’பயனர்கள் உங்கள் செயலியை தேடிவந்து பதிவிறக்கம் செய்யவேண்டும்’- பேடிஎம் துணைத்தலவர் தீபக் அபாட்

0

யுவர்ஸ்டோரி நடத்தும் வருடாந்திர நிகழ்வு ‘மொபைல் ஸ்பார்க்ஸ்’ MobileSparks2016, புது டெல்லியில் இன்று காலை இனிதே தொடங்கியது. இந்தியன் ஹாபிடாட் மையத்தில் நடைபெறும் இந்த ஒரு நாள் நிகழ்வில், இந்தியாவில் மொபைல் துறை தொடர்பான ஸ்டார்ட்-அப், தொழில்முனைவோர்கள் மற்றும் டெவலப்பர்கள் தங்களின் தயாரிப்பை, சேவையை மற்றும் கண்டுபிடிப்புகளை வெளியிடுகின்றனர். 

பேடிஎம் வளர்ச்சிப்பிரிவு துணைத்தலைவர் தீபக் அபாட்
பேடிஎம் வளர்ச்சிப்பிரிவு துணைத்தலைவர் தீபக் அபாட்

இதில் கலந்து கொண்டு பேசிய பேடிஎம் நிறுவனத்தின் வளர்ச்சிப்பிரிவு துணைத்தலைவர் தீபக் அபாட், ஒவ்வொரு ஆப்’இன் வளர்ச்சியும் வெவ்வேறு விதத்தில் இருக்கும் என்று என் அனுபவத்தில் கண்டுள்ளேன். அவரவரின் செயலிகளுக்கு ஏற்ற வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் அது வேறுபடும் என்ற அவர், வளர்ச்சி என்று பார்க்கும்போது ஒன்றோடு ஒன்று ஒப்பிடமுடியாது என்றார். அதேபோல் அந்தந்த ஆப்பிற்கான சந்தைப்படுத்தும் முறைகளும் மாறுபடும் என்றார்.

ஆண்ட்ராய்டில் 22 லட்சம் ஆப்களும், ஐஓஎஸ்’இல் 20 லட்சம் ஆப்களும் இன்று ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கத்துக்காக உள்ளது. இதில் இருந்து நீங்கள் ஆப் தயாரிப்பாளராக இருந்தால் எத்தகைய போட்டியை சந்திக்கவேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள் என்றார். இதில் உள்ள செயலிகள் 1800 கோடி பதிவிறக்கங்கள் கண்டுள்ளது என்று ஜூலை மாத கணக்கெடுப்பில் தெரியவந்தது. இந்தியாவில் 87 கோடி பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். 

25 கோடி ஸ்மார்ட்போன் பயனர்களில் 19 கோடி மக்கள் மட்டுமே சரியான முறையில் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். தற்போது இணையம் உபயோகிக்கும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து வந்தாலும், பெரும்பாலானோர் மாதத்தில் குறைந்த அளவில் மட்டுமே இணையத்தை உபயோகிக்கின்றனர். அதனால் 1ஜிபி, 2 ஜிபி அளவில் அதிக இணைய டேட்டா பயன்படுத்தும் சுமார் 8 கோடி மக்களே உங்களின் இலக்காகும். புதிய ஆப்களை சந்தையில் அறிமுகப்படுத்துவோர்க்கு இது நல்ல ஒரு வாய்ப்பு. 

”விரைவில் 8 கோடி, 22 கோடியாக உயரும் போது ஆப்களின் முழு பயனையும், அதில் உள்ள சந்தை வாய்ப்புகளும் இந்தியாவிற்கு உள்ளது,” என்றார். 

ஒரு செயலியை பதிவிறக்கம் செய்துள்ள ஒவ்வொரு பயனரும் மீண்டும் மீண்டும் தங்களின் தளத்திற்கு வரவழிப்பதே ஒரு ஆப் தயாரிப்பாளரின் சாமர்த்தியமாகும். இதற்கு நல்ல, தரம் வாய்ந்த உள்ளடக்கம், வடிவமைப்பு, தகவல்கள், சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துதல் என்று எல்லா பிரிவுகளிலும் கவனம் செலுத்தி, செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும் பலனை காணும் வகையில் திட்டமிடவேண்டும் என்றார். 

“நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் உங்கள் வாடிக்கையாளரை திருப்திபடுத்தும் வகையில் அமைந்து அவர் செயலியில் தொடர, ஊக்கப்படுத்துவதாக இருக்கவேண்டும். உதாரணத்துக்கு, ஒரு பயனர் பேடிஎம் செயலியை பதிவிறக்கம் செய்தால் அவர் மாதத்திற்கு ஒரு முறையாவது தங்களின் பில்லை அதன்மூலம் கட்டவேண்டும்,” என்றார். 

நீங்கள் ஒரு வாடிக்கையாளரை பிடித்து ஆப்பை பதிவிறக்கம் செய்வதைவிட அவர்களாகவே உங்களை தேடி வந்து சேவையை பெறுவது நீண்டகால தொழிலுக்கும், பயனரின் தொடர்ச்சிக்கும் வழிவகுக்கும். இதை எல்லாரும் மனதில் கொண்டு செயல்படவேண்டும் என்றார் தீபக்.