டைம் நாளிதழின் ’100 செல்வாக்குள்ள மனிதர்கள்’ பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பிரபலங்கள்!

0

இந்த ஆண்டு டைம் நாளிதழ் வெளியிட்டுள்ள ’உலகின் செல்வாக்குள்ள 100 மனிதர்’களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியப் பெண் பிரபலம் ஹிந்தி நடிகையான தீபிகா படுகோன் மட்டுமே. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் விராட் கோலி, சத்யா நாதெள்ளா, ஓலா இணை நிறுவனர் பவீஷ் அகர்வால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போன்றோருடன் இணைந்துள்ளார் தீபிகா.

நிக்கோல் கிட்மேன், கேல் கேடட், கிரேட்டா கெர்விக், லெனா வைத்தே, ப்ரின்ஸ் ஹாரி, அவரது வருங்கால மனைவி மேகன் மார்கல், லண்டன் மேயர் சாதிக் கான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சவுதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மான், சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தன்பாலின உறவுப் பழக்கம் உள்ள அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கர், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பாடகி ரியானா ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தீபிகாவின் ஹாலிவுட் அறிமுக திரைப்படமான xXx : Return of Xander cage திரைப்படத்தில் அவருடன் நடித்த நடிகரான வின் டீசல் தீபிகாவை பாராட்டுகையில்,

”தீபிகா அந்தத் திரைப்படத்தை ஒரு முற்றிலும் மாறுபட்ட நிலைக்கு உயர்த்தியுள்ளார். ஒரு நடிகையான அவர் ஒட்டுமொத்த திரைப்படமும் சிறப்பிக்கவேண்டும் என விரும்புகிறார். இது மிகவும் அரிதாகும். அவரது அழகைக் குறித்து யார் வேண்டுமானாலும் பேசலாம். அவரது ஈடு இணையில்லா நகைச்சுவைத் திறன் குறித்து யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அவர் வெறும் நட்சத்திரம் அல்ல. கலைப் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.”

இந்திய கிரிக்கெட் விளையாட்டின் பிரபலமான சச்சின் டெண்டுல்கர், கோலி தலைமையில் 2008-ம் ஆண்டு விளையாடிய 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை நாட்களை நினைவுகூர்ந்து விராட் குறித்து பகிர்ந்துகொள்கையில்,

”இந்திய அணிக்கு தலைமையேற்ற இந்த ஆர்வம் நிறைந்த இளம் விளையாட்டு வீரரை அப்போதுதான் முதல் முறையாக சந்தித்தேன். அப்போது ரன்களை குவிக்கவேண்டும் என்கிற அவரது ஆர்வமும் நிலைத்தன்மையும் அபாரமாக இருந்தது. அதுவே அவரது விளையாட்டின் தனித்தன்மையாகும்.”

துலேன் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் டைம் முன்னாள் நிர்வாக எடிட்டரான வால்டர் ஐசக்சன் மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா குறித்து குறிப்பிடுகையில், 

“2014-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்றது முதல் நிறுவனத்தில் புதுமைகளை மீட்டெடுக்கும் வகையிலான கொள்கைகளைப் பயன்படுத்தினார். க்ளௌட் கம்ப்யூட்டிங்கை வலியுறுத்தும் வகையிலும் அனைத்து தளத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றிணைய உதவும் வகையிலும் அதன் புதிய ப்ராடக்ட் அமைந்துள்ளதை நாம் கவனிக்கலாம்,” என்றார். 

டைம் நாளிதழின் 100 செல்வாக்குள்ள நபர்களின் பட்டியலில் ஆறு நபர்களின் புகைப்படங்கள் அந்த பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம்பெற்றது. அதில் நாதெள்ளாவும் ஒருவர்.

அவர் பொறுப்பேற்ற இந்த நான்காண்டுகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 130 சதவீதம் உயர்ந்துள்ளது. முக்கியமாக பயனருக்கு ஏற்ற வகையிலும், வாடிக்கையாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் வகையிலும் கூட்டு முயற்சியிலும் தயாரிப்புகளை வழங்குகிறது.

ஓலா நிறுவனத்தின் நிறுவனர் அகர்வாலின் பயணம் குறித்து இந்திய மின் வணிக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் நிர்வாக தலைவர் சச்சின் பன்சால் குறிப்பிடுகையில்,

கார்களில் சவாரியை பகிர்ந்துகொள்ளும் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார். இந்நிறுவனம் நூற்றுக்கும் அதிகமான இந்திய நகரங்களில் வளர்ச்சியடைந்துள்ளது. மில்லியன் கணக்கான ஓட்டுநர் பார்ட்னர்களுக்கும் பயணம் செய்வோருக்கும் அதிகாரமளித்துள்ளது. இவர் தனது 32 வயதிலேயே இந்திய நுகர்வோர் தொழில்நுட்ப சுற்றுச்சூழலில் சிறந்து விளங்கியுள்ளார்.

14 வயது நடிகரான மில்லி பாபி பிரவுன் உட்பட இந்த பட்டியலில் 45 பேர் 40 வயதுக்குட்பட்டோர் என டைம் தெரிவித்ததாக என்டிடிவி செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL