளைப் பெண்கள் பார்ப்பதில்லை. பதினோரு நாடுகளின் பிரபல திரைப்படங்களை ஆராய்ந்ததில், இருபது சதவிகிதத்திற்கும் கீழான அளவில் தான், தொழில்நுட்பம் மற்றும் கணினியை சார்ந்திருந்த வேடங்களை பெண்கள் ஏற்றிருந்தனர்”, என 2015 மே மாதம் கூகுளால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றை மேற்கோள் காட்டுகிறார்.

‘கீக் சப்ளைம் (Geek Sublime): தி ப்யூட்டி ஆஃப் கோட், தி கோட் ஆஃப் ப்யூட்டி’ புத்தகத்தின் ஆசிரியர் விக்ரம் சந்திரா, எப்படி இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் 30 சதவிகிதம் பெண்கள் உள்ளனர் என்றும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் 21 சதவிகிதம் மட்டுமே இருக்கின்றனர் என்பதையும் பற்றி எழுதியிருக்கிறார்.

கடந்த மாதம், ஹெர்ஸ்டோரி அமெரிக்கா மற்றும் இந்தியாவில் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் பெண்களின் இரட்டைத் தன்மையை ஆராய்ந்தது. “கோடிங் மற்றும் நிரலாக்கம் (Programming) ஆண்களின் வேலை என்றொரு எண்ணம், அமெரிக்காவில் தொழில்நுட்பத்தில் குறைந்த அளவில் இருக்கும் பெண்களுக்கு மத்தியில் இருக்கிறது. ஆனால், இந்தியாவிலோ, பெண்களுக்கு பொறியியல் மிகவும் வசதியானதாக இருக்கிறது. இது ஒரு சீரிய கலாச்சார சிந்தனை, மேலும் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு. தொழில்நுட்ப ஏற்றத்தின் போது, அதிக அளவிலான பெண்கள் முனனணி தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்ந்து, இன்று உயர் பதவிகளோடும், அனுபவ வளத்தோடும் புதிய நிறுவனம் தொடங்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள்.”

இளைஞர்கள், அதிகம் உபயோகிக்கும் ஊடகத் தளமாக யூ-ட்யூப் இருப்பதனால், கூகுளின் ‘மேட்-வித்-கோட்’ நிகழ்ச்சி ‘கோட்கேர்ள்’-உடன் இணைந்து, இளைஞர்களையும், பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் எட்டும் வகையில் ஐந்து நாட்கள் இலவசமாக பார்க்க இந்த ஆவணப் படம் வெளியிடப்பட்டது. படத்தைப் பாருங்கள், பெண்கள் தொழில்நுட்பத்தில் வளர ஊக்கப்படுத்தும் விதமாக அதைப் பகிருங்கள்.

ஆவணப்படத்தின் ஹிந்தி பதிப்பைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

ஆக்கம் : Emmanuel Amberber | தமிழில் : Sneha