சவாலான சூழலில், இந்திய வர்த்தக தலைவர்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது?  

இந்திய சி.இ.ஓ.க்களின் செயல்பாடு தொடர்பான அறிக்கை திடிக்கிடும் ஐந்து முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது.

0

இன்று, தொழில்துறை மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொண்டிருக்கிறது. கடினமான சூழலில் வர்த்தக நிறுவனங்கள் தாக்குபிடிக்கும் சூழல் நிலவுவதால் நிறுவன தலைவர்கள் வெற்றிக்கான தங்கள் தாரக மந்திரங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அனைத்து துறைகள், பிரிவுகள் மற்றும் பகுதிகளைச் சார்ந்த நிறுவனங்கள், வெளிப்புற சவால்கள் மற்றும் உள்ளுக்குள் இருக்கும் சிக்கல்கள் காரணமாக தடுமாறுகின்றன.

இதன் காரணமாக, சி.இ.ஓக்கள் உத்தி வகுப்பது முக்கியமாகி இருக்கிறது. மாறி வரும் போக்குகளை பயன்படுத்திக்கொள்ள மூத்த அதிகாரிகள் தயாராக உள்ளனரா என்பதை கண்டறிவது, இத்தகைய உத்திகளில் ஒன்றாக இருக்கிறது.

இந்த சூழலில், பல்வேறு துறை நிறுவனங்களில் உயர் நிலை அதிகாரிகள் பழக்க வழக்கங்கள் மற்றும் ஆளுமை திறன் தொடர்பான ஏஆன் தரவுகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டோம். இதில் தெரிய வந்த முக்கிய விஷயங்கள் வருமாறு:

56 சதவீத தலைவர்களுக்கு தொலைநோக்கு இல்லை

உயர் நிலை பதவியில் உள்ள 56 சதவீத அதிகாரிகளுக்கு வியூக அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தன்மை இல்லை என தெரிய வந்துள்ளது. தற்போது நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மத்தியில் இது கவலை தரும் எண்ணிக்கையாகும்.

வியூக நோக்கிலான தொலைநோக்கு தலைவர்கள், பரந்த பார்வை மற்றும் வெளி உலக காரணிகளுக்கு ஏற்ப தங்களை மாற்றி அமைத்துக்கொள்ள நிர்பந்திக்கிறது. ஆனால் தலைவர்கள், சிறந்த செயல்பாட்டில் கவனம் செலுத்தி, முடிவுகளை அடைய விரும்புகின்றனர். 

20 சதவீத உயர்நிலை அதிகாரிகளுக்கு சிறந்த செயல்பாடு முக்கிய ஆற்றலாக இருப்பது தெரிய வந்துள்ளது.

நிறுவனங்கள் பொதுவாக உயர் பதவியை நோக்கிய வாய்ப்புகளை ஊழியர்களுக்கு வழங்கி வந்தது இந்த இடைவெளிக்கு காரணமாக இருக்கலாம். செயல்முறை அமைப்பு செயல்திறனை மேம்படுத்தினாலும், குறிப்பிட்ட பகுதிக்கு மேல் அனுவபவத்தை விரிவாக்காமல், பல் நோக்கிலான தொலைநோக்கை குறுக்கிவிடுகிறது.

நாங்கள் பார்த்தவரை, பெரும்பாலான தலைவர்கள் தங்கள் சிறந்த ஊழியர்களை வேறு செயல்பாட்டுக்கு செல்ல அனுமதிக்க தயங்கும் நிலையே உள்ளது. இதோடு, இந்திய நிறுவனங்களில் நீண்ட கால பலன்களை விட, குறுகிய கால மற்றும் உடனடி பலன்களுக்கு பரிசளிக்கும் போக்கும் இணைந்து கொள்கிறது.

துணிச்சலான சிந்தனை இல்லை

இன்று, புதுமையாக்கம் என்பது போட்டிக்கான சாதகம் என்பதைவிட, தவிர்க்க இயலாத ஆற்றலாக ஆகியிருக்கிறது. மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொலைநோக்கு பார்வை என்பது, எதிர்கால வெற்றிக்கான முக்கிய அம்சமாக மாறியிருக்கும் நிலையில், சோகமான நிதர்சனம் என்னவெனில், இந்திய வர்த்தக உயர் நிலை பதவி வகிப்பவர்களில் 70 சதவீதம் பேர் துணிச்சலான சிந்தனை கொண்டவர்களாக அல்லது ஆர்வத்துடன் கண்டறிதலில் ஈடுபடக்கூடியவர்களாக இல்லை என்பது தான்.

இன்றைய தலைவர்கள் மாற்றத்தை ஊக்குவிக்கக் கூடியவர்களாக அல்லது கண்ணுக்குத் தெரிவதை கடந்து சிந்திக்கக் கூடியவர்களாக இல்லை. 

புதுமையாக திறன் கொண்ட தலைவர்கள் குறைவாக இருப்பதற்கான காரணம், தற்போதுள்ள சூழலை கேள்வி கேட்கும் திறன் கொண்ட தலைவர்களை உருவாக்குவதற்கான பயிற்சி திட்டம் இல்லாதது இருக்கலாம்.

எப்படி இருந்தாலும், புதுமையான சிந்தனை, புதிய எண்ணங்களுக்கு ஊக்கமளித்தல் மற்றும் தோல்விகளுக்கு அனுமதி அளிக்கும் தன்மை கொண்ட தலைவர்கள் நிறுவனங்களுக்கு மிகவும் அவசியமாகும். எனவே ஆர்வம், துணிச்சல் மற்றும் செளகர்யம் ஆகிய மூன்று அம்சங்கள் அடிப்படையில் நிறுவனங்கள் தங்கள் உயர் நிலை அதிகார மனபோக்கை மாற்ற முயற்சிக்க வேண்டும். அதாவது வழக்கத்தில் இருந்து மாறுபட்ட கேள்விகளை கேட்டு, புதிய எண்ணங்களை முயற்சிக்கும் ஆர்வம் வேண்டும். சோதிக்கப்பட்ட முறைகளை விமர்சிக்கும் துணிச்சல் வேண்டும். மாறிக்கொண்டிருக்கும் தொழில்நுட்பங்களை வசதியாக உணர வேண்டும்.

63 சதவீத தலைவர்கள் மாறும் சூழலை அறியாமல் இருக்கின்றனர்

மாறி வரும் சூழலின் சிக்கலான, இது வரை இல்லாத, புதிய சவால்களை சந்திப்பதற்கு தங்கள் அதிகாரிகள் எப்படி தயாராக உள்ளனர் என்பதை அறிய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. மாறிவரும் போக்குகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட 63 சதவீத உயர்நிலை அதிகாரிகள் தயாராக இல்லை என்பதை எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பிரிவில் மதிப்பெண்கள் மற்ற பிரிவு மதிப்பெண்களைவிட குறைவாக உள்ளது. புதிய ஆற்றலை வளர்த்துக்கொள்வதைவிட, ஏற்கனவே உள்ள ஆற்றலை பயன்படுத்திக் கொள்வதில் உள்ள ஆர்வம் இதற்கு ஒரு காரணமாக அமைகிறது. அவர்கள் மேம்படுத்திக்கொள்வதைவிட செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மாறாக, நல்ல தலைமையின் அறிகுறி தன்னை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்வது மற்றும் வித்தியாசமாக செயல்பட முயற்சிப்பதாகும். டிஜிட்டல் பரப்பு போன்ற புதிய துறைகளில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்துக்கொள்ளும் ஆற்றல் வெற்றிகரமான அதிகாரிகளுக்கு தேவை.

70 சதவீத தலைவர்களால் ஊக்கம் அளிக்க முடியவில்லை

ஊழியர்கள் மீது தாக்கம் செலுத்தி, ஊக்கம் அளிக்கும் திறன் மூத்த தலைவர்களிடம் குறைவாகவே உள்ளது. ஊக்கம் செலுத்தக்கூடிய தாக்கத்தை ஐந்து சதவீத தலைவர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். ஆற்றல் மற்றும் ஊக்கத்துடன் வழிநடத்த உயர்நிலை அதிகாரிகள் செயல்திறம் மிக்க கதைசொல்லிகளாக தங்களை வளர்த்துக்கொள்வது முக்கியம். 

நிறுவனங்களுக்குள்ளே தேவையான கூட்டணிகளை உருவாக்கக் கூடிய அமைப்பு நோக்கிலான திறன் மற்றும் அரசியல் சாதுர்யம் தொடர்பான செயல்திறனும் குறைவாக உள்ளது.

நிறுவனங்கள் இந்த குறையை உணர்ந்துள்ளன. அணித்தலைவர்கள் இணைப்பை உண்டாக்குகிறவர்களாகவும், கதை சொல்லிகளாகவும் செயல்பட ஊக்கம் அளித்து வருகின்றன. வர்த்தக எண்ணிக்கையை கடந்து, ஊக்கம் மிகுந்த கதைகளை கூட்டாக உருவாக்கி, அதை தெரியப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

50 சதவீத தலைவர்கள் வழிகாட்டல் குறிப்புகளை வழங்க தடுமாறுகின்றனர்

இன்று, திறன் ஈர்ப்பாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வழிகாட்டிகளின் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது. நீடித்த வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், அடுத்த தலைவர்களை உருவாக்கும் பொறுப்பு தலைவர்களிடம் வழங்கப்படுகிறது. எனினும் தற்போதைய தலைவர்களிடையே பயிற்சி அளிக்கும் ஆற்றல் போதுமான அளவு இல்லாததை எங்கள் ஆய்வு உணர்த்துகிறது. 

50 சதவீத தலைவர்கள், சீரான கருத்துகள், ஊக்கம், மற்றும் வழிகாட்டுதல் குறிப்புகளை தங்கள் குழுவுக்கு அளிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.

குழுக்கள் தங்கள் இலக்குகளை அடைவதற்கான அமைப்பை உருவாக்கி, தெளிவான இலக்குகளை வழங்கும் முன்மாதிரிகளாக செயல்படும் ஆற்றலை 4 சதவீத தலைவர்கள் மட்டுமே கொண்டுள்ளனர். சாத்தியங்களை செயல்பாடாக மாற்றுவதே தலைவர்களுக்கான முக்கிய திறனாகும்.

இருந்தும், தங்கள் குழுக்களை வளர்த்து, பயிற்சி அளிப்பதில் தலைவர்களுக்கு போதிய திறன் இல்லை. எனவே இந்த பிரிவில் அதிகம் கவனம் தேவை.

நிறுவனங்கள் மற்றும் சி.இ.ஓக்கள் முன்னுள்ள முக்கிய பிரச்சனை, தலைமைபண்பு இடைவெளியை நிரப்புவதாகும். வளர்ச்சி உத்திகள், பயிற்சி கூடங்கள், பயிற்சி திட்டங்கள், பல அடுக்கு மதிப்பீடு உள்ளிட்ட வழக்கமான மற்றும் வழக்கம் அல்லாத வாய்ப்புகளை அளிப்பதன் மூலம் இதை நிறைவேற்ற வேண்டும். ஆற்றல் மிக்க தலைவரே வெற்றிகரமான மாற்றத்தை நோக்கி வழிநடத்திச் செல்லக்கூடியவராக இருப்பார்.

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் தெரிவிக்கப்படும் கருத்துகள் மற்றும் பார்வக்கள் கட்டுரை ஆசிரியருடையவை, யுவர்ஸ்டோரி கருத்தை பிரதிபலிப்பவை அல்ல).

சுமித் சேத்தி – ரூபாலி பர்தசனி | தமிழில்: சைபர்சிம்மன்