புற்றுநோயாளிகளை மகிழ்விக்க கோமாளியாக மாறிய கடற்படை அதிகாரி!

0

கடந்த பதினேழு ஆண்டுகளாக 4,000 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் பிரவீன் துல்புலே. இவர் ஒரு கோமாளியாக வேஷமிட்டு மருத்துவமனைகளுக்குச் செல்கிறார். ஒரு சிறுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமே ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியான இவர் இத்தகைய முயற்சியை மேற்கொள்ளக் காரணம். அந்த சிறுமிக்காக கோமாளி வேடமிட்டு நடித்த பிரவீன் அவள் உயிரிழந்ததால் மிகவும் வேதனையடைந்து மற்ற புற்றுநோயாளிகள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் இவ்வாறு செயல்படத் துவங்கினார். 

கடற்படையில் லெப்டினன்ட் கமாண்டர் தகவல்தொடர்பு நிபுணராக இருந்த பிரவீன் தற்போது ’பிண்டூ’ என்கிற பெயரில் மேடையில் வலம் வருகிறார். கோமாளி வேடமிட்டு கார்டுகளைக் கொண்டு மேஜிக் செய்கிறார்.

பிரவீனின் அப்பா அவருக்கு இந்த கலை வடிவத்தை அறிமுகம் செய்தார். இதில் பிரவீனுக்கு ஆர்வம் ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள இந்திய மேஜிஷியன்ஸ் சங்கத்தில் (Society of Indian Magicians) சேர்ந்தார். இங்கு பல்வேறு கலை வடிவங்களுக்கு அறிமுகமானார்.

மருத்துவமனைகள் மட்டுமின்றி பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு சேவையளிக்கும் அனாதை இல்லங்கள், பள்ளிகள் போன்ற இடங்களிலும் இலவசமாக நிகழ்ச்சிகள் நடத்துகிறார். வணிக ரீதியாக நிகழ்ச்சிகள் நடத்தி தனது செலவை நிர்வகிக்கிறார்.

Yogisthan உடனான உரையாடலில் அவர் தெரிவிக்கையில்,

என்னுடைய நிகழ்ச்சியைக் காணும் குழந்தைகளிடம் தென்படும் மகிழ்ச்சியே எனக்கு முக்கியம். இதற்கு ஈடு இணையே கிடையாது. மக்கள் இங்கு ஆர்வமாக வருகின்றனர். அவர்களுடன் நான் பகிர்ந்துகொள்ளும் மகிழ்ச்சியான தருணமும் அவர்களது முகத்தில் நான் பார்க்கும் சந்தோஷமும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 

வாய் பேச முடியாத கேட்கும் திறனற்ற குழந்தைகள்கூட சிரிப்பதைப் பார்த்து நான் திருப்தியடைகிறேன். நான் ஒரு நிகழ்ச்சி முடிந்து செல்கையில் எனக்கு மேலும் 10 மகன்களும் மகள்களும் இருப்பது போல் உணர்வேன். இதைவிட எனக்கு வேறு என்ன தேவைப்படும்? என்னுடைய சுயநலத்தினாலேயே நான் அங்கு செல்கிறேன். அவர்களது முகத்தில் மகிழ்ச்சியைக் காணவேண்டும் என்கிற விருப்பமே அந்த சுயநலமாகும்.

வாழ்க்கை மிகவும் குறுகியது. அதில் கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள் என்று ’தி பெட்டர் இண்டியாவிடம்’ பிரவீன் தெரிவித்தார். 

முகத்தில் வண்ணம் தீட்டிக்கொள்வது, வேடிக்கையாக உடை அணிவது என மகிழ்ச்சியை பரப்புவதற்கான பணியில் மும்முரமாக உள்ளார்.

கட்டுரை : THINK CHANGE INDIA