யோகா மேதை பி.கே.எஸ். ஐயங்கார் உதிர்த்த 40 உத்வேக முத்துகள்!

0

உலக அளவில் வெகுவாக அறியப்பட்ட யோகா குரு பி.கே.எஸ். ஐயங்கார், நமக்கு யோகாவின் வல்லமையையும் வனப்பையும் அடக்கிய காலத்தால் அழியாத சொத்துகளை விட்டுச் சென்றிருக்கிறார். எனக்கு ஆஸ்துமா பாதிப்பு இருந்ததால், புனேவில் இருக்கும் அவரது வகுப்புகளில் என் பெற்றோரால் சேர்த்துவிடப்பட்டேன். அவரது ஒழுங்குமுறைகளை ஒரு சிறுவனாக பார்த்தை இப்போதும் நினைவுகூர முடிகிறது.

மரக் கட்டைகள், வளந்த டேபிள்கள், கயிறுகள் மற்றும் பட்டைகளைக் கொண்டு மக்களை மென்மேலும் வளைந்திடச் செய்த அவரது நேர்த்தியை எந்த யோகா பாணியிலும் பார்த்தது இல்லை. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் பல்வேறு வயதினரும் அவரை நாடி வந்து யோகா மூலம் ஆரோக்கிய வாழ்வு பெற்றதையும் நினைவுகூர விரும்புகிறேன். அவரது உரைகள், புத்தகங்கள், ஆசிரமங்கள் அனைத்துமே அவரது ஞானத்துக்கும் அனுபவத்துக்கும் சான்றுகள். இந்தியாவின் உண்மையான சாம்பியனும், யோகாவின் தலைவரும், ஒளிவிளக்குமான அந்த மகத்தான மனிதர் உதிர்த்தவற்றில் 40 முத்துகள் இதோ...

அறிவுடன் கூடிய இயக்கமே செயல். உலகம் இயக்கத்தால் நிறைந்தது. அதிக கவனத்துடனான இயக்கமும், அதிக செயல்பாடுகளுமே இந்த உலகத்துக்குத் தேவை.
நாம் மண்ணில் விலங்குகளைப் போல உலவுகிறோம். தெய்வீகக் கூறுகளைத் தாங்குபவர்களாக, நாம் நட்சத்திரங்களுக்கு இடையே மிளிர்கிறோம். மனிதர்களாக நடுவில் நிற்கிறோம்.
ஊக்கம் அளிப்பீர்; மாறாக, பெருமிதம் தவிர்ப்பீர்.
உடல் என்பது வில், ஆசனம் என்பது அம்பு எனும்போது ஆன்மா என்பதே இலக்கு.
சுவாசம்தான் மனதின் மகாராஜா.
நமது ஞானத்தை உள்ளடக்கி உணர்வுகளை வரையறுப்பதன் மூலம் நம்மால் மனதின் கட்டுப்பாடு, அமைதி மற்றும் சாந்தத்தை அனுபவிக்க முடியும்.
நாம் மாற்றம் குறித்து அச்சப்படத் தேவையில்லை. அது நம்மால் வரவேற்கப்படக் கூடிய ஒன்றுதான். மாற்றம் இல்லாமல் இந்த உலகில் வளர்ச்சியோ மலர்ச்சியோ சாத்தியமில்லை; ஒருவர் அப்படியே இருந்துவிடுவதால் இந்த உலகில் முன்னோக்கிச் சென்றுவிட முடியாது.
மாற்றத்தில் நிலைப்புத்தன்மை இல்லையெனில் ஏமாற்றாமே மிஞ்சும். நிலைப்புத்தன்மை கொண்ட மாற்றத்தை அடைவது என்பது பயிற்சியால் மட்டுமே சாத்தியம்.
ஓர் ஆசிரியருக்கு நம்பிக்கை, தெளிவு மற்றும் பரிவு ஆகியவையே அடிப்படைத் தகுதிகள்.
தாழ்வாக குறிவைத்தால் புள்ளியை தவறவிட்டுவிடுவீர்கள். உச்சத்தை இலக்காகக் கொண்டால், நீங்கள் பேரின்ப வாசலை அடைவீர்கள்.
உங்களுக்கு கச்சிதமாக அமையவில்லை என்பதற்காக முயற்சி செய்வதை நிறுத்திவிடாதீர்கள்.
உங்கள் முதுகெலும்பை நேராக வைத்திருக்க கவனம் செலுத்துங்கள். மூளையை விழிப்புடன் வைத்திருக்க முதுகெலும்பு சரியாக வேலை செய்யும்.
உடல், மனம், உத்வேகத்தின் நல்லிணக்கம்தான் ஆரோக்கியம். உடல் இயலாமை மற்றும் மனத் தடங்கல்களில் இருந்து ஒருவர் விடுவிக்கப்படும்போது, ஆன்மாவின் வாயில்கள் திறக்கும்.
உங்களது கால் பெருவிரலே உங்களுக்குத் தெரியாதபோது, கடவுளை எப்படி உங்களுக்குத் தெரியும்?
உங்களுக்காக ஒளிரும் விடுதலை, சுதந்திரம், கலப்படமற்றதும் பாதிப்பற்றதுமான பேரின்பம் காத்திருக்கிறது; ஆனால், அதைக் கண்டறிவதற்கு அகம் சார்ந்த பயணத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உடலின் சீரமைப்பு மூலம்தான் என் மனம், சுயம் மற்றும் அறிவின் சீரமைப்பை கண்டறிந்தேன்.
உங்கள் உடல் வாயிலாகவே நீங்கள் தெய்வீகத்தன்மையின் தீப்பொறி என்பதை உணர முடியும்.
யோகாசனங்கள் பயிற்சி செய்வதன் மூலமாக, நீங்கள் சீர்படுத்தும் கலையைக் கற்றுக்கொள்கிறீர்கள்.
உங்கள் திறன்களை அறிந்து அவற்றைத் தொடர்ந்து மேம்படுத்துங்கள்.
வாழ்க்கையின் அர்த்தமே வாழ்வதுதான். பிரச்சினைகள் எப்போதும் இருக்கக் கூடும். அவை அதிகரிக்கும்போது, அவற்றை யோகா மூலம் எதிர்கொள்ளலாம். இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டாம்.
ஒருவர் சகமனிதர்களுக்கு மத்தியில் எப்படி நடந்துகொள்கிறார், எப்படி பேசுகிறார் என்பதைப் பொறுத்தே அவரது ஆன்மிக உணர்வு அடங்கியிருக்கிறது.
ஆன்மிகம் என்பது ஒருவர் தேடியாக வேண்டிய சில வெளிப்புற இலக்கு அல்ல; மாறாக, நம்முள் உள்ள தெய்வீகத்தன்மையைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதே ஆகும்.
சகிப்புத்தன்மை என்பது கற்பித்தல் கலை. தன்னடக்கம் என்பது கற்றல் கலை.
வைரத்தின் கடினத்தன்மை என்பது அதன் பயன்பாட்டுக்கு உரியது. ஆனால், அது இலகுவாகவும் ஒளிரும்படியும் இருந்தால் மட்டுமே உண்மையான மதிப்பைப் பெறும்.
உடலின் ஒருமித்த இசை, மனதின் மெல்லிசை மற்றும் ஆன்மாவின் நல்லிணக்கம் ஆகியவையே வாழ்க்கையின் சிம்பொனியை உருவாக்குகின்றன.
தன்னைப் படைத்தவனை நோக்கியப் பயணம்தான் ஒரு மனிதனின் உச்ச சாகசம்.
இயற்கை மற்றும் ஆன்மாவின் சங்கமம்தான் நம் அறிவை மூடியுள்ள திரையை அகற்றுகின்றன.
உண்மையான ஒருமுகப்படுத்ததுதல் என்பது ஓர் விழிப்புணர்வின் பிய்ந்திடாத நூல்.
நான் பயிற்சி செய்யும்போது ஒரு தத்துவவாதி ஆகிறேன். நான் கற்பிக்கும்போது ஒரு விஞ்ஞானி ஆகிறேன். நான் நிகழ்த்திக் காட்டும்போது ஒரு கலைஞன் ஆகிறேன்.
நீங்கள் மூச்சு விடும்போது, உலக்கு நீங்கள் ஆற்றும் சேவையை பிரதிபலிக்கும் அம்சம் வெளிப்படும். நீங்கள் மூச்சை இழுக்கும்போது, கடவுளிடம் இருந்து சக்தியைப் பெறுகிறீர்கள்.
யாரிடமாவது தவறு இருப்பதை நீங்கள் பார்த்தீர்கள் எனில், அதே தவறு உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
செயலைச் செய்ய முன்வருவதே மன உறுதி.
யோகாவின் மதிப்பை சொற்களால் சொல்ல முடியாது. - அது அனுபவ ரீதியில் உணரத்தக்கது.
வாழ்க்கையின் முடிவற்ற மன அழுத்தங்களாலும் போராட்டங்களாலும் பாதிக்கப்படாத வகையில், அக அமைதியைக் கண்டறிவதற்கு யோகா துணை நிற்கிறது.
உங்கள் வாழ்க்கையின் ஒட்டுமொத்த உணர்வையும் மீண்டும் கண்டறிய வழிவகுக்கிறது யோகா. அங்கே உடைந்த பாகங்களை ஒன்றிணைக்க நீங்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்வதை உணர வேண்டிய தேவை இருக்காது.
யோகா மூலமாக உங்கள் வாழ்க்கையின் ஒட்டுமொத்த உணர்வை மீண்டும் கண்டறியலாம்.
நாம் விஷயங்களைப் பார்க்கும் பார்வையை மட்டும் யோகா மாற்றிடவில்லை; அது, பார்க்கும் நபர்கள் மீதும் தாக்கத்தை உண்டாக்குகிறது.
யோகா என்பது ஓர் ஒளி. அதை ஏற்றிய பிறகு ஒருபோதும் மங்காது. நீங்கள் பயிற்சி செய்வதன் மூலம் இன்னும் ஒளிரச் செய்யலாம்.
யோகா என்பது ஓர் வழிமுறையும் முடிவும் ஆகும்.
இசையைப் போன்றதே யோகா: உடலின் ஒருமித்த இசை, மனதின் மெல்லிசை மற்றும் ஆன்மாவின் நல்லிணக்கம் ஆகியவையே வாழ்க்கையின் சிம்பொனியை உருவாக்குகின்றன.
யோகா என்பது அமைதி, சாந்தம், மகிழ்ச்சிக் கதவைத் திறக்கும் தங்கச் சாவி.
பொறுத்துக்கொள்ளத் தேவையற்றதையும், தாங்கக்கூடிய குணமாக்க முடியாததையும் குணப்படுத்துவதற்கு யோகா கற்றுத் தருகிறது.
நீங்கள் சுதந்திரத்தை வேறு எங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை. அது, உங்கள் உடல், இதயம், மனம் மற்றும் ஆன்மாவிலேயே இருக்கிறது.
நீங்கள் வாழ்கிறோம் என்ற உணர்வு இல்லாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
பிறரிடம் உள்ள தவறுகளைக் கண்டறிவதற்கு முன்பு உங்களிடம் களையெடுக்கப்பட வேண்டியது அவசியம்.
உங்கள் உடல் கடந்த காலத்தில் இருக்கிறது. உங்கள் மனம் எதிர்காலத்தில் இருக்கிறது. யோகாவில் இவற்றை ஒருமித்து நிகழ்காலத்துக்கு கொண்டுவரலாம்.
உங்கள் உடல் என்பது ஆன்மாவின் குழந்தை. அந்தக் குழந்தையை நீங்கள் பயிற்சி அளித்து வளர்த்திட வேண்டியது அவசியம்.

ஆக்கம்: மதன்மோகன் ராவ் | தமிழில்: கீட்சவன்