’பளபளப்புத் தோலில் இல்லை அழகு...’ 

இணையத்தை உருக்கும் அரிய சரும கோளாறால் பாதிக்கப்பட்ட நிஷாவின் வீடியோ...

0

‘பி அண்ட் ஜி’யின் விக்ஸ் நிறுவனம், ‘Touch of Careஎன்ற பிரச்சராத்தின் தொடக்கமாய் திருநங்கை அம்மா கௌரி சவந்த்தை நடிக்க செய்து ‘அன்புக்கு பாலினம் இருக்கிறதா?’ என்ற உணர்வுப்பூர்வ கேள்வியை கடந்தாண்டு கடத்தியது. 

அதன் தொடர்ச்சியாய் சர்வதேச பெண் குழந்தைகள் தினமான அக்டோபர் 11ல் வெளியிட்ட ‘விக்ஸ் -ஒன் இன் மில்லியன்’ என்று தலைப்பிட்ட வீடியோவில் பதினேழு வயது நிஷா என்ற பெண் அவளது கதையை கூறுகிறாள். பலர் ஒன்று கூடிய அரங்கில் அவளது கதையை கூறுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள வீடியோவில், அவளது கண்கள் கடத்தும் உணர்வு காண்போரை நிலை குலைய வைத்து, இயன்றளவிலான அன்பை அவளுக்கு வழங்க இதயம் துடிக்கிறது. அதனால், தான் யூ டியுப்பில் வீடியோ பதிவு செய்யப்பட்ட ஒரு வாரத்தில் 2 கோடி மனங்கள் பார்வையிட்டுள்ளனர்.

கற்றைக் கூந்தலை பின்னி வலப்பக்கம் சிவப்புப்பூ சூடி அழகாய் வீற்றிருக்கும் நிஷாவை வெகு அருகில் காட்டியபடி தொடங்குகிறது வீடியோவில் அவள், ‘என்னை முதலில் பார்த்தவுடன், ‘யார் இவளுக்கு இப்பூவை கொடுத்தார்? என்ற கேள்வி உங்களுக்குள் கண்டிப்பாய் எழுந்திருக்கும்” என்று கேள்வி கேட்டு “அம்மா கொடுத்தாங்க” என்று அவளே பதில் கூறிவிட்டு கடந்தகாலத்தை நோக்கிப் பயணிக்கிறார். 

“இப்போது இல்லை.. நான் சின்னக்குழந்தையா இருக்கும் போதிருந்தே அம்மா எனக்கு இந்த பூவை சூட்டி வருகிறார். குழந்தை பருவம் முழுவதுமே நான் என் சகோதர, சகோதரிகளுடனே விளையாடி உள்ளேன். ஆனால், எப்போதுமே நான் தான் ஆட்ட நடுவர்.” என்று நிஷா பேசும்போது, மனமிளகி சொட்டுக் கண்ணிர் வரத்தொடங்கிவிடுகிறது.  

ஏனெனில், லட்சத்தில் ஒருவரை தாக்கக்கூடிய, சருமத்தை அதீதமாய் உலரச் செய்து செதில் போன்ற திட்டுகளாக்கக்கூடிய இக்தியோசிஸ் எனும் சருமகோளாறால் பாதிக்கப்பட்டவள் நிஷா.

“பிரச்னையே இல்லாத மனிதரில்லை. ஆனால், என் பிரச்னை கொஞ்சம் வேறுபட்டது, வெளிப்படையாய் தெரியக் கூடியது” என்று நிஷா அவள் கதையை கூறிக் கொண்ட இருக்கையில், அதற்கான காட்சிகளாய் தோழனின் பர்த்டே பார்டியில் நிஷாவுக்கு அழைப்பு மறுக்கப்படுதலும், ட்ரையின் இருக்கையில் அமருகையில் அருகில் இருந்தவர் அருவறுப்புப் பார்வையுடன் எழுந்து செல்லுவதுமாய் அமைக்கப்பட்டுள்ள காட்சிகளில், நிஷாவின் வலி நிறைந்த பார்வையும், அப்பார்வையை விலக்கிட அவளது அம்மா அளிக்கும் அன்பும்..., வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஒரு நேசத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

“என் சரும நிலைக்கு இக்தியோசிஸ் என்று பெயர். இச்சருமப் பிரச்னையுடன் தான் பிறந்தேன். இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை. இது தொற்று வியதி அல்ல. என் சருமக் கோளாறு லட்சத்தில் ஒருவரை தாக்கக்கூடியது. ஆனால், உண்மையில், என் அம்மா தான் லட்சத்தில் ஒருவர். 

”இந்த வியாதி என் வாழ்க்கையில் ஒரு பகுதி. என்னுடைய அடையாளம் இல்லை. ஏனெனில், என் கதையும் மற்றவர்களுடையது போன்றே, சில கனவுகள், சில நம்பிக்கைகள், சில போராட்டங்கள் நிறைந்தது. ஆனால், 17 ஆண்டுகளுக்கு முன் இருவர் ஒரு முடிவை எடுக்கமாலிருந்து இருந்தால், நான் சொல்ல கதையே இருந்திருக்காது. அது, என்னை தத்தெடுக்கும் முடிவு. அவர்கள் 17 ஆண்டுகளுக்கு முன் எடுத்த அதே முடிவை இன்று நீங்கள் எடுக்கப் போகிறீர்கள்,” 

என்று தத்தெடுக்கக் காத்திருந்த வருங்கால வளர்ப்பு பெற்றோர்களை நோக்கி பேசிய அவள் தொடர்ந்து பேச்சை தொடர்கிறாள்...“சோ, உங்களுக்கான குழந்தையை நீங்கள் எப்படி அறிந்து கொள்வீர்கள்? அவளை பார்த்தவுடன், என்னைப் பார்த்த போது என் பெற்றோர்கள் கேட்ட கேள்வியை உங்களுக்குள் ஒருமுறை கேட்டுக் கொள்ளுங்கள். அக்கேள்வி “நம்ம பொண்ணா இவ இருக்கக்கூடாதா!” என்று கூறி நிஷா தன் பேச்சை முடித்தாள். 

ஆம், நிஷா இரண்டு வார குழந்தையாக இருக்கும் போது அனாதை இல்லத்தில் இருந்து, பெங்களூரைச் சேர்ந்த அலோமா மற்றும் டேவிட் லோபோவால் தத்தெடுக்கப்பட்டாள். 

இந்தியாவில் மட்டும் 2 கோடியே 96 லட்சம் ஆதரவற்றோர்கள் இருக்கின்றனர். அதில், கடந்தாண்டில் குறைபாடுள்ள 42 குழந்தைகள் மட்டுமே தத்தெடுக்கப்பட்டுள்ளனர், என்ற எழுத்துகளுடன் நிறைவடையும் வீடியோ, காண்போரை கலங்கிட வைத்துவிடும். 

நிஷாவின் கதை இது...

உண்மையில், நிஷாவைவிட அவளது பெற்றோரது வாழ்க்கையே கடினமானது. ஏனெனில், எப்போதெல்லாம் அவள் துவண்டு விழுகிறாளோ அப்பொழுதெல்லாம் தோள் கொடுத்து உலகை விரும்பச்செய்திடல் வேண்டும். 

அலோமா - டேவிட் தம்பதியினருக்கு நிஷா முதல் குழந்தை இல்லை. ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். அச்சமயத்தில் ஒருநாள், அலோமாவுக்கு அவருடைய சகஊழியரிடமிருந்து போன் அழைப்பு வந்துள்ளது. “அவர் என்னிடம், இரண்டு வாரக் குழந்தை கைவிடப்பட்டிருக்கிறது என்று சொன்னார்,” எனும் நினைவுக் கூறும் அலோமா ஒரு டாக்டர். தத்தெடுத்தல் என்பது அரிதாக அறியப்பட்ட மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே 2 குழந்தைகளை தத்தெடுக்கும் எண்ணத்திலும் இருந்தனர். 

அக்கைவிடப்பட்ட குழந்தையைப் பார்க்க அவர்கள் விரைந்து சென்றபோது, குழந்தை பிறப்பிலே ஒரு அரிதான மரபணு தோல் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர். அவளது தோல் வறட்சியுற்று செதில் செதிலாகவும், ஒரு கண் பார்வை குறைப்பாடுடன், கண் இமைகளுற்றும் இருந்துள்ளாள்.

தத்தெடுப்பு உறுதி என்றாகிய பின்னும், மற்றக் குழந்தைகள் இவளிடம் எப்படி அணுகுவார்கள் என்று தயக்கம் இருந்த சமயத்தில், அவர்களது இரண்டாவது மகள் அலோமாவிடம், “மம்மா, நாம் இவளை வீட்டிற்கு கூட்டிச் செல்லலாம்” என்று கூறியதை அவர் இன்றும் நினைவில் கொண்டுள்ளார். நிஷா வீட்டிற்கு வந்த சில நாட்களில் அவளை பேணி பாதுகாப்பதில் அதிகம் கவனம் தேவைப்பட்டுள்ளது.

“அவளது உடல் வெப்பநிலையை எல்லா நேரங்களிலும் சமன்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆயில் மற்றும் கீரிம்களை அடிக்கடி தடவி விடவேண்டும். அவளுடைய தோலில் ஒட்டிக் கொள்ளாத டயப்பரை தேடி கண்டுபிடிப்பது அப்போது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை டயப்பரை மாற்றவேண்டும். ஆனால், அந்த இளம் வயதில் என் பொண்ணு எதையும் எதிர்த்து போராடிக்கூடியவளாக இருந்தாள். இன்றும் இருக்கிறாள். அவளுடைய சரும நிலை விஷயமே இல்லை. அவள் எப்போதும் என்னுடைய அழகான பேபி கேர்ள்,” 

என்று அலோமா கூறுகையில், வீடியோவில் பார்க்கையில் ஏற்பட்ட உணர்வுக்கு நேரெதிரான ஓர் உணர்வு உள்ளத்தில் நிறைகிறது.

தாயின் அன்பு நிபந்தனையற்றது என்ற போதிலும், நிஷா சமூகத்தாரால் சவால்களை சந்தித்தாள். மழலையர் பள்ளியில் நிஷாவை சேர்ப்பதற்கு அலோமா முடிவு செய்தபோது, பள்ளியின் பொறுப்பாளர், ‘மேடம், நீங்கள் அவளது நிலைமையை புரிந்துகொள்கிறீர்கள், ஆனால் என் ஆசிரியர்கள் இதைப் போன்ற ஒரு குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?’ என்றுள்ளார். குழந்தை பருவத்தில் இருந்தே நிராகரிப்பு தொடங்கிவிட்டது.

ப்ளே ஸ்கூலில் அவளுடன் படிக்கும் மாணவன், அவனது பிறந்தநாள் நிகழ்ச்சிக்கும் அனைவரையும் அழைப்பிதழ் கொடுத்து வரவேற்கையில், நிஷாவை நிராகரித்தான். அச்சிறு மனம் அடைந்த வேதனையை கோபமாக மாற்றி அவனை அடித்து வெளிப்படுத்தியது. “அவனை அடித்த சம்பவம் பற்றி என்னிடம் கூறினாள். ஆனால், அவளை உடனே திருத்தினால், அவள் சோர்வடையக்கூடும் என்றாலும் கூறினேன். அவளாள் யாரையும் காயப்படுத்த முடியாது. அடுத்த நாளே அந்த பையனிடம் மன்னிப்பு கேட்டாள்” என்று கூறி மெல்லிதாக புன்னகைத்தார் அவர்.

இறுதியாய், அவர்களது வீட்டிற்கு அருகாமையில் இருந்த கான்வென்ட் பள்ளியில் நிஷா சேர்ந்தார். ஆனால், அங்கும் படிக்கும் சில குழந்தைகளின் பெற்றோர்கள் அவளுக்கு அருகில் அவர்களது குழந்தைகளை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அனைத்து நம்பிக்கையும் இழக்கப்படவில்லை. அவளுக்கு அப்போது 12 வயதிருக்கும் அலோமாவுக்கு, மற்றொரு கைவிடப்பட்ட குழந்தையை பற்றி செய்தியை தெரிவித்தார் அவரது நண்பர். 

“மார்பில் ஒரு பெரிய கட்டி கொண்ட ஒரு குழந்தை மருத்துவமனையில் கைவிடப்பட்டது. அக்குழந்தையின் முதல் இரண்டு அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி செய்த ஒரு அரசு சாரா நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. ஆனால் அவர்களால் மூன்றாவது அறுவைசிகிச்சைக்கு தேவையான பணத்தை திரட்ட முடியவில்லை” என்றுள்ளார். நிஷா விரைவாக, ‘மம்மா, நான் உனக்கு பணம் திரட்டி தருகிறேன்’ என்றுள்ளார். அக்குழந்தை பற்றிய விழிப்புணர்வு வீடியோவை அவளது வகுப்புதோழனுடன் சேர்ந்து உருவாக்கியுள்ளாள். துரித காலத்தில்1.2லட்ச ரூபாயும் திரட்டப்பட்டு அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. 

அன்றாட வாழ்க்கையிலும், நிஷா தன் நிலைமை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளார். ஒருமுறை சிங்கப்பூருக்கு அவரது பெற்றோருடன் பயணம் செய்தபோது, இரண்டு சிறுமிகள் அவளிடம், ‘உங்கள் தோல் ஏன் இப்படி இருக்கிறது? நீங்கள் மிக வேகமாக வயதாகி விட்டீர்களா?’ என்றுள்ளனர். அவர்களை அடித்திடும் குழந்தை நிஷாவாக இல்லை அவள் அப்போது. சிறு புன்னகையுடன் தன் நிலையை அக்குழந்தைக்கு எடுத்துரைத்துள்ளாள். அறியாமை மிக்க மக்களை நிஷா மன்னித்தாலும், பல சமயங்களில் தன் அழகிய குழந்தை பாகுபாடுக்கு ஆளாகும் போது எழும் கோபத்தை அடக்க முடியாமல் தவித்துள்ளார் அலோமா.

“ஒரு தாயாக, அவள் புண்படும் போது பெரும் கவலையாக இருக்கிறது. ஒரு முறை சான்பிராஸ்கோவிலிருந்து வரும்போது விமானத்தில் ஒருவர் நடந்து கொண்டதை என்னால் மறக்க முடியாது. அவர் நிஷாவை சுட்டிக்காட்டி, பணிப்பெண்ணிடம், ‘ நிஷா கீழே இறங்க வேண்டும், அவள் இந்த விமானத்தில் இருக்கக் கூடாது’ என்றார். எனக்கு அப்போது வந்த ஆத்திரத்தில், அவரை குத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால், அப்போது நிஷா என்னிடம் ‘அம்மா, அமைதியாக இருங்கள். கவலைபடாதீங்க’ என்றாள். சகபயணிகள் வேண்டும் என்றால் அவரை இறங்கச் சொல்லுங்கள் என்று ஆதரவு கொடுத்தனர். ஆனால், அப்போதும் அவள் அவரிடம் கோபம் கொள்ளவில்லை. இது போன்ற நடத்தைகளுக்கு ரியாக்ட் பண்ணக் கூடாது, தக்க பதிலளிக்க வேண்டும் என்று அன்று தான் உணர்ந்தேன்” என்றார்.

இந்தியாவில் நிரம்பி வழியும் மூட நம்பிக்கைகளால், மரபணு கோளாறுடன் பிறக்கும் குழந்தைகளை வீட்டுக்கு நல்லதல்ல என்று நம்புகின்றனர் எனும் அவர் தொடர்ந்து கூறுகையில்,

“நிஷாவின் கதையை வாசிப்பதன் மூலமும், அவளது வீடியோவை பார்ப்பதன் மூலமும் இந்த ஸ்ட்ரீயோடைப்கள் உடைக்கப்படும் என்று நம்புகிறேன். பலரும் எங்களிடம், நிஷாவை தத்தெடுத்துள்ளது பெருமையாக உள்ளது என்பார்கள். அவளுக்கு நாங்கள் தேவைப்படவில்லை. எங்களுக்குத் தான் அவள் தேவைப்பட்டாள்,” என்றார் கனித்த குரலில்.
48 மணி நேரத்தில் 5 மில்லியல் வியூஸ்களை அள்ளிய விக்ஸ் வெளியிட்ட நிஷாவின் பயண வீடியோ
48 மணி நேரத்தில் 5 மில்லியல் வியூஸ்களை அள்ளிய விக்ஸ் வெளியிட்ட நிஷாவின் பயண வீடியோ

தகவல் மற்றும் பட உதவி : தி பெட்டர் இந்தியா