இரு கைகளிலும் 6 மொழிகளை எழுதி அசத்தும் மாணவர்கள்!

மத்தியப்பிரதேசத்தில் இயங்கி வரும் இந்தியாவின் ஒரே  ‘ஆம்பிடெக்ஸ்டெரஸ்’ பள்ளி...  

1

தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் எழுதும் மாபெரும் திறமைசாலிகளாக உள்ளனர் என்றால் நம்பமுடிகிறதா? அவர்கள் ஒரே மொழி மட்டுமின்றி, இந்தி, ஆங்கிலம் உட்பட 6 மொழிகளில் இது போன்று இரு கை பழக்கம் உடையவர்களாக விளங்குகின்றனர்.

உலகில் பெரும்பாலோனோர் வலதுகை பழக்கம் உள்ளவர்கள் தான். இவர்களில் இருந்து வேறுபட்டு, 10 சதவீத மக்கள் இடது கை பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர். ஆனால், இந்த இரு பிரிவிலும் சேராமல், இரு கைகளையும் ஒப்பான திறமையோடு பயன்படுத்தும் மக்கள் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே. ஆனால், இவர்களின் திறமை நம்மை வாயடைக்க வைத்து விடுகிறது. சிலருக்கு இயற்கையாகவே இந்தத் திறமை கைவசமாகிறது. வேறு சிலரோ முயற்சியினாலும், பயிற்சியினாலும் இந்தத் திறமையைப் பெறுகின்றனர்.

இதற்கு நல்லதொரு உதாரணம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளி ஆகும். இங்குள்ள சிங்ராலி மாவட்டத்தில் இயங்கி வரும் வீணாவந்தினி தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும், ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் எழுதும் திறமைசாலிகளாக வலம் வருகின்றனர்.

1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இம்மாணவர்கள் இரு கைகளையும் ஒப்பான திறனோடு பயன்படுத்துவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இப்பயிற்சியை அளித்து வருகிறார் இப்பள்ளியின் நிர்வாகி விபி ஷர்மா. இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.

தனது இந்த முயற்சி குறித்து சர்மா கூறுகையில், 

“இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர்.ராஜேந்திர பிரசாத் இரட்டை கை பழக்கம் உள்ளவர். அவரது வரலாறு படித்து மிகவும் ஈர்க்கப்பட்டேன், அதனால் நானும் இரு கைகளையும் ஒப்பான திறனோடு பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டேன். பிறகு எனது சொந்த கிராமத்தில் நான் பள்ளியை தொடங்கிய உடன், அனைத்து மாணவர்களுக்கு இதனை கற்பித்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பயிற்சி அளித்து வருகிறேன்.

”நாங்கள் முதலில் முதல் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் பயிற்சி அளிப்போம், அவர்கள் 8-ம் வகுப்பு செல்வதற்குள் ஒரே நேரத்தில் இரு கைகளாலும் வெவ்வேறு மொழிகளில் எழுதும் திறன் உடையவர்களாகி விடுவார்கள்,” என்கிறார்.

இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இரண்டு கைகளாளும் , ஒரே மொழி மட்டுமின்றி வெவ்வேறு மொழிகளில் எழுதும் திறனுடையவர்களாக உள்ளனர். இதற்கென 45 நிமிடங்கள் கொண்ட ஒவ்வொரு பாடப்பிரிவு நேரத்திலும், 15 நிமிடங்கள் இரண்டு கைகளால் எழுதுவதற்கென ஒதுக்கப்பட்டு, சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பட உதவி: IndiaToday
பட உதவி: IndiaToday
தனது பள்ளி தரும் இந்தப் பயிற்சியால் கிராமப்புற மாணவர்களின் கல்வித் திறன் இன்னும் மேம்படும் என நம்புகிறார் சர்மா. அதோடு, இதன் மூலம் மாணவர்கள் புதிய மொழியையும் எளிதாக கற்றுக் கொள்ள முடியும் என்கிறார் அவர்.

அதாவது, ஒரே வார்த்தையை வெவ்வேறு மொழிகளில் இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதும்போது, மாணவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கிறது. அதோடு அவர்களது கற்கும் திறனும் அதிகரிக்கிறது. 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் இந்த திறன் மிக வேகமாகவும், தெளிவாகவும் இருக்கும் என அவர் கூறுகிறார்.

இவ்வாறு ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் ஒரே வேகத்தில் ஒரே திறனில் எழுதுவது  ஆம்பிடெக்ஸ்டெரஸ் திறன் (ambidextrous skill ) எனப்படுகிறது. வீணாவந்தினியைத் தவிர இந்தியாவில் இது போன்ற ஆம்பைட்ஸ்டெரஸ் பள்ளி வேறெங்கும் இல்லை.

இப்பள்ளியில் உள்ள மாணவர்கள் இரண்டு கைகளாலும் வேகமாக எழுதும் திறன் பெற்றவர்களாக உள்ளனர். இவர்கள் இந்தி மட்டுமின்றி ஆங்கிலம், உருது, சமஸ்கிருதம், அரபிக் மற்றும் ரோமன் என ஆறு மொழிகளிலும் இது போன்று எழுதும் திறன் பெற்றவர்களாக இருக்கின்றனர்.

மாணவர்களின் இந்த அசாத்திய திறமையின் மூலம், அவர்களது தேர்வு எழுதும் நேரம் வெகுவாகக் குறைகிறது. ஒரு கையால் தேர்வு எழுதும் மாணவர்கள் மூன்று மணி நேரத்தில் முடிக்கும் தேர்வை இவர்கள் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்தில் எழுதி முடித்து விடுகிறார்கள். இரண்டு கைகளும் சேர்ந்து ஒருசேர இயங்குவதால், தங்களது நேரம் சேமிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

எப்படிச் சொல்லித் தருகிறார்கள்?

இவர்களது பள்ளிக்கு புதிதாக வரும் குழந்தைக்கு முதலில் ஒரு கையில் பேனாவைப் பிடித்து எழுதச் சொல்லித் தருகிறார்கள். ஒரு மாதத்திற்குப் பிறகு மற்றொரு கையையும் பயன்படுத்த அவர்கள் கற்பிக்கின்றனர். இரு கைகளிலும் சரளமாக எழுதப் பழகிய பின்னர், ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் எழுதுவது எப்படி என்பது மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படுகிறது. பழகியதை மறந்து விடாமல் இருக்க தினமும் ஒவ்வொரு பாட வேளையிலும் 15 நிமிடங்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களின் திறமை மெருகேற்றப்படுகிறது.

இப்பள்ளியில் தினமும் மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி யோகாவும் சொல்லித் தரப்படுகிறது. இதன்மூலம் மாணவர்களின் கவனிக்கும் திறன், எழுதும் திறன் மேம்பாடு அடைவதாக சர்மா கூறுகிறார். அதோடு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட விளையாட்டோடு கூடிய செயல்முறை கல்வியும் கற்பிக்கப்படுகிறது.

”எனது இந்தச் சிறிய முயற்சி மூலம் இரு கை பழக்கமுடையவர்களின் எண்ணிக்கையை ஒரு சதவீதத்திலிருந்து அதிகரிக்க முடியும். இந்தியாவின் எதிர்காலமே இது போன்ற குழந்தைகளின் தான் உள்ளது. அப்படிப்பட்டவர்களை இதுபோன்ற அசாத்திய திறமைசாலிகளாக உருவாக்குவதன் மூலம், அவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலமும் வளமாக அமையும்,” என நம்பிக்கையுடன் கூறுகிறார் சர்மா.

நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் மட்டுமின்றி, லியானர்டோ டாவின்சி, பென் ப்ராங்கிளின், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என வரலாற்றில் இடம் பிடித்த பலர், ஒரே நேரத்தில் இரண்டு கைகளையும் பயன்படுத்தி செயல்படும் இந்தத் திறமையைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களும், இதேபோல் நிச்சயம் வரலாறு படைப்பார்கள் என நம்புவோம்.