வார விடுமுறையைக் கழிக்க அழகிய சுற்றுச்சூழலுடன் கூடிய எட்டு ஓய்விடங்கள்!

4

இளைப்பாறுதல் என்பது மற்ற எல்லாவற்றையும்விட தொழில்முனைவோருக்கு மிகவும் முக்கியமானது. உங்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்தால், இந்த எழில்மிகுந்த சுற்றுச்சூழலுடன் அமைந்துள்ள எட்டு ஓய்விடங்களுக்கு பையில் துணிகளை திணித்துக்கொண்டு உடனே புறப்படுங்கள்! தனிமையாக, கொஞ்சம் சூரியனுடன் காலாற நடந்து உற்சாகமாக பொழுதுபோக்கலாம். இந்த அழகிய ஓய்விடங்களில் முழுமையாக நீங்கள் இளைப்பாறமுடியும்...

பனசுரா மலை வாழிடம், வயநாடு, கேரளா

கடல்மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருக்கிறது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் கேரளாவின் அற்புதமான மண் புகலிடம், பூமி ஓய்விடம். இயற்கையாக அமைந்த ஓய்விடம் 35 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டிருக்கிறது. மாநிலத்தின் பச்சை சொர்க்கமான வயநாட்டின் உச்சியில் அமைந்துள்ளது.

பனசுரா நிறைய சலுகைகள் வழங்குகிறது. மலைகள் சூழ்ந்த இடத்தில் மலையடிவாரத்தில் இயற்கையான குளிர்ச்சியான சிறு குடில்கள் மற்றும் அறைகளில் தங்கி மகிழலாம். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒனறான மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதியான இங்கே எண்ணற்ற சிறு ஓடைகளும், சீறிப்பாயும் அருவிகளும், பசுமைக்குப் பஞ்சமில்லாத தேயிலைத் தோட்டங்களும், பறவைகளை பார்வையிடுவதற்கான இடங்களும், வளர்ந்த பழங்குடி மக்களுமாக பனசுரா மனம் கவர்கிறது.

ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் பனாசுரா, இயற்கை மற்றும் சாகசப் பிரியர்களுக்கும் விருந்து படைக்கிறது. பூமியில் அமைக்கப்பட்ட அறைகள் 7 ஆயிரம் ரூபாய் வாடகையில் இருந்து இரட்டை வில்லாக்கள் ஓர் இரவுக்கு 17 ஆயிரம் ரூபாய் வாடகையில் கிடைக்கின்றன. 

இணையதளம் 

வொய்ல்டர்நெஸ்ட், கோவா

மேற்குத்தொடர்ச்சி மலையில் பகுதியான சாயத்ரி மலைப்பகுதியில் உள்ள சோர்லா மலைத்தொடர்ச்சியில் இருக்கிறது இந்த ஓய்விடம். கோவா, கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களில் எல்லைகள் குவியும் இடத்தில் அரிதான வனவிலங்குகள் நிறைந்த பகுதி இது. அந்த வனப்பகுதியில் சோம்பல் கரடி, ஓநாய் பாம்பு, அரிதான கழுகுகள் என காணக்கிடைக்கின்றன.

இயற்கை ஆர்வலரான கேப்டன் நிதின் தோண்ட்டின் கனவுத் திட்டமான, வொய்ல்டர்நெஸ்ட் ஒரு மறைந்திருக்கும் சொர்க்கம். அக்கேசியா மரங்களால் கட்டப்பட்டது. சோலார் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் இயற்கை ஆர்வலர்கள் அடர்த்தியான காட்டில் பயணம் செய்ய உதவுகிறார்கள். வனப்பகுதியை வளர்க்கும் முயற்சிகளும் அங்கே நடந்துவருகின்றன. அதற்காக அர்ப்பணிக்கப்பட்ட குழுவினர் 30 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளன. அங்கு வாழும் பல்வேறு வகையான உயிரினங்கள், பறவைகள், பூச்சிகளுக்காக ஒரு வெளியை உருவாக்கியுள்ளனர்.

வெறும் பொழுதுபோக்கு மட்டும் இங்கு கிடைப்பதில்லை. துறை சார்ந்த நிபுணர்கள் அழைத்துப் பேசவைக்கிறார்கள். நடனம், இயற்கையில் கலை மற்றும் பாம்புகள் பற்றியும் அவர்களை பேசவைக்கிறார்கள்.

உணவைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான பாரம்பரியமான சமையல். அதுவும் முந்திரியில் உருவாக்கப்பட்ட ஹுராக் என்ற மிகவும் புகழ்பெற்ற பானத்தையும் அங்கே உண்டு. ஆனால், வொய்ல்டர்நெஸ்ட்டை தேடிவருவதற்கு இவையெல்லாம் காரணமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கம் தோண்டுவதற்காக இந்த அடர்காட்டை வனத்துறையினர் திறந்துவிட்டனர். அப்போது கேப்டன் தோண்ட்டின் முயற்சியால் 450 ஏக்கர் வனவிலங்குகள் வாழும் பகுதி காப்பாற்றப்பட்டது. இயற்கை ஆர்வலர்களின் நேசப் பட்டியலில் நிச்சயமாக வொய்ல்டர்நெஸ்ட் ஏன் இடம்பெற்றிருக்கிறது என்பதற்கு காரணம் புரிந்திருக்கும்.

இங்கு உணவு உள்பட ஓர் இரவு அறையில் தங்குவதற்கு 6 ஆயிரம் ரூபாய் வாடகை.

இணையதளம் 

வொய்ல்டு மஹ்சீர், தேஸ்பூர், அசாம்

அகன்று விரிந்து கரைபுரளும் பிரம்மபுத்திரா நதியின் வடக்குக் கரையில் ஒரு காலனித்துவ தோட்ட விடுதி, அதுதான் வொய்ல்டு மஹ்சீர். வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். ஏன் அங்கே நீங்கள் போகக்கூடாது? தேயிலைத் தோட்டங்களின் அழகின் மர்மத்தில் உங்களை நீங்கள் தொலைத்துவிடுவீர்கள். காசிரங்கா தேசிய பூங்காவைப் பார்க்க அதிகாலை நேர ஜீப் சவாரி… பிரம்மபுத்திராவில் டால்பின் காட்சிகள்… ஒரு தீவில் சாப்பாடு… பழங்குடி கிராமத்துக்குச் செல்லுதல் என எல்லாமே ஒரே இடத்தில்… ஒரே விடுமுறையில் அனுபவித்துவிடலாம்.

ஓய்விடத்தில் இளைப்பாற நினைப்பவர்களுக்கு, டென்னிஸ் மற்றும் கோல்ப் விளையாட்டுகளை அருகிலுள்ள மிசா போலோ கிளப்பில் விளையாடும் வசதி ஏற்படுத்தித் தந்திருந்தார்கள். இந்த கிளப் பிரிட்டிஷ் அரசு 1888ல் ஏற்படுத்தியது. மஹ்சீர், அசாமிஸ் மற்றும் ஆங்கிலோ இந்தியன் உணவுகளை தங்கள் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். நீங்கள் விரும்பிச் சாப்பிடுவதோடு, அந்த சமையலை கற்றுக்கொள்ளவும் செய்யலாம். அசலான இயற்கையை, வனவிலங்குகளை கண்டறிதல், மக்கள் சந்தித்தல் முற்றிலும் புதிய உலகத்தை பார்ப்பீர்கள்.

இணையதளம் 

கெம் வில்லாஸ், ரத்தம்பூர், ராஜஸ்தான்

ஜெய்ப்பூரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரத்தம்பூரின் மையப் பகுதியில் இந்தியாவின் தலைசிறந்த புலிகள் நிபுணர்களால் அமைக்கப்பட்ட கெம் வில்லாஸ்கள் இருக்கின்றன. சுற்றுச்சூழலில் முக்கியமான வன முகாமில் எட்டு குடில்கள் மற்றும் ஏழு கூடாரங்கள் பசுமையான இணைப்பாக ரத்தம்பூரில் இருக்கின்றன.

சவாரியில் நீங்கள் புலியை நேரில் பார்க்கலாம். ப்ளாக் பக் மான்களின் துள்ளலைப் பார்க்கலாம். மேலும் அந்தக் காட்டில் உலவும் அரிய வகை மான்களையும் கண்டு ரசிக்கலாம். இயற்கை நடை, ஒட்டகப் பயணம், ஆற்றில் சவாரி… கூடுதல் உற்சாகம். நீங்கள் சற்று உளைச்சலற்ற விடுமுறையைக் கழிக்க விரும்புகிறீர்களா, சம்பால் ஆற்றில் அமர்ந்துகொண்டு ராஜஸ்தானி உணவை ருசித்து, சூரிய அஸ்தமனத்தின் அழகை ரசித்து, பாலைவனப் பறவைகளைப் பார்த்துக்கொண்டு பொழுதைக் கழிக்கலாமே.

வில்லாக்களின் விலைகள் ஒர் இரவுக்கு சாப்பாடு உட்பட 11 ஆயிரம் தொடங்கி 25 ஆயிரம் ரூபாய் வரை இருக்கின்றன.

இணையதளம் 

தி ட்யூன், புதுச்சேரி

தென்னிந்தியாவின் அடையாளமாக இருக்கும் பாரம்பரியமான பொருட்களை வைத்து நவீனமாக உருவாக்கப்பட்ட குடில்களில் தங்கி, கண் விழிக்கும்போது கடல் அலைகளின் சங்கீதம் கேட்கலாம். உங்கள் நாளை யோகாவுடன் தொடங்கி, ஆயுர்வேத ஸ்பாவில் சிகிச்சை பெற்று, கோரமண்டல் கடற்கரையில் உலவலாம். கைப்பந்து அல்லது டென்னிஸ் விளையாடலாம். ட்யூன் ஓய்விடத்தின் தனித்தன்மை என்பது நுகர்வோர்களுக்கு மிகச்சிறந்த ஆடம்பரத்தை அளிக்கிறது. வாழ்வின் எளிய சந்தோசங்களை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

ட்யூனுக்குச் சொந்தமான பண்ணை இருக்கிறது. அதில் பசுக்கள், கோழிகள், வான்கோழிகள் மற்றும் முயல்கள் உள்ளன. ஓவியம் மற்றும் பானை செய்தல், குதிரையேற்றம், படகு சவாரியும் அந்தப் பண்ணையில் இருக்கின்றன. இதிலெல்லாம் உங்களுக்கு ஆர்வம் இல்லையா… கவலையே வேண்டும் 1500 தலைப்புகளில் டிவிடி நூலகம் இருக்கிறது. அங்கே போய் பொழுதைக் கழிக்கலாம். அங்கேயே தங்கி ஓவியம் அல்லது சிற்பத்தை உருவாக்கும் ஆர்ட்டிஸ்ட் இன் ரெஸிடன்ஸ் நிகழ்வு இருக்கிறது. இங்கு உலகம் முழுவதிலும் இருந்து கலைஞர்கள் வந்து பங்கேற்கிறார்கள்.

விடுமுறையைக் கழிப்பதில் இன்னும்கூட நீங்கள் சமரசம் ஆகவில்லையா… அவர்கள் செல்லப் பிராணிகளை அனுமதிக்கின்றனர்.

காலை உணவுடன் 6 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையில் விலை இருக்கிறது.

இணையதளம் 

சாம் – இ – சர்ஹாத் கிராம ஓய்விடம், கட்ச், குஜராத்

எல்லையில் ஓர் அஸ்தமனம் என்று மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள், கச்சின் உப்பு சதுப்பு நிலப்பகுதியில்தான் இந்த கிராமத்து ஓய்விடம் இருக்கிறது. இந்திய சுற்றுலாத் துறையின் முயற்சி இது. இங்குள்ள உள்ளூர் மக்களுக்கு ஐநாவின் வளர்ச்சிக்கான திட்டம் சுற்றுலா மூலமாக வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.

ஆமாம்… இந்த முழு ஓய்விடமும் ஹோட்கா கிராமத்தின் மக்களால் நிர்வகிக்கப்படுகிறது.

மிக அரிய வாய்ப்பை சாம் – இ - சர்ஹாத் வழங்குகிறது. மண் மற்றும் பூமியின் வண்ணங்களால் தீட்டப்பட்ட பங்காஸ் எனப்படும் குடில்களில் தங்கலாம். இந்துக்களின் மெஹ்வால் இனம், முஸ்லிம்களின் ஹாலேபோட்ரா இனங்களுக்குச் சொந்தமான உணவை ருசிக்கலாம். அவர்களுடைய பண்பாட்டை ரசிக்கலாம். ஸாரி தந்த் – பறவையை கண்காணிக்கும் ஆர்வலர்களின் சொர்க்கம். இங்கு குளிர்காலத்தில் 30 ஆயிரம் பறவைகள் வருகின்றன. இருவாட்சிப் பறவைகளின் தீவும்கூட – மிகப்பெரிய துணைக்கண்டங்களுள் இந்த உப்பு சதுப்புநிலப்பகுதியும் ஒன்று.

இந்த ஓய்விடத்தின் சிறந்த அம்சம், இங்கே டிவி இல்லை.

விலைகள் 3,200 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை இருக்கின்றன. சாப்பாடு உட்பட.

இணையதளம்

இமயத்தில் ஆனந்தா, தேர்ஹி-கர்வால், உத்தரான்சல்

ஆனந்தா என்பது புத்துயிர்ப்புக்கான ஆன்மிக பாதை. யோகா, ஆயுர்வேதா, வேதாந்தா (வாழ்க்கையின் தத்துவம்) ஆகிய மூன்று தூண்களைக் கொண்டிருக்கிறது. இங்கு வரும் ஒவ்வொரு நுகர்வோரும் முழுமையான நலம் பெறவேண்டும் என்பதே ஆனந்தாவின் நோக்கம்.

இமய மலையின் அடிவாரத்தில், பின்னே கங்கையும் சால் காடுகளும் பின்னணியாக இருக்கின்றன. உடல், மனம், ஆன்மா ஆகியவற்றுக்கு இந்த ஸ்பா ஓய்விடம் மிகப்பெரிய விடுதலையைத் தருகிறது. சாகசம் விரும்புகிறவர்கள் இங்கிருந்து ரிஷிகேஷூக்கு ஜீப்பில் சென்றுவரலாம். படகு சவாரி, பங்கி ஜம்பிங் மற்றும் மலையேறுதல் ஆகிய சாகசங்களில் ஈடுபடலாம். நீங்கள் அடந்த இமயமலைக் காடுகளுக்கு ஒரு சுற்று போய்வரலாம். அனுபவம் அலாதியானது.

இணையதளம்

த மாச்சன், லோனாவாலா, மஹாராஷ்டிரா

மிக உயரத்தில் மரங்களுக்கு இடையே மர வீடுகளைத் தருகிறது த மாச்சன் ஓய்விடம். புனேயில் இருந்து ஒன்றரை மணி நேர பயமத்தில் வருகிறது. மிக அழகிய சுற்றுச்சூழல் பகுதியில் உங்களுக்குத் தேவையான தனிமை சூழ்ந்த தொட்டில்கள் கிடைக்கின்றன. கோரைக்காட் கோட்டை, லோகாகாட் கோட்டை மற்றும் கார்லா மற்றும் பாஜ்ஜா குகைகள் பக்கத்திலே இருக்கின்றன. கிமு 200 காலத்தைய 22 குகைகளின் கூட்டத்தை இங்கே பார்க்கலாம்.

விலைகள் 8,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை இருக்கிறது. இருவர் தங்கலாம். காலை உணவு உட்பட. 

இணைதளம்

ஆக்கம்: SHWETA VITTA  | தமிழில்: தருண் கார்த்தி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்

தனியே உலகைச் சுற்றும் துணிச்சல் பெண்கள்!

இயற்கை அழகை ரசிக்கலாம் வாங்க!