உண்மையான கல்வியைக் கற்றுக் கொடுக்கும் 'ஏகலைவன்'

0

தரப்பட்ட வாய்ப்பிலும் பிரச்சனை

"2014 மே மாதத்தில் ஒரு நாள், என்னிடமும் என் அம்மாவிடமும் எனது வேலைக்காரப் பெண் தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்புவதாகவும், ஆனால் பள்ளியில் அனுமதி மறுக்கப்படுவதாகவும் சொன்னார். பள்ளியில் சேர்ப்பதற்குரிய ஆவணங்கள் இல்லாததே காரணம் என்று சொன்னார்களாம். நான் அவருக்கு உதவுவதற்காக பிஎம்சி (பிர்ஹான் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன்) பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கெல்லாம் சென்றேன்."

ஏழைக் குழந்தைகளுக்கு தரப்படும் கல்வியின் தரத்தைப் பார்த்த சார்வி மேத்தா அதிர்ச்சிக்குள்ளானார். இரண்டு குழந்தைகளிடம் அவர் உரையாடியதில் இருந்து அவர்களின் பள்ளிப் படிப்புக்கும் அவர்கள் பெற்றிருக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்ததை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. கல்வி பெறும் உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள அதே நேரத்தில் அதில் குறைபாடுகளும் பல உள்ளன. அதன் காரணமாக எதிர்விளைவுதான் ஏற்பட்டிருக்கிறது என்பதை சார்வி உணர்ந்தார்.

இந்தியாவின் கல்வி நிலையைக் காட்டும் கண்ணாடி அசெர் (ASER)

ஆர்டிஈ, அதாவது கல்வி உரிமை சட்டம், கல்வி பெறும் உரிமை மற்றும் வசதிகளை மேம்படுத்தியிருக்கிறது, நிறைய குழந்தைகளைப் பள்ளிக்கு வரச் செய்திருக்கிறது, கழிப்பறைகளை அதிகரித்திருக்கின்றது. ஆனால் தரமான கல்வியில் அது தோல்வியைச் சந்தித்திருக்கிறது. பள்ளியில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது (6ல் இருந்து 14 வயது வரையிலான குழந்தைகளில் 96.5 சதவீதம் பேர் பள்ளிக்குச் செல்கின்றனர்). பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளன. ஆனால் குழந்தைகளின் வருகை(அரசுப் பள்ளிகளில்), அவர்களின் வாசிக்கும் திறன், சாதாரண கணக்கு போடும் திறன் கூடக் குறைந்திருக்கிறது.

ஆரம்பப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அவர்கள் படிக்கும் படிப்புக்கு மூன்று வகுப்பு பின்தங்கிய கல்வித் திறனைத்தான் பெற்றிருக்கின்றனர் என்கிறது புள்ளி விபரம். இது மிகவும் மோசமான சூழல். உதராணமாக 2010ம் ஆண்டு கணக்கின் படி, 5ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் பாதிப்பேர் 2ம் வகுப்புப் பாடங்களைப் படிப்பதற்கான திறனை மட்டுமே பெற்றிருந்தனர். 2012ல் அது 41.7 சதவீதமாகக் குறைந்தது. இதே போல் 2010ல் 5ம் வகுப்புப் படிப்பவர்களில் 71 சதவீதம் குழந்தைகள், இரண்டு இலக்கக் கழித்தல் கணக்குப் போடுவதற்கான திறன் மட்டுமே பெற்றிருந்தனர். இது 2012ல் 50 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 70 சதவீதம் குழந்தைகள் 100 வரையிலான எண்ணைக் கண்டறியும் திறன் பெற்றிருந்தனர். கடந்த நான்கு ஆண்டுகளில் அது 50 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2010ல் இருந்துதான் இந்தச் சரிவு. சரியாக அதே ஆண்டில்தான் கல்வி பெறும் உரிமை சட்டமும் நடைமுறைக்கு வந்தது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொதுவாக அளிக்கப்படும் மோசமான பயிற்சி, அவர்களின் சமூக அந்தஸ்து, வகுப்பறைக் கல்வியைப் புறக்கணிப்பது, தேர்வுகள், மதிப்பீடுகளைக் காலாவதி செய்வது போன்றவை, கல்வியின் தரம் குறைவதற்கான பிரதானக் காரணிகள். பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த முழு ஆண்டுத் தேர்வு முறை இல்லாமல் போனதால் (எட்டாம் வகுப்பு வரை எப்படிப் படித்தாலும் அடுத்தடுத்த வகுப்புகளுக்குப் போய்விடலாம்) மாணவர்களின் மோசமான கற்கும் திறனை, அவர்கள் ஒன்பதாம் வகுப்பு செல்லும் வரை தெரிந்து கொள்ள முடியவில்லை. எனவே கல்வி பெறும் உரிமைச் சட்டம், பள்ளிக்குச் செல்லும் உரிமையையும் கல்வி பெறும் உரிமையையும் உறுதிப்படுத்தியிருந்தாலும், அந்தச் சட்டத்தின் உண்மையான பலன் இன்னும் எட்டாத தூரத்திலேயே இருக்கிறது.

சார்வி மேத்தா
சார்வி மேத்தா

உங்களின் ஏகலைவா

ஏசெர்(ASER) சர்வே அமைப்பு கண்டறிந்ததற்கும், சார்வியின் கண்டுபிடிப்புக்கும் வேறுபாடு எதுவுமில்லை. “அந்தக் குழந்தைகளோடு பேசியபோது இதயமே நின்று விடும் போலிருந்தது. மோசமான விஷயம் என்னவெனில், அவர்கள் எதை இழந்திருக்கின்றனர் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. அது அவர்களின் உரிமை. வீட்டுக்கு வந்த பிறகு, என்னைப் போலவே அவர்களை எப்படிப் படிக்க வைப்பது என்று யோசித்தேன். அவர்களின் வாழ்க்கைக்கும் எதிர்கால நல்வாழ்வுக்கும் பங்களிக்க முடியுமா என்று யோசித்தேன். கல்வி ஒரு அடிப்படை தேவை மற்றும் உரிமை. குழந்தைகள் ஒவ்வொருவரும் கல்வி பெறுவதற்குத் தகுதி உடையவர்கள் என்று நம்பக் கூடியவள் நான். ஆனால் அது கிடைக்கவில்லை.” என்கிறர் சார்வி.

"ஏகலைவா – உங்களுடையது" (Eklvaya – you belong) இப்படித்தான் தொடங்கியது. கல்வியில் உள்ள ஏற்றத் தாழ்வைப் போக்கும் நோக்கத்துடன் அது தொடங்கப்பட்டது. ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளின் திறமையைக் கண்டறிந்து, அவர்களை வழிநடத்த, படித்த இளைஞர்களால் முடியும். ஒவ்வொரு குழந்தையையும் கல்வியிலும் சுய வெளிப்பாட்டிலும் வளர்ப்பதன் மூலமாக அவர்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் சமூகத்தில் பொறுப்பு மிக்க குடிமகனாகவும் உருவாக்குகிறோம். பாடத்திட்டத்தை அவர்களின் வாழ்க்கைக்கு ஏற்றாற் போல் மாற்றுவதை சாத்தியமாக்குகிறோம். நமது குழந்தைகளுக்கு அவர்கள் அக்கறையுடன் கவனிக்கப்படுகிறார்கள் என்பதையும் அவர்கள் முக்கியமானவர்கள் என்பதையும் உணர்த்துகிறோம்.” என்கிறார் ஏகலைவாவின் இணை நிறுவனராக இணைந்திருக்கும் மான்யா சர்மா.

மான்யா சர்மா, இணை நிறுவனர்
மான்யா சர்மா, இணை நிறுவனர்

2014 ஆகஸ்ட் 17ல் அவர்கள் இருவரும், அசோக் வான் டாய்சர் (மும்பையில் இருக்கிறது) பூங்காவைக் கண்டுபிடித்தனர். அங்கு வகுப்புகளைத் தொடங்க அரசிடம் அனுமதி பெற்றனர். 75 மாணவர்கள் சேர்ந்தனர். 10 தன்னார்வ ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்தினர். சார்வி தனது முழு நேரத்தையும் உள் வடிவமைப்பை கவனிக்கச் செலவழிக்கிறார். பெண்களுக்கும் உயர்கல்வி, பாலின உரிமைகள், திட்டமிடுதல் தொடர்பான சட்ட விவகாரங்களைக் கவனிக்கிறார் மான்யா.

ஏகலைவா ஆறு மாதத்திற்கு ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் அவர்கள் ஏழை மாணவர்களுடன் நேரத்தைச் செலவிட்டனர். அதன் மூலம் குழந்தைகளின் தேவை பற்றியும் அவர்களின் நடத்தை குறித்தும் அவர்களுக்கு ஒரு ஆழமான பார்வை கிடைத்தது. அந்தக் குழந்தைகள் நகராட்சிப் பள்ளிகளில் படித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அவர்களால் எந்த அளவுக்கு தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடிகிறது, குழந்தைகளின் கல்வியில் அவர்களின் பெற்றோரை எந்த அளவுக்கு ஈடுபடுத்துவது என்பது குறித்து ஏகலைவன் குழு சிந்தித்தது.

பணிகள் துவங்கின

2015 ஜனவரில் ஏகலைவா 15 பேர் கொண்ட ஒரு அத்தியாவசியக் குழுவை உருவாக்கியது. குழுவில் இருந்தவர்கள் பல்வேறு பின்னணியில் இருந்து வந்தவர்கள் எனினும், அவர்கள் அனைவருமே மாற்றத்திற்கான பேரார்வம் கொண்டவர்களாக இருந்தனர். அவரவரின் ஆர்வம் மற்றும் அனுபவத்திற்கு ஏற்ற பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. பாடத்திட்ட வடிவமைப்பு, செயல்பாடுகள், தன்னார்வத் தொண்டர்களுக்குப் பயிற்சி, கணக்கு, நன்கொடை, நிதி திரட்டல், கலந்தாய்வு எனப் பல்வேறு விதமான நடவடிக்கைகளைக் கொண்டிருந்தது ஏகலைவா.

இந்தக் கல்வி ஆண்டில் ஏகலைவாவில் 180 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். சேர்க்கைக்கான தேர்வு வைத்து அவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆரம்பநிலை, இடை நிலை, உயர்தரம் ஆகிய மூன்று நிலைகளில் மாணவர்களின் அறிவு மட்டம் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய அந்தத் தேர்வு உதவியது.

ஒரு பழக்கத்திற்கு 21 நாட்கள் 

ஏதேனும் ஒரு விஷயம் உங்களுக்குப் பழக்கத்திற்கு வரவேண்டுமெனில் மத சம்பிரதாயப்படி அதை 21 நாட்களுக்கு தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள். இந்த நடைமுறையை ஏகலைவா, பாடத்திட்டத்திலும் கடைப்பிடித்தது. ஒவ்வொரு பாடத் தொகுப்பும் 21 நாட்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. “ஒரு தலைப்பை தேர்வு செய்தால், அந்தத் தலைப்பின் பல்வேறு விதமான பாடங்களை விளையாட்டு வடிவில், 21 நாட்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம்” என்கிறார் சார்வி. பாடம் சொல்லிக் கொடுப்பதைத் தாண்டி, அவர்களின் தேர்வு நேரங்களில் பாடங்களை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்க உதவுகிறது, பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறது ஏகலைவா. குழந்தைகளின் தனித் திறனைக் கண்டறிந்து அதைக் கூர்தீட்டும் வேலையிலும் ஈடுபடுகிறது ஏகலைவா. உதாரணமாக கணக்குப் பாடத்தை நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு ஒலிம்பியாட் பற்றிச் சொல்லி, அவர்களை அதன் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கச் செய்கிறது.

தாக்கம்

ஏகலைவாவின் தாக்கத்தில் முதல் வருடத்திலேயே துளித் துளியாய் 200 மாணவர்கள் சேர்ந்து விட்டனர். பெற்றோர்கள் மத்தியிலும் தங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் சார்வி. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. மாணவர் ஆசிரியர் விகிதத்தில் ஏற்றத் தாழ்வு போன்ற குறைபாடுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. ஆனால் ஏகலைவா குழுவினர் ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியே கவனிக்கின்றனர். தேவைப்படும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்கும் (மனநல ஆற்றுப்படுத்தல்) கொடுக்கப்படுகிறது. 2016ல் 1000 குழந்தைகளைச் சேர்ப்பதுதான் ஏகலைவாவின் அடுத்த மைல்கல் எனத் தீர்மானித்திருக்கிறார் சார்வி.

ஏகலைவா மையங்களை பன்மடங்கு பெருக்கி, அதன் தாக்கத்தையும் பன்மடங்கு பெருக்குவது சார்வியின் கனவு. “நிறைய குழந்தைகளை, அவர்களது குடும்பத்தை ஒளிமயமான எதிர்காலத்திற்கு உரிமையானவர்களாய் உருவாக்க முடியும் என நம்புகிறேன். அது இந்த தேசத்தின் வளர்ச்சிக்கும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.” என்கிறார் சார்வி.

ஃபேஸ்புக் முகவரி: Eklavya