சிங்கப்பூரில் தொடங்கி உலகளவில் செயல்முறைக் கல்வியை செயல்படுத்த முனையும் சென்னை இளைஞர்கள்!

0

இந்தியாவில் எத்துறையில் பொறியியல் பட்டம் பெற்றாலும், அதிக சம்பளத்தை கொடுக்கக் கூடிய ஐடி துறையிலேயே பணிக்கு சேர விரும்புகின்றனர் பலர். இதன் விளைவாக, நாட்டின் சிறந்த பொறியாளர்களின் திறன்கள் வீணாகிறது. புதிய கண்டுபிடிப்புகளும் இந்தியாவில் நிகழாததற்கு இதுவும் கூட காரணம் என்பதை உணர்ந்ததால், செயல் வழி கல்விமுறையை அளிக்கும் 'டெக் நாலேஜ் எஜுகேஷன்' எனும் நிறுவனத்தை, சிங்கப்பூரில் தனது பள்ளி நண்பருடன் நிறுவினார், வினோத்குமார். பின் நாளடைவில், கடினமான பாடங்களைக் கூட எளிதான முறையில் பயிற்றுவிக்கும், "ஸ்பேஸ் ட்ரெக்" எனும் புதிய முறை வழங்குமளவு இந்நிறுவனம் வளர்ந்துள்ளது.

நிறுவனர் பின்னணி

ஒரு கேட்டரிங் நிறுவனத்தில், காபி மாஸ்டராக தன் பயணத்தைத் தொடங்கி, இன்று சென்னையின் பெரிய சைவ உணவக சேவையை அளிக்கும் 'நாராயண ஐயர் கேட்டரிங் சர்வீஸ்'- இன் நிறுவனரின் மகன் வினோத்குமார். உழைப்பால் உயர்ந்த தொழில்முனைவருக்கு மகனாக பிறந்ததால், சிறுவயது முதலே அப்பாவின் வணிக, வர்த்தகங்கள் மற்றும் சந்தைப்படுத்தலுக்கு உதவி செய்து வந்ததால், வணிக மேலாண்மை பண்புகளை இளம் வயதிலேயே வளர்த்துக் கொண்டார், வினோத்குமார்.

ஸ்பேஸ் ட்ரெக் நிறுவனர்கள் வினோத்குமார், பரத் ராமன்
ஸ்பேஸ் ட்ரெக் நிறுவனர்கள் வினோத்குமார், பரத் ராமன்

உயிர் வேதியலில் இளங்கலைப்பட்டம் பெற்றபின், டெல்லியிலுள்ள ஐ.ஐ.பி.எம் கல்லூரியில் எம்.பி.ஏ. படிக்கச் சேர்ந்தார். ஆனால், சில மாதங்களில், 'வெறும் புத்தக அறிவினால் எந்த பயனும் இல்லை' என்று உணர்ந்து, தனது படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டார் வினோத்.

"நான் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கும் போது, தலைமைத்துவம் மற்றும் தொழில் முனைதலை ஊக்குவித்து பயிற்சியளிக்கும் AIESEC எனும் அமைப்பின் மூலம் சர்வதேச உள்ளுறைவாளராக (Internships) பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் சில காலம் வேலை செய்து வந்தேன். என் 23 வயதில், ஆப்பிரிகாவின் கானா நகரத்தில் ஞாயிறு நாளிதழ் ஒன்றை இயக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. பின் மலேசியாவில் உள்ள வங்கி ஒன்றில் நெருக்கடி மேலாண்மை பிரிவில் பணிபுரிந்து வந்தேன். அந்த பணியிடச் சூழலும் வேலைகளும் என்னை தொழில்முனைவதற்கு ஊக்கப்படுத்தியது,"

என்கிறார் வினோத்குமார். கல்வித்துறை பற்றி தொடர்ந்து பேசுகையில், இந்தியாவில் பொறியியல் மாணவர்களுக்கு இருக்கும் முக்கியப் பிரச்சினை, "பொறியியல் படிப்பில் எத்துறையை தேர்ந்தெடுப்பது?" என்பதுதான். எண்ணற்ற மாணவர்களின் இந்த கேள்விக்கு பதிலாய் இருக்க முடிவெடுத்ததாக கூறுகிறார். செம்மரி ஆடுகள் ஒன்றின் பின் ஒன்றை பின்பற்றி, எல்லாம் குழிக்குள் விழுந்த கதைபோல, பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் துறையை பின்பற்றியே ஓடுகின்றனர். தாங்கள் ஒரு குறிப்பிட்டத் துறையில் வல்லுனராக இருந்தாலும் அதனை விடுத்து ஐடி நிறுவனங்களுக்கு செல்வதையே நம் மாணவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர் என தன் வேதனையை தெரிவித்தார் வினோத்குமார்.  

கல்விமுறையில் புது முயற்சி

செயல் வழி அறிவியல் கல்வியை மாணவர்கள் பெற, 'டெக் நாலேஜ் எஜுகேஷன்' (TechKnowledge Education) தொடங்க முடிவுசெய்து தொழில்முனைவில் இறங்கினார் வினோத்குமார். பின் நாளடைவில், கடினமான பாடங்களை கூட எளிதான முறையில் மாணவர்களுக்கு கொண்டு செல்லும் "ஸ்பேஸ் ட்ரெக்" (Space Trek) எனும் புதுவகை கல்வி முறையை வடிவமைத்ததாக கூறினார். இந்த புதிய முயற்சியை, தனது பள்ளி நண்பன் பரத் ராமனுடன் இணைந்து செயல்படுத்தியுள்ளார். 

தற்போது உள்ள கல்வி முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கல்வியின் தரம் 1.0 இல் இருந்து  கல்வி 3.0-க்கு உயர்ந்து, நவீன கற்றல் முறைகளோடு ஒரு முழு அணுகுமுறையைக் கொண்டுள்ளது. 'இம்மெர்சிவ் லேர்னிங்', 'ப்ளிப் லேர்னிங்' போன்ற அணுகுமுறைகளை பள்ளிகள் அறிமுகப்படுத்தி வருவதால், 'ஸ்பேஸ் ட்ரெக்' இத்தகைய வழிமுறைகளை அளிக்க உருவாக்கப்பட்டது என்றார்.   

"ஸ்பேஸ் ட்ரெக்' என்பது, 360 டிகிரி காட்சியை வெளியிடும் தற்காலிக குடில் வடிவமைப்பிலான ஒரு அமைப்பு. இது பள்ளிகளில் வைக்கப்பட்டிருக்கும். இந்த குடிலுக்குள் மாணவர்களின் வயதுக்கேற்ற வீடியோக்களை, 'ஸ்பெஸ் ட்ரெக்' வெளியிடும்."

அதைப்பற்றி மேலும் விவரிக்கையில், ஸ்பேஸ் ட்ரெக், கற்றலில் உள்ள குறைகளை களைய முற்படுகிறது என்றார். நாம் எப்படி கற்கிறோம் என்பதைவிட எவ்வளவு கற்கிறோம் என்று ஆர்வமாக இருக்கிறோம். ஆனால், எங்களின் முறையில் ஒரு தலைப்பைப் பற்றிய அறிவை, அதில் தீவிரமாக உள்சென்று, அனுபவித்து கற்றுக்கொள்ள வழி செய்கிறோம் என்று சொல்கிறார். இவ்வாறு கற்பதினால் மாணவர்களின் மனதில் ஆழப் பதிவதோடு ஒரு தெளிவான புரிதலும் ஏற்படுகிறது என்று விளக்குகிறார் வினோத்குமார். 

"ஸ்பேஸ் ட்ரெக் குடிலுக்குள் அமர்ந்து மாணவர்கள், ஒரு தலைப்பைப் பற்றி கேட்டால், உடனே அந்த தலைப்பைப் பற்றிய முழு தகவல்கள் வண்ணங்கள் நிறைந்த படம் மற்றும் வீடியோ காட்சிகளாக காண்பிக்கப்படும். மெய்நிகர் அனுபவத்தை மாணவர்கள் பெறுவதால் ஆர்வத்துடன் அறிவை பெறுக்கிக்கொள்ள முன் வருகின்றனர்." 

தொழில்முனைவு அனுபவமும், சவால்களும்

வினோதின் தந்தை ஒரு தொழில்முனைவாராய் இருந்ததால், அவரது முயற்சிக்கு பெரிய தடை ஏதுமில்லை. அனால், தொழில்முனைவில் ஈடுபடுவதற்கு, அவரது தந்தை இரண்டு கட்டளைகளை இட்டாராம். ஒன்று, பன்னாட்டு நிறுவனத்தில் இரண்டு வருட பணி அனுபவத்திற்கு பின்னரே தொழில்முனைவில் ஈடுபடவேண்டும். அடுத்து, தொழிலில் கண்டிப்பாக பங்குதாரர்களை வைத்துக்கொள்ளக் கூடாது என்பது. 

ஆனால், என்னை பொறுத்தவரையில் தொழில் தொடங்குவதற்கு முன்னே, தெளிவான எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இருந்தால், பங்குதாரருடன் தொழில் செய்வதில் பிரச்சனை இல்லை. 

"நிறுவனர்களைவிட, செயல்பாடுகளே ஒரு தொழிலின் முதுகெலும்பு. நான் என் நிறுவனத்தை நிறுவி இருந்தாலும், என் நோக்கத்தில் சற்று திசை மாறினாலும், அது என் நிறுவனத்தின் செயல்பாட்டையே பாதிக்கும். ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவரைவிட அவரது பதவி மற்றும் பொறுப்பே மிக முக்கியமானது என்பதை நான் என் அனுபவம் மூலம் கற்றேன்," என்கிறார் வினோத்.  

கல்வித்துறை சந்தை மற்றும் வருங்கால திட்டங்கள்

உழவர் நாளான மே 1ஆம் தேதி 2013இல் 'ஸ்பெஸ் ட்ரெக்' தொடங்கப்பட்டது. வினோத், தயாரிப்பு, மற்றும் நிறுவன வளர்ச்சியை கவனிக்க, அவரது இணை நிறுவனர் பரத், வர்த்தக பணிகளை பார்த்துக் கொள்கிறார். இந்நிறுவனத்தில் தற்போது ஆறு முழு நேர  ஊழியர்களும், 25-க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களும்  உள்ளனர்.

4.3 ட்ரில்லியன் சந்தை மதிப்பை உலக சந்தையில் கல்வி துறை வகிக்கிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமானது. எப்போதும் தொழில்நுட்ப புரட்சியானது இருந்து கொண்டே இருப்பதால், கல்வி தேவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கல்வித் துறை சார்ந்த நிறுவனங்கள் உலகளவில் தாக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

கல்வி முறைகளில், 360 டிகிரி வேகத்தில் தீர்வுகள் அளிக்கும் சில நிறுவனங்களின் வரிசையில், நாங்களும் ஒரு நிறுவனமாக ஆவோம். வருங்காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எங்கள் நிறுவனத்தை விரிவுப்படுத்தி, உலக சந்தையில் இடம்பெறுவதே எங்கள் குறிக்கோள்," என்று தன்னம்பிக்கை பொங்க தெரிவித்தார் வினோத்.

இளைஞர்களை ஊக்கப்படுத்தும் ராமகிருஷ்ணா மிஷனின் தற்போதிய தலைவரான சுவாமி போதமயானந்தா, தனது வாழ்க்கை வழிக்காட்டி என்று கூறும் வினோத், தொழிலில் பல புதிய முயற்சிகளை முன்னெடுத்த கிளிண்டன் ஸ்வைன், தனது தொழில் வழிகாட்டி என்றார். 

'ஸ்பேஸ் ட்ரெக்' நிறுவனம் சுயநிதியில் தொடங்கப்பட்டாலும், தற்போது ப்ரான்சைஸ் முறையில் வளர்ந்து வருகிறது. முதலீட்டாளர்களும் இதில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக கூறுகிறார் வினோத். மேலும், இது விரைவில் ஒரு பொது நிறுவனமாக மாறி, ஆஸ்திரேலியாவில் லிஸ்ட் செய்யப்பட்டு, 2018க்குள் சீரீஸ் ஏ முதலீட்டை பெற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. நிறுவனத்தை சர்வதேச அளவில் விரிவடையச் செய்ய தற்போது 1 மில்லியன் சிங்கப்பூர் டாலர் நிதியை பெற உள்ளது. 

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம், ஆசிய தென்கிழக்கு நாடுகளில் நிறுவனத்தை விரிவுப்படுத்த, சென்னை சிறந்த இடமென கருதுகின்றனர்.

"மனஉறுதியை விட, சூழல் தான் எப்போதும் மிகமுக்கியமானது" என்கிறார், வினோத். ஒரு நிறுவனமானது,  நிறுவனர்களின் எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் சுயமாக செயல்பட வேண்டும். இந்த இரகசிய சூத்திரத்தை நாங்கள் பின்பற்றியதால் தான், இன்று கிட்டத்தட்ட எங்களது அனைத்து பணிகளும் தானாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று தங்கள் தொழில் பயணத்தை மகிழ்வுடன் பகிர்கிறார். 

கடைசியாக, "வாழ்க்கை மிகவும் சிக்கலானது; அதனால் எளிய வாழ்க்கையை வாழுங்கள்" என்று முடித்துக்கொண்டார் இந்த இளம் தொழில்முனைவர். 

வலைதளம்

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan