’விளையாட்டாய் ஒரு வணிகம்’- சிறிசு முதல் பெரிசு வரை விளையாட வைக்கும் நிறுவனம்!

0

”74 வயது தாத்தா ஒருவர் மரப்பலகையின் நடுவே இரு குச்சிகளால் ஒரு பந்தை லாவகமாக வளையத்திற்குள் விழவைக்க தன் முழு கவனத்தையும் குவித்திருந்தார். பந்து சரியாக விழந்தவுடன் அவரின் முகத்தில் 5 வயது குழந்தையின் ஆனந்த உற்சாகம்...

”60 வயது பாட்டி வேக வேகமாக பம்ப்பை அமுக்கி பலூனில் காற்றை நிரப்பிக் கொண்டிருந்தார்... தன் பலூன் மற்றவர்களைவிட பெரிதாக வேண்டும் என்று ஒரு சிறு குழந்தையைப்போல துள்ளலுடன் விளையாடினார்...” 

சரி இதலாம் எங்க நடக்குது...? என்று ஆவலுடன் கேட்போருக்கு இதோ விளக்கத்துடன் தன் தொழில் முனைப்பை பகிர்கிறார் ’தட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் நிறுவனர் சிவ சங்கரன்.

“விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு மட்டுமே ஆனது என ஒதுக்கப்பட்டிருக்கிறது. திருமணம் ஆனவர்களும், முப்பது வயதை கடந்தவர்களும் எல்லாம் எதுவுமே விளையாட முன் வர மாட்டார்கள்...” என்கிறு தொடங்கினார் சிவ சங்கரன்.

கைக்குள் அடங்கும் கருவிகளிலும், கேட்ஜெட்டுகளிலும் சுருங்கி இருக்கும் விளையாட்டு உலகை குழந்தைகளுக்கு மட்டுமல்ல, முதியோருக்கும் விரிவாக்கிக் கொடுப்பது தான் சிவ சங்கரனின் ‘தட்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ன் (Dhatz Entertainment) நோக்கமாக இருக்கிறது. இது மட்டுமின்றி வயது வரம்பின்றி, அத்தனை பேரையும் விளையாட்டில் ஈடுபடுத்தவும் செய்திருக்கிறது இவருடைய நிறுவனம்.

கரூரில் பிறந்து வளர்ந்த சிவசங்கரன், பொறியியல் படிப்பை முடித்து விட்டு மகேந்திரா நிறுவனத்திலும், அமெரிக்கா நிறுவனமான காட்டர்பில்லரிலும் வேலை செய்து கொண்டிருந்தார். 2014 ஆம் ஆண்டு வேலையிலிருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு நண்பரின் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அந்நிறுவனத்தில் தொடர்ந்து இயங்கவில்லை என்றாலுமே, அந்த அனுபவத்திலிருந்து நிறைய கற்றுக் கொண்டதாக சொல்கிறார் சிவசங்கரன்.

இந்த படிப்பினைகளில் இருந்து 2018 ஆம் தொடங்கியது ‘தட்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’. சிவசங்கரனும் அவருடைய மனைவி கிருஷ்ணவேணியும் இணைந்து விளையாட்டுக்களை வடிவமைக்கத் தொடங்கினார்கள். 

‘3 ரூல் பாயிண்ட்’ ( மொத்தமாகவே விதிமுறைகள் மூன்று மட்டுமே இருக்க வேண்டும் எனும் யோசனை), பாரம்பரியத்தை உட்புகுத்துதல், பாதுகாப்புக்கே முதலிடம், குடும்பமாக விளையாடுதலுக்கு முக்கியத்துவம் என ஏகப்பட்ட தயாரிப்புகளுடன் விளையாட்டுக்களை வடிவமைத்திருக்கிறார்கள் சிவசங்கரனும், அவருடைய மனைவியும்.

நிறுவனத்தின் நிர்வாகத்தை ஒருவரும், இயக்கத்தை ஒருவரும், மார்க்கெட்டிங் மற்றும் பிசினஸ் வளர்ச்சியையும் ஒருவரும் பார்த்துக் கொள்வதாக பிரித்திருக்கின்றனர். சிவசங்கரனும் அவருடைய மனைவியும் ஒவ்வொரு பிரிவை பார்த்துக் கொள்ள, நிர்வாகத்தில் கிருஷ்ணவேணியின் சகோதரரர் கோவிந்தராஜும் இணைந்திருக்கிறார். 

நிறுவனர்கள் சிவசங்கரன் கிருஷ்ணவேனி
நிறுவனர்கள் சிவசங்கரன் கிருஷ்ணவேனி
‘தட்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ விளையாட்டு பொருட்களை விற்கும் நிறுவனம் கிடையாது. தாங்கள் சந்தைக்கு கொண்டு வருவது ஒரு தயாரிப்பை அல்ல, ஒரு சேவையை என்கிறார் சிவ சங்கரன்.

விழாக்கூட்டங்களில், ஷாப்பிங் மால்களில் என மக்கள் கூடும் இடங்களில் ‘தட்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸின்’ விளையாட்டு சாதனங்கள் பொருத்தப்படுகின்றன. கேட்ஜெட்டுகளுக்குள் சிக்காத விளையாட்டுக்கள் அத்தனையும், அங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டம் விளையாட்டை ரசித்து விளையாட தொடங்குகிறார்கள்.

பரமபதம் பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, அதன் காய்களும் சிரத்தையோடு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்படி இந்நிறுவனத்தால் பாரம்பரிய விளையாட்டுக்கள் புதிய வடிவில் சந்தைக்கு வருகின்றன.

கூடவே, டகேஷிஸ் காஸ்ல் நிகழ்ச்சியில் வருகின்ற பவுன்ஸி ஹவுஸ் போன்ற பிரம்மாண்டமான விளையாட்டுக்களும் தட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்குகின்றது. இவை மட்டுமே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனாலும், இந்த பவுன்ஸி ஹவுஸ் தயாரிப்பு முழுமையாக சிவசங்கரனின் அறிவுரைப்படியே நடக்கிறது. மற்றபடி, பிற விளையாட்டு சாதனங்கள் தயாரிப்பு தொடங்கி விநியோகம் வரை அத்தனையுமே ஒரே குழுவால் செய்யப்படுகிறது.

இந்நிறுவனத்தின் பலூன் பஸ்டர், கல்பெட்டோ, டெக்ஸ்டெரிட்டி ரோல், கனெக்ட் ஃபைவ் போன்ற விளையாட்டுக்கள் பிரபலமாகியிருக்கின்றன. 2018 ஜனவரியில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் தட்ஸ் எண்டர்டெயின்மெண்ட், அதிகாரப்பூர்வமாக துவங்கியது இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில். கோவையின் ப்ரோசோன் மால், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியின் சென்னை சில்க்ஸ் ஆகிய இடங்களில் இவர்களின் விளையாட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த பயணத்தில் தாங்கள் சந்தித்த சவால்களை பற்றிப் பேசும் போது, 

“மக்களுக்கு இதை புரிய வைப்பது தான் கடினமாக இருந்தது. யாராவது என்னை அழைத்து விளையாடச் சொன்னால் நானே விளையாட மாட்டேன். அது செய்வது கஷ்டமாக இருந்தது. நிதியுதவி வங்கியில் இருந்து வாங்கியிருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் ஈ.எம்.ஐ கட்ட வேண்டியிருக்கிறது. நாங்கள் விளம்பரத்துக்கு என காசு செலவு செய்ததே கிடையாது. எல்லாம் மக்கள் வாய்வழியே செய்தி பரவி வருவதனால் கிடைக்கும் வாய்ப்புகள் மட்டும் தான்,” என்கிறார் சிவ சங்கரன்.

திருமண விழாக்கள், ஷாப்பிங் மால்களில் மட்டுமில்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் கூட இவர்களுடைய விளையாட்டுக்கள் இடம் பெற்றதாக சொல்கிறார். இளம் தொழில்முனைவோருக்கு அறிவுரையாக சொல்லவிரும்புவது, 

“பெரிய யோசனைகளை முழுமையாக செயல்படுத்திவிட முடியாது. உங்களுடைய களம் குறித்த அறிவு உங்களுக்கு வேண்டும். எளிமையான யோசனைகளை வைத்திருங்கள்,” என்பன மட்டுமே.

வாழ்க்கை முறை மாற்றம் பெரிய அளவில் மக்களின் மனநலனையும், உடல் நலனையும் சிதைத்திருக்கும் நிலையில், ‘தட்ஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட்’டின் விளையாட்டுக்கள் வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கவல்லது. இவ்வகையில், பாராட்டத்தக்க முயற்சியும் கூட. 

வெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.

Related Stories

Stories by Sneha