யூடியூப் வழியே கிராமிய சமையல்: லட்சங்களில் சம்பாதிக்கும் உலகை வசீகரிக்கும் தமிழ் 'டாடி'

10

கிராமிய உணவு வகைகளை சமைத்துக் காட்டி, யூடியூப் சூழ் இந்திய உணவுப் பிரியர்களை வெகுவாக வசீகரித்து வருகிறார் திருப்பூரைச் சேர்ந்த ஆறுமுகம் குடும்பத்தினர். இணையக்களத்தில் போட்டி மிகுந்த யூடியூப் சேனல்களில் எளிமையான அணுகுமுறையால் இந்தக் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ள மவுசு வியக்கத்தக்கது. யூடியூப் களம் கண்டு சில மாதங்களே ஆன நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆறுமுகம் டாடி-க்கு புகழ் வெளிச்சத்தைப் பரவவிட்டிருக்கிறது, 'விலேஜ் ஃபுட் ஃபாக்டரி'.

வில்லேஜ் ஃபூட் ஃபாக்டரி - யூடியூபர்:

திருப்பூரில் வசிக்கும் ஆறுமுகம் - செல்வி தம்பதியின் முதல் மகன் கோபிநாத். இவர் பொறியியல் படிப்பை முடித்து சென்னையில் திரையுலகில் 2015-ல் இருந்து 2016-ம் ஆண்டு வரை உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் பணியாற்றிய திரைப்படங்கள் இன்றும் வெளிவராத நிலையில், சிறு வருவாயை எதிர்பார்த்து இவர் தொடங்கிய முதல் யூடியூப் சேனல் 'தமிழ் ஃபாக்டரி'. முதலில் திரையுலகின் செய்திகளை மட்டுமே மக்களுக்கு அளித்து வந்த கோபிநாத், புதிதாகத் தனது குடும்பத்தினரை வைத்துத் துவங்கிய இரண்டாவது யூடியூப் சேனல்தான் 'தி வில்லேஜ் ஃபூட் ஃபாக்டரி'.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த சேனல் துவங்கப்பட்டது. கிராமிய உணவு சமையலை மட்டுமே கருத்தாகக் கொண்டு இதை கோபிநாத் துவக்கினார். இதில் பல்வேறு வகை கிராமிய உணவுகளைச் சமைத்து வீடியோக்களாக பதிவிடுகிறார். முதலில் அடிப்படை வருவாய்க்காக இந்த சேனல் துவங்கப்பட்டாலும், பின்பு நாளடைவில் வியக்கத்தக்க அளவில் பெரும் பிரபலத்தை அடைந்துள்ளது.

சேனலின் கதாநாயகன் டாடி:

வில்லேஜ் ஃபூட் ஃபாக்டரி சானலில் வரும் அனைத்து வீடியோக்களிலும் கிராமிய உணவைச் சமைத்து அனைவரின் நாவிலும் செய்முறையிலேயே நாவில் எச்சிலூர வைப்பவர் ஆறுமுகம். இன்று உலகம் முழுவதும் 'டாடி' என்று அழைக்கப்படும் இவர்தான் இந்த சேனலின் கதாநாயகன். இவர் 10 வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் தன் சொந்த போடிநாயக்கனூரை விட்டுப் பிழைப்புக்காக திருச்சி வந்தடைந்தார். தற்போது பெயின்டராக பணியாற்றும் இவர், முன்பு ஜவுளி வியாபாரம் செய்து வந்ததாகக் குறிப்பிடுகிறார் கோபிநாத். 18 மொழிகள் அறிந்த இவருடன் பிறந்தவர்கள் 12 பேர். மேலும் இவருக்குச் சமையல் கலையில் அதிக ஆர்வம் உள்ளதாகவும், ஆறுமுகத்தின் உறவினர்களிடையே அவருக்குப் பெரிதாக மதிப்பு இல்லாததால் தன் தந்தையைப் பெருமைப்படுத்தவே அவரை வைத்து இந்தச் சேனலை துவக்கியதாகக் கூறுகிறார் கோபிநாத். தாய் செல்வியின் சமையல் கைவண்ணத்தையும் உலகுக்குக் காட்டலாமே என்றதற்கு, 

"இல்லை, என் அம்மாவும் என் தம்பியும் என் அப்பாவுக்கு உதவி செய்வார்கள். ஒருநாள் அவர் சமைப்பதை வீடியோ எடுத்தப்போது, பார்ப்பதற்காக மிகுந்த அழகாக இருந்தது. அதில் எளிமையுடன் கூடிய ஈர்ப்புத்தன்மை இருந்ததை அறிந்தேன். எனவே, எல்லாவற்றையும் அவரையே சமைக்கச் சொல்லிட்டேன். அவருக்கும் ஆர்வம் அதிகம். அதனால் அந்த ஆர்வத்துக்கு நான் இன்னும் ஊக்கம் கொடுக்கிறேன்" என்கிறார்.

வீடியோக்களும் வியத்தகு வரவேற்பும்

தற்போது 86 வீடியோக்கள் கொண்டுள்ள விலேஜ் ஃபூட் ஃபாக்டரி சேனலின் முதல் வீடியோ நண்டு கறி செய்முறை. முதல் வீடியோ என்பதால் அவர் எண்ணியவாறு சரியாக அமையவில்லை என்றாலும், இரண்டு நாட்களில் அந்த சேனல் பார்வையாளர்களின் எண்ணிக்கை 2,000-ல் இருந்து 3,000 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும், வீடியோவின் தயாரிப்பு மிக எளிமையாகவும் உற்சாகமூட்டுவதாகவும் இருப்பதாகப் பார்வையாளர்கள் அளித்த கருத்துக்களின் அடிப்படையில் கோபிநாத் அவரது மற்ற வீடியோக்களையும் அவ்வாறு தயாரித்து தானே தொகுத்து பதிவேற்றம் செய்வதாக கூறினார்.

அவ்வாறு அவர் தயாரித்த மற்றொரு பிரபல வீடியோ காடை கறி செய்முறை. பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து வீடியோக்களையும் குறைந்தபட்சம் 2 லட்சம் பார்வையாளர்களைக் கடப்பதே இந்தச் சேனலின் வல்லமையை பறைச்சாற்றுவதாக அமைந்துள்ளது. மேலும் இந்த சேனலை நாள் ஒன்றுக்கு 1700 புதிதாக சப்ஸ்கிரைப் செய்வதாகவும், ஒரு மாதத்துக்கு 60 ஆயிரம் பேர் பதிவு செய்வதாகவும் கோபிநாத் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

"எங்கள் சேனலின் மிகப் பிரபலமான வீடியோ 100 கோழிக் கால்கள் கிரேவி மற்றும் 300 முட்டை பொடிமாஸ். இந்த இரண்டு வீடியோக்களுக்கு மட்டுமே தனித்தனியாக கோடிக்கணக்கான பார்வையாளர்களை எட்டியிருக்கிறது" என்கிறார் கோபிநாத்.

யூடியூப் சேனலும் வருவாயும்

இதுவரை இந்த யூடியூப் சேனலின் சந்தாதார்களாக 3,30,000 பேர் உள்ளனர். மேலும், துவங்கிய குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலம் அடைந்த இந்தச் சேனலுக்கு விளம்பரம் அளிக்க முன்வருபவர்களும் அதிகம். ஒரு வீடியோவுக்கு மட்டுமே ஏறத்தாழ 20 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தத் தயாராக உள்ளதாக விளம்பரத்தினர் தெரிவித்தும், அதை ஏற்க மறுத்திருக்கிறார் கோபிநாத்.

”நாங்கள் இதுவரை தயாரித்து பதிவேற்றம் செய்த வீடியோக்களை பார்க்கும் சந்தாதார்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போது மாதம் சுமார் ரூ.2 லட்சம் வரை இதில் வருமானம் வருகிறது.”   

இதில் வரும் வருமானத்தை வைத்தே அவர் அடுத்த வீடியோவுக்கான தேவையை பெற்றுக் கொள்வதாகவும், வருமானத்தில் 30 சதவிகிதம் பணத்தை அடுத்த தயாரிப்பிற்கு உபயோகிப்பதாகவும் தெரிவிக்கிறார் கோபிநாத். யூடியூப் சேனலுக்காக செய்முறை விளக்கம் அளிக்க தயார் செய்யும் உணவு வகைகளை, சமைத்த பின் வீதி வீதியாகச் சென்று வீடற்ற ஏழை மக்களுக்கு அளித்து வருகிறார்.

குறிப்பிடத்தக்க உறுதுணை பின்புலம் இல்லாமல் இந்த அளவுக்கு ஏற்றம் கண்டு ஆறுமுகம் இணையப் பிரபலம் ஆகியிருப்பது குறித்து கேட்டதற்கு, 

"எங்கள் அப்பா நிறையக் கஷ்டமும் அவமரியாதையும் அனுபவித்தவர். அந்த நிலைமை மாறுவதற்கே நான் இந்த சேனலை பிரபலப்படுத்த முயற்சி எடுத்தேன். இன்றைக்கு அதுவே எனக்கும் என் குடுப்பத்துக்கும் பலன் கொடுத்திருக்கிறது. எங்கள் அப்பாவை உலகம் முழுக்க 'டாடி' என்று கூப்பிடுகிறபோது சந்தோஷமாக இருக்கிறது. நான் அவருக்குச் செல்லமா இருக்கட்டும் என்று கொடுத்த பெயர்தான் இன்று அவரது அடையாளம். இன்றைக்கு அவருக்குக் கிடைத்துள்ள மதிப்பைப் பார்க்கும்போது இன்னும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது" என்று நெகிழ்கிறார் கோபிநாத்.

இந்த யூடியூப் குடும்பத்தின் புதிய முயற்சியாக இவர்கள் கையில் எடுத்துள்ள உணவின் மூலப்பொருள் திராட்சை. 50 கிலோ ஆர்கானிக் திராட்சைகளைக் கொண்டு திராட்சை ரசம் (ஜூஸ்) தயாரித்து, அந்த வீடியோவை வெளியிட்டு லைக்ஸையும் ஷேர்களையும் அள்ள உள்ளனர்  கோபிநாத் குடும்பத்தினர். 

யூட்யூப் சேனல் லின்க்: Village Food Factory

கட்டுரை உதவி: வைஷ்ணவி பாலகுமார்